அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 24 ஏப்ரல், 2010

தவிர்ந்து கொள்ளுங்கள் வீண் விளையாட்டுகள்



இன்று மனிதன் தன் இனத்தை தானே அழிக்கும் அழிவுப்பாதையிலும் வீழ்ச்சியிலும் சென்றுகொண்டிருக்கிறான். மனித இனத்தை பாதுகாப்பதற்கு உயிர்காக்கும் மருந்துகளையும்  பாதுகாப்பு அரண்களையும் ஏற்படுத்திக் கொள்ளும் அதே நேரத்தில் மனித இனத்தை அழிப்பதற்கும் சீர்கேட்டிற்கும் பலவிதமான நவீன பொருட்களையும் பொழுது போக்கு சாதனங்களையும் கணக்கிடலங்காமல் உருவாக்க தொடங்கியுள்ளான்.
அதிலே சிறுவர்களின் மனதில் நஞ்சை பாய்ச்சக்கூடிய சிந்தனையை மழுங்கக்கூடிய ஒரு பயங்கர ஆயுதம் தான் சிறுவர்களின் பொழுது போக்கு அம்சங்கள். அது வீடியோ கேம்கள், வீர தீர சாகசங்களை செய்யும் ஹீரோக்களின் தொடர்கள், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் என்று போதை தரும் பொழுது போக்குளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவைகலெல்லாம் சிறுவர்களின் அறிவை பட்டைதீட்டுவதல்ல. அறிவை மழுங்கச் செய்து அவர்களை பைத்தியமாக்கும் ஹெராயின் போன்ற போதைப் பொருட்களின் பட்டியலில் கூட சேர்த்து கொள்ளலாம்.
இதன் விளைவுகள் அறிவை மழுங்கச் செய்வதைத் தாண்டி ஒழுக்கச் சீரழிவு குடும்பச் சீரழிவு உயிர்பலி என்ற படுபாதாளத்தில் தள்ளிவிடுகின்றது. வீடியோ கேம்களில் கார்ட்டூன்களை நிஜ மனிதர்களாக பாவித்து துப்பாக்கி வெடிகுண்டு போன்ற கலாச்சாரங்கள் உருவாக்கப்படுகிறது. இதனால் அவர்கள் தங்கள் நடைமுறை வாழ்விலும் அதை செய்து பார்க்க தூண்டப்படுகிறார்கள்.  அமெரிக்க போன்ற மேலை நாடுகளில் சிறுவர்களிடத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி சிறுவயதிலேயே தனது சகவகுப்பு மாணவர்களையே கொலை செய்யும் பயங்கரமும் அரங்கேறியுள்ளது..இதனால் அந்த   விளையாட்டுகளுக்கு அந்நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டிலும் இந்த விளையாட்டுகளுக்கென்று தனி கம்பயூட்டர் மையங்கள் வைத்து சிறுவர்களை சீரழிவை நோக்கி அழைக்கின்றனர். இது ஒருபுறமிருக்க கற்பனைக்கு எட்டாத சாகச வீரர்களின் தொடர்கள், கார்ட்டூன் தொடர்களை பார்த்த குழந்தைகள் அந்த போலி சாகசத்தை உண்மையென கருதி அதையும் தங்களுடைய வாழ்வில் செய்து பார்க்க வேண்டும் என்று துணிகிறார்கள். இதனால் ஏற்படும் இழப்புகள் ஏராளம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொலைக் காட்சியில் சக்திமான் என்ற தொடரைப் பார்த்து மாடியிலிருந்து குதித்து இறந்த சிறுவர்கள் பலர். இன்றும் இது போன்ற சாகசவீரர்களின் தொடர்கள் கார்ட்டூன் தொலைக்காட்சிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் தருவதாக சொல்லக்கூடிய கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளால் குழந்தைகளின் படிப்புரத்தரமும் சிந்தனைதிறனும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பொழுது போக்கிற்காக பயன்படும் இத்தகைய விளையாட்டுகள் போதை தரும் ஹெராயின் பட்டியலில் கூட சேர்க்கலாம். இதிலேயும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் தவ்ஹீதை உயிர் மூச்சாக கொண்டிருக்கூடிய நம்முடைய தாய்மார்கள் இது போன்று தீமைகளுக்கு துணை நிற்பது தான்.
நாம் இஸ்லாம் கூறுகின்ற சமூக மாற்றத்திற்காக ஏகத்துவ கொள்கையை அடிப்படையாக வைத்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடைய நோக்கம் நரகிற்கு  இழுத்து செல்கின்ற ஷிர்க்கை மட்டும் ஒழிப்பதாக இருக்கக்கூடாது. மாறாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்ற விதத்தில் அனைத்து வகையிலும் ஏகத்துவ சமூக மாற்றத்திற்கு வழிகாணவேண்டும். அப்படி தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருமை ஸஹாபாக்களை வார்த்தெடுத்தார்கள். காலமெல்லாம் ஷிர்க்கை மட்டும் சொல்லவில்லை. அனைத்து ஒழுக்கக் கேடுகளிலிருந்தும் அந்த மக்களை வென்றெடுத்தார்கள்.
இறைநம்பிக்கையாளர்களின் தகுதிகள்
 இறைநம்பிக்கையாளர்களை அல்லாஹ் அவனை மட்டும் வணங்கி அவனுக்கு இணைவைக்காமல் இருப்பவர்கள் என்று மட்டும் கூறவில்லை. மேலும் சில தகுதிகளையும் பட்டியலிடுகிறான்.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். (அல் குர்ஆன் 23:1,2,3)
அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள். (அல் குர்ஆன் 25:72)
வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். "எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் அறிவீனர்களை விரும்ப மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 28:55)
மறுமையில் சொர்க்கவாசிகளுக்கும் நரகவாசிகளுக்கும் நடக்கும் ஒரு உரையாடலை பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது .......
அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளி களிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள்."நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்க வில்லை'' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (அல்குர்ஆன்74:40 லிருந்து 45வரை)
நரகாவசிகள் நரகில் சேர்ந்ததற்கான காரணத்தை தொழாமல் வீண் பொழுது போக்குகளில் மூழ்கி இருந்ததாக கூறுகிறார்கள். வீண் பொழுது போக்கு என்பது நம்மை நரகில் தள்ளிவிடக்கூடிய ஒரு பெரும்பாவம் என்பதை விளங்கி கொள்ள வேண்டும். எனவே நபிகள் நாயகம் உருவாக்கிய சமூதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களாகயிருந்தால் இந்த ஒழுக்கக் கேட்டை துடைத்தெறிகின்ற பணிகளிலும் முழுமூச்சாய் இருக்க வேண்டும்.
பெற்றோர்களின் கடமை
 இந்த சமூக மாற்ற உருவாக்கத்தின் முதற்கடமை எதிர்கால ஏகத்துவ சமுதாயத்தை  உருவாக்குகின்ற பெற்றோர்களைச் சார்ந்தது. இந்த பெற்றோர்கள் தான் அவர்களின் நேர்வழிக்கும் வழிகேட்டிற்கும் காரணமாக அமைகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த ஒரு குழந்தையும் இயற்கை மார்க்கமான இஸ்லாமிய நெறியின் அடிப்படையிலேயே பிறக்கிறது.அவர்களின் பெற்றோர்கள் தான் அவர்களை யூதர்களகாவோ கிறிஸ்துவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ வளர்க்கின்றனர்.எவ்வாறு ஒரு கால்நடை தன்னுடைய குட்டியை குறையில்லாமல் பெற்றெடுக்குமோ அதைப் போலத்தான். அதிலே ஊனம் எதையும் காண்பீர்களா?
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி)நூல் : புகாரி 1358
எந்த குறையும் ஊனமும் இல்லாத இளங்கன்றைப் போன்று எந்த பாவமும் அறியாத அந்த பிஞ்சு குழந்தையின் உள்ளத்தில் நஞ்சை வளர்ப்பதும் நல்லதை உருவாக்குவதும் அவர்களின் பெற்றோர்கள் தான். அதிலே குறிப்பாக அந்த பிள்ளைகளின் தாய்மார்களைச் சார்ந்தது. தந்தை சம்பாதிக்க சென்றுவிடுகிறார். அதிக நேரம் அந்த குழந்தை தாயின் அரவணைப்பில் தான் வளர்கிறது. எனவே தாய்க்கு தான் முழு முதற்பொறுப்பு
நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒவ்வொரும் பொறுப்பாளர்கள். உங்கள் பொறுப்புகள் பற்றி (மறுமைநாளில்) விசாரிக்கப்படுவீர்கள். ஒரு தாய் தன் கணவனின் வீட்டிற்கு பொறுப்பாளி அந்த பொறுப்பை பற்றியும் அவள் விசாரிக்கப்படுவாள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 893
மறுமையின் விசாரணை நம் செய்கின்ற நன்மை தீமைகளுக்கு மட்டும் இருக்காது.நமக்கு கொடுக்கப்பட்ட பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்புக்கும் விசாரணை இருக்கிறது. தாய்மார்களின் பொறுப்பு கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சமைத்து போடுவதோடு நின்றுவிடவில்லை. பிள்ளைகளின் மார்க்க அறிவு சிந்தனை என அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு இது போன்ற வீண் பொழுது போக்கிலிருந்து அவர்களுடைய சிந்தனையை மாற்ற வேண்டும்.
இதற்கு அல்லாஹ் குர்ஆனில் நல்லோர்கள் நபிமார்கள் தங்களுடைய பிள்ளைகளை எவ்வாறு உருவாக்கினார்கள் என்பதை அழகிய முன்னுதாரணமாகக் கூறுகிறான்.
யஃகூப் (அலை) தன் பிள்ளைகளுக்கு அறிவுரை செய்ததை பற்றி கூறும்போது...
"என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? "எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?'' என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது "உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்றே (பிள்ளைகள்) கூறினர்.
(அல் குர்ஆன் 2:132,133)
யாஃகூப் நபி (அலை) அவர்கள் இப்றாஹீம் (அலை) அவர்களின் மகன். அல்லாஹ்வின் நெருங்கிய தோழர் என்று அல்லாஹ்வால் பாரட்டுபெற்ற இப்றாஹீம் (அலை) அவர்கள் தான் மட்டும் நபியாக இருக்கவில்லை. தன்னுடைய பிள்ளைகளுக்கும் சிறுவயதிலிருந்தே மார்க்க அறிவை போதித்தார்கள். அவர்களின் மகன்கள் பேரன் என்று அல்லாஹ்அவர்களுடைய குடும்பத்தில் அதிகமான நபிமார்களை தேர்வுசெய்தான்
அதுபோல யாஃகூப்(அலை) அவர்களும் தன்னுடைய பிள்ளைகளுக்கும் சிறுவயதிலிருந்தே மார்க்க அறிவை ஊட்டுகிறார்கள். அதன் பலனை அவர்கள் மரணிக்கும் தருவாயில் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம் என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் சொன்னதை காண்கிறார்கள்.
லுக்மான் என்ற நல்லடியார் தன்னுடைய பிள்ளைக்கு செய்த உபதேசத்தையும் கூறுகிறான்....
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது "என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!
மனிதனுக்கு அவனது பெற் றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விரு வரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
"நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்).
(அல் குர்ஆன் 31:13லிருந்து 19 வரை)
ஷிர்க் என்ற பெரும் பாவத்தில் தொடங்கி எப்படி பேசுவது என்பது வரை மார்க்கத்தின் அனைத்து காரியங்களையும் லுக்மான் தன் மகனுக்கு கூறுகிறார். லுக்மான் ஒரு நபியில்லை. ஒரு நல்ல மனிதர். அல்லாஹ் அவருடைய அறிவுரையை சிறப்புப்படுத்தி பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு எவ்வாறு மார்க்க அறிவை  ஊட்ட வேண்டும். என்பதை நமக்கு பாடம் எடுக்கிறான். நம்முடைய பிள்ளைகளுக்கு மார்க்க அறிவை ஊட்டுகிறோமோ இல்லையே கார்ட்டூன் சினிமா வீணான பொழுது போக்குகள் இவற்றை கற்றுக் கொடுக்க தவறுவதில்லை. இதே நிலை தொடர்ந்ததென்றால் நம்முடைய காலத்தில் நாம் மட்டும் தான் ஏகத்துவ கொள்கையை பின்பற்றுபவர்களாக இருப்போம் நம்முடைய பிள்ளைகள் நாம் வந்த வழியை நோக்கி திரும்ப சென்றுவிடுவார்கள்.(அல்லாஹ் காப்பாற்றுவனாக)
நபி(ஸல்) அவர்கள் மார்க்க அறிவு இல்லாமல் போகும் காலம் பற்றி சொன்னார்கள். அல்லாஹ் தூதரே நாங்கள் குர்ஆனை படிக்கிறோம். எங்களுடைய பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்கிறோம் .இவ்வாறு மறுமைநாள் வரை அவர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுப்பார்களே. எப்படி மார்க்க அறிவு மங்கிப் போகும் என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் உம்மு லபீதின் மகனே! நீ மதீனாவிலேயே விபரமிக்கவனாக இருப்பாய் என்று நினைத்தேனே. யூத கிறிஸ்துவர்கள் தவ்ராத்தையும் இன்ஸீலயும் படிக்கத்தானே செய்கிறார்கள். ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவில்லையே.என்றார்கள்
அறிவிப்பவர் : ஸியாத் இப்னு லபீத் (ரலி), நூல்: அஹ்மது (17241)
தங்களுடைய வேதத்தை படித்து நடைமுறைபடுத்தாத யூத கிறிஸ்துவர்களின் நிலைமை இப்படியென்றால் குர்ஆனை நாமும் படிக்காமல் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்காத நம்முடைய நிலைமையை சிந்தித்துப் பாருங்கள்.
 இந்த அறிவுரைகளையெல்லாம் படித்து விட்டு  பொழுது போக்குக் கூட அனுமதியளிக்காத மனித உணர்வுகளை கட்டி போடும் நடைமுறைப்படுத்த முடியாத மார்க்கம் இஸ்லாமா? என்ற கேள்விக்கு இன்ஷா அல்லாஹ் அடுத்தத் தொடரில் விடையை பார்ப்போம்.


 என்று தவறான முடிவுக்கு வந்துவிடக்கூடாது. மனித உணர்வுகளை மதிக்க தெரிந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களையும் அகில உலகத்தையும் படைத்த இறைவனின் மார்க்கம். இறைவனுக்கு தான் படைத்த மனிதனின் உணர்வுகள் பற்றி தெரியும். இஸ்லாம் விளையாட்டுகளை பொறுத்த வரையில் அதிலேயே மூழ்கி கிடந்து அடிமையாகமலும் அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுக்காத வகையிலும் மோசடி சூதாட்டம் இல்லாமலும் உடல் ஆரோக்கியத்தையும் சிந்தனைûயும் சீர்படுத்த கூடிய விளையாட்டுகளை அனுமிதிக்கவும் செய்து அதை தூண்டவும் செய்கிறது.இன்னும் இஸ்லாத்தில் நம்முடைய உடம்பை பேணுவதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
உன் உடம்புக்கும் கண்ணுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன.
                                                அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்(ரலி)
                                                                நூல் : புகாரி 1975
இஸ்லாத்தில் மார்க்க வரையறைக்குட்டுபட்டு சந்தோஷமாக கொண்டாட வேண்டிய பண்டிகைகள் நோன்பு பெருநாள் ஹஜ் பெருநாள் இந்த நாட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளையாட்டுக்காக அல்லாஹ்வால் அருளப்பட்ட நாட்கள் என்றே கூறியுள்ளளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த காலகட்டத்தில் மதீனா வாசிகள் இரண்டு நாட்களை தேர்வு செய்து அதிலே வியைôடுபவர்களாக இருந்தார்கள.அப்போது நபி(ஸல்) அவர்கள் இது என்ன நாட்கள் என்று கேட்டார்கள்.அறியாமைக் காலத்திலிருந்து இந்த இரண்டு நாட்களில் தான் விளையாடிகொண்டு வருகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள் . அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதற்கு பதிலாக நோன்பு பெருநாள் ஹஜ் பெருநாள் என்ற இரண்டு நாட்களை (விளையாடுவதற்காக) அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான் என்று கூறினார்கள்
                                                                                அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி)
                                                                                                நூல் : அஹ்மத் 13131
இந்நாட்களில் விளையாடுவதற்கு அனுமதி அளித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய மனைவியோடு சேர்ந்து அதை நீண்ட நேரம் வேடிக்கையும் பார்த்துள்ளார்கள்
பள்ளிவாயிலில் கருப்பு நிற வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.நபி(ஸல்) அவர்களோ என்னை அவர்களுடைய மேலாடையால் மறைத்திருந்தார்கள். நான் சலிப்படையும் அளவுக்கு அவர்களின் விளையாட்டை பார்த்தேன். ஒரு பருவ வயதை அடைந்த சிறுமி விளையாட்டை பார்ப்பதற்கு எந்த அளவு ஆர்வமாக இருப்பாளோ அந்த அளவு (நான் பார்த்ததை) கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
                                                                                                அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
                                                                                                                நூல் : புகாரி 5236
               
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பெருநாள் உள்ளது . இது நம்முடைய சமுதாயத்தின் பெருநாள்(அஹ்மது 24358) என்ற வாசகம் வந்துள்ளது .
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே விளையாடவும் செய்துள்ளார்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்பெறிந்து விளையாடக் கூடிய சிலரை கடந்து சென்றார்கள். இஸ்மாயீலின் சந்ததிகளே அம்பெறியுங்கள் ஏனென்றால் உங்கள் தந்தை அம்பெறிபவராகத் தான் இருந்தார்.நீங்களும் எரியுங்கள் நான் இன்ன கூட்டதாருடன் சேர்ந்து கொள்கிறேன்.   என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அந்த இரண்டு கூட்டத்தினரில் ஒரு கூட்டத்தினர் அம்பெறியாமல் நின்றனர்.நீங்கள் ஏன் அம்பெறியவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.நீங்கள் அவர்களணியில் இருக்கும் போது நாங்கள் எப்படி அம்பெறிய முடியும். என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அம்பெறியுங்கள் நான் உங்கள் இருவரின் அணியுடனும் இருக்கிறேன் என்றார்கள்.
                                                                                அறிவிப்பவர் : ஸலமா இப்னு அல் அக்வா(ரலி)
                                                                                                நூல் : புகாரி 2899
இவ்வாறு  நபி(ஸல்) அவர்கள் விளையாடும் அன்யொன்னியமாக விளையாடியுள்ளார்கள். இந்த அம்பெறிகின்ற விளையாட்டு என்பது இன்றைய விளையாட்டை போன்று கிருக்குத் தனமான போதையை உண்டாக்காது . சிந்தனையையும் உடலையும் சீராக்கக்கூடியது. இன்றைக்கு ஒலிம்பிக் போட்டியில் கூட இடம்பெற்றுள்ளது. இன்னும் நபி(ஸல்) அவர்கள் போர்களத்தில் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள மட்டுமே இந்த வில்வித்தையை பயன்படுத்த  அனுமதியளித்துள்ளார்கள். அதுவல்லாமல் எந்த உயிரினத்துக்கும் இந்த விளையாட்டால் தீங்கு செய்வதை தடுத்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
உயிருள்ள பொருள் எதையும் அம்பெறிவதற்கு இலக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள்
                                                                                                அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
                                                                                                                நூல் : முஸ்லிம் 3617
இன்றைக்கு விளையாட்டுகள் என்பது காட்டுமிராண்டிதனத்தை போதிக்கக் கூடியவையாகத்தான் இருக்கிறது. தமிழ் நாட்டில் நடக்கும் ஜல்லிக் கட்டு ஸ்பெயினில் நடக்கும் காளையடக்கும் போட்டி இவையெல்லாம் உயிருள்ள ஜீவன்களை கொன்று தன்னுடைய வீரத்தை நிரூபிக்கும் முட்டாள் தனம் தான் நிறைந்துள்ளது. இவை தவிர இதிலே கேவலம் ஒரு விளையாட்டுக்காக விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பலியாகின்றன. விலங்கின மனித நேய ஆர்வலர்களின் கண்களுக்கு இன்று தான் தெரிந்து அதை எதிர்த்து போராட்டம் நடத்தி வழக்கு தொடர்கின்றனர். ஆனால் இஸ்லாம் அன்றைக்கு இதை தடைசெய்துள்ளது.
இன்னும் இஸ்லாம் உடலை வலுப்படுத்தியும் சிந்தனையை சீராக்கக்கூடிய கலைக்கு மிகுந்த முக்கியத்தவம் கொடுத்துள்ளது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
யார் அம்பெறிவதை கற்றுக் கொண்டு பிறகு மறந்துவிடுகிறாரோ அவர் என்னை சார்ந்தவரில்லை.அவர் மாறு செய்துவிட்டார்
                                                                                                அறிவிப்பவர் : உக்பா (ரலி)
                                                                                                                நூல் : முஸ்லிம் 3543
இது போன்ற தற்காப்பு கலைகளுக்கு  இந்திய அரசாங்கமே அரசு அனுமதியுடன் இதை கற்றுக் கொள்வதற்கும் தேசிய உலகளாவிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் பரிசுகளையும் ஊக்கத் தொகைகளையும் வழங்கி ஆர்வமூட்டுகிறது. நம்முடைய பிள்ளைகளுக்கு முட்டாள் தனமான சாகச வீரர்களின் தொடர்களை பார்ப்பதற்கு அனுமதிப்பதற்கு பதிலாக இது போன்ற விளையாட்டுகளை கற்பதை ஆர்வமூட்டினால் அவர்கள் சினமா ஆபாசம் போதை பழக்கத்திற்கு அடிமையாகுதல் இது போன்ற தீமைகளிலிருந்து அது திருப்பும். அவர்கள் அதில் சிறந்து விளங்கினால் அரசாங்கமே அவர்களது படிப்பின் முழுச் செலவையும் ஏற்றுக் கொள்ளும்.
நபி(ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாளில் இந்த அம்பெறியும் விளையாட்டை மட்டும் விளையாடவில்லை. பல விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஓட்டப் பந்தயம்
நான் நபி(ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் சென்றிருக்கிறேன்.அப்போது உடல் பருமனில்லாமல் (ஒல்லியாக) இருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களிடத்தில் சொôன்னார்கள் முன்னே செல்லுங்கள் முன்னே செல்லுங்கள் . பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தய போட்டிக்கு வா என்றார்கள்.நான் அவர்களுடன் போட்டிக்கு சென்று அவர்களை முந்தினேன். அப்போது (மீண்டும் ஓடுவது பற்றி) என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை. என் உடல் பருமனானது.நான் (ஏற்கனவே நடந்த ஓட்டப்பந்தயம் பற்றி) மறந்துவிட்டேன். அவ்வாறே அவர்களுடன் பயணத்தில் சென்றேன்.அப்போது அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள் முன்னே செல்லுங்கள் முன்னே செல்லுங்கள்  பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தயத்திற்கு வா என்றார்கள். நான் அவர்களுடன் போட்டி போட்டேன். அவர்கள் என்னை முந்திவிட்டு சிரித்துக் கொண்டே அதற்கு பதிலாக  இது  என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அஹ்மத் 25075
இந்த ஒட்டப் பந்தயம் தான் உலகநாடுகள் அனைத்திலும் இருக்கக்கூடிய ஒரு போட்டியாக உள்ளது. உடலுக்கு ஆரோக்கியத்தையும சுறுசுறுப்பையும் தரக்கூடியது.

குதிரை பந்தயம்
நபி (ஸல்) அவர்கள் ஸன்யதுல் விதா என்ற இடத்திலிருந்து ஹைஃபா என்ற இடம் வரை 5 மைல்கள் சேனம் பூட்டப்பட்ட  குதிரையை குதிரைபந்தயத்தில் ஓட்டி சென்றார்கள். ஸனியாவிலிருந்து பனூ ஸரைக்கின் பள்ளிவாயில் வரை 6 மைல்கள் சேனம் பூட்டப்படாத குதிரையை ஓட்டினார்கள்.
சேனம் பூட்டப்பட்டு குதிரையில் சவாரி செய்வதென்பது அதிலேயே பயிற்சி பெற்ற வீரர்களால் மட்டும் தான் முடியும். நபி(ஸல்) அவர்கள் சேனம் பூட்டப்பட்டாமல் 6 மைல்கள் (இந்த கால கணக்கு படி 9 கி.மீ) குதிரை பந்தயத்தில் சென்றுள்ளாôகளென்றால் அதுவும்  50 வயதுக்கு பின்னால் அவர்களின் உடல் வலிமையை தெரிந்து கொள்ளலாம். நபி(ஸல்) அவர்கள் ஜிப்பா தலைப்பாகையுமாக உடல் உழைப்பை செலுத்தாமல் பள்ளிவாசலுக்குள் முடங்கிகிடக்கவில்லை.பல வீரதீர போட்டிகளில் பங்கெடுத்துள்ளார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.
ஒட்டக பந்தயம்
நபி(ஸல்) அவர்கள் குதிரை ஏற்றம் அம்பெறிதல் இவற்றில் மட்டும் வீரராக சிறந்து விளங்கவில்லை. ஒட்டக பந்தயத்திலும் தன் திறமையை காட்டினார்கள்.
நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு ஒட்டகம் இருந்தது . அதன் பெயர் பைலா . அதை யாரும் போட்டியில் தோற்கடிக்க முடியாது. சேனம் பூட்டப்பட்ட ஒட்டகத்தில் அமர்ந்தவாறு ஒரு கிராமவாசி வந்தார். நபி(ஸல்) அவர்களை அவர் போட்டியில் முந்திவிட்டார்.இது முஸ்லிம்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது.பைலா தோற்றுவிட்டதே என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கென்றுள்ள உரிமை அவன் உயர்த்திய எந்த பொருளையும் தாழ்த்துவதாகும். என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
நூல் : புகாரி 6501
நபி(ஸல்) அவர்களுடைய ஒட்டகமான பைலாவை தோற்க முடியாது என்று அனஸ்(ரலி) அவர்கள் கூறுவதிலிருந்து பலதடவைகள் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகப்பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளதாக அறியமுடிகிறது.
இன்னும் நபி(ஸல்) சில விளையாட்டு போட்டிகளுக்கு குறிப்பிட்டு அனுமதியும் வழங்கியுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
வெற்றி பரிசு என்பது ஒட்டகப்பந்தயம் குதிரை பந்தயம் அம்பெறிவது இவைகளுக்கு தான் தகுதியானது.
அறிவிப்பவர் :அபூ ஹரைரா (ரலி)
நூல் : அஹ்மத் 9754
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் போர்களத்தில் இந்த மூன்று திறமைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. அதை தூண்டும் வண்ணமாக பரிசுகளும் அதற்கு வழங்கவது தான் சிறந்தது  என்று கூறியுள்ளார்கள்.
இது போன்று பெரியவர்கள் மட்டும் தான் விளையாட்டை விளையாட வேண்டும் என்றல்ல. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான விளையாட்டுக்கு இஸ்லாம் அனுமதியளித்துள்ளது.

குழந்தைகளின் விளையாட்டுக்கள்
நபி(ஸல்) அவர்கள் என்னை ஆறு வயதில் திருமணம் முடித்தார்கள்.நாங்கள் மதீனாவுக்கு சென்று  அங்கே பனூ ஹாரிஸ் இப்னு கஸ்ரஜின் வீட்டில் தங்கினோம்.எனக்கு காய்ச்சல் ஏற்பட்டு என் (தலைமுடி உதிர்ந்து மீண்டும்)  என் தோல்புஜம் வரை வளர்ந்திருந்தது. என் தாய் உம்மு ரும்மான் என்னிடத்தில் வந்தார்கள். நான் சீசாவில் விளையாடிக் கொண்டிருந்தேன். என் தோழிகளும் உடன் இருந்தனர். என் தாய் என்னை அழைத்தார்கள்.நான் அவர்களிடத்தில் சென்றேன். அவர்கள் என்ன நாடி (என்னை அழைத்தார்கள்)  என்பதை நான் அறியவில்லை.அவர்கள் என் கையை பிடித்து வீட்டு வாசலில் நிறுத்தினார்கள்.நான் பதட்டமடைந்தேன். இறுதியாக என் மனது அமைதியடைந்தது.பிறகு அவர்கள் தண்ணீரால் என் முகத்திலும் தலையிலும் தடவினார்கள்.பிறகு என்னை அந்த வீட்டிற்குள் அழைத்து சென்றார்கள்.அந்த வீட்டில் அன்சாரி பெண்கள் இருந்தார்கள்.சிறந்ததும் அபிவருத்தியும் நன்மையின் பங்கும் உனக்கு கிடைத்துள்ளது என்று அந்தப் பெண்கள் சொன்னார்கள்.என் தாய் அவர்களிடத்தில் என்னை ஒப்படைத்தார்கள். அவர்கள் என்னை அலங்கரித்தார்கள்.திடீரென்று நபி(ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் என்னிடத்தில் வந்தவர்கள். என் தாய் என்னை அவர்களிடத்தில் ஒப்படைத்தார்கள்.எனக்கு அப்போது 9வயது.   
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 1866
இன்றைக்கு பூங்காகளில் சிறுவர்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட ஒரு விளையாட்டு கருவி தான் சீசா . ஒருவர் ஒரு பக்கத்தில் உட்கார்ந்தால் இன்னொருவரின் பக்கம் தூக்கும். இது குழந்தைகளின் மனதுக்கும் சந்தோஷத்தையும் உடலுக்கு வலுவையும் தரக்கூடியது.இதை ஆயிஷா(ரலி) அவர்கள் விளையாட நபி(ஸல்) அவர்களும் அனுமதியளித்துள்ளார்கள்.
பொம்மைகளை வைத்து விளையாடுதல்
இஸ்லாத்தில் உருவப்படத்திற்கு தடையிருந்தாலும் குழந்தைகள் பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு அனுமதியுள்ளது.
நபி(ஸல்) அவர்கள் கன்தக் போரிலிருந்தோ அல்லது கைபர் போரிலிருந்தோ திரும்ப வந்தார்கள். விளையாட்டு பொருட்கள் உள்ள பெட்டி ஒரு திரையால் மூடப்பட்டிருந்து. காற்றடித்து மூடியிருந்த என்னுடை விளையாட்டு பொருட்களை மூடியிருந்த திரை விலகியது. இது என்ன? ஆயிஷா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் இது என் விளையாட்டு பொருட்கள் என்று கூறினேன்.அவைகளில் தோலலான இரண்டு இறக்கைகளையுடைய குதிரையை பார்த்தார்கள்.இவைகளின் நடுவில் நான் பார்க்கும் இது என்ன ? என்று கேட்டார்கள். அதற்கு குதிரை என்று நான்பதிலளித்தேன்.குதிரைகளுக்கு இறக்கைகளும் இருக்குமோ? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.சுலைமான்(அலை) அவர்களின் குதிரைகளுக்கு இறக்கைகள் இருப்பதை நீங்கள் கேள்விபட்டதில்லையா? என்று நான் சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தன் கடவாய் பற்கள் தெரியுமளவுக்கு சிரித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அபூ தாவூத் 4305
நான் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடுபவளாக இருந்தேன்.என்னுடைய தோழிகள்(விளையாடுவதற்காôக) என்னிடத்தில் வருவார்கள். நபி(ஸல்) அவர்ளை  கண்டு அவர்கள் வெட்கப்பட்டு பயந்து ஒழிந்து கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் என்னிடத்தில் அவர் அனுப்பி வைப்பார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் 4480
நபி(ஸல்) அவர்கள் சுலைமான் (அலை) அவர்களின் குதிரைக்கு ஆயிஷா(ரலி) அவர்கள் கூறிய விளக்கத்தை கேட்டு கடவாய் பற்கள் தெரியுமளவுக்கு சிரித்ததும் அவர்களுடைய தோழிகளை விளையாடுவதற்கு அனுப்பி வைத்ததும் பொம்மைகளை வைத்து குழந்தைகள் விளையாடுவதற்கு அனுமதியளித்ததை விளங்கி கொள்ள முடிகிறது.இதனால் நம்முடைய மனதில் ஒரு கேள்வி ஏழலாம் இது போன்று தான் கார்ட்டூன் நிகழ்ச்சிகளும் அதனால் அதனை பார்த்து கொள்ளலாம். கார்ட்டூன் நிகழ்ச்சிகளை பொறுவத்தவரை குழந்தைகளின் புத்தியை மழுங்கச் செய்யமாலும் கிருக்குத்தனமான நடைமுறைகளை தூண்டாமலும் ஆபாசம் இல்லாமலும் இருக்கக்கூடிய நிகழ்ச்சிகளை பார்த்துக் கொள்ளலாம்.
தடைசெய்யப்ட்ட விளையாட்டுகள்
இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட விளையாட்டுகள் என்ன என்பதை ஒரு வரியில் சொல்லிவிடலாம். விளையாடுபவர்களுக்கும் விளையாடும் கால்நடைகளுக்கும் உயிர் உறுப்புகள் சேதம் ஏற்படுத்தக்கூடிய மோசடி சூதாட்டம் இவைகளையே குறிக்கோளாகக் கொண்டவிளையாட்டுகள் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன.
சூதாட்ட விளையாட்டுகள்
பொதுவாக விளையாட்டுகள் என்பது சூதாட்டத்தை மையமாக கொண்டவையாக உள்ளன.இது மார்க்கத்தில் மிகவும் தண்டனைக்குரிய காரியமாகவும் உள்ளது.
. நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள் 
(அல் குர்ஆன் 5:90)
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட எந்த விளையாட்டாக இருந்தாலும் நபி(ஸல்) அவர்கள் தூண்டிய எந்த விளையாட்டுகளாக இருந்தாலும் அவைகளில் சூதாட்டம் கலந்திருந்தால் அவைகள் ஷைத்தானின் செயல்கள்.ஏனென்றால் சூதாட்டம் திறமைக்கு உடலுழைப்புக்கு மதிப்பில்லாமல் குறுக்கு வழியில் பணத்தை உறிஞ்சக்கூடிய ஒரு வாய்க்காலாகவும் உள்ளது.
இன்னும் சில குறிப்பபிட்ட விளையாட்டுகளையும் நபி(ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்
யார் தாய விளையாட்டை விளையாடுகிறார்களோ பன்றியின் இறைச்சியையும் அதன் இரத்தத்தையும் சாப்பிடுவதற்கு தன் கையில் தயாராக வைத்திருப்பதை போன்றாவார்.
                                                                                அறிவிப்பவர் : புரைதா (ரலி)
                                                                                                நூல் : முஸ்லிம் 4194
ஏனென்றால் இதில் புத்திக்கும் உடலுக்கும் எந்த வேலையும் இல்லை.சோவியை உருட்டிவிட்டு அதிஷ்டத்தை எதிர்பாக்கக்கூடிய பயனற்ற விளையாட்டாக உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் வீணாக கற்களை சுண்டி விளையாடவதை தடைசெய்தார்கள்.ஏனென்றால் அது வேட்டையாடவோ எதிரிகளை வீழ்த்தவோ பயன்படாது. கண்ணை பதம்பாக்கவும் பல்லை உடைக்கவும் தான் செய்யும் என்றார்கள்
                                                                                அறிவிப்பவர் : அப்துல்லாஹ்இப்னுமுகஃப்பல்(ரலி)
                                                                                                நூல் : புகாரி6220
இது போன்ற தேவையில்லாமல் விளையாடி உடலுக்கு பாôதிப்பை உண்டாக்கூடிய விளையாட்களை இஸ்லாம் தடைசெய்துள்ளது. எனவே இஸ்லாம் வணக்க வழிபாட்டிற்காக மார்க்கம். பல வேறுபட்ட இன மொழி மக்களும் குழுமும் ஒரு பல இன சங்கமம். அது ஏழைகளின் வறுமையை போக்கவும் செல்வந்தர்கள் தங்களுடைய பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் ஒரு பொருளாதார புரட்சியின் சங்கமம். அதுபோல உடலை ஆரோக்கியாக வைக்கவும் தீமைகளையும் தீயவர்களையும் உடல் வலிமையால் பயந்து அதை துணிவுடன் தட்டி கேட்க உருவாக்கம் உடற்பயிற்சி சங்கமம்.எனவே இஸ்லாம் கூறிய அனைத்து துறைகளுக்கும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை போல இந்தத் துறையிலும் குர்ஆன் ஹதீஸ் நெறிக்குப்பட்டு இந்ததுறையில் நாமும் நமது பிள்ளைகளையும் சங்கமிப்பதற்கு எல்லா வல்லா அல்லாஹ் அருள்புரிவானாக

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites