கேள்வி: முஸ்லிம் மற்ற முஸ்லிமுடைய சகோதரனாவான் என்ற நபி மொழி ஆண்களைத் தான் குறிக்கிறதே தவிர பெண்களை சகோதரி என்று கூறவில்லையே என்றும் இதிலிருந்து இஸ்லாத்தில் பெண்களுக்குரிய உரிமையைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் என்னிடம் கேட்கிறார்கள். இதற்குத் தகுந்த விளக்கத்தைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- அப்துர்ரஹீம், திருப்பத்தூர்.
பதில்: திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் பெரும்பாலான கட்டளைகளும் சட்டதிட்டங்களும் ஆண்பால் வார்த்தைகளால் தான் கூறப்பட்டுள்ளன.
இதற்காண காரணத்தை அறிவதற்கு முன் அரபு மொழியின் அமைப்பு பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
நமது தமிழ் மொழியில் படர்க்கையாகப் பேசும் போது அவன் என்று ஆணையும், அவள் என்று பெண்ணையும் குறிப்பிடுவோம். படர்க்கை ஒருமையில் தான் இந்த வித்தியாசமும் காணப்படும். படர்க்கை பன்மையில் பல ஆண்களைப் பற்றிப் பேசும் போதும் பல பெண்களைப் பற்றிப் பேசும் போதும் அவர்கள் என்றே குறிப்பிடுவோம்.
அது போலவே முன்னிலையாகப் பேசினால் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் "நீ' என்று தான் கூறுவோம். பலராக இருந்தால் நீங்கள் எனக் கூறுவோம்.
"உங்களுக்கு' என்று தமிழில் கூறினால் அது இருபாலருக்கும் பொதுவானது. அரபு மொழியில் அவ்வாறு கூற முடியாது. ஆண்களாக இருந்தால் "லகும்' எனவும், பெண்ணாக இருந்தால் லகுன்ன எனவும் கூறவேண்டும்.
தொழுங்கள் எனத் தமிழில் கூறினால் அது ஆண் -பெண் இருபாலரையும் குறிக்கும். அரபு மொழியில் இருபாலரையும் குறிக்கும் வகையில் இவ்வாறு கூற முடியாது. ஆண்களை நோக்கி ஸல்லூ எனவும் பெண்களை நோக்கி ஸல்லீன எனவும் கூற வேண்டும்.
எனவே ஆண்களையும், பெண்களையும் குறிக்கும் விதமாக கட்டளைகள் பிறப்பிப்பதாக இருந்தால் அந்தக் கட்டளைகளை இரு வார்த்தைகளைக் கொண்டு இரு தடவை கூறியாக வேண்டும்.
தொழுங்கள் என்று கூறும் இடத்தில் ஸல்லூ வஸல்லீன என்று கூற வேண்டும்.
தொழுகையை நிலைநாட்டுங்கள் என்று கூறும் இடத்தில் அகீமுஸ்ஸலாத வஅகிம்னஸ்ஸலாத என்று கூற வேண்டும். முதல் வார்த்தைக்கு ஆண்களே தொழுகையை நிலை நாட்டுங்கள் எனவும், இரண்டாம் வார்த்தைக்கு பெண்களே தொழுகையை நிலை நாட்டுங்கள் எனவும் பொருள் செய்ய வேண்டும்.
அரபு மொழியின் அமைப்பு இவ்வாறு இருப்பதால் இரு பாலரையும் குறிக்க ஒவ்வொரு செய்தியையும் இரு தடவை இரு தடவை கூறியாக வேண்டும். இவ்வாறு கூறினால் கேட்பதற்கு நன்றாக இராது. வேறு மொழிகளில் மொழி பெயர்க்கும் போது இரு தடவை அதைக் குறிப்பிட்டால் குர்ஆன் மிகவும் தரக்குறைவான நடையில் அமைந்துள்ளதாக அந்த மொழியினர் கருதுவார்கள். இப்போது உள்ள அளவைப் போல் இன்னொரு பாதியளவு சொற்கள் குர்ஆனில் இதனால் அதிகமாகி விடும்.
ஆண்களையும், பெண்களையும் குறிப்பிடவும் வேண்டும். அரபு மொழியின் இலக்கண விதிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே பெரும்பாலான கட்டளைகளையும் சட்ட திட்டங்களையும் ஆண்பாலுக்குரிய சொல்லாக இறைவன் பயன்படுத்துகிறான். இதன் மூலம் ஒவ்வொரு செய்தியையும் இரு தடவை இரு தடவை கூறுவது தவிர்க்கப் படுகிறது.
சட்டங்களிலும் மறுமையில் கிடைக்கும் சன்மானங்களிலும் இரு பாலரும் சமமானவர்களே என சில வசனங்களில் மட்டும் இறைவன் கூறி பெண்களையும் குறிப்பிடுகிறான்.
இதனால், வார்த்தைகளும் சுருக்கமாக அமைந்து விடுகிறது. பெண்களையும் அந்தச் சட்ட திட்டங்களுக்குள் கொண்டு வருவதாகவும் அமைந்து விடுகிறது.
பெண்களும், ஆண்களுக்குரிய அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் பெறுவார்கள் என்பதைக் கூறும் அத்தகைய சில வசனங்களைக் கீழே தந்துள்ளோம்.
அவை உங்கள் ஐயங்களை நீக்கும்.
3:195, 4:124, 16:97, 40:40, 4:19, 4:7, 4:32, 33:35, 9:71, 9:72, 24:23, 33:58, 47:19, 48:5, 57:12, 85:10, 2:228
பெண்களுக்கு இஸ்லாம் இவ்வுலகிலும், மறுமையிலும் வழங்கியுள்ள கண்ணியத்திற்கு இவை போதுமான சான்றுகளாகும். உங்கள் நண்பரிடம் இவ்வசனங்களை எடுத்துக் காட்டினால் அதன் பின்னர் இது பற்றி குறை கூற மாட்டார்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக