அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 22 ஏப்ரல், 2010

நபிவழித் திருமணம் எங்கே


திருமணம் என்பது ஓர் ஆணும் ஓர் பெண்ணும் வாழ்க்கையில் இணையும் ஓர் ஒப்பந்தம். ஒரு மனிதனின் வாழ்வில் நடைபெறும் சந்தோஷமான நிகழ்ச்சியாகும். இந்த சந்தோஷம் காரணமாகத் தங்கள் மீதுள்ள பொறுப்பை, கடமையை மறந்து விடுகின்றனர். இஸ்லாமியத் திருமணங்கள் குர்ஆன் மற்றும் நபிவழிக்கு மாற்றமாகவே நடக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் தும்முபவருக்குப் பதில் சொல்வதிலிருந்து திருமணம் மற்றும் ஜனாஸா வரைக்கும் அனைத்தையுமே கற்றுத் தந்துள்ளார்கள். திருக்குர்ஆன் கூட நபி (ஸல்) அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறது:
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)
இறை நம்பிக்கையும் மறுமை நம்பிக்கையும் உள்ளவர்கள் நபி (ஸல்) அவர்களையே முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டுமென திருக்குர்ஆன் கட்டளையிட்டுள்ளது. திருமண விஷயத்தில் யாரும் இவ்வசனத்தின் கருத்தைக் கண்டு கொள்வதில்லை.
இன்றைய இஸ்லாமியத் திருமணங்கள் ஆடம்பரமாகவும், பகட்டாகவும் நடக்கின்றன. இவை இஸ்லாமியத் திருமணத்திற்கு முற்றிலும் மாற்றமானதாகும்.
"ஆடம்பரமின்றி எளிமையாக நடக்கும் திருமணமே இறையருள் நிறைந்த திருமணம்'' என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றை முஸ்லிம்கள் ஏன் கண்டு கொள்வதில்லை?
பத்திரிக்கை அடித்தல், பந்தல் போடுதல், வாழை மரம் கட்டுதல், வீடியோ எடுத்தல், கருகமணி கட்டுதல் இன்னும் இது போன்ற பல செயல்கள் திருமணத்தில் நடக்கின்றன. இவற்றையெல்லாம் இஸ்லாம் அனுமதிக்கிறதா? நாம் செய்யலாமா? என்று யாரும் சிந்திப்பதில்லை. இவையெல்லாம் மாற்று மதத்தவர்களின் செயலாகும். இதைப் பின்பற்றி நடப்பவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது என்று கூறுகிறது ஒரு நபிமொழி.
யார் மாற்று மதத்தவர்களுக்கு ஒப்பாக நடக்கிறார்களோ அவர்கள் அம்மதத்தைச் சார்ந்தவர்களே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: பஸ்ஸார்)
நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் ஏராளமான திருமணங்கள் நடந்துள்ளன. அவற்றில் ஒன்றில் கூட பந்தல் போடவில்லை, வாழைமரம் கட்டவில்லை, வீடியோ எடுக்கவில்லை. மிக மிக எளிமையாகவே நடந்துள்ளது.
நபித்தோழர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் திருமணம் நபி (ஸல்) அவர்களுக்கே சொல்லப்படாமல் நடந்துள்ளது. அவர்களின் மீது படிந்திருந்த நறுமணத்தைப் பார்த்தே நபி (ஸல்) அவர்கள் திருமணம் நடந்ததைக் கண்டுபிடித்து, "உமக்குத் திருமணம் முடிந்து விட்டதா?'' என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்கள் என்றால் அந்தத் திருமணங்கள் எவ்வளவு எளிமையாக நடந்திருக்கும்?
மணப் பெண்ணை ஓர் அந்நிய ஆடவன் உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து வீடியோ எடுக்கின்றான். ஒரு பெண்ணை முழுவதுமாகப் பார்ப்பதற்கு, கணவனுக்கு மட்டும் தான் உரிமை உள்ளது. ஆனால் திருமணத்திற்கு முன் யாரோ ஒருவனை ரசிக்க விடுவது எவ்வளவு பெரிய கேவலமான காரியம் என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.
திருமணம் என்ற பெயரில் எவ்வளவு பெரிய ஆடம்பர விருந்துகள் கொடுக்கின்றனா? நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டின் படி திருமண விருந்து என்பது மணமகன் தரும் வலீமா விருந்து மட்டும் தான். பெண் வீட்டார் போடும் விருந்திற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் இரு வீட்டாரும் போட்டி போட்டுக் கொண்டு விருந்தளிப்பதும் அதில் பகட்டைக் காட்டுவதும் நபிவழிக்கு எதிரானதாகும். இந்த விருந்துக்காக வட்டிக்கு வங்குவதும், வீட்டை விற்பதும், கடன் வாங்குவதும் என்ற நிலையை நாம் பார்க்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் காட்டிய வலீமா விருந்து கூட அவரவர் வசதிக்கேற்ப அளித்துக் கொள்ளலாம். ஊர் முழுக்க விருந்து தர வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. நபி (ஸல்) அவர்கள் தமது திருமணத்தின் போது இரண்டு கையளவு மட்டமான கோதுமையில் வலீமா விருந்து கொடுத்தார்கள். (புகாரி 5172)
நபி (ஸல்) அவர்களின் திருமண விருந்தில் மிகப் பிரம்மாண்டமான விருந்தாகக் கொடுத்தது ஸைனப் (ரலி) அவர்களை மணமுடிக்கும் போது கொடுத்த வலீமா விருந்து தான். அதில் அவர்கள் கொடுத்தது ஒரே ஒரு ஆட்டை அறுத்து விருந்தளித்தது தான். (புகாரி 5168)
இவ்வாறு திருமணத்தில் நபி (ஸல்) அவர்கள் மிக மிக எளிமையாக காட்டிய திருமணத்தை மாற்று மதத்தவர்களின் திருமண முறையைக் காப்பியடித்து, திருமணம் என்பதை மிக மிகக் கடினமானதாக ஆக்கிய நம் சமுதாயம் திருந்த வேண்டும். எல்லா விஷயங்களிலும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை மட்டுமே பின்பற்றி நடக்க வேண்டும்.
ஃபாத்திமா பீவி, தொண்டி
ஈறைவன் மீது நம்பிக்கை
நான் சென்னையில் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வருகின்றேன். அங்கு ஐவேளைத் தொழுவதற்கு நேரமும் தருகிறார்கள். ஒரு நாள் அலுவலக வேலையை முடித்து விட்டு வீடு திரும்பும் போது எனது ஏ.டி.எம். கார்ட் மூலம் 2500 ரூபாய் வங்கியில் எடுத்து விட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.
வீடு சென்று பார்த்த போது நான் வைத்திருந்த பர்ஸைக் காணவில்லை. அதிலிருந்த ரூபாய் 2500 மற்றும் ஏ.டி.எம். கார்டும் தொலைந்தது தெரிய வந்தது. வீடு முழுவதும் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. பணம் போனதோடு ஏ.டி.எம். கார்டும் காணாமல் போனதால் நான் பெரிதும் கவலைப்பட்டேன். ஏ.டி.எம். கார்டைப் பயன்படுத்தி மீதப் பணத்தையும் யாரும் எடுத்து விடக் கூடாதே என்று வங்கிக்குத் தொடர்பு கொண்டு கேட்ட போது, புதிய கார்ட் வாங்குவதற்கு 300 ரூபாய் தேவைப்படும் என்று கூறினர். இதை அறிந்த எனது தாய், "உன்னுடைய  கவனமின்மையால் தான் இப்படி நடந்துள்ளது'' என்று கண்டித்தார்கள்.
படைத்தவனிடம் முறையிட்டுக் கொண்டே இருந்தேன். எனது தாய் என்னிடம் வந்து ஆறுதல் கூறினார்கள். "நீ கவலைப்படாதே! நமக்கு ஒரு கஷ்டத்தை அல்லாஹ் தந்தால் நமது பாவத்தைப் போக்கி விடுவான். நீ எத்தனையோ பாவங்களைச் செய்திருப்பாய். அல்லாஹ் இதன் மூலம் உன் பாவத்தை நீக்கி விடுவான்'' என்றார்கள். இது எனக்கு மன ஆறுதலைத் தந்தது.
தவறு செய்யும் குழந்தைகளைக் கண்டித்து, உதாவக்கரை, பொறுப்பில்லாதவள், உன்னால் என்ன பயன் இருக்கிறது? என்று மேலும் மேலும் மனம் நோகச் செய்யும் பெற்றோர்கள் மத்தியில் என் தாய், நபிமொழியின் அடிப்படையில் ஆறுதல் கூறியது என்னை மனம் நெகிழ வைத்தது.
அப்போது திருக்குர்ஆனின் பின்வரும் வசனமும் நினைவுக்கு வந்தது.
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)
மேலும் "ஒரு முள் தைத்தாலும் அதற்காகவும் பாவங்களை அல்லாஹ் நீக்குவான்' என்ற நபி (ஸல்) அவர்கள் பொன்மொழியும் "ஆரம்ப நிலையில் பொறுமையை மேற்கொள்வதே (உண்மையில்) பொறுமையாகும்' என்ற நபிமொழியும் எனக்கு நினைவுக்கு வந்தது.
தவறிப் போன பொருளை இறைவன் திருப்பித் தரட்டும். இல்லையெனில் அதனால் என் பாவங்களை நீக்கட்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
இந்நிலையில் அன்றிரவு 9 மணியளவில் ஒருவர் போன் செய்து எனது பெயரைக் கேட்டு முகவரியை பெற்றுக் கொண்டு என் வீட்டுக்கே வந்து பர்ஸைக் கொடுத்து விட்டுச் சென்றார். மேலும் அவர் ஒரு குளிர்பானத்தைக் கூட குடிக்காமல் நன்றி செலுத்துவதாக இருந்தால் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். அவர் ஒரு கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர். இஸ்லாமியர்களிடத்தில் கூட இல்லாத இந்த நற்பண்பை அவரிடம் கண்டு வியந்து போனேன்.
படைத்தவனிடம் நம்பிக்கை வைத்தவர்களுக்கு நிச்சயம் இறைவனின் பேருதவி கிடைக்கும் என்பதை என்னுடைய இந்தச் சம்பத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். எனவே எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் படைத்தவனிடம் நம்பிக்கை வையுங்கள்; அல்லாஹ் ஒருபோதும் கைவிட மாட்டான்.
உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் (அல்குர்ஆன் 14:12)

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites