அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

சிந்திப்பது இதயமா? மூளையா?

குர்ஆன், இரட்டை வேடம் போடுபவர்களைக் குறிப்பிடும் போது, "அவர்கள் செவியிருந்தும் கேளாதவர்கள்; பார்வை இருந்தும் குருடர்கள்; இதயம் இருந்தும் சிந்திக்க மாட்டார்கள்' என்று ஓர் இடத்திலும் "(இந்த) குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்களின் மீது பூட்டுகள் (போடப்பட்டு) இருக்கின்றனவா?' (47:24) என்று ஓர் இடத்திலும் கூறுகின்றது. இந்த வசனங்களை மாற்று மதத்தவர்கள் படிக்கும் போது, சிந்திப்பது மூளை தானே? அல்லாஹ் இதயத்தைக் குறிப்பிடுகிறானே? இதயத்தின் வேலை சிந்திப்பது இல்லையே? என்று கேட்கிறார்கள். எனவே, இதற்குச் சரியான விளக்கத்தைக் கூறவும்.
- எஸ்.ஏ. இர்பான்பாஷா, தர்மபுரி.
மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது என்பதில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை நிலவி வந்தது.
சிந்திப்பது, மகிழ்ச்சியடைவது, இரக்கம் காட்டுவது, பொறாமை கொள்வது உள்ளிட்ட எல்லாக் காரியங்களும் இதயத்தில் தான் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை ஒரு காலக் கட்டத்தில் இருந்தது. நாடு, மொழி அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் இப்படித் தான் நம்பி வந்தது.

பின்னர், அறிவு சம்பந்தப்பட்டது. மூளையிலும் ஆசை சம்பந்தப்பட்டது. இதயத்திலும் நிகழ்வதாக ஒரு கருத்துக்கு உலகம் வந்தது. இன்றைய விஞ்ஞானிகள் வேறு முடிவுக்கு வந்து விட்டாலும் கூட இன்றைய சாதாரண மக்களின் கருத்து இதுவாகத் தான் உள்ளது. ஒருவன் படிப்பில், சிந்தனையில் குறைவாக இருக்கும் போதும், குறைந்த மதிப்பெண் வாங்கும் போதும், "மூளை இருக்கிறதா?'' என்று கேட்கிறோம்.
ஒருவன் கொடியவனாக, இரக்கமற்றவனாக, பேராசை பிடித்தவனாக இருந்தால் அவனுக்கு இதயம் உள்ளதா என்று கேட்கிறோம்.
சிந்திப்பது மூளையின் வேலை எனவும், கவலைப்படுவது போன்றவை இதயத்தின் வேலை எனவும் மக்கள் நினைப்பதை இதிலிருந்து அறியலாம். இடைப்பட்ட காலத்தில் உலக மக்களின் கருத்து இதுவாகத் தான் இருந்தது. அது தான் இன்று வரை சாதாரண மக்களிடம் நீடிக்கிறது.
இரத்தத்தை முழு உடலுக்கும் விநியோகம் செய்வது மட்டுமே இதயத்தின் பணி, இதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதற்கு இல்லை என்பதை இன்றைய விஞ்ஞான உலகம் கண்டறிந்துள்ளது.
சிந்திப்பது சம்பந்தமான விஷயங்களும், ஆசை சம்பந்தமான விஷயங்களும் மனித உடலின் முழு இயக்கமும் மூளையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. சிந்திப்பதும், கவலைப்படுவதும், மகிழ்ச்சியடைவதும், பேராசைப்படுவதும், கோபப்படுவதும் மற்றும் அனைத்து செயல்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது.
"இதயத்தில் உனக்கு இடம் இல்லை'' என்பது போன்ற வார்த்தைகளை இன்றைய விஞ்ஞானம் கேலி செய்கிறது. மூளையில் உனக்கு இடமில்லை என்று தான் கூற வேண்டும். ஒருவரை நேசிப்பதும், பகைப்பதும் கூட மூளையின் பணி தான்.
இனி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம். சிந்தனையைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்திப் போகும். ஆனால், இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு நம் காலம் வரை வந்து சேர்ந்திருக்காது.
குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு "இதயம்'' எனக் கூறினால் அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால், "மூளை'' தான் சிந்திக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வாழும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். இன்றைய அறிவியல் உலகம் அதை உண்மை என ஏற்காது. இதையே காரணம் காட்டி குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்று வாதிடும்!
எனவே, அந்த இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது. இதயம் என்றும் குறிப்பிட முடியாது. ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.
இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது? நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம். அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் கூறவல்லவன்.
அரபு மொழியில் "கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது. அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும், இதயத்தைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறன், மூளை, இதயம் ஆகி ய அர்த்தங்கள் உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டையும் குறிக்கக்கூடிய இந்தச் சொல்லை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கிறான். இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச்சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள். அவர்களும் திருக்குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள்.
மூளை தான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக்காலத்தில் அந்தச் சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அப்பொருளும் அச்சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் தான்.
5:25, 7:179, 9:87, 9:93, 17:46, 18:57, 63:3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்புபடுத்தியே கல்ப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும்.
33:10, 40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் இதயம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அரபு மூலம் அதற்கு இடம் தரக்கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.
எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ, அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது.
மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற உண்மையை அறிந்தவனால் தான் இவ்வாறு கூற முடியும். அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப்பட முடியாமல் காப்பாற்றி - உண்மை கண்டறியப்படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப்படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது தான் இறைவேதம் என்பதற்கான நிரூபனங்களில் ஒன்றாகவுள்ளது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites