அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 21 ஏப்ரல், 2010

ஒழியட்டும் மூட நம்பிக்கைகள்

விஞ்ஞான உச்சத்தில் இருக்கும் இந்த நூற்றாண்டிலும் மூட நம்பிக்கைகள் கொடி கட்டிப் பறக்கத் தான் செய்கின்றன. விஞ்ஞான வளர்ச்சியின் பரிசான தொலைக்காட்சிலும் செல்போனிலும் இந்த மூடநம்பிக்கைகள் ஊடுருவத் துவங்கியுள்ளன.
நல்ல நேரம் எது? கெட்டநேரம் எது? என்று தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் காட்டப்படுகிறது. இதைப் போன்று தற்போது செல்போனிலும் நல்ல நேரம், கெட்ட நேரம் என்பதை தினமும் அறிந்து கொள்ள வசதிகள் செய்து தருகின்றனர்.
நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பதை மனித அறிவு முற்றிலும் ஏற்காத போதும் அறிவின் வெளிப்பாடான நவீன கருவிகளைக் கொண்டே மக்களை மூடர்களாக்குவதை என்னவென்று சொல்வது?
அறிவின் சுடரான இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றவர்கள் கூட இந்த மூட நம்பிக்கையில் வீழ்ந்து கிடப்பது தான் வேதனையான விஷயம். சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று முஸ்லிம்கள் எவ்வளவு பெரிய மூட நம்பிக்கையில் வீழந்து கிடக்கின்றனர் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
கோவை மாவட்டம், உடுமலை சோழமாதேவியைச் சேர்ந்த முகம்மது இக்பால் என்பவர் தன் மகனைக் காணவில்லை என்று காவல் துறையிடம் புகார் செய்தார். ஆனால் அவரையே போலீஸ் கைது செய்தது. எப்படி?
திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் வேலை செய்த இக்பால் என்பவரின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் சென்று விட்டார். தாம் ஏற்கனவே செய்து வந்த துணி வியாபாரமும் நஷ்டமடைந்ததால் மாந்திரீகத்தில் நம்பிக்கை கொண்டிருந்த இக்பால் மந்திரவாதிகளை நாடினார்.
"உனக்கு தோஷம் இருக்கிறது; தோஷம் இருந்தால் வாழ்க்கையில் எதைச் செய்தாலும் இப்படித் தான் நடக்கும். மூத்த மகனை நரபலி கொடுத்தால் தோஷம் நீங்கும்'' என்று மந்திரவாதி கூறியுள்ளான். இதை நம்பி தன் மூத்த மகனை மனைவியிடமிருந்து அழைத்து வந்து அமராவதி ஆற்றில் மூழ்கடித்துக் கொன்று விட்டு, மகனைக் காணவில்லை என்று நாடகமாடியுள்ளார்.
பள்ளிவாசலில் வேலை செய்த இவருக்கு இது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை, முட்டாள்தனமான காரியம் என்பது தெரியவில்லை. மூடநம்பிக்கையை ஒழிக்க வந்த இஸ்லாத்தை ஏற்ற ஒருவர், பெற்ற மகனையே கொன்றுள்ள சோகம் நடந்துள்ளது. இவர் இஸ்லாத்தை எப்படித் தான் விளங்கியுள்ளாரோ!
இஸ்லாத்தின் அடிப்படையாகத் திகழும் திருக்குர்ஆனையும் நபிமொழியையும் அவர் படித்திருந்தால் இந்த முட்டாள் தனமான காரியத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்.
முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்கள் இவரைப் போன்று இன்னும் பலர் இருக்கத் தான் செய்கின்றனர். நல்ல நேரம் பார்த்துக் கடையை திறப்பது, பாத்திஹாக்கள் ஓதுவது, தாயத்து, தட்டு, தகடு ஆகியவற்றைக் கடைகளில் மாட்டுவது, திருமணத்திற்கு ஆலிம்களிடம் சென்று பால்கிதாப் என்ற ஜோசியத்தைப் பார்ப்பது என்று ஏராளமான மூடநம்பிக்கைகள் முஸ்லிம்களிடம் நிறைந்திருக்கின்றன.
இந்த மூடநம்பிக்கை அனைத்தும் இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரானது என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து இஸ்லாத்தின் உண்மையான வழிகாட்டுதலைப் பின்பற்றி நடக்க வேண்டும்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites