அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 21 ஏப்ரல், 2010

இடையூறுகளை அகற்றுதல்


சிறிய காரியங்கள் என்று நாம் கருதும் பல செயல்களை நபி (ஸல்) அவர்கள் சொர்க்கம் என்ற மிகப் பெரிய பரிசை அள்ளித் தரும் காரியமாகக் காட்டியிருக்கிறார்கள். அதில் ஒன்று தான் மக்களுக்கு இடையூறு தரும் பொருட்களை அகற்றுவதாகும்.
ஒரு மனிதர் வழியில் இருந்த முள் மரத்தைக் கடந்து சென்றார். அப்போது, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது முஸ்லிம்களுக்குத் தொல்லை தரக் கூடாது என்பதற்காக இதை அவர்களை விட்டும் அகற்றுவேன்'' என்று கூறி (அதை நிறைவேற்றி)னார். இதனால் அவர் சுவர்க்கத்தில் நுழைக்கப்பட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4744)
மக்களுக்குத் தொல்லை தரும் விதமாக இருந்த முள் மரத்தை வெட்டியெடுத்து, மக்களுக்கு நல்ல பாதையை அமைத்துக் கொடுத்ததன் காரணமாக ஒருவர் சுவர்க்கம் செல்ல முடிந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இன்று மக்களுக்குத் தொல்லை தரும் வீதிகள் ஏராளம் உள்ளன. இதைக் கடந்து செல்லும் செல்வந்தர்களும் ஏராளம் உள்ளனர். ஆனால் எவருக்கும் நல்ல வீதிகளை அமைத்துக் கொடுக்கும் எண்ணம் வருதில்லை.
குறுகலான பாதைகள், கரடு முரடான தெருக்கள் என்று ஏராளமான தொல்லைகளை சாதாரண வகுப்பு மக்கள் வசிக்கும் பகுதிகளில் காண முடிகின்றது. இவற்றையெல்லாம் சரி செய்யும் பொறுப்பும் கடமையும் இறை நம்பிக்கை உள்ள, தகுதி படைத்தவர்களுக்கு உள்ளது.
இடையூறை அகற்றுதல் என்ற சின்னச் சின்ன உதவிகள் மூலம் சொர்க்கம் என்ற மிகப் பெரிய பரிசைப் பெற முடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
மேலும் வீதிகளில் தொல்லை தரும் வண்ணம் கற்கள், முற்கள் இருந்தால் அதைப் பார்த்தும் பார்க்காதது போல் செல்லாமல் அதை அகற்ற வேண்டும். சாலைகளில் பாதாளச் சாக்கடையின் மூடிகள் திறந்து இருந்தால் அதை மூடிச் செல்ல வேண்டும். இந்தக் காரியங்களும் தர்மமாகக் கணக்கில் கொள்ளப்படும்.
"வீதியில் உள்ள இடையூறு தரும் பொருட்களை அகற்றுவதும் தர்மமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரீ (2989)
"வீதிகளில் இடையூறு தரும் பொருட்களை அகற்றுவது ஈமானில் உள்ளது'' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: முஸ்லிம் 58
வீதிகளில் உள்ள இடையூறுகளை அகற்றுவது இறை நம்பிக்கையாளர்களின் கடமை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க, முஸ்லிம்களே இதற்கு மாற்றமாக நடந்து கொள்கிறார்கள்.
வீடு கட்டுகிறேன் என்ற பெயரில் வீட்டின் முன்னர் கற்களையும் மண்ணையும் குவித்து, பாதைகளை அடைக்கின்றனர். வீதிகளில் குப்பைகளைக் கொட்டுகின்றனர். இதன் மூலம் வருவோர், போவோருக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகின்றனர். குறிப்பாக வயது முதிந்தோர் செல்லும் போது கற்களினால் தடுமாறி விழ நேரிடுகிறது.
வீடு கட்டுவோர் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், ஓரங்களில் கல்லையும் மண்ணையும் போட வேண்டும். நடு வீதிகளுக்கு வரும் கற்கள் மற்றும் மண்ணை அவ்வப்போது ஓரங்களில் கொண்டு சேர்த்து வழியில் செல்வோருக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குப்பைகளை குப்பைத் தொட்டிகளிலேயே போட வேண்டும்; வீதிகளில் கொட்டக் கூடாது.
அடுத்தவர்களுக்கு இடையூறு தரும் வண்ணம் வீதிகளில் சிக்கலை ஏற்படுத்தாமல் இருப்பதுடன், இடையூறு உள்ள இடங்களில் நம்மால் முடிந்த அளவு அந்த இடையூறுகளை அகற்றி, அதன் மூலம் சொர்க்கம் என்ற பரிசைப் பெற முயற்சி செய்வோம்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites