இஸ்லாத்தின் அடிப்படைகள் எத்தனை?
இஸ்லாத்தின் அடிப்படை இரண்டு தான். ஒன்று திருக்குர்ஆன், இரண்டு நபிமொழிகள். இந்த இரண்டைத் தவிர வேறு எதையும் ஆதாரமாகக் கூறக் கூடாது என்று நாம் கூறி வருகிறோம். இதற்கு அவர்கள் மறுப்பு இதோ:
"இஸ்லாத்தின் அடிப்படை திருக்குர்ஆன், ஹதீஸ் என்று கூறியவர்கள் தங்கள் நூல்களில் அல்பிதாயா வந்நிஹாயா, தபகாத், பத்ஹுல் பாரீ என்று குறிப்பிட்டு உள்ளார்கள். இவை ஹதீஸ் நூல்களா? இதில் இடம் பெற்றிருக்கும் செய்திகளுக்கு அறிவிப்பாளர் வரிசை உண்டா?'' என்று விளக்கம் கேட்கின்றனர்.
நமது விளக்கம்
நமது நிலைபாடு என்ன என்பதை விளங்காமல் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று.
இஸ்லாத்தின் அடிப்படை இரண்டு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் அடிப்படை ஆதாரம் இரண்டு என்பது எதற்கு? நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதரான நாற்பதாவது வயதிலிருந்து அவர்கள் இறந்த 63வது வயது வரை நடந்த செய்திகளுக்குத் தான். ஏனெனில் அந்தச் செய்திகள் தான் நாம் பின்பற்ற வேண்டியவை.
எனவே அந்தச் செய்தி ஆதாரப் பூர்வமானதாக இருக்க வேண்டும். பலவீனமானதாக இருக்கக் கூடாது. சங்கிலித் தொடர் இருக்க வேண்டும். அறிவிப்பாளருக்கிடையே தொடர்பு இருக்க வேண்டும்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதராக ஆவதற்கு முன்னர் நடந்த செய்திகளை நாம் பின்பற்றத் தேவையில்லை.
நபி (ஸல்) அவர்கள் எந்த வருடம் பிறந்தார்கள்? அவர்களின் தந்தை எப்போது இறந்தார்கள்? என்பதில் நாம் எதைப் பின்பற்றப் போகிறோம்? எனவே இது போன்ற வரலாற்றுச் செய்திகளில் தான் நாம் அவர்கள் கூறுகின்ற நூல்களிலிருந்து ஆதாரம் காட்டுகிறோம். இது ஒரு தகவலுக்குத் தானே தவிர பின்பற்றுவதற்கு இல்லை.
நாம் மட்டுமல்ல! அன்றைய அறிஞர்கள் கூட இது போன்ற செய்திகளுக்கு அறிவிப்பாளர் வரிசை உண்டா? என்று ஆய்வு செய்வதில்லை. நல்லவரா? கெட்டவரா என்று நபிமொழிக்கு ஆய்வு செய்வதைப் போன்று ஆய்வு செய்ததும் இல்லை. வரலாற்றுச் செய்திகளில் அது இட்டுக் கட்டப்பட்டதா? அதை யாரேனும் மறுத்துள்ளனரா? என்பது தான் கவனத்தில் கொள்ளப்படுகிறது.
பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லாத செய்திகளில் அறிவிப்பாளர் வரிசை கவனிக்கப்படுவதில்லை. நபிமொழிக்கு வழங்கிய அளவிற்கு மற்ற செய்திகளுக்கு எந்த அறிஞர்களும் முக்கியத்துவம் அளித்ததில்லை. நபிமொழிகள் பேணப்பட்டுள்ளதைப் போன்று மற்ற எந்தச் செய்திகளும் பாதுகாக்கப்படவில்லை. எனவே வரலாற்றுச் செய்திகளில் நபிமொழிக்கு உள்ள நிபந்தனைகளை நாம் எதிர்பார்க்கக் கூடாது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக