அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 3 மே, 2010

மாதவிடாய் பெண் ஹஜ் செய்தல்

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ் செய்கிறார்கள். ஹஜ் செய்யும் கால கட்டத்தில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விடுகின்றது. அதனால், ஏன் தான் ஹஜ் செய்ய வந்தோம்? என்று கடுமையான வேதனையை அடைகிறார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளிக்கும் அற்புதத் தீர்வைப் பாருங்கள்.
"நீ ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்! தூய்மையாகும் வரை கஅபாவில் தவாஃப் செய்யாதே!'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 305, 1650
தீட்டுப்பட்ட பெண்கள் வீட்டுக்குத் தூரம் என்று மற்ற மதங்கள் கூறுகையில், அவள் வீட்டுக்கும் தூரமானவள் அல்ல! ஹஜ் போன்ற மிகப் பெரிய வணக்க வழிபாட்டைச் செய்வதற்குக் கூட தூரமானவள் அல்ல என்று இஸ்லாம் மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்துகிறது.
தீட்டுப் பெண் திடலுக்கு வருதல்
மாதவிலக்கான பெண்கள் பெருநாளன்று வீட்டில் முடங்கிக் கிடந்து விடக் கூடாது என்பதற்காகவும், "நமக்கு மாதவிலக்கு ஏற்பட்டதால் தான் நம்மால் இந்தப் பெருநாளின் மகிழ்ச்சியில் பங்கெடுக்க முடியாமல் போய் விட்டது' என்று அந்தப் பெண்கள் மனச் சங்கடம் அடையக் கூடாது என்பதற்காகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவைப் பாருங்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளை இட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் மக்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும். அன்றைய நாளின் பரகத்தை எதிர்நோக்கி அவர்களுடன் சேர்ந்து இவர்களும் தக்பீர் கூற வேண்டும். அவர்களோடு இவர்களும் துஆச் செய்ய வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ர-)
நூல்: புகாரி 971
தொழுகையைத் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கு கொண்டு பெருநாளின் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அவர்கள் பகிர்ந்து கொள்வதற்கு இந்த எளிய மார்க்கம் வகை செய்கின்றது.
தொடர் உதிரப் போக்கும், தொழுகையும்
சில பெண்களுக்கு தொடர்ச்சியாக உதிரப் போக்கு ஏற்படும். குறைந்தபட்சம் மூன்று நாட்கள், அதிகப்பட்சம் ஏழு நாட்கள் என்ற கணக்கையெல்லாம் தாண்டி உதிரப் போக்கு ஏற்படும். அதற்கும் இந்த எளிய மார்க்கம் அளிக்கும் அருமையான சலுகையைப் பாருங்கள்.
ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண்.  நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?'' என்று கேட்டார். அதற்கு, "இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும் போது தொழுகையை விட்டு விடு! அது நின்றுவிட்டால் இரத்தம் பட்ட இடத்தைக் கழுவி விட்டு தொழுகையை நிறைவேற்று! பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ர-)
நூல்: புகாரி 228
இது போன்ற நோய்க்கு ஆட்பட்ட பெண்கள், இந்த நோய் ஏற்படுவதற்கு முன்னால் வழக்கமாக மாதவிலக்கு வந்த நாட்களைக் கணக்கிட்டு, அந்த நாட்களுக்குப் பின் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்க வேண்டியதில்லை; உளூச் செய்தால் போதும் என்று கூறி அவர்களுக்குச் சலுகையை வழங்குகிறது. அது மட்டுமின்றி இஃதிகாஃப் (பள்ளியில் தங்குதல்) என்ற வணக்கத்தைக் கூட தொடர் உதிரப் போக்குள்ள பெண்கள் செய்திருக்கிறார்கள் என்ற செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் தொடர் உதிரப் போக்குடைய அவர்களின் துணைவியரில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் அவர் காண்பார். சில வேளை அவருக்கு அடியில் நாஙகள் ஒரு தட்டை வைப்போம். அவர் தொழுவார்.
நூல்: புகாரி 2037
மற்ற மதங்கள் மாதவிலக்கு ஏற்பட்ட மாதர்களை தீண்டக் கூட விடாமல் அவர்களைக் கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கையில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே அப்பெண்களுக்கு விடியலை வழங்குகின்றது.
குறிப்பிட்ட சில வணக்கங்களைத் தவிர்த்து மற்ற வணக்கங்களைச் செய்யலாம் என்று அனுமதிக்கிறது. அது போல் இல்லற வாழ்க்கையிலும் உடலுறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளலாம் என்று கூறி, பெண்களுக்கு ஏற்ற இலகுவான மார்க்கமாகத் திகழ்கிறது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites