அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 3 மே, 2010

இஸ்லாம் பெண் கல்வியைத் தடுக்கின்றதா?

"பெண்களை அறைகளில் தங்க வைக்காதீர்கள்! எழுதும் முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்காதீர்கள்! கைத்தறியையும் அந்நூர் அத்தியாயத்தையும் கற்றுக் கொடுங்கள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: ஹாகிம் (3494)
இதே கருத்து தப்ரானியின் முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலிலும் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஅபுல் ஈமான் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற பழமொழியை நபி (ஸல்) அவர்கள் தான் சொல்லித் தந்திருப்பார்களோ என்று நாம் எண்ணும் வண்ணம் இந்த செய்தி அமைந்துள்ளது.
பெண்கள் வேலை செய்தவற்கு என்றே படைக்கப்பட்டவர்கள்; அவர்களுக்கு படிப்புத் தேவையில்லை; அவர்கள் சிறு தொழிலை கற்றுக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கட்டும்; மார்க்கம் தொடர்பான செய்திகளை அறிந்து நூர் அத்தியாயத்தைக் கற்றுக் கொள்ளட்டும்; அவர்களை நல்ல அறைகளில் தங்க வைக்க வேண்டாம்!  என்று இச்செய்தி நமக்கு உணர்த்துகிறது!
முதலில், இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசைப் படி சரியானதா? என்பதை நாம்  பார்ப்போம். இச் செய்தியைப் பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்கள், "இந்தச் செய்தி ஆதாரப்பூர்மானது'' என்று இச்செய்தியைப் பதிவு செய்து விட்டு அதன் இறுதியில் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் இவர்களின் இக்கூற்று சரியானது அல்ல என்பதை இந்த நூலுக்கு விளக்கவுரை எழுதிய இமாம் தஹபீ, தனது தல்கீஸ் எனும் நூலில் "இது இட்டுக்கட்டப்பட்டது'' என்றும் இந்த செய்தியின் அபாயகரமான நபர் (இச் செய்தியின் ஐந்தாவது அறிவிப்பாளர்) அப்துல் வஹ்ஹாப் என்பவராவார். இவரைப் பெரும் பொய்யர் என்று அபூஹாத்திம் கூறியுள்ளார்கள் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
மேலும் இவரைப் பற்றி இமாம் புகாரீ அவர்கள், "இவரிடம் (அடிப்படை இல்லாத) புதுமையான செய்திகள் உண்டு'' என்றும் "இவர் இட்டுக்கட்டி சொல்பவர்'' என்று இமாம் அபூதாவூத் அவர்களும், "இவர் விடப்பட வேண்டியவர்'' என்று இமாம் உகைலீ, தாரகுத்னீ, பைஹகீ ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர்.
இமாம் நஸயீ அவர்கள் "இவர் நம்பகமானவர் இல்லை'' என்றும் இவருடைய பெரும்பாலான செய்திகள் இட்டுக்கட்டப் பட்டவை என்று ஸாலிஹ் பின் முஹம்மத் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர். (தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 6, பக்கம்: 395)
எனவே இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசையின் அடிப்படையில் ஆதாரத்திற்கு ஏற்றது அல்ல என்பது நிரூபணமாகிறது.
இதே செய்தி இடம் பெறும் தப்ரானீயின் அல்முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலில் அப்துல் வஹ்ஹாப் என்பவர் அல்லாமல் வேறு அறிவிப்பாளர் வரிசையில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதிலும் பலவீனம் இருக்கிறது.
இந்த நூலில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர், முஹம்மத் பின் இப்ராஹீம்  என்பவர் "பெரும் பொய்யர்'' என்று இமாம் தாரகுத்னீ அவர்களும் "இவருடைய செய்திகளை (இட்டுக்கட்டப்பட்டது என்று) தெளிவு படுத்துவதற்காகவே தவிர அறிவிக்கக் கூடாது. ஏனெனில் இவர் (நபிகளார் மீது) இட்டுக்கட்டிச் சொல்பவர்'' என்று இப்னுஹிப்பான் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். "இவருடைய பெரும்பாலான செய்திகள் சரியானவை அல்ல'' என்று இப்னு அதீ அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். (மீஸானுல் இஃதிதால், பாகம்: 6, பக்கம்: 33)
எனவே இந்தச் செய்தியும் அறிவிப்பாளர் வரிசையின் அடிப்படையில் பின்பற்றுவதற்குரிய தகுதியை இழக்கிறது. மேலும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் யாவும் பெண்கள் கற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தையே தருகிறன.
இஸ்லாமிய மார்க்கம், கல்வியின் சிறப்பைப் பற்றிப் பேசும் போது ஆண்கள், பெண்கள் என்று பிரித்துப் பேசவில்லை. பொதுவாகவே பேசுகிறது. மேலும் அடிமைகள் நிறைந்த அந்தக் காலத்தில், அடிமைப் பெண்களுக்கும் கூட நபி (ஸல்) அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்க ஆர்வமூட்டியுள்ளார்கள்.
"மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடத்தில்) இரண்டு விதக் கூலிகள் உண்டு. ஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர். இவர் தமது (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும் முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தமது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தமது எஜமானனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்தில் உள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்குக் கல்வியைக் கற்பித்து, அதை அழகுறக் கற்றுத் தந்து பின்னர் அவளை அடிமையிலிருந்து விடுவித்து அவளை மணந்து கொண்டவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரீ (97)
இது போன்ற செய்திகள் மூலம், நபிகளார் பெண்களை எழுதப் படிக்க ஆர்மூட்டிருக்கிறார்கள் என்பதையும் அதை ஆட்சேபணை செய்யவில்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் கல்வி இல்லாத காரணத்தால் தான் இன்று பெண்கள் பரவலாக ஏமாற்றப்படுகிறார்கள்.
படிப்பு அவர்களிடம் இருக்குமானால் அதன் மூலம் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும். மேலும் மார்க்க விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் இவை பேருதவியாக இருக்கும்.
எனவே பெண்கள் கல்வி கற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை! மாறாக ஆர்வமூட்டவே செய்கிறது என்பது தெளிவான செய்தியாகும்.
இறையில்லத்தில் இல்லத் தரசிகள்
பெண்களை இழிவு படுத்தும் வண்ணமும், அவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை மறுக்கும் வண்ணமும்  உண்மைக்குப் புறம்பாக நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஹதீஸ்கள் என்ற பெயரில் பல்வேறு விதங்களில் இட்டுக் கட்டப்பட்டப் பட்டுள்ளது.
அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்று தான், பெண்கள் தொழுகைக்காக பள்ளிக்கு வரக்கூடாது என்பதாகும். இன்றைக்கும் கூட பெரும்பாலான ஊர்களில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பெண்கள் இறையில்லங்களை விடுத்து இணையில்லங்களான தர்ஹாக்களில் தஞ்சமடைந்து விட்டனர்.
பெண்கள் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சில நூற்களில் இட்டுக் கட்டப்பட்ட செய்திகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று தான் பின் வரக் கூடிய செய்தியாகும்
நபி (ஸல்) அவர்கள் வயோதிகப் பெண்கள் தவிர (பிற) பெண்கள், ஆண்களுடன் ஜமாத் (தொழுகையில் கலந்து கொள்வதற்காக)  பள்ளிகளுக்கு வருவதைத் தடை செய்தார்கள். (வயோதிகப் பெண்களும் கூட வரும் போது) காலுறை அணிந்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.
இந்தச் செய்தி "தல்கீஸுல் ஹபீர்'' என்ற நூலில் பாகம்: 2 பக்கம்: 27ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அறிவிப்பாளர்கள் தொடர் இல்லாத, எந்த அடிப்படையும் இல்லாத செய்தியாகும் என்று இதைப் பதிவு செய்த இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களே அதே நூலில் அந்த செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள் ளார்கள். மேலும் பலமான அறிவிப்பாளர்கள் தொடருடன் பதிவு செய்யப்பட்டுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும், நபியவர்களின் தெளிவான நடைமுறைக்கும் மாற்றமானதாகும். நபி (ஸல்) அவர்களுடைய காலத்திலும், ஸஹாபாக்களுடைய காலத்திலும் அனைத்து வயதுப் பெண்களும்  பள்ளிக்கு வருவது நடைமுறையாக இருந்துள்ளது. இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.
நபியவர்களின் கட்டளை
நபி (ஸல்) அவர்கள் நேரடியாகவே பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்கக் கூடாது என கட்டளை பிறப்பித்து உள்ளார்கள். இரவு நேரத்தில் கூட பெண்கள் பள்ளிக்குச் செல்வதற்கு அனுமதி கேட்டால் அனுமதி வழங்க வேண்டும் என்று நபியவர்கள் கூறியிருப்பதிலிருந்து பெண்களை பள்ளிக்கு வர விடாமல் தடுப்பது மார்க்கத்திற்கு மாற்றமான செயல் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உமர் (ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் "(உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு, "அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என நபி (ஸல்) கூறியுள்ளனர்'' என்று பதிலுரைத்தார்.
நூல்: புகாரி 900
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களிடம் பெண்கள் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 865
இன்றைக்கு மார்க்க அறிஞர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள் பெண்களை பள்ளிக்கு வர விடாமல் தடை செய்வதில் முன்னிலை வகிக்கின்றனர்.
இதனால் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள், பெண்ணுரிமை இயக்கங்கள் என்ற பெயரில் உள்ளவர்கள் இஸ்லாத்தைப் பற்றித் தவறான முறையில் விமர்சனம் செய்வதற்கு இவர்கள் மிக முக்கியமான காரணமாக விளங்குகின்றனர். இப்படிப் பட்ட மார்க்க அறிஞர்கள் பின்வரும் சம்பவத்தைப் படித்து தங்களுடைய தவறான செயல்களை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "உங்கள் மனைவியர் உங்களிடம் பள்ளி வாசல்களுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன்'' என்று (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அப்போது (என் சகோதரர்) பிலால் பின் அப்தில்லாஹ் அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக நாங்கள் அவர்களைத் தடுப்போம்'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வர்) பிலால் பின் அப்தில்லாஹ்வை நோக்கி மிகக் கடுமையாக ஏசினார்கள். அதைப் போன்று அவர்கள் ஏசியதை நான் கேட்டதேயில்லை.
பிறகு அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை உனக்கு அறிவிக்கிறேன்.  ஆனால் நீயோ "அல்லாஹ்வின் மீதாணையாக அவர்களை நாங்கள் தடுப்போம்' என்று கூறுகிறாயே?'' என்றார்கள்.
நூல்: முஸ்லிம் 752
நபியவர்களிடம் பாடம் பயின்ற இப்னு உமர் (ரலி) அவர்கள், பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்த தன்னுடைய மகனிடம் மிகக் கடுமையான முறையில் நடந்து கொண்டார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய பாவச் செயல் என்பதை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
கைக்குழந்தையுடன் பள்ளிக்கு வந்த பெண்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 709

ஜமாஅத்துடன் தொழுவதற்காக பள்ளியில் காத்திருந்த பெண்கள்
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இஸ்லாம் (நன்கு) பரவுவதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் ஒரு இரவு இஷாவைப் பிற்படுத்தினார்கள். "பெண்களும் சிறுவர்களும் உறங்கி விட்டனர்'' என உமர் (ரலி) தெரிவிக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க வரவில்லை. அதன் பின் வந்து பள்ளியிலுள்ளவர்களை நோக்கி "இப்பூமியிலுள்ளவர்களில் உங்களைத் தவிர வேறு எவரும் இதை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை.'' என்றார்கள்.
நூல்: புகாரி 566
இன்றைக்கு ஆண்கள் எவ்வாறு கூட்டாகச் சென்று பள்ளியில் தொழுகையை நிறைவேற்றுகிறார்களோ அதைப் போன்று நபியவர்களின் காலத்தில் பெண்களும் கூட்டாகச் சென்று ஆண்களோடு ஜமாஅத் தொழுகையில் கலந்துள்ளனர்.
பஜ்ர் தொழுகையில்...
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையை தொழுவார்கள். மூமினான பெண்கள் ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுவார்கள். பின்னர் தங்கள் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். அவர்கள் யார், யார் என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.
நூல்: புகாரி 372
மஃக்ரிப் தொழுகையில்...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் "வல் முர்ஸலாத்தி உர்பன்' என்ற அத்தியாயத்தை ஓதும் போது அதனைச் செவியுற்ற (என் தாயார்) உம்முல் ஃபழ்லு (ரலி), "அருமை மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! மஃக்ரிப் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதியது தான் நான் அவர்களிடமிருந்து கடைசியாகச் செவியுற்றதாகும். நீ அதை ஓதியதன் மூலம் எனக்கு நினைவுபடுத்தி விட்டாய்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 763
தொடர்ந்து பல மாதங்கள் பள்ளிவாசலுக்குச் சென்று இமாம் ஜமாஅத்துடன் கலந்து கொண்டால் தான் இமாம் ஓதுகின்ற சில சூராக்கள் நம்முடைய மனதில் பதியும்.
நபியவர்களின் பின்னால் தொழுத உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் "வல் முர்ஸலாத்தி உர்பன்' என்ற சூராவை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதியவுடன் நினைவு கூறுகிறார்கள் என்றால் அவர்கள் பல காலம் நபியவர்களோடு பள்ளிவாசலில் ஜமாஅத் தொழுகையில் பங்கெடுத்து உள்ளார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஜுமுஆத் தொழுகையில்...
காஃப் வல்குர்ஆனில் மஜீத் என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தும் போது  ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 1442, நஸயீ 1394, அபூதாவூத் 927, அஹ்மத் 26344

பள்ளிக்கு வரும் பெண்கள் பேண வேண்டியவை
நபியவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதற்குப் பெண்களை முற்றிலுமாகத் தடை செய்யவில்லை. அதே நேரத்தில் சில ஒழுங்குகளைக் கூறியுள்ளார்கள். அதை அவர்கள் கடைப்பிடித்தால் போதுமானது.
"நீங்கள் (ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வதற்காகப்) பள்ளிவாசலுக்குச் செல்லும் போது நறுமணம் பூசாதீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைனப் பின்த் முஆவியா (ரலி)
நூல்: முஸ்லிம் 759
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நறுமணப் புகையைப் பயன்படுத்திய எந்தப் பெண்ணும் கடைசித் தொழுகையான இஷாத் தொழுகையில் நம்முடன் கலந்து கொள்ள வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 760
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 749
சில ஆண்கள் தொழுது கொண்டிருந்தனர். அவர்கள் சிறுவர் களைப் போன்று (சிறிய) வேஷ்டியை  தங்களுடைய கழுத்திலிருந்தே கட்டியிருந்தனர்.
(இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஆண்களின் பின்னால் தொழுது கொண்டிருந்த பெண்களிடத்தில்) "ஆண்கள் ஸுஜூதிலிருந்து எழுந்து அமர்கின்ற வரை நீங்கள் உங்களுடைய தலைகளை ஸுஜூதில் இருந்து உயர்த்த வேண்டாம்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅது(ரலி)
நூல்: புகாரி 362
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருப்பார்கள்.  பெண்கள் ஆண்களைச் சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக நான் கருதுகிறேன் என்று இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார்.
நூல்: புகாரி 837
பெண்கள் பள்ளிக்கு வரவேண்டும், ஆண்களுடன் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் தான் நபியவர்கள் இது போன்ற ஒழுக்கங்களை பெண்களுக்குக் கற்றுத் தருகிறார்கள்.
எனவே பெண்களை பள்ளிக்கு வரவிடாமல் தடுப்பது மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites