நபி யூசுஃப் (அலை) அவர்கள் சிறையில் இருந்த போது அவர்களுடன் இருந்த இரண்டு சிறைக் கைதிகளில் கண்ட கனவின் விளக்கத்தைக் கூறி விட்டு, அவ்விருவரில் விடுதலையாவார் என்று கூறியவரிடம் "என்னைப் பற்றி உமது ரப்பிடம் கூறு' என்று கூறியதாக 12:42ஆவது வசனம் கூறுகிறது. மனிதனை ரப்பு என்று கூறலாமா? அதுவும் இறைத் தூதர் மனிதனை ரப் என்று கூறுவது கூடுமா?
ரப்பு என்ற சொல் பெரும்பாலும் அல்லாஹ்வை மட்டுமே குறிக்க திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அரபியர்களிடம் ரப்பு என்ற சொல் தலைவன், எஜமானன், முதலாளி ஆகிய பொருள்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் கூட இதே கருத்தில் பயன்படுத்தியுள்ளார்கள்.
"ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானையே பெற்றெடுப்பதை நீங்கள் கண்டால் அது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். காலில் செருப்பணியாத, உடலில் உடையணியாத, செவிடர்களையும் குருடர்களையும் (போன்று வாழ்கின்ற கல்வி கலாசாரமற்ற மக்களை) நீங்கள் பூமியின் அரசர்களாகக் கண்டால் அதுவும் மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். மேலும், ஆட்டுக் குட்டிகளை மேய்க்கும் இடையர்கள் போட்டி போட்டுக் கொண்டு உயரமான கட்டடங்களைக் கட்டுவதை நீங்கள் கண்டால் அதுவும் மறுமையின் அடையாளங்களில் அடங்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (7)
இந்த ஹதீஸில் ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானையே பெற்றெடுப்பதை நீங்கள் கண்டால் என்று மொழி பெயர்த்த இடத்தில் உள்ள எஜமானன் என்ற சொல்லுக்கு அரபியில் நபி (ஸல்) அவர்கள் ரப்பு என்ற சொல்லின் பெண்பாலான ரப்பத் என்ற வார்த்தையையே பயன்படுத்தியுள்ளார்கள்.
எனவே தலைவன், முதலாளி என்ற பொருளில் ரப்பு என்ற வார்த்தையை மனிதர்களுக்குப் பயன்படுத்துவதில் தவறில்லை. இந்தக் கருத்தின் அடிப்படையில் தான் நபி யூசுஃப் (அலை) அவர்கள் ரப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள். உமது எஜமானனிடம் சொல், உன் முதலாளியிடம் சொல் என்ற கருத்திலே அந்த சொல் கையாளப்பட்டுள்ளது. படைத்துப் பரிபாலணம் செய்யும் இறைவன் என்ற கருத்தில் பயன்படுத்தப்படவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக