? ஒரு நாள் டில்லி ஜாமியா மஸ்ஜிதில் நபி (ஸல்) அவர்கள் வந்து ஹவுளில் உளூச் செய்ததாகவும் அப்போதிருந்த மன்னரின் சிப்பாய்கள் பார்த்ததாகவும் அது மன்னரின் கனவிலும் தெரிந்ததாகவும் உடனே மன்னர் ஓடிச் சென்று பார்த்த போது, ஹவுளின் தண்ணீர், உளூச் செய்ததன் அடையாளமாக கலங்கி இருந்ததாகவும், உடனே அங்கு ஒரு சின்னம் கட்டி வைத்து அதில் உருதுவில் எழுதப் பட்டிருப்பதாகவும் அங்கு போய் வந்த ஒருவர் சொல்கிறார். அது உண்மையா?
எஸ்.ஏ. அமீர் அலீ, கிள்ளை
இதைப் போன்ற கதைகள் ஏராளமாக தமிழ் மக்கள் மத்தயில் உலா வருகிறன. மதீனாவில் நடந்த உண்மைச் சம்பவம்! முடி இல்லாமல் பிறந்த குழந்தை! என்று பல கற்பனைப் பாத்திரங்கள் முஸ்லிம்களிடம் சுற்றி வருகிறன. இது போன்ற சம்பவங்கள் அடிப்படை இல்லாத கற்பனை செய்திகள் தான்.
நீங்கள் குறிப்பிட்ட அந்தச் சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் டில்லி ஜாமியா மஸ்ஜிதில் உளூச் செய்ய வந்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தப் பள்ளிக்கு என்று குறிப்பிட்டு எதற்காக வந்தார்கள்? ஏன் அவர்கள் கட்டிய மஸ்ஜிதுன் நபவிக்கு வரவில்லை. அங்கு தண்ணீர் தீர்ந்து விட்டதா? உலகிலேயே மிகச் சிறந்த பள்ளியாகத் திகழும் கஅபத்துல்லாஹ்விற்குச் செல்லாமல் ஏன் இங்கு வந்தார்கள்?
நபி (ஸல்) அவர்களுக்குத் தொழுகை இப்போதும் கடமையாக இருக்கிறதா?
வந்தது நபிகள் நாயகம் தான் என்று அங்கிருந்தவர்களும், கனவில் கண்ட மன்னரும் எப்படித் தெரிந்து கொண்டார்கள்?
ஒரு பேச்சுக்கு, அவர்கள் வந்துள்ளார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அங்கு நினைவுச் சின்னம் அமைக்க மார்க்கம் அனுமதிக்கிறதா?
இதைப் போன்ற நினைவுச் சின்னங்கள் ஏற்படுத்துவதற்குப் பாடமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்வதற்காக சுமார் 1500 தோழர்களுடன் மக்கா நோக்கிப் பயணமானார்கள். வழியில் மக்காவிலிருந்து சற்று தூரத்தில் உள்ள ஹுதைபிய்யா என்னும் இடத்தில் தங்கினார்கள். தம் நோக்கத்தை மக்காவாசிகளிடம் தெரிவித்து வருமாறு உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவிற்கு நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். ஆனால் மக்காவாசிகள் முஸ்லிம்களை மக்கா நகருக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. அத்துடன் வந்துள்ள முஸ்லிம்கள் மீது போர் தொடுக்க மக்காவாசிகள் தயாராக இருப்பதாகவும் நபிகளாருக்குச் செய்தி கிடைத்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். அப்போது மக்காவாசிகள் போர் தொடுத்தால் போரில் பின்வாங்க மாட்டோம் என்று நபித்தோழர்கள் பைஅத் (உறுதி மொழி) அளித்தனர். இது அங்கிருந்த ஒரு மரத்தடியில் நடந்தது. இந்த உறுதி மொழியைப் பற்றி அல்லாஹ்வும் பின்வருமாறு பாராட்டியுள்ளான்.
அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான். (அல்குர்ஆன் 48:18)
குறிப்பிட்ட மரத்தடியை அல்லாஹ் சொல்லியிருப்பதால் அந்த மரத்தடியை சிலர் புனிதமானதாகக் கருதி ஹஜ் செய்யப் போகும் போது அங்கு தொழுது வந்தனர். இது தொடர்பாக அன்றைய காலத்தில் வாழ்ந்த நபித்தோழரிடம் கேட்கப்பட்டது.
நான் ஹஜ்ஜுக்குச் சென்று கொண்டிருந்த போது, தொழுது கொண்டிருந்த ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றேன். "இது என்ன தொழுமிடம்?'' என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், "இது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைஅத்துர் ரிள்வான் எனும் உறுதிப் பிரமாணம் வாங்கிய மரம் இருந்த இடமாகும்'' என்று கூறினார். பின்னர் நான் ஸயீத் பின் முஸய்யப் அவர்களிடம் வந்து இது பற்றித் தெரிவித்தேன். அப்போது அவர்கள் அந்த மரத்தினடியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவரில் ஒருவரான என் தந்தை (முஸய்யப் (ரலி) அவர்கள் உறுதிப் பிரமாணம் நடந்து முடிந்த ) "மறு ஆண்டு நாங்கள் அங்கு சென்ற போது அந்த மரத்தை மறந்து விட்டோம். எங்களால் அதனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை' என்று கூறினார்கள் எனத் தெரிவித்து விட்டு பிறகு ஸயீத் அவர்கள், "முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களே அதனை அறிய முடியவில்லை. நீங்கள் அறிந்து விட்டீர்களா? அப்படியானால் நீங்கள் அதிகம் தெரிந்தவர்கள் தாம்'' என்று (பரிகாசமாகக்)கூறினார்கள்.
அறிவிப்பவர்: தாரிக்
நூல்: புகாரீ (4163)
நபி (ஸல்) அவர்கள் தமது கால் பட்டால், கை பட்டால் அவைகள் புனிதமாக மாறிவிடும் என்ற கருத்தை ஊட்டி தமது தோழர்களை உருவாக்கவில்லை. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து உடன் படிக்கை எடுத்த மரத்தை - அல்லாஹ்வால் சொல்லப்பட்ட அந்த மரத்தைப் புனிதமாகக் கருதவில்லை. எனவே தான் அடுத்த ஆண்டு அங்கு சென்ற போது அந்த மரம் எதுவென்றே அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.
உமர் (ரலி) அவர்கள் காலத்திலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அந்த மரம் பரக்கத் நிறைந்த மரம் என்று கருதி மக்கள் கூட்டம் அங்கு சென்று வந்தது. அப்போது உமர் (ரலி) அவர்கள் அந்த மரத்தை வெட்டி எறியச் சொன்னார்கள்.
ஷஜ்ரத்துர் ரிள்வான் (திருப்தி கொள்ளப்பட்ட மரம்) என்று கூறப்படும் ஒரு மரத்திற்கு மக்கள் சென்று அங்கு தொழுது வந்தார்கள். இந்த விஷயம் உமர் (ரலி) அவர்களுக்கு எட்டிய போது அவர்களை எச்சரித்தார்கள். (அம்மரத்தை வெட்டுமாறு) கட்டளையிட்டார்கள். அது வெட்டப்பட்டது. (நூல்: தபக்காதுல் குப்ரா- இப்னு ஸஅத், பாகம்: 2, பக்கம்: 100)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கனவில் வந்தார்கள் என்றால் அவர்கனை முன்னதாகப் பார்த்தவர் தான் அடையாளம் காண முடியும். 1000 வருடங்களுக்குப் பின்னர் தோன்றிய ஒருவர் நபிகளாரை எவ்வாறு அடையாளம் காணமுடியும்? அப்படியே தெரிந்தாலும் அவர்கள் உளூச் செய்த இடம் என்பதால் அதற்கு நினைவுச் சின்னம் எழுப்புவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் கிடையாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக