அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 21 ஏப்ரல், 2010

அநாதைகளை அரவணைப்போம்


நபி (ஸல்) அவர்கள் "நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்'' என்று கூறியபடி தம் சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்கள்: புகாரீ 5304), திர்மிதீ (1841),அபூதாவூத் (4483), அஹ்மத் (21754)
அன்பும் பாசமும் பொருளாதார உதவிகளும் இல்லாமல் தவிக்கும் நபர்களில் அநாதைக் குழந்தைகள் முக்கிய இடம் பிடிக்கிறார்கள். ஏதோ ஒரு காரணத்தினால் கணவரை இழந்து குழந்தைகளுடன் தவிக்கும் பெண்களுடன் இருக்கும் குழந்தைகள், அல்லது தாயையும் தந்தையையும் இழந்து தவிக்கும் குழந்தைகளும் கவனிப்பாரற்று பெரும் சோகத்தில் வாழ்கிறார்கள். இவ்வாறு வாழும் அநாதைகளைக் கவனிக்கும் பொறுப்பும் கடமையும் முஃமின்களுக்கு உண்டு என்பதையும், அதற்குக் கிடைக்கும் பரிசு சொர்க்கம் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் மேற்கூறிய பொன்மொழியில் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
அநாதைகள் கவனிப்பாரற்று விடப்பட்டால் எதிர்காலத்தில் ரவுடிகளாக, கொள்ளையர்களாக, திருடர்களாக வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. இதனால் நாடே பல சோதனைகளைச் சந்திக்க நேரிடும்.
சரியான வழிகாட்டுதல், தெளிவான அறிவுரைகள் இல்லாமல் கண்டிக்கப்படாமல் வளர்க்கும் போது இது போன்ற நிலைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே இது போன்ற குழந்தைகள் தவறான வழிக்குச் சென்று விடாமல் அவர்களை நல்ல குழந்தைகளாக வளர்க்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த நபித் தோழர்கள், குறிப்பாக பெண்கள் கூட அநாதைகளை வளர்த்து வந்துள்ளனர். உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு அநாதைப் பெண்ணை வளர்த்து வந்துள்ளார்கள்.
வசதி படைத்தவர்கள் சொர்க்கம் செல்லும் வழிகளில் இந்த மனிதாபிமான வழியையும் தேர்வு செய்ய வேண்டும். இறந்து விட்ட பெற்றோர்களுக்கு நன்மையைச் சேர்க்க விரும்பும் பிள்ளைகள் அநாதைகளுக்குச் செலவழித்து அதன் நன்மையை பெற்றோர்களுக்குச் சேர்த்து வைக்கும் காரியத்தில் ஈடுபடலாம்.
அநாதைகளின் உணவு, உடை போன்ற தேவைகளை நிறைவேற்றலாம்; படிப்புச் செலவை ஏற்றுக் கொள்ளலாம். இவ்வாறு குறைந்த அளவிலும் நாம் நன்மையான காரியத்திலும் ஈடுபடலாம்.
திருமறைக் குர்ஆன், அநாதைகளுக்கு செலவழிப்பதை மிகத் தெளிவாக ஊக்கப்படுத்துகிறது.
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன் 2:215)
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 4:36)
அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அவர்களுக்காக நல் ஏற்பாடு செய்தல் சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான். அல்லாஹ் நாடியிருந்தால் அவன் உங்களுக்குச் சிரமத்தைத் தந்திருப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன் 2:220)
இதைப் போன்று நல்லவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது அநாதைகளுக்கு உதவி செய்தவர்கள் என்று குறிப்பிடுகின்றான்.
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அநாதைக்கும், சிறைப் பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.
(அல்குர்ஆன் 79:8)
நபி (ஸல்) அவர்கள் அவர்கள் அநாதைகளுக்குச் செலவழிக்கும் செல்வம் அவனுக்குச் சிறந்த தோழனாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
"இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம் தன் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கிறானோ, அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரீ (1465)
தீயவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடும் போது, அவர்கள் அநாதைகளை மதிக்க மாட்டார்கள் என்றும், அவர்களை விரட்டுவார்கள் என்றும் குறிப்பிடுகின்றான்.
அவ்வாறில்லை! நீங்கள் அநாதையை மதிப்பதில்லை, ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை.
(அல்குர்ஆன் 89:17, 18)
தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவனே அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.
(அல்குர்ஆன் 108:1-3)
சில வேளைகளில் அநாதைகளாக இருப்பவர்களுக்குச் சொத்துக்களும் நிறைந்திருக்கும். இந்தச் சொத்துக்களை கவனத்தில் கொண்டு அதை அடைய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில், அவர்களைக் கவனிப்பது போன்று நடித்து, அவர்களின் செல்வத்தைச் சுருட்ட எண்ணுபவர்களையும் திருமறைக் குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது.
அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்போர் தமது வயிறுகளில் நெருப்பையே உண்ணுகின்றனர். நரகில் அவர்கள் நுழைவார்கள்.
(அல்குர்ஆன் 4:10)
அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக சப்பிடுவர்கள் பெரும் பாவத்தைச் செய்தவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.
"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் "அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், "நியாயமின்றி கொல்லக் கூடாது' என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான இறை நம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ (2766)
எனவே அநாதைகளின் சொத்துக்கள் விஷயத்தில் மிகக் கவனமாக நல்ல முறையில் நடந்து கொண்டு வசதி வாய்ப்புகள் இல்லாத அநாதைகளுக்கு நம்மால் முடிந்தளவு உதவிகளைச் செய்ய முன் வருவோம்.
அநாதைகள் தொடர்பான
பலவீனமான செய்திகள்
அநாதைகளை அரவணைப்பது தொடர்பாக ஆதாரப்பூர்வமான செய்திகள் இருப்பதுடன் பலவீனமான செய்திகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் முக்கியமானதை நாம் இனம் கண்டு கொள்வோம்.
பாவங்கள் மன்னிக்கப்படும்
"முஸ்லிம்களின் மத்தியில் உள்ள ஒரு அனாதையின் உணவு, தண்ணீருக்கு ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டால் அல்லாஹ் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்வான். மேலும் அவர் பாவத்தைச் செய்தால் அவரை அவன் மன்னிக்காமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதீ (1840)
இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் ஹனஸ் என்பவர் பலவீனமானவர் ஆவார்.
அநாதைக்காக திருமணம் செய்யாத பெண்மணி
"நானும், கன்னங்கள் கருத்த பெண்மணியும் மறுமை நாளில் இவ்வாறு இருப்போம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறி (நடு விரலையும் ஆட்காட்டி விரலையும் சுட்டிக் காட்டி)னார்கள். "அப்பெண்மணி நல்ல குலமும் அழகும் நிறைந்த கணவரை இழந்தவளாவாள். அவள் (திருமணம் செய்யாமல்) முதுமை அடையும் வரை அல்லது இறக்கும் வரை, தன்னை அனாதைகளுக்காக (அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பில்) அர்ப்பணித்தவளாவாள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் (4482), அஹ்மத் (22880)
இச்செய்தியின் நான்காவது அறிவிப்பாளர் அந்நஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்பவர் பலவீனமானவராவார்.
நல்ல வீடும்  கெட்ட வீடும்
"முஸ்லிம்களின் எந்த வீட்டில் அநாதை இருந்து, அந்த அனாதையிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளப்படுகிறதோ அந்த வீடே சிறந்த வீடாகும். முஸ்லிம்களின் எந்த வீட்டில் அனாதை இருந்து, அந்த அனாதையிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளப்படவில்லையோ அந்த வீடே மிகவும் கெட்ட வீடாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் யஹ்யா பின் சுலைமான் என்பவர் பலவீனமானவராவார்.
நோன்பு நோற்ற நன்மை
"யார் மூன்று அநாதைகளை பராமரிக்கிறாரோ அவர் இரவில் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்றவராவார். மேலும் அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்காக) காலையிலும் மாலையிலும் வாளை உயர்த்தியவர். மேலும் நானும் அவரும் சொர்க்கத்தில் இரு சகோதரர்கள் போல் இவ்வாறு இருப்போம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறி ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: இப்னுமாஜா (3670)
இந்த் செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் இப்ராஹீம் என்பவர் யாரென அறிப்படாதவர்; நான்காவது அறிவிப்பாளர் ஹம்மாத் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பலவீனமானவராவார்.
நல்ல உள்ளத்திற்கு...
"உன் உள்ளம் மென்மையாக விரும்பினால் ஏழைகளுக்கு உணவளி! அநாதைகளின் தலையைத் தடவி விடு!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் (7260)
இச்செய்தியின் இரண்டாவது அறிவிப்பாளர் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனவே இந்தச் செய்தி பலவீனமடைகிறது.
நல்ல மனிதர்
மக்கா வெற்றியின் போது உஸ்மான்(ரலி), ஸுஹைர் (ரலி) ஆகியோர் என்னைப் புகழ்ந்தவர்களாக நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவ்வாறு என்னிடம் அறிவிக்காதீர்கள்! இந்த என் தோழர் அறியாமைக் காலத்தில் இருந்தவர்'' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், "ஆம்! என்றாலும் இவர் நல்ல மனிதராக இருந்தார்'' என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஸாயிபே! நீ அறியாமை காலத்தில் செய்த நல்ல செயல்களைப் பார்! அதை இஸ்லாத்தில் அமைத்துக் கொள்! விருந்தினரைக் கண்ணியப்படுத்து! அநாதையைக் கண்ணியப்படுத்து! உன் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: அஹ்மத் (14953)
இந்த செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் இப்ராஹீம் பின் முஜாஹிர் என்வர் பலவீனமானவராவார்.
சொர்க்கம் உறுதி
"யார் முஸ்லிமான இரண்டு பெற்றோர்களுக்கிடையில் ஒரு அநாதையின் உணவு, நீருக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறானோ அவனுக்கு சொர்க்கம் கண்டிப்பாகக் கடமையாகி விட்டது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹாரிஸ் (ரலி)
நூல்: அஹ்மத் (18252)
இச் செய்தியில் இடம் பெற்றுள்ள மூன்றாவது அறிவிப்பாளர் அலீ பின் ஜைத் என்பவர் பலவீனமானவராவார்.
"இறை திருப்தியை நாடி யார் அநாதையின் தலையில் தடுவுவாரோ அவருக்குத் தலையில் பட்ட ஒவ்வொரு முடியின் அளவுக்கு நன்மைகள் கிடைக்கும். யார் தன்னிடமுள்ள அநாதைப் பெண் அல்லது ஆணிடம் நல்ல முறையில் நடந்து கொள்கிறாரோ அவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம்'' என்று கூறி ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் பிரித்து இவ்வாறு காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
நூல்: அஹ்மத் (21132)
இச்செய்தியில் இடம்பெற்றுள்ள மூன்றாவது அறிவிப்பாளர் அலீ பின் யஸீத் என்பவர் பலவீனமானவராவார்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites