அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்

"அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய் விட்டால், தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து பிறகு ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுடையே அதைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சோந்தவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரீ 2486
யமன் நாட்டைப் பூர்வீமாகக் கொண்ட குலத்தினர் தான் அஷ்அரீன் என்ற குலத்தினர். இவர்கள் மதீனாவிற்கு வந்து அங்கு குடியேறினர். ஆரம்ப காலத்தில் யமன் நாட்டிலிருந்து வந்து இஸ்லாத்தைத் தழுவியவர்களில் முக்கியமானவர் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள். இவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தைத் தழுவியவர்களில் ஒருவர்.
யமன் நாட்டில் வாழ்ந்த இக்குலத்தினரிடம் பல சிறப்பு அம்சங்கள் நிறைந்திருந்தன. திருக்குர்ஆனை அழகிய குரலில் ஓதுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே! இதை நபிகளாரின் பொன்மொழிகள் மிகத் தெளிவாக விளக்குகின்றன.
"என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும் போது, அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் பார்த்திருக்கா விட்டால் இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையைக் கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும் அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார். அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால் அவர்களைப் பார்த்து, "என் தோழர்கள் தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தவிடுகின்றனர்' என்று (துணிவோடு) கூறுவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரீ 4232
திருக்குர்ஆனை அழகாக ஓதுவதில் அஷ்அரீன் குலத்தில் முதலிடம் பெற்றவர்களாக அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் திகழ்ந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களே இவர்களின் ஓதுதலைப் பார்த்து வியந்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) "அபூமூஸாவே! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப் பட்டிருந்த இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரீ 5048
இது போன்று, இக்கூட்டத்தாரிடம் தம் குலத்தவர்களுடன் இணங்கி வாழ்வது, அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பது போன்ற அழகிய பண்புகளும் நிறைந்திருந்தன என்பதற்கு நாம் முன்னர் கூறிய நபிமொழிகள் தெளிவான சான்றாகும்.
ஒரு சமூகத்தார் தம் சமூகத்தாருடன் எப்படி உறவு வைத்துக் கொள்ள வேண்டும்? தம் சுற்றத்தாருடன் எப்படி உறவு வைத்துக் கொள்ள வேண்டும்? எவ்வாறு உதவி செய்ய வேண்டும் என்பதற்கு இவர்கள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
அவர்களிடம் உணவு தட்டுப்பாடு வரும் போது வசதி படைத்தவர்கள் சும்மா இருப்பதில்லை. அனைவரும் ஒன்று கூடி தங்களிடம் இருந்த உணவுகள் அனைத்தையும் ஓரிடத்தில் ஒன்று திரட்டி அவர்கள் சமூகத்தினர் அனைவர்களும் வந்து ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடின்றி சம அளவில் உணவுகளைப் பங்கிட்டு எடுத்துச் செல்வார்கள்.
இந்த நல்ல பண்பைக் கண்டு தான் நபி (ஸல்) அவர்கள், "அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்; நான் அவர்களைச் சார்ந்தவன்' என்று புகழந்துரைத்தார்கள்.
"தன் அண்டை வீட்டாரை விட்டு விட்டு, தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிட மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: அஹ்மத் 367
பக்கத்து வீட்டான் பசியோடு இருக்க தான் மட்டும் வயிறு புடைக்க உண்பவன் முஃமின் அல்லன் என்ற நபிமொழிக்கு செயல் வடிவம் கொடுத்தவர்கள் இந்தக் குலத்தவர்கள்.
"யார் ஒருவன் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றும் காரியத்தில் இருப்பானோ அவன் காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவான்' என்ற நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை மதித்தவர்கள் இந்தக் கூட்டத்தினர்.
இஸ்லாத்தை ஒருவர் ஏற்ற பிறகு மற்ற முஸ்லிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்குப் பல அரிய போதனைகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அவற்றைக் காண்போம்.
முஃமினுக்கு உதாரணம்
ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும் இரக்கம் காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு  சுகவீனமடைந்தால் அதனுடைய அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டு இருக்கின்றன. அத்துடன் (உடல் முழுவதும்) காய்ச்சலும் கண்டு விடுகின்றது.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரீ 6011
உடல் உறுப்புகளில் ஓர் உறுப்பு, மற்ற உறுப்புகளுக்கு எவ்வாறு உதவி புரிகின்றதோ அதைப் போன்று ஆள் வெவ்வேறாக இருந்தாலும் ஈமானில் ஒன்றிணைந்தவர்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு உதவிகள் புரிய வேண்டும்.
முஸ்லிமின் செயல்பாடு
"ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு இவன் அநீதி இழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டும் அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 2442
ஒரு முஸ்லிமின் தேவையை நிறைவேற்றுவதில் நாம் ஈடுபட்டால் நம் தேவையை நிறைவு செய்வதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான். இதை விட சிறந்த பாக்கியம் நமக்கு என்ன வேண்டும்?
மேலும் மற்றவர்களின் கஷ்டத்தை நாம் போக்கினால் மறுமை நாளில் ஏற்படும் சிரமம் ஒன்றை அல்லாஹ் போக்குகிறான். இந்தப் பாக்கியமும் மற்றவர்களின் துயர் துடைப்பதிலேயே கிடைக்கிறது.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
அல்லாஹ் தஆலா மறுமை நாளில் (சில மனிதர்களைப் பார்த்து), "ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்தேன். ஆனால் நீ நோய் விசாரிக்க வரவில்லை'' என்பான். அதற்கு அம்மனிதன், "என் இறைவா! எப்படி நான் உன்னை நோய் விசாரிக்க முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!'' என்பான். இதற்கு அல்லாஹ், "இந்த என்னுடைய அடியான் நோயுற்றிருந்தான்; அவனை நீ நோய் விசாரிக்கச் செல்லவில்லை என்பதை நீ அறிய மாட்டாயா? நீ அவனை நோய் விசாரித்திருந்தால்  அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்'' என்று பதிலளிப்பான்.
மேலும், "ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்க வில்லை'' என்பான். அதற்கு அவன், "என் இறைவா! நான் எப்படி உனக்கு உணவளிக்க முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!'' என்பான். அதற்கு அல்லாஹ், "இந்த என் அடியான் உன்னிடம் உணவை வேண்டினான்; ஆனால் நீ அவனுக்கு உணவளிக்கவில்லை என்பதை நீ அறியமாட்டாயா? அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அந்த இடத்தில் என்னைக் கண்டிருப்பாய்'' என்பான்.
"ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் வேண்டினேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் புகட்டவில்லை'' என்று இறைவன் கூறுவான். அதற்கு அவன், "என் இறைவனே! உனக்கு எப்படி நான் தண்ணீர் புகட்ட முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!'' என்பான். அதற்கு அல்லாஹ், "இந்த என் அடியான் உன்னிடம் தண்ணீர் கேட்டான். அவனுக்கு நீ தண்ணீர் புகட்டியிருந்தால் அந்த இடத்தில் என்னைக் கண்டிருப்பாய்'' என்று அல்லாஹ் பதிலளிப்பான். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4661
உதவும் போது இறைவன் உதவி நமக்கு உண்டு
"ஆதமின் மகனே! (நீ மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 5352
இன்று நம் தெருவில் இருப்பவர்கள் எத்தனை பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். அதைப் பார்த்தும் பார்க்காதது போல் நடந்து கொள்கிறோமே தவிர அவர்களுக்கு உதவ நாம் முன்வருவதில்லை.
மழை, வெள்ளத்தால் எத்தனை பேர் நமது ஊரில் வீடுகளை இழந்துள்ளனர்; சொத்துக்களை இழந்துள்ளனர்; உறவுகளை இழந்துள்ளனர்; ஊனமுற்றுள்ளனர்; இவர்களுக்கு எல்லாம் நமது உதவிகளைச் செய்ய முன்வருதில்லை.
உதவிகள் குறைவாக இருந்தாலும் நிறைவாக இருந்தாலும் அதை வழங்க முன்வர வேண்டும். அஷ்அரீன் குலத்தவர்கள் கூடுதல் குறைவாக இருந்த அனைவரும் ஒன்றிணைந்து எப்படி அனைவருக்கும் வழங்க முன்வந்தார்களோ அதைப் போன்று நமது ஊரில் இருப்பவர்களுக்கு, நமது தெருவில் இருப்பவர்களுக்கு உதவி, நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளைப் பின்பற்றிய கடமையை நிறைவேற்றியவர்களாக ஆக வேண்டும்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites