அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 3 மே, 2010

பெண்ணின் திருமண வயது

மனித வாழ்க்கையின் மிக இன்றிமையாத தேவையான திருமணம் எந்த வயதில் செய்யப்பட வேண்டும் என்பதில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. குறைந்த பட்சம் ஆணுக்கு 21 வயதிலும், பெண்ணுக்கு 18 வயதிலும் தான் திருமணம் நடத்தப்பட வேண்டும் என நம் இந்திய அரசாங்கத்தின் சட்டம் சொல்கிறது.
இருந்த போதிலும் 13 வயதுக்கும் குறைந்த வயதுடைய பெண்களின் திருமணங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவதை நாம் செய்திதாள்களின் வாயிலாக அறிந்து கொண்டு தான் வருகிறோம்.
இந்தத் திருமண வயது விஷயத்தில் முஸ்லிம் சமுதாயம் எப்போதுமே மாற்றார்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. முஸ்லிம் சமுதாயப் பெண்களுக்கு, சரியாகக் கல்வியை போதிக்காமல் இளம் வயதிலேயே (பருவ வயதை அடைந்தவுடன்) அவர்களுடைய பெற்றோர்கள் திருமணத்தை நடத்தி விடுகின்றனர் என்கிற கருத்து பரவலாக உள்ளது.
இந்த நிலை முஸ்லிம் சமுதாயத்தில் வேகமாக மாறி வந்தாலும், பெண்களை பருவ வயதை அடைந்தவுடன் திருமணம் செய்து விட வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்கள் சிலா இருக்கத் தான் செய்கின்றனர். எனவே பெண்கள் திருமண வயது விஷயத்தில் இஸ்லாம் என்ன தான் கூறுகிறது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து கொள்ள வேண்டும்.
திருமண வயது என்று ஒரு குறிப்பிட்ட வயதை இஸ்லாம் குறிப்பிடாவிட்டாலும் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தருணம் எது என்பதை மிகத் தௌவாக குறிப்பிடுகிறது.
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (அல்குர்ஆன் 2:228)
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. (அல்குர்ஆன் 4:19)
அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள். (அல்குர்ஆன்4:21)
மண வாழ்க்கையில் தன்னுடைய உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? என்று நன்கு அறிந்து கொள்ளக் கூடிய வயதில் தான் பெண்களின் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்பதை இந்த வசனங்கள் உறுதி செய்கின்றன.
இவ்வாறு பகுத்து அறியக்கூடிய முதிர்ச்சி காலத்திற்கேற்பவும் சமூகத்திற்கேற்பவும் மாறுபடும் என்ற காரணத்தினால் இஸ்லாம் பெண் திருமணத்திற்கு ஒரு வயதைக் குறிப்பிடாமல் ஒரு வரையறையைக் குறிப்பிடுகிறது. எனவே ஓர் உடன்படிக்கையை புரிந்து அதைச் செயல்படுத்தும் அளவிற்கு முதிர்ச்சி பெற்ற பின்னர் தான் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு.
இந்த முதிர்ச்சியும் பக்குவமும் பருவ வயதை அடைந்தவுடன் கிடைத்து விடுமா? என்றால் அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வளாச்சியை பொறுத்தது. பொதுவாகப் பருவ வயதை அடைந்தவுடன் இந்நிலையைப் பெரும்பாலான பெண்கள் அடைந்து விட்டாலும் விதிவிலக்காக சில பெண்கள் இருக்கத் தான் செய்கின்றனர். எனவே இதைத் தெளிவாக அறியக் கூடிய நிலையிலுள்ள பெற்றோர்கள் தான் இவ்விஷயத்தில் தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.
இதைப் போலவே இம்முதிர்ச்சியை அடைந்த பிறகும் ஒரு பெண்ணிற்கு வலுக்கட்டாயமாகத் திருமணத்தை முடித்து வைக்கும் பொறுப்பை இஸ்லாம் பெற்றோர்களுக்குக் கொடுக்கவில்லை. மாறாக, திருமணம் செய்வதற்கு முன் பெண்ணின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது, "கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?'' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அவளது மௌனமே அவளது சம்மதமாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ர-),  நூல்: புகாரி 6971, 6964, 5137
என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.
அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ர-),  நூல்: புகாரி 5139, 6945, 6969
இதே வரையறை ஆண்களின் திருமண வயதிற்கு இஸ்லாம் கூறினாலும் கூடுதலாக, ஒரு ஆண் தன்னுடைய குடும்பத்தை நிர்வகிக்கும் அளவிற்குப் பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய சக்தியை பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகிறது. (பாக்க அல்குர்ஆன் 4:34)
இஸ்லாத்தின் இந்தத் தெளிவான போதனைகளைப் பின்பற்றினால் அறியாத வயதில் திருமணம் செய்து கொண்டு இன்னலுறும் பெண்களின் சிரமங்கள் குறையும். எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையிலுள்ள இஸ்லாமிய சட்டங்களை நாம் பின்பற்றி சமூகத்தில் அமைதியை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் எல்லோருக்கும் உதாரணங்களாகத் திகழுவோம். வல்ல ரஹ்மான் அந்தப் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தருவானாக!

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites