பலர் தங்கள் வீடுகளில் பிறை போட்ட பச்சைக் கொடி ஏற்றி ஃபாத்திஹா ஓதுகிறார்களே! இதனால் ஏதேனும் புண்ணியம் கிடைக்குமா? இது எதற்காகச் செய்கிறார்கள்? நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்து உள்ளார்களா?
ஷர்ஃபுன்னிஸா, கிள்ளை சிதம்பரம்
நபியவர்கள் போர்க்களங்களில் அடையாளத்திற்காகக் கொடிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதைத் தவிர கொடிக்கும் மார்க்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
இன்றைக்குப் பரவலாக இஸ்லாமிய சமுதாயத்தினர் பிறை போட்ட பச்சைக் கொடியைப் புனிதமாக கருதுகின்றனர். பிறை போட்ட பச்சைக் கொடிக்கும் மார்க்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதைக் கட்டி ஃபாத்திஹா ஓதுவதில் எந்தப் புண்ணியமும் கிடையாது. ஃபாத்திஹா என்பதே மார்க்கத்தில் இல்லாத ஒன்றாகும்.
நம்முடைய தமிழகத்தில் பரவலாக பல்வேறு விஷயங்களுக்கு ஃபாத்திஹா என்ற பெயரில் ஒருவரை அழைத்து ஓதச் செய்கின்ற நடைமுறை உள்ளது. இது முழுக்க முழுக்க மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறையாகும். நபியவர்களோ, ஸஹாபாக்களோ இவ்வாறு செய்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
ஃபாத்திஹா ஓதி அதன் நன்மையை இறந்தவர்களுக்குச் சேர்த்து வைப்பதாக அதனைச் செய்யக் கூடியவர்கள் கூறுகின்றனர். நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களுடைய பாசத்திற்குரிய மனைவி ஹதீஜா (ரலி) அவர்கள் மரணித்துள்ளனர். எத்தனையோ ஸஹாபாக்கள் பல போர்க்களங்களில் கொல்லப் பட்டுள்ளனர். அவர்களில் யாருக்கும் நபியவர்கள் ஒன்றாம் ஃபாத்திஹா, இரண்டாம் ஃபாத்திஹா, ஏழாம் ஃபாத்திஹா, நாற்பதாம் ஃபாத்திஹா, வருஷ ஃபாத்திஹா என்று ஓதியதாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
இவையெல்லாம் நபியவர்கள் காட்டித் தராத பித்அத்தான காரியங்களாகும். இன்னும் சொல்லப் போனால் இவ்வாறு ஃபாத்திஹா ஓதி அதன் நன்மைகளை இறந்தவர் களுக்குச் சேர்த்து வைக்கின்றோம் என்று கூறுவது இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமானதாகும்.
ஒருவர் இறந்து விட்டார் என்றால் அவருடைய அமல்கள் அனைத்தும் நின்று போய் விடுகிறது. நாம் செய்கின்ற எந்த ஒரு நன்மையும் அவர்களைச் சென்றடையாது. இதற்கு ஏராளமான திருக்குர்ஆன் வசனங்கள் ஆதாரமாக உள்ளன.
"ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப் படவில்லையா? (53:38,39)
ஒவ்வொருவனும், தான் செய்ததற்கு பிணையாக்கப் பட்டுள்ளான். (73:38)
(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்'' என்றும் கூறுவீராக! (6:164)
ஒவ்வொரு மனிதனும் அவன் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டவன். (52:21)
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் ஒருவர் மற்றவரின் பாவத்தைச் சுமக்க முடியாது என்றும் ஒரு மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு எதுவும் கிடையாது என்றும் கூறுகின்றன.
இறந்து விட்ட உறவினர்களுக் காகவோ, மற்றவர்களுக்காகவோ நாம் நன்மைகள் செய்து அவர்களுக்குச் சேர்த்து விட முடியாது என்பதை இவ்வசனங்கள் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன.
நபியவர்கள், இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களாக சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றைத் தவிர வேறு எந்தக் காரியங்களை நாம் செய்தாலும் அது அவர்களுக்கு எந்தப் பலனும் அளிக்காது என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்களும் இது போன்ற ஃபாத்திஹாக்களை ஓதி வருகின்றனர். ஆனால் இது அவர்களுடைய மத்ஹபிற்கே எதிரானதாகும். இதைக் கூட அவர்கள் சிந்திப்பதில்லை.
இமாம் ஷாஃபி அவர்களின் கருத்தைக் காண்போம்.
"ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' (53:39) இந்த திருவசனத்திலிருந்து ஷாஃபி (ரஹ்) அவர்களும் அவரைப் பின்பற்றியவர்களும் பின்வருமாறு சட்டம் எடுக்கிறார்கள்: "குர்ஆன் ஓதி அதன் நன்மையை இறந்தவர்களுக்குச் சேர்த்து வைப்பது அவர்களை அடையாது. ஏனென்றால் இது (இறந்தவர்களாகிய) அவர்கள் செய்த செயல் அல்ல. இன்னும் அவர்களுடைய சம்பாத்தியமும் அல்ல. இதன் காரணமாகத் தான் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய சமுதாயத்தை முன்னோக்கி (அதைச்) செய்யுமாறு தூண்டவும் இல்லை. நேரடியாகவோ அல்லது (மறைமுகமான) சுட்டிக் காட்டுதலின் மூலமோ நபி (ஸல்) அவர்கள் இதற்கு வழிகாட்டவில்லை. நபித்தோழர்களில் எந்த ஒருவரும் கூட இவ்வாறு செய்ததாக (எந்தச் செய்தியும்) பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு செய்வது நன்மையானதாக இருந்தால் இதில் அவர்கள் நம்மை முந்தியிருப்பார்கள்.
(நூல்: தப்ஸீர் இப்னு கஸீர், 53:39 வசனத்தின் விரிவுரை)
சிலர் இவ்வாறு ஃபாத்திஹாக்கள் ஓதுவது நல்ல காரியம் தானே என்று கூறுகின்றனர். இதுவும் மார்க்கத்தை விளங்காதவர்களுடைய கூற்றாகும்.
இறைவன் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை நபியவர்கள் வாழும் போதே முழுமைப்படுத்தி விட்டான். எதுவெல்லாம் நல்ல காரியமாக இருக்குமோ அவையனைத்தையும் இறைவன் தன் தூதர் மூலம் காட்டித் தந்து விட்டான். அவர்கள் காட்டித் தந்ததைத் தவிர வேறு எந்த நல்ல காரியமும் இல்லை. இவ்வாறு தான் ஒவ்வொரு முஃமினும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக் கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். (5:3)
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நாம் கட்டளையிடாத காரியத்தை யார் செய்கிறாரோ அது (அல்லாஹ்விடம்) மறுக்கப்படும்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 3243
நபியவர்களோடு முழுமைப்படுத்தப் பட்ட மார்க்கத்தில் இது போன்ற ஃபாத்திஹாக்கள் என்று எந்த ஒரு காரியமும் இருந்ததில்லை. எனவே இவையனைத்தும் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கின்ற பித்அத்தான காரியங்களாகும். இவற்றைத் தவிர்ந்து கொள்வது தான் நம்முடைய ஈமானுக்குப் பாதுகாப்பானதாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக