அல்குர்ஆன் 33:72 வசனத்தில் அமானிதம் என்ற பதத்துக்கு பகுத்தறிவு என்று தமிழகத்து தவ்ஹீது உலமாக்கள் விளக்கமளிக்கின்றார்கள். கண்களுக்குப் புலப்படாத ஒன்றை ஒரு பொருளாகக் கொள்ள முடியாது. மேலும் அமானிதம் என்ற பதம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டிய ஒரு பொருளாகவே கருத வேண்டியுள்ளது. எனவே இந்த அமானிதம் என்பது திருக்குர்ஆனைத் தான் குறிக்கும் என்று எண்ணுகின்றேன். மேலும் அல்குர்ஆன் 59:21 வசனத்தில் இந்தக் குர்ஆனை மலைகள் மீது இறக்கி வைத்திருந்தால் அது பஞ்சு பஞ்சாகப் பறந்திருக்கும் என்று கூறுகின்றான். இந்த இரு வசனங்களையும் இணைத்துப் பார்த்தால் இரண்டுமே அருள்மறைக் குர்ஆனைத் தான் குறிப்பிடுகின்றன என்று ஏன் கூறக்கூடாது?
வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு அமானிதத்தை நாம் முன் வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அறியாதவனாகவும், அநீதி இழைப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:72)
இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் அமானிதம் என்பது என்ன என்பது குர்ஆனில் ஏனைய இடங்களிலோ அல்லது நபிமொழிகளிலோ சுட்டிக்காட்டப் படவில்லை. எனவே பொதுவாக மனிதர்களுக்கும் ஏனைய அனைத்துப் படைப்பினங்களுக்கும் உள்ள வித்தியாசம் பகுத்தறிவு தான். எனவே இதைத் தான் இந்த வசனம் குறிப்பிடுகின்றது என்று நாம் கூறி வருகின்றோம்.
இதை மறுப்பதற்கு நீங்கள் கூறும் காரணங்கள் 1. கண்ணுக்குப் புலப்படாத ஒன்றை இது குறிப்பிடவில்லை. 2. அமானிதம் என்றால் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த இரண்டு காரணங்களும் பகுத்தறிவு என்று பொருள் கொண்டால் பொருந்தாது என்று கூறுகின்றீர்கள். நீங்கள் குறிப்பிடும் திருக்குர்ஆன் என்ற பொருள் கொண்டாலும் இந்த இரண்டு காரணங்களும் பொருந்தாது என்பதைக் கவனிக்கத் தவறி விட்டீர்கள்.
திருக்குர்ஆன் என்பது கண்ணுக்குப் புலப்படும் பொருளாக அருளப்படவில்லை. ஓசை வடிவத்திலானது தான். நம்முடைய வசதிக்காக அதை அச்சிட்டு பொருள் வடிவத்தில் ஆக்கிக் கொண்டோம். திருக்குர்ஆன் வசனங்கள் என்பதும் கண்ணுக்குப் புலப்படாத ஓசை வடிவிலானது தான்.
அமானிதம் என்றால் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறினால் மறுமையில் திருக்குர்ஆனை நாம் திருப்பி ஒப்படைக்கப் போவதில்லை. அதன் போதனைகளின் அடிப்படையில் நடந்தது பற்றித் தான் அல்லாஹ் விசாரிப்பான். அதைத் தான் இது குறிப்பிடுகின்றது என்றால் அதே விளக்கம் பகுத்தறிவு என்பதற்கும் பொருந்தும்.
இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம். (அல்குர்ஆன் 59:21)
இந்த வசனத்தையும், மேற்கண்ட வசனத்தையும் இணைத்து அமானிதம் என்பது திருக்குர்ஆன் தான் என்ற முடிவுக்கு வரலாம் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் இந்த வசனத்தில் நடக்காத ஒன்றை உதாரணமாக அல்லாஹ் சொல்-க் காட்டுகின்றான். "இறக்கியிருந்தால்'' என்று அல்லாஹ் கூறுவது அவ்வாறு இறக்கவில்லை என்பதையே காட்டுகின்றது.
ஆனால் 33:52 வசனத்தில் அந்த அமானிதத்தை சுமக்குமாறு வானங்கள், பூமி, மலைகள் போன்றவற்றுக்கு நாம் முன் வைத்தோம். ஆனால் அவை மறுத்து விட்டன. மனிதன் சுமந்து கொண்டான் என்று படைப்பின் போது நடந்த நிகழ்வுகளாகக் கூறப்படுகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வசனத்தில் "மனிதன் சுமந்து கொண்டான்'' என்பது ஒட்டு மொத்த மனித இனத்தையும் குறிப்பதாகும். ஒருவேளை ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் வேதமாக திருக்குர்ஆன் அருளப்பட்டிருந்தாலாவது திருக்குர்ஆனைக் குறிக்கின்றது எனலாம். ஆனால் திருக்குர்ஆன் என்பது நபி (ஸல்) அவர்களின் உம்மத்துக்கு மட்டும் உரிய வேதம்! எனவே இந்த வசனத்தில் கூறப்படும் அமானிதம் என்பது திருக்குர்ஆனைக் குறிப்பதற்கு வாய்ப்பேயில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக