அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

அமானிதம்
மனைவியின் நகைகளையும் சொத்துக்களையும் விற்று, கடன் வாங்கிக் கொடுத்தப் பணத்தை, வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி வாயில் போட்டுக் கொள்ளும் மோசக்காரர்கள் கொஞ்சம் கூட இறைவனின் பயம் இல்லாமல் தலை நிமிர்ந்து இந்த உலகத்தில் நடக்கிறார்கள்.
வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏப்பம் விட்டு விட்டு ஓடி ஒளியும் கல் நெஞ்சக்காரர்களை கணக்கில் அடக்கி விட முடியாது.
நிலத்தை விற்பதாகக் கூறி, பொய்யான பத்திரத்தைக் காட்டி ஏமாற்றும் நெஞ்சில் ஈரமில்லாத ஆசாமிகள் அலைகடலெனத் திரண்டு விட்டார்கள்.
இன்றைக்கு நாம் கண்கூடாகப் பார்க்கும் இந்தக் கயவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அன்றைக்கே எச்சரித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால் சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)
நூல்: புகாரி (2651)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "விரைவில் ஒரு காலம் வரும். அப்போது மக்களில் சிறந்தவர்கள் (இந்த உலகை விட்டும்) அகற்றப்பட்டு இழிவானவர்கள் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களுடைய உடன்படிக்கைகளும் அமானிதங்களும் (அவர்களின் அக்கரையின்மையால்) சீர்கெட்டு, கருத்து வேறுபாடும் கொள்வார்கள்'' என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் தம்முடைய விரல்களைக் கோர்த்து, "அவர்கள் இவ்வாறு (நல்லவருக்கும் தீயவருக்கும் வித்தியாசம் இல்லாமல்) இருப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் (எதை உண்மை என்று) அறிந்துள்ளீர்களோ அதை எடுத்துக் கொண்டு, (எதை பொய்யென்று) மறுக்கிறீர்களோ அதை விட்டு விடுங்கள். பொதுமக்களின் காரியங்களை விட்டு விட்டு உங்களுக்கு நெருங்கியவர்களின் விஷயத்தில் ஈடுபடுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் (3779)
மேற்கண்ட ஹதீஸ் இன்றைய காலத்தைச் சுட்டிக் காட்டும் விதமாக உள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போல் பார்ப்பதற்கு நல்லவனைப் போல் தெரிகிறான். வாயைத் திறந்தால் இறையச்சம் மிகுந்தவனைப் போல் பேசுகிறான். ஆனால் தன்னுடைய காரியம் முடிந்தவுடன் அமானிதத்தைப் பேண மறந்து விடுகிறான்.
உண்மையில் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஏற்றுக் கொண்ட எந்த ஒரு முஸ்லிமும் அமானிதம் சம்பந்தமாக மார்க்கம் சொன்ன அறிவுரைகளைப் படித்திருந்தால் எப்பாடு பட்டாவது அமானிதத்தை அதற்குரியவர்களிடம் ஒப்படைத்து விடுவான்.
இயற்கையாகவே அல்லாஹ் மனிதர்களின் உள்ளங்களில் அமானிதத்தைப் பேணும் பண்பை படைத்திருக்கிறான். குர்ஆனும் நபிவழியும் வந்த போது ஏற்கனவே இருந்த இந்தப் பண்பை மேலும் உறுதிப் படுத்தியது. எனவே தான் முந்தைய காலங்களில் மக்களிடையே நாணயம் அதிகமாகக் காணப்பட்டது. இதற்குப் பின்வரும் சம்பவம் ஆதாரமாக உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பனூ இஸ்ராயீலில்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம் "என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்) உன்னிடமிருந்து நிலத்தைத் தான் நான் வாங்கினேன். இந்தத் தங்கத்தை வாங்கவில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர் "நிலத்தை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் நான் உனக்கு விற்றேன். (ஆகவே இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்பு கேட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், "உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?'' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், "எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று சொன்னார். மற்றொருவர், "எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது'' என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், "அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள். தான தர்மம் செய்யுங்கள்'' எனத் தீர்ப்பளித்தார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (3472)
ஆனால் மனிதர்களின் மோசமான நடவடிக்கைகளால் இந்தக் குணம் நாளடைவில் இருந்த இடம் தெரியாமல் ஆகி விட்டது. இக்கருத்தையே பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு செய்தி யாதெனில் (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் (அமானத் எனும்) நம்பகத்தன்மை இடம் பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். பிறகு சுன்னாவிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய) இதை நான் பார்த்து விட்டேன்.
இரண்டாவது செய்தி நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒருமுறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்திலிருந்து நம்பகத் தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து (அது அகற்றப்பட்டதன்) அடையாளம் சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கி விடும். பிறகு மீண்டும் ஒருமுறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்து விடும். (இவ்வாறு முதலில் நம்பகத்தன்மை என்னும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டு பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவது) காலில் தீக்கங்கை உருட்டி விட்டு அதனால் கால் கொப்பளித்து உப்பி விடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பி பெரிதாகத் தெரியுமே தவிர அதனும் ஒன்றும் இருக்காது.
பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வார்கள். (ஆனால் அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற எத்தனிக்க மாட்டார்கள். "இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார்'' என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கைக்குரியவர்கள் அரிதாகி விடுவார்கள்). மேலும் ஒருவரைப் பற்றி "அவருடைய அறிவு தான் என்ன? அவருடைய விவேகம் தான் என்ன? அவருடைய வீரம் தான் என்ன?'' என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால் அந்த மனிதருடைய உள்ளத்தில் கடுகளவு கூட நம்பிக்கை இருக்காது.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: புகாரி (6497)
மேற்கண்ட ஹதீஸ் கூறும் நிகழ்வை இன்று கண்கூடாகக் கண்டு வருகிறோம். ஆயிரக்கணக்கானோரில் ஒருவரைக் கூட நம்பிக்கைக்குத் தகுந்தவராக நம்மால் காண முடியவில்லை. அல்லாஹ்விற்கும் அடியார்களுக்கும் செய்ய வேண்டிய அமானிதங்களைப் பேணுபவர்கள் அரிதிலும் அரிதாகி விட்டார்கள். சிலர் தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற அமானிதங்களை முறையாக நிறைவேற்றுவார்கள். ஆனால் அவர்களுடைய குடும்பவிஷயங்களிலோ அல்லது வியாபார விஷயங்களிலோ நம்பிக்கைக்குரியவராக இருக்க மாட்டார்கள்.
கடனாக வாங்கும் தொகை, ஒரு அமானிதம். கடன் வாங்கி நிறைவேற்றாமல் மரணித்தவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழ வைக்கவில்லை. அந்தக் கடனுக்கு யாராவது ஒருவர் பொறுப்பேற்ற பின்பு தான் தொழ வைத்தார்கள். இந்த அளவிற்கு அமானிதத்தை ஒப்படைக்காமல் இருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள்.
தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. "இவர் கடனாளியா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, நபித்தோழர்கள், இல்லை என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. "இவர் கடனாளியா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள், ஆம் என்றனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள் என்றார்கள். அப்போது அபூகதாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு!'' என்று கூறியதும் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: ஸலமா (ரலி)
நூல்: புகாரி (2295)
அமானிதத்தை பேணியவர் சுவர்க்கம் செல்வார்
நாம் அதிகமான நன்மைகளை சேகரித்து வைத்திருந்தாலும் அமானிதத்தை உரியவரிடத்தில் ஒப்படைக்காவிட்டால் சொர்க்கத்திற்குச் செல்வதற்கு அது தடைக்கல்லாகி விடும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பெருமை, மோசடி மற்றும் கடன் ஆகிய மூன்று விஷயங்களை விட்டும் நீங்கிய நிலையில் உடம்பை விட்டும் உயிர் பிரியுமானால் அது சொர்க்கத்தில் நுழைந்துவிடும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: சவ்பான் (ரலி)
நூல்: இப்னுமாஜா (2403)
நம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட பொருளை நம்மால் முடிந்த அளவு பாதுகாக்க வேண்டும். நமது முயற்சிக்குப் பின்னால் அதை பாதுகாக்கும் படி இறைவனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும். நம்முடைய சொந்தப் பொருட்களை பாதுகாப்பதற்காக இறைவனிடத்தில் மன்றாடி வேண்டுகிறோம். அமானிதம் நம்மிடம் இருக்கும் வரை அதுவும் நமது சொந்தப் பொருளைப் போன்று தான். நபி (ஸல்) அவர்கள் பிறருக்காகப் பல பிரார்த்தனைகளைச் செய்துள்ளார்கள். அதில் ஒன்று பிறருடைய அமானிதம் பாதுகாப்பாக இருப்பதற்காக அல்லாஹ்விடம் அவர்கள் பிரார்த்திப்பார்கள். அமானிதம் பாதுகாக்கப்படவில்லையானால் அதனால் அவர்களுக்கு மிகப் பெரிய இடைஞ்சல்கள் ஏற்படும் என்பதால் நபியவர்கள் இந்தப் பிரார்த்தனையைச் செய்துள்ளார்கள்.
என்னுடைய தந்தை அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் பிரயாணம் செய்யும் மனிதரிடத்தில் வந்தால் அவரிடத்தில் (பின்வருமாறு) கூறுவார்கள். "அருகில் வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை வழியனுப்பி வைத்ததைப் போல் நான் உங்களை அனுப்பி வைக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் (ஒருவரை வழியனுப்பும் போது) உங்களுடைய மார்க்கத்தையும் அமானிதத்தையும் இறுதி செயல்களையும் பாதுகாக்க நான் அல்லாஹ்விடம் வேண்டுகிறேன் என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: சாலிம் பின் அப்தில்லாஹ்
நூல்: அஹ்மத் (4295)

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites