அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 22 ஏப்ரல், 2010

உணரப்படாத தீமைகள்


மறுமையில் வெற்றியடைய இஸ்லாத்தின் கடமைகளை சரிவரப் பேணுவது அவசியமாகும். குறிப்பாக இஸ்லாம் எவற்றைத் தீமை என்று அடையாளம் காட்டியுள்ளதோ அவற்றைத் தவிர்ந்திருப்பது மிக மிக முக்கியமாகும்.
சில விஷயங்கள் தீமையா? இல்லையா? என்று ஐயப்பட வைக்கும். அவற்றைக் கூட தவிர்ந்திருக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப் படாதவையும் தெளிவானவை. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்திற்கும், தமது மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலகி விடுகிறார். எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றில் போய் விழுகிறாரோ அவர் வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே மேய விட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஒரு எல்லை இருக்கின்றது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனது எல்லைகள் அவனால் தடை செய்யப்பட்டவையாகும். எச்சரிக்கை! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்து விட்டால் முழு உடலும் சீர் குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அது தான் இதயம்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி), நூல்: புகாரி 52
பாவமான காரியம் என்று சந்தேகப்படும் வகையில் உள்ள காரியத்தில் கூட தவிர்ந்திருக்க வேண்டும் எனும் போது, தெளிவாகத் தடை செய்யப்பட்ட காரியங்களில் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
இது போன்ற தீமைகளில் சிலவற்றை நாம் கண்டு கொள்வதே இல்லை. அவற்றைத் தீமை என்று கூட உணர்வதில்லை. அப்படிப்பட்ட தீமைகள் ஏராளம் உள்ளன. இணை வைத்தல் என்றால் அது ஒரு மாபெரும் பாவம் என்று கூறுகிறோம். அதனால் ஏற்படும் விபரீதத்தை உணர்கிறோம். கொலை என்று சொன்னால் அது மாபெரும் பாவம் என்பதை உணர்கிறோம். இதைப் போன்று சில பாவமான காரியங்களின் விபரீதத்தையும் அதன் மூலம் கிடைக்கும் தண்டனையையும் உணராமல் சர்வ சாதாரணமாக அவற்றைச் செய்து வருகிறோம்.
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 49:11)
இவ்வசனத்தில் நாம் உணராமல் செய்து கொண்டிருக்கும் சில தீமைகளைப் பற்றி அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். இரண்டு நபர்கள் சேர்ந்து விட்டால் அடுத்தவரைக் கேலி செய்யத் துவங்கி விடுகிறோம். இவ்வாறு கேலி செய்வதால், அவர்களது மனம் எவ்வளவு புண்படும் என்பதை ஏனோ நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.
இதைப் போன்று மனிதனின் உருவத்தில் ஏற்பட்டிருக்கும் குறைகளை சுட்டிக் காட்டி, பட்டப் பெயர் சூட்டுகிறோம். குட்டையாக ஒருவர் இருந்தால் அவரைப் பார்த்து "பெரியவர்' வருகிறார் என்று கேலி செய்கிறோம். கொஞ்சம் உயரமாக இருந்தால் "பனை மரம்' வருகிறது என்று பட்டப் பெயரிட்டு அழைக்கிறோம். இவைகளெல்லாம் தீமை என்று நாம் உணராமல் செய்து வரும் பாவமான காரியங்களாகும். அல்லாஹ் இந்த வசனத்தில் இறுதியில் "திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்' என்று குறிப்பிடுகின்றான். எனவே இந்த தீமையான செயல்களிலிருந்து நாம் திருந்திக் கொள்ள வேண்டும்.
இதைப் போன்று குழந்தைக்குப் பெயர் வைப்பதிலும் நல்ல பெயர்களைச் சூட்டுவதாக எண்ணி, ஷிர்க்கான பெயரைச் சூட்டி விடுகிறோம். இதையும் இந்த வசனத்தில் அல்லாஹ் கண்டிக்கின்றான்.
ஷாகுல் ஹமீத் என்ற பெயர் பரவலாக முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. ஹமீத் (புகழுக்குரியவன்) என்பது படைத்த இறைவனைக் குறிக்கும் சொல். (பார்க்க: அல்குர்ஆன் 22:64, 31:26, 35:15, 42:28, 57:24...)
இந்தப் பெயருடன் ஷாஹ் என்ற வார்த்தையை இணைக்கின்றனர். ஷாஹ் என்றால் மன்னர் என்று பொருள். இதை ஹமீத் என்ற சொல்லுடன் இணைக்கும் போது ஷாஹுல் ஹமீத் (புகழுக்குரியவனின் மன்னன்) என்ற பொருள் ஏற்படுகிறது. அதாவது அல்லாஹ்விற்கு அரசன் என்ற மோசமான பொருள் வருகிறது. எனவே இவ்வளவு மோசமான பொருளுள்ள பெயரைச் சூட்டுவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். இந்தப் பெயர் உள்ளவர்கள் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்துல் ஹமீத் (புகழுக்குரியவனின் அடிமை) என்று கூட மாற்றிக் கொள்ளலாம்.
இது போன்று பாவம் என்று தெரியாமல் செய்யும் காரியங்களை விட்டும் தவிர்ந்து நடக்க வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக!

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites