அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 21 ஏப்ரல், 2010

குழந்தைகளை எந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது

புதிய கல்வியாண்டு துவக்கத்தில் நாம் இருக்கிறோம். தம்முடைய குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கும், தாம் பெற்ற கஷ்டங்களைத் தங்கள் குழந்தைகள் பெறா வண்ணம் தடுக்கவும், அவர்களின் தரத்தை கல்வியின் மூலம் உயர்த்துவதற்கும் பெற்றோர்கள் நினைக்கின்றனர்.
தன்னுடைய குழந்தைகள், பிற குழந்தைகளை காட்டிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல் அவர்கள் தேர்ந்தேடுக்கும் துறையில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துவக்கப் பள்ளியில் சேர்க்கும் போதே, தன்னுடைய குழந்தையை சாதனையாளராக மாற்றும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோர்களின் உள்ளத்திலும் உதிக்கிறது. இந்த ஆசை நியாயமானது தான். ஆனால் பள்ளிக்கூடங்களால் மாணவர்களின் சேர்க்கைக்காகச் செய்யப்படும் பல கவாச்சியான விளம்பரங்களுக்கு மத்தியில் எந்தப் பள்ளியில் தன்னுடைய குழந்தையைச் சேர்க்க வேண்டும் என்ற குழப்பத்தில் பெற்றோர்கள் ஆழ்ந்து விடுகின்றனர்.
ஆங்கில மொழி உலகளாவிய மொழி என்ற அந்தஸ்தை அடைந்திருப்பதால் தாய்மொழியின் நிழல் கூட படாமல் நுனி நாக்கில் ஆங்கிலத்தைப் பேசக் கற்றுத் தரும் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதா? அல்லது தொழில் நுட்ப உலகமான இன்று கம்ப்யூட்டர் உதவியன்றி எதையும் சாதிக்க இயலாது என்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிற நிலையில் துவக்கப் பள்ளியிலேயே கம்ப்யூட்டரை கற்றுத் தரும் பள்ளிக்கூடத்தில் தங்களுடைய குழந்தைகளைச் சேர்ப்பதா? போன்ற பல குழப்பங்கள் பெற்றோர்களை ஆட்டுகின்றன.
இவற்றிற்கு மத்தியில் முஸ்லிம்களாகிய நாம் நம்முடைய குழந்தைகளை எந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதை மார்க்க ரீதியாக யோசிக்கக் கடமைப்பட்டுள்ளோம். கல்வியை கற்றுத் தருகிறோம் என்ற போர்வையில் மாற்று மதக் கலாச்சாரத்தையும், ஆடைகளை உடுத்துவது முதல் பல ஒழுக்கக் கேடுகளை பிஞ்சுகளின் மனதில் பதிவது போன்ற பல சீர்கேடுகளை ஏற்படுத்துகின்ற பள்ளிக்கூடங்களில் நம்முடைய குழந்தைகளைச் சேர்க்க வேண்டுமா? என்பதை ஆழமாக யோசிக்கக் கடமைப்பட்டுள்ளோம். நம்முடைய இம்மை வாழ்க்கையின் வெற்றிக்கும் மறுமை வாழ்வின் வெற்றிக்கும் தேவையான கல்வி மார்க்கத்துடன் கூடிய உலகக் கல்வி தான். அதுவும் மார்க்கக் கல்வி என்றால் தூய மார்க்கத்தை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் போதிக்கக்கூடிய கல்வி தான்.
இவ்வாறு மார்க்கத்துடன் கூடிய உலகக் கல்வியைப் பெறும் குழந்தைகள் வாழ்வில் எந்த வித பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தற்கொலை என்கிற கோழைத்தனமான முடிவை நாடாமல் உறுதியுடன் பிரச்சனைகளை சந்திப்பவர்களாகவும், பெற்றோர்களை மதித்து அவர்களுக்கு நல்ல முறையில் சேவை செய்பவர்களாகவும், சமுதாயத் தீமைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக இவ்வாறு வளர்க்கும் பெற்றோர்களின் மரணத்திற்குப் பிறகும் நிரந்தரக் கூலியை பெற்றுத் தரும் கேடயமாகவும் மாறுவார்கள் என்பது திண்ணம்.
ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனுடைய அமல்கள் அனைத்தும் நின்று விடுவின்றன. மூன்றை தவிர!
1. நிரந்தரப் பயன் தரும் தர்மம்
2. பயன் தரக்கூடிய கல்வி
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் நல்ல குழந்தைகள்
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: முஸ்லிம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நபிமொழியில் பெற்றோர்களுக்காகப் பிரார்த்திக்கும் சாலிஹான (நல்ல) குழந்தைகள் மரணத்திற்குப் பிறகும் நிரந்தரக் கூலியை பெற்றுத் தரும் கேடயமாக இருப்பார்கள் என்று தெளிவாக விளக்கப்படுகிறது. வல்ல அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் சாலிஹீன்கள் யார் என்ற விளக்கத்தைப் பின்வருமாறு தருகிறான்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.
(அல்குஆன் 3:114)
எனவே உலகக் கல்வியுடன் தூய்மையான மார்க்கத்தைப் போதிக்கக்கூடிய கல்விக் கூடத்தில் நம்முடைய குழந்தைகளைச் சேர்த்து, வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியபடி மேற்கூறிய பண்புகளுடன் நம்முடைய குழந்தைகளை வளர்த்து, ஈருலக வெற்றியைப் பெற முயற்சிப்போமாக! வல்ல ரஹ்மான் அதற்குத் துணை புரிவானாக!

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites