எங்களிடம் சில குறைபாடுகள் உள்ளன. நாங்கள் அழைப்புப் பணியில் ஈடுபடலாமா? உதாரணமாக, வேலைப் பளுவின் காரணமாக சில நேரங்களில் ஃபஜ்ர் தொழுகைக்கு எழுந்திருக்க முடியவில்லை. இதைக் காரணமாக வைத்து, நாங்கள் குர்ஆன் ஹதீஸைச் சொல்லும் போது, நீங்கள் முதலில் முழுமையாகத் திருந்துங்கள் என்று கூறி கடிந்து பேசுகின்றனர். இதை அலட்சியப் படுத்தி விட்டு தொடர்ந்து அழைப்புப் பணி செய்யலாமா? அல்லது முழுமையாகத் திருந்திய பிறகு தான் அழைப்புப் பணி செய்ய வேண்டுமா?
பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹீம், அபுதாபி.
அழைப்புப் பணி செய்பவர்களின் ஒழுக்க வாழ்வு, நேர்மை, நாணயம், வணக்க வழிபாடுகள் அனைத்தும் மக்களால் கண்காணிக்கப் படுவது இயற்கையே! எனவே சாதாரண மக்களை விட அழைப்புப் பணி செய்பவர்கள் மிகவும் கவனமாகவும், பேணுதலாகவும் நடக்க வேண்டும். நாம் சொல்லும் செய்தி எவ்வளவு தான் சரியானதாக இருந்தாலும் நம்மிடம் சில குறைபாடுகள் இருந்தால் அந்தச் செய்தியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே மற்றவர்களை விட அழைப்பாளர்கள் மிகவும் பேணுதலாக நடக்க வேண்டும். குறிப்பாக அமல்கள் விஷயத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
அல்லாஹ்வை நோக்கி அழைத்து, நல்லறம் செய்து, நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்? (அல்குர்ஆன் 41:33)
இந்த வசனத்தில் அல்லாஹ்வை நோக்கி அழைப்பவர் நல்லறம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை அல்லாஹ் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.
வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் 2:44)
நாம் சரியாக நடந்து கொண்டு அடுத்தவருக்கு அறிவுரை செய்ய வேண்டும் என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது. இது போல் ஏராளமான ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் இயன்ற வரை சரியாக நடக்க முயற்சிக்க வேண்டும்.
எனினும் மனிதன் என்ற முறையில் சில குறைபாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள் தான் என்பது நபிமொழி. இதை எப்படி எடுத்துக் கொள்வது? உதாரணமாக ஃபஜ்ர் தொழுகையைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். அதையே எடுத்துக் கொள்வோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பிய போது இரவு முழுவதும் பயணம் செய்தார்கள். இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்து விடவே (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம், "இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக!'' என்று கூறினார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமக்கு விதிக்கப் பட்டிருந்த அளவுக்குத் தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் உறங்கினார்கள். ஃபஜ்ர் நேரம் நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) அவர்கள் வைகறை திசையை முன்னோக்கிய படி தமது வாகனத்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். அப்போது தம்மையும் அறியாமல் சாய்ந்த படியே கண்ணயர்ந்து உறங்கி விட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும் வரை விழிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் முதலில் கண் விழித்தார்கள். பதறியபடியே அவர்கள், "பிலாலே!'' என்று அழைத்தார்கள். பிலால் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களை தழுவிக் கொண்ட அதே (உறக்கம்) தான் என்னையும் தழுவிக் கொண்டது'' என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள்'' என்று கூற, உடனே மக்கள் தங்கள் வாகனங்களைச் செலுத்தி சிறிது தூரம் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறங்கி) உளூச் செய்தார்கள். பிலால் (ரலி)யிடம் இகாமத் சொல்லச் சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தார்கள். தொழுது முடித்ததும், "தொழுகையை மறந்து விட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ், "என்னை நினைவு கூரும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக' (அல்குர்ஆன் 20:14) என்று கூறுகின்றான்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1097
நாங்கள் ஒரு இரவு நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது சிலர், "அல்லாஹ்வின் தூதரே! எங்களைச் சற்று இளைப்பாறச் செய்யலாமே?'' என்று கேட்டனர். "நீங்கள் தொழுகையை விட்டும் உறங்கி விடுவீர்களோ என்று அஞ்சுகின்றேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது பிலால் (ரலி), "நான் உங்களை எழுப்பி விடுகின்றேன்'' என்று கூறியதும் அனைவரும் படுத்துக் கொண்டனர். பிலால் (ரலி) தம் முதுகைத் தமது கூடாரத்தின் பால் சாய்த்துக் கொண்டார். அவரையும் மீறி உறங்கி விட்டார். சூரியனின் ஒரு பகுதி உதித்த பின்பே நபி (ஸல்) அவர்கள் விழித்தனர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "பிலாலே! நீர் சொன்னது என்னவாயிற்று?'' என்று கேட்டார்கள். "இதுபோன்ற தூக்கம் எனக்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லை'' என்று பிலால் (ரலி) கூறினார். "நிச்சயமாக இறைவன் உங்கள் உயிர்களை அவன் விரும்பிய போது கைப்பற்றிக் கொள்கிறான். அவன் விரும்பிய போது திரும்பவும் ஒப்படைக்கிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு, "பிலாலே! எழுந்து தொழுகைக்கு பாங்கு சொல்வீராக!'' என்று கூறினார்கள். (பின்னர்) உளூச் செய்து விட்டு, சூரியன் உயர்ந்து பிரகாசம் ஏற்பட்ட போது தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: புகாரி 595
இந்த ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுகைக்கு எழுப்புவதற்காக பிலால் (ரலி)யை நியமித்து விட்டு உறங்குகின்றார்கள். ஆனால் ஃபஜ்ர் தொழுகைக்கு விழிக்காமல் அனைவரும் உறங்கி விடுகின்றார்கள். விழித்தவுடன் சுப்ஹ் தொழுது விட்டு, உறக்கம், மறதி ஆகியவற்றால் தொழுகையை விட்டுவிட்டால் நினைவு வந்ததும் தொழுவதற்கு அனுமதியும் வழங்குகின்றார்கள்.
இது போன்று தொழுகைக்கு எழுவதற்கான முயற்சிகளைச் செய்து, அதையும் மீறி எழுந்திருக்கவில்லை என்றால் அது குற்றமில்லை. உதாரணமாக, ஃபஜ்ர் தொழுகையின் நேரத்திற்கு அலாரம் வைத்து விட்டுப் படுத்து, அலாரம் அடித்தும் எழுந்திருக்கவில்லை என்றால் அல்லது தூக்கத்தில் அலாரத்தை அணைத்து விட்டுப் படுத்து விட்டோம் என்றால் இவை நம் கட்டுப்பாட்டில் இல்லாத செயல்கள்.
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். (அல்குர்ஆன் 2:286) என்ற வசனத்தின் அடிப்படையில் இதற்காக அல்லாஹ் நம்மைக் குற்றம் பிடிக்க மாட்டான். எந்த விஷயத்திற்கு அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டானோ அந்த விஷயத்தில் மக்கள் குறை கூறுவார்களே என்றும் அஞ்சத் தேவையில்லை.
அதே சமயத்தில் படுக்கும் போதே நாளைக்கு சுப்ஹ் தொழுகை சந்தேகம் தான் என்ற முடிவோடு படுப்பது, யாரேனும் எழுப்பினால் கூட அலட்சியம் செய்து விட்டு உறங்குவது போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. இது போன்ற நிலை சாதாரண மக்களிடமும் இருக்கக் கூடாது. அழைப்பாளரிடத்தில் கண்டிப்பாக இருக்கக் கூடாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக