அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 22 ஏப்ரல், 2010

சொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்


மறுமை நாளில் இறைவன் வழங்கும் உயர்ந்த சொர்க்கத்தைப் பெற்றுக் கொள்ள இவ்வுலகில் நாம் செய்ய வேண்டிய பல நற்காரியங்களை நபி (ஸல்) அவர்கள் இச்சமுதாயத்திற்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இந்த நற்காரியங்களில், நபி (ஸல்) அவர்கள் தமது அன்புத் தோழர் அபூபக்ர் (ரலி) அவர்கள் வழியாக, சொர்க்கத்தை கடமையாக்கும் காரியங்களைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அவற்றை பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்' என்றார்கள். "இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்றவர் யார்?'' என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) "நான்' என்றார்கள். "இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?'' என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்' என்றார்கள். "இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?'' என்று கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்' என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எந்த மனிதர் இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தோரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1865)
நோன்பு நோற்றல், நோயாளியை நலம் விசாôரித்தல், ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லுதல், ஏழைக்கு உணவளித்தல் என்ற நான்கு காரியங்கள் ஒரு மனிதரிடம் ஒரு நாளில் ஒரு சேர நடந்து விட்டால் அவர் சொர்க்கத்திற்குப் போவது உறுதியாகி விடும். எனவே இந்த நான்கு காரியத்தையும் செய்வதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த நான்கு நல்லறங்களும் நபி (ஸல்) அவர்கள் மூலம் தனித் தனியாகவும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
நோன்பு
இறைவனுக்குச் செய்கின்ற வணக்கங்களில், அவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய காரியங்களில் முக்கிய இடம் வகிப்பது நோன்பாகும். மறுமை நாளில் கூலி வழங்கும் போது இதற்குரிய கூலி தனிச் சிறப்பு பெற்றிருக்கும். இறைவனே இதற்குரிய கூலியை வழங்குவான். மேலும் நோன்பு நோற்றிருக்கும் போது நம் வாயில் ஏற்படும் துர்வாடையை, மிக உயர்ந்த கஸ்தூரி வாடைக்கு ஒப்பாக அல்லாஹ் கருதுகிறான்.
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம்! முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி என்று இரு முறை கூறட்டும்! என் உயிர் என் வசம் கைவசம் உள்ளதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்தாகும்!  "எனக்காக நோன்பாளி தமது உணவையும் பானத்தையும் இச்சையையும் விட்டு விடுகிறார். நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்'' (என்று அல்லாஹ் கூறுவதாக) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (1894)
நோன்பு என்ற கடமையை செய்வதன் மூலம் நமக்கு மத்தியில் ஏற்படும் குழப்பங்களுக்கு இவை பரிகாரமாக அமைந்து நம்மை காப்பாற்றும்.
"ஒரு மனிதன் தமது குடும்பத்தினரிடமும் தமது குழந்தைகளிடமும் தமது அண்டை வீட்டாரிடமும் சோதனையில் ஆழ்த்தப்படும் போது தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமையை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி), நூல்: புகாரி (525)
இத்தனை சிறப்புமிக்க நோன்பை ரமளான் மாதம் முழுவதும் நோற்பது கட்டாயக் கடமையாகும். இது தவிர உபரியான நோன்புகளை, குறைந்த பட்சம் மாதத்திற்கு மூன்று நாட்களாவது நோற்க வேண்டும். அந்த மூன்று நாட்கள் பிறை 13, 14, 15 ஆகிய நாட்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்தி நஸயீ உட்பட பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் போன்று திங்கள், வியாழன் ஆகிய நாட்களிலும் நோன்பு நோற்கலாம்.
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், லுஹா தொழுமாறும், வித்ரு தொழுது விட்டு உறங்குமாறும் ஆக, மூன்று விஷயங்களை நபி (ஸல்) அவர்கள் எனக்கு வலியுறுத்தினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றை விடமாட்டேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (1178)
ஜனாஸாவைப் பின் தொடர்தல்
சொர்க்கத்தைக் கடமையாக்கும் நான்கு செயல்களில், முஸ்லிம்களின் ஜனாஸாவைப் பின் தொடர்தலும் ஒன்றாகும். ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு வாழும் முஸ்லிம்கள் மரணித்து விடும் போது, அவரது ஜனாஸாவில் கலந்து கொண்டு, தொழுது, அவரை அடக்கம் செய்யும் வரை இருப்பது மேலும் மேலும் நன்மைகளை அள்ளித் தரும் நற்செயலாகும். மேலும் ஒரு முஸ்லிம், இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் இதும் ஒன்று என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
"எவர் ஒருவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமுடைய ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று அதற்காகப் பிரார்த்தனைத் தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும் வரை அதனுடன் இருந்தாரோ நிச்சயமாக அவர் நன்மையின் இரண்டு குவியலைப் பெற்றுத் திரும்புவார். ஒவ்வொரு குவியலும் உஹுது மலை போன்றதாகும். எவர் அதற்காகப் பிரார்த்தனை (தொழுகையை) மட்டும் முடித்து விட்டு, அதனை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பி விடுகிறாரோ அவர் ஒரு குவியல் நன்மையை மட்டும் பெற்றுத் திரும்புவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (47)
"ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை: ஸலாமுக்குப் பதிலுரைப்பது, நோயாளியை நலம் விசாரிப்பது, ஜனாஸாவைப் பின் தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (1240)
எனவே நன்மைகளை அள்ளி அள்ளித் தரும் இந்த நற்காரியத்தைச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
பசித்தவருக்கு உணவளித்தல்
பரந்த இந்த உலகில் ஏழைகள் ஏராளம். அவர்களில் பசி, பட்டினியுடன் தங்கள் வாழ்க்கையைக் கழிப்போரும் உள்ளனர். இந்நிலை காணும் ஒரு முஸ்லிம் அவனைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடாமல் பசித்த அந்த ஏழைக்கும் உணவளிக்க வேண்டும். இது மிகச் சிறந்த நல்லறங்களில் ஒன்றாகும்.
கெட்டவர்களை இறைவன் பட்டியலிடும் போது, அவர்கள் ஏழைகளுக்கு உணவளிக்குமாறு தூண்டவில்லை என்கிறான். (அல்குர்ஆன் 69:34)
நபி (ஸல்) அவர்கள் ஏழைகளுக்கு உணவளிக்கும் பணியைச் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்கள்.
"பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி), நூல்: புகாரி (5649)
ஏழைகளுக்கு உணவளிப்பது இறைவனுக்கு உணவளிப்பதைப் போன்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மறுமை நாளின் விசாரணை பற்றிக் குறிப்பிடும் போது இந்தக் கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(மறுமை நாளில்) அல்லாஹ், "ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்கவில்லை'' என்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியான் இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால் அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அதை என்னிடம் நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (5021)
நோயாளியை நலம் விசாரித்தல்
நோயுற்றிருப்பவரை நலம் விசாரித்தல் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய ஐந்து கடமைகளில் ஒன்றாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதை மேலே கண்டோம். (பார்க்க: புகாரி 1240) மேலும் நோயாளியை நலம் விசாரிக்கச் செல்வது சொர்க்கத்திற்குச் செல்வதைப் போன்றதாகும்.
"நோயாளியை நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர் திரும்பி வரும் வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), நூல்கள்: முஸ்லிம் 5017, திர்மிதீ 890, அஹ்மத் 21339
நோன்பு நோற்றல், நோயாளியை நலம் விசாரித்தல், ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லுதல், ஏழைக்கு உணவளித்தல் என்ற நான்கு காரியங்களையும் தனித்தனி சிறப்பு மிக்க காரியங்களாக மார்க்கம் கூறியிருப்பதால் இந்த நான்கு காரியங்களையும் தொடர்ந்து செய்வதுடன், ஒரே நாளில் இந்த நான்கு காரியங்களையும் செய்தால் நாம் சொர்க்கத்திற்குரியவர் என உறுதி செய்யப்பட்டு விடும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்தப் பாக்கியத்தைத் தந்தருள்வானாக!

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites