அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

குர்ஆன் இறங்கிய காலகட்டம்

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் பல கடவுள் கொள்கையுடையோராக இருந்தனர். ஏராளமான மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர். கடவுளை நிர்வாணமாக வழிபட்டனர். பெண் குழந்தைகளை பெற்றெடுப்பதை கேவளமாக கருதியதுடன் உயிருடன் புதைக்கவும் செய்தனர். குடம்குடமாக மது பானங்களை அருந்திக்கொண்டிருந்தார்கள். விபச்சாரத்தில் மூழ்கிக்கிடந்தனர். பெண்களை ஆடு மாடுகளைகப் போன்று நடத்தினார்கள்.
தந்தை இறந்துவிட்டால் தந்தையின் மனைவியை திருமணம் பண்ணிக்கொள்வது சர்வ சாதாரணமாக இருந்தது, ஜாதி வேற்றுமையும் தலைவிரித்து ஆடியது. நபி (ஸல்) அவர்கள் பிறந்த குலமான குறைஷி குலத்தை உயர்ந்த குலம் என்றும் மற்றவைகள் தாழ்ந்தவைகள் என்றும் நினைத்தனர். அரபுமொழி மட்டுமே உயர்ந்த மொழி. மற்ற மொழிகளை பேசுவோர் அஜமிகள் (கால்நடைகள்) என்று நினைத்து மொழிவெறி பிடித்தவர்களாக இருந்தனர். அற்பமான சண்டைகளுக்காக வேண்டியெல்லாம் ஓருவர் மற்றவரைக் கொலை செய்தனர். கொலை என்பது அவர்களுக்கு சாதரணமான ஓன்று.
குர்ஆன் இறக்கப்பட்ட வரலாறு
மக்களின் இந்நிலையைக் கண்டு வெறுத்த நபி (ஸல்) அவர்கள் தமது 40 வது வயதில்   நபியாகுவதற்கு முன்னால்  தனிமையில் சிந்திப்பதற்காக  ஹிரா குகைக்குச் செல்வார்கள். தனிமையில்  இருப்பது அவர்களுக்கு அதிகம் விருப்பத்திற்குரியதாக இருந்தது. இதற்காக தேவையான உணவுகளை எடுத்துச் செல்வார்கள். உணவு தீர்ந்த உடன் தனது மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் வந்து உணவை மீண்டும் தயார் செய்து கொண்டு செல்வார்கள்.
ஓரு முறை வானத்தையும் பூமியையும் தொட்டுக் கொண்டிருக்கும் வடிவத்தில் ஓரு வானவர் அவர்களிடம் வந்து 96 வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்களைக் கூறி, படிப்பீராக என்று கூறினார். எனக்கு படிக்கத் தெரியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று முறை வானவர் கட்டி அனைத்ததற்குப் பின்னால் நபி (ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை படிக்கத் தொடங்கினார்கள். இப்படித்தான் முதன் முதலில் நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் இறங்கியது. இதற்குப் பின்னால் சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் காலகட்டத்திற்கேற்ப இறங்கியது.  23 ஆண்டுகளில் இறங்கிய மொத்த இறைச் செய்தியின் தொகுப்பே குர்ஆன்.
     வஹீவருவதற்கு முன்னால் மணியின் சப்தத்தைப் போன்ற சப்தத்தை நபி (ஸல்)அவர்கள் கேட்பார்கள்.  வஹீ வரும்போது மிகவும் சிரமப்படுவார்கள்.குளிர்காலமாக இருந்தாலும் வஹீ வந்தஉடன் அவர்களுக்கு வியர்க்க ஆரம்பித்துவிடும்.சிறிது காலத்திற்குப் பின்பு நபி(ஸல்)அவர்களுக்கு தொடர்ந்து வஹீ வரத்தொடங்கியது.  மூன்று முறைகளில் வஹீ வரலாம்.

1.அல்லாஹ் வானவரிடத்தில் செய்தியைக்கொடுத்து நபி(ஸல்)அவர்களிடத்தில் அச்செய்தியை அறிவிக்கும்படி செய்வான்.
2.அல்லது நேரடியாக அல்லாஹ்வே நபி(ஸல்)அவர்களிடத்தில் பேசுவான்.
3.அவன் விரும்பும் செய்திகளை அவர்களின் உள்ளத்தில் பதியச்செய்வான்.
அல்குர்ஆன் (42 : 51)
அல்லாஹ்விடத்தில் பாதுகாக்கப்பட்ட ஏடு ஓன்று உள்ளது.இதில் நடந்துவிட்ட இனி நடக்கவிருக்கும் விஷயங்கள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டுள்ளது..திருக்குர்ஆன் இந்த ஏட்டிலிருந்து தான் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.
 அல்குர்ஆன் (43 : 4)
.நமக்கு திருக்குர்ஆன் ரமலான் மாதத்தில் லைலத்துல் கதிர் என்னும் இரவில் இறங்கியது.இந்த இரவில் மொத்தக் குர்ஆனும் பாதுகாக்கப்பட்ட ஏட்டிலிருந்து முதல் வானத்திற்கு இறக்கப்பட்டது.பிறகு காலகட்டத்திற்கு ஏற்றவாறு சிறிது சிறிதாக இறங்கியது.
குர்ஆனின் சில வசனங்கள் நபி(ஸல்)அவர்களின் மக்கா வாழ்கையின் போது இறக்கப்பட்டன.இவை மக்கீ என்றழைக்கப்படுகிறது.சில வசனங்கள் மதீனா வாழ்கையின் போது இறக்கப்பட்டன.இவை மதனீ என்றழைக்கப்படுகிறது.வசனங்கள் சிறிது சிறிதாக இறக்கப்படும் போதெல்லாம் அதை நபி(ஸல்)அவர்கள் உடனே மனனம் செய்துகொள்வார்கள்  சஹாபாக்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாத காரணத்தினால் அவர்களும் வசனங்களை உடனுக்குடன் மனனம் செய்துகொண்டார்கள்.குர்ஆன் 23 ஆண்டுகளில் இறங்கிய காரணத்தினால் மனனம் செய்வது அவர்களுக்கு சிரமமானதாக இல்லை.பின்வரும் சஹாபாக்கள் குர்ஆனை முழுவதும் மனனம் செய்தவர்கள்.
1. அபூபக்கர்                    2. உமர்
3. உஸ்மான்                    4. அலீ
5. தல்ஹா                    6. ஸஅது
7. இப்னு மஸ்வூத்                8. ஹீதைஃபா
9. ஸாலிம்                    10. அபூஹீரைரா
11. இப்னு உமர்                12. இப்னு அப்பாஸ்
13. அம்ர் பின் ஆஸ்                14. அப்துல்லாஹ் பின் அம்ர்
15. முஆவியா                    16. அப்துல்லாஹ் பின் ஸீபைர்
17. அப்துல்லாஹ் பின் ஸாயிப்        18. ஆயிஷா
19. ஹஃப்ஸா                    20. உம்முஸலமா
21. உபை பின் கஅபு                22. முஆத் பின் ஜபல்
23. ஸைத் பின் சாபித்                24. அபூதர்தா
25. மஜ்மா பின் ஹாரிஸா            26. அனஸ் பின் மாலிக்     
குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு
இத்துடன் நபி(ஸல்) அவர்கள் எழுதத்தெரிந்தவர்களை அழைத்து இறங்கிய வசனங்களை எழுதிவைக்கும் படி கூறினார்கள்.பின்வரும் சஹாபாக்கள் எழுதும் பணியில் ஈடுபட்டனர்
1. அபூபக்கர் (ரலி)                 2. உமர் (ரலி)
3. உஸ்மான் (ரலி)                 4. அலி (ரலி)
5. முஆவியா (ரலி)                 6. அபான் பின் சயீத் (ரலி)
7. காலித் பின் வலீத் (ரலி)            8. உபை பின் கஅபு (ரலி)
9.ஸைது பின் ஸாபித் (ரலி)            10. ஸாபித் பின் கைஸ் (ரலி)
பேரித்தம்மரப்பட்டைகளிலும் விலங்குகளின் தோல்களிலும் எலும்புகிளிலும் குர்ஆனை எழுதிவைத்தனர்.இவ்வாறு தொகுக்கப்பட்டக் குர்ஆன் வரிசையில்லாமல் தொகுக்கப்பட்டது.ஏனெனில் முதலில் ஜந்து வசனங்கள் இறங்கினால் அதை நபி(ஸல்)அவர்கள் தோலிலோ அல்லது எழும்பிலோ எழுதிவைக்கச்சொல்வார்கள்.மறுநாள் 3 வசனங்கள் இறங்கினால் அதை வேறொன்றில் சஹாபாக்கள் எழுதிவைப்பார்கள்.எனவே நபி(ஸல்) அவர்கள் தொகுத்த குர்ஆன் வரிசை முறைப்படி தொகுக்கப்படவில்லை.
    தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் ஓதுவதைக் கேட்டு குர்ஆனை வரிசைப்படுத்தும் முறையை சஹாபாக்கள் அறிந்திருந்தார்கள்.இந்நிலையில் அபூபக்கர்(ரலி) அவர்களின் காலத்தில் போர் அதிகம் நடந்ததால் பல சஹாபாக்கள் போரில் கொள்ளப்பட்டனர்.குர்ஆன் வசனங்களின் வரிசைமுறையை பாதுகாப்பதற்காக உமர் (ரலி) அவர்களின் ஆலோசனைப்படி அபூபக்கர் (ரலி) அவர்கள் குர்ஆனை வரிசைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் மக்கள் ஓவ்வொருவரும் விதவிதமாக ஓதத்தொடங்கினர்.எனவே சஹாபாக்கள் குர்ஆனை ஓரு வடிவில் தொகுக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.இன்று நம்மிடம் உள்ள குர்ஆன் அவர்கள் தொகுத்த முறையில்தான் உள்ளது.
    குர்ஆனில் உள்ள அத்தியாயங்களில் முதல் அத்தியாயம் அல்பாத்திஹா என்றும் 2வது அத்தியாயம் அல்பகரா என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை மாறாக உஸ்மான் (ரலி) அவர்கள் தான் சில சஹாபாக்களி-ன் ஆலோசனைப்படியும் தமக்குத் தோன்றிய நியாயங்களின் அடிப்படையிலும் அத்தியாயங்களை வரிசைப்படுத்தினார்கள்.
    குர்ஆனில் உள்ள சில அத்தியாயங்களுக்கு நபி(ஸல்)அவர்கள் பெயர் வைத்துள்ளார்கள்.அல்பஃத்திஹா அல்பகரா ஆல இம்ரான் அன்னிஸா போன்ற சூராக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தான் பெயர் வைத்தார்கள்.சில அத்தியாயங்களுக்கு சஹாபாக்கள் பெயர் வைத்துள்ளார்கள்.உதாரணமாக அல்மாயிதா அல்அன்ஆம் போன்ற சூராக்களுக்கு சஹாபாக்கள்  பெயர் வைத்துள்ளார்கள்.அதிகமான சூராக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்)அவர்களோ சஹாபாக்களோ பெயர்வைக்கவில்லை.மாறாக பின் வந்தவர்கள் தான் பெயர்வைத்துள்ளார்கள்.
    இன்றைக்கு நம்மிடத்தில் உள்ள குர்ஆன் 30 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பிரிக்கும் படி நபி(ஸல்) அவர்களோ சஹாபாக்களோ கூறவில்லை. மாறாக பின் வந்தவர்கள் தான் குர்ஆனை ஓரு மாதத்தில் முஸ்லிம்கள் முடிக்கவேண்டும் என்று கருதி 30 பாகங்களாக பிரித்தார்கள்.ஓரு மாதத்தில் குர்ஆனை முடிக்க வேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கட்டளையிடவில்லை.
    குர்ஆனை முப்பது பாகங்களாக பிரித்ததைப் போல சிலர் முஸ்லிம்கள்  வாரத்திற்கு ஓரு முறை அவசியம் குர்ஆனை முடிக்க வேண்டும் என்று கருதி குர்ஆனை ஏழு மன்ஜில்களாக பிரித்துள்ளார்கள்.இவ்வாறு செய்யும்படி அல்லாவோ அவனது தூதரோ சொல்லவில்லை.குர்ஆனை ஏழு நாட்களில் ஓதுவதற்கு நபி(ஸல்)அவர்கள் அனுமதி தந்துள்ளார்களேத் தவிர அவசியம் ஓதிமுடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.இதை குர்ஆனில் எழுதிவைத்துள்ளனர்.குர்ஆனில் இல்லாதவற்றை குர்ஆனில் எழுதி வைத்திருப்பது கண்டிக்கத் தகுந்த செயலாகும்.
    தொழுகையில் ஓரு குறிப்பிட்ட அளவுதான் ஓத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு குர்ஆனை 558 ருகூவுகளாக பிரித்துள்ளார்கள்.இதற்கு அடையாளமாக ஓரங்களில் ஐன் என்ற அரபுச்சொல்லை எழுதியிருப்பார்கள்இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.இவ்வாறு செய்யும்படி நபி(ஸல்)அவர்கள் கட்டளையிடவில்லை.உங்களால் முடிந்த அளவு ஓதுங்கள் என்று தான் குர்ஆனும் நபிமொழியும் சொல்கிறது.
அல்குர்ஆன் ( 73:20 )
    குர்ஆனின் வசனங்களுக்கு எண்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ சஹாபாக்களோ இடவில்லை.பின் வந்தவர்கள் தான் வசனங்களுக்கு எண்களை அமைத்தார்கள்.இவர்கள் அமைத்த வசன எண்கள் சில இடங்களில் பொறுந்திப்போனாலும் பல இடங்களில் பொறுத்தமின்றி உள்ளது.ஓரே வசனமாக கணக்கிட வேண்டியதை இரண்டு வசனமாக கணக்கிட்டுள்ளனர்.எனவே பின்வந்தவர்கள் செய்த இந்த வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.
     அல்லாஹ் திருமறைக் குர்ஆனுக்கு பல பெயர்களைக் கூறுகிறான்.
அவை
1. நூர்                ஓலி
2. ஹீதா            நேர்வழி
3. ரஹ்மத்            அருள்
4. ஃபுர்கான்            சத்தியத்தையும், சத்தியத்தையும் பிரித்துக்காட்டக்கூடியது.
5. ஷிபா            நோய் நிவாரணை
6. முபாரக்            பாக்கியமிக்கது
7. திக்ரு            உபதேஷம்         
8. ஹிக்மத்            ஞானம்
9. அல் உர்வதுல் உஸ்கா    வலிமையான கயிறு
10, புஷ்ரா            நற்செய்தி
11. முஹைமின்            முன் இறக்கப்பட்ட வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியது
12. ஹப்லுல்லாஹி        அல்லாஹ்வின் கயிறு
13. ஸபூர்            ஏடு
இன்னும் பல பெயர்கள் குர்ஆனுக்கு சொல்லப்பட்டுள்ளது.
சூராக்களின் சிறப்பு
திருக்குர்ஆனில் முதலாவது சூராவாக இடம்பெற்றுள்ள அல்பாத்திஹா சூராவைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.அல்பாத்திஹா சூராவை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறியதைப் போன்று மற்ற எந்த சூராவைப்பற்றியும் கூறவில்லை.இது அல்பாத்திஹா சூராவிற்கு மட்டும் உள்ள தனிச்சிறப்பாகும். திரும்ப திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களை உமக்கு தந்துள்ளோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
நபி(ஸல்)அவர்கள் அபூ ஸயீத் பின் முஅல்லா (ரலி) அவர்களை அழைத்து நீங்கள் பள்ளிவாசலிலிருந்து செல்லுவதற்கு முன்னால் நான் உங்களுக்கு குர்ஆனில் மகத்துவமிக்க சூராவை கற்றுத்தரட்டுமா? என்று கேட்டார்கள்.அபூ ஸயீத் (ரலி)அவர்கள் வெளியே செல்லுவதற்கு முன்னால் நபி(ஸல்)அவர்களிடம் வந்து அந்த மகத்துவமிக்க சூராவை கற்றுத்தரும் படி கூறினார்கள்.அப்போது நபி(ஸல்)அவர்கள் அல்பாத்திஹா சூராவை அவருக்கு ஓதிக்காட்டினார்கள்.நூல் :
நூல் : ( புகாரி 5006 )
ஓரு முறை சஹாபாக்கள் ஓரு பிரயாணத்தில் ஈடுபட்டிருந்தனர்.ஓய்வெடுப்பதற்காக இரவில் ஓரு இடத்தில் தங்கினார்கள்.அப்போது ஓரு பெண் அவர்களிடம் வந்து எங்கள் தலைவருக்குத் தேள் கொட்டிவிட்டது.எங்கள் ஆட்கள் வெளியே சென்றுள்ளனர்.எங்கள் தலைவருக்கு மந்திரிப்பவர் யாராவது உங்களில் இருக்கிறாரா என்று கேட்டாள்.சஹாபாக்களில் ஓருவர் சென்று ஓதிப்பார்த்தார்.அக்கூட்டத் தலைவரின் நோய் குணமானவுடன் தலைவர் ஓதிப்பார்த்தவருக்கு 30 ஆடுகளை அன்பளிப்பாக வழங்கும் படி ஆனையிட்டார்..இத்துடன் அவர்களுக்குப் பாலையும் கொடுத்தார்.சஹாபாக்களுக்கு வழங்கப்பட்ட இந்த ஆடுகளை உண்ணலாமா உண்ணக்கூடாதா என்ற சந்தேகம் அவர்களுக்கு வர அவர்கள் நாம் நபி(ஸல்)அவாகளிடம் சென்று இதைப்பற்றி கேட்கும் வரை யாரும் இதை சாப்பிடக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டனர்.நபி(ஸல்)அவர்களிடம் இதைப் பற்றி அவர்கள் கேட்டபோது அல்பாத்திஹா சூரா ஓதிப்பார்த்தலுக்குரியதுதான் என்று அவருக்கு எப்படித் தெரியும்.அந்த ஆடுகளைப் பங்கிட்டு அதில் எனக்கும் ஓரு பங்கை ஓதுக்குங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்,நமக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் நாமும் இந்த சூராவை ஓதிப்பார்க்கலாம்.
நூல் : ( புகாரி 5007 )
நபி(ஸல்)அவர்கள் தூங்கச் செல்வதற்கு முன்னால்
குல்ஹீ வல்லாஹீ அஹத்
 குல்அஊது பிரப்பின்னாஸ்
குல் அஊது பிரப்பில் ஃபலக்
ஆகிய கடைசி மூன்று அத்தியாயங்களை ஓதி கையில் ஊதி அதைத் தன் உடம்பில் கை எட்டும் பகுதிகள் முழுவதிலும் தடவிக்கொள்வார்கள்.முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம் உடலின் முற்பகுதிகள் கைகள் ஆகிய உறுப்புக்களில் தடவிக்கொள்வார்கள்.இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.மேலும் நபி(ஸல்)அவர்களுக்கு நோய் ஏற்பட்டாலும் இந்த 3 அத்தியாயங்கயை ஓதி ஊதி உடம்பில் தடவிக்கொள்வார்கள்.
நூல் : ( புகாரி : 5017 )
ஓரு சஹாபி 112 வது அத்தியாயமான குல்ஹுýவல்லாஹுý அஹத் சூராவை திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்தார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றொருவர் இந்த சிறிய சூராவை திரும்பத் திரும்ப ஓதுகிறாரே என்று சாதாரணமாகக் கருதி, இதைப்  பற்றி விடிந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக அந்த அத்தியாயம் குர்ஆனில் மூன்றில் ஓரு பங்கிற்கு ஈடானதாகும் என்று கூறினார்கள்.
நூல் : ( புகாரி : 5013 )
குர்ஆனில் இரண்டாவது சூராவான அல்பகராவின் இறுதி வசனங்களை ஓதுவது இரவு முழுவதும் நின்று வணங்குவதற்குச் சமம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாம் உறங்கச் செல்வதற்கு முன்பு அல்பகராவில் 255வது வசனத்தில் ஆரம்பமாகும் ஆயத்துல் குர்ஸீயை ஓதினால் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஓரு பாதுகாவலர் நம்மை  பாதுகாத்துக்கொண்டே இருப்பார். சைய்ததானும் நம்மை நெருங்கமாட்டான்.
நூல் : புகாரி (5010).
உங்கள் வீடுகளை அடக்கஸ்தலங்களாக ஆக்காதீர்கள்.சைய்த்தான் சூரத்துல் பகரா ஓதப்படும் வீட்டை விட்டும் விரண்டு ஓடுகிறான்.
அல்கஃப் அத்தியாயத்தின் முதல் 10 ஆயத்துகளை மனனம் செய்து கொண்டவர் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்பட்டுவிட்டார் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : (முஸ்லிம் 1342)


குர்ஆனின் சிறப்பு
.    அதிகமான  நன்மையை நாம் அடையவேண்டுமானால் குர்ஆனை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மறுமைநாளில் குர்ஆனையும் அதன் அடிப்படையில் இவ்வுலகில் செயல்பட்டவரையும் கொண்டுவரப்படும் அப்போது அல்பகரா சூராவும் ஆலஇம்ரான் சூராவும்  அவருக்காக வாதிட அவரை முந்திக்கொண்டு செல்லும். குர்ஆனை நீங்கள் ஓதுங்கள். ஏனெனில் அது தன்னை ஓதி பின்பற்றியவருக்கு மறுமையில் பரிந்துரைசெய்ய வரும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : (முஸ்லிம் 1329)
குர்ஆனை சிறந்த முறையிýல் ஓதியவன் நல்லவர்களான மரியாதைக்குரிய மலக்குகளுடன் இருப்பான். தனக்கு சிரமமாக இருந்தும் திக்கித் தடுமாறி ஓதியவனுக்கு இரண்டு கூலி உண்டு என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.அதிகமான  நன்மையை நாம் அடையவேண்டுமானால் குர்ஆனை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் வேதத்தில் ஓரு எழுத்தை ஓதியவருக்கு ஓரு நன்மை உள்ளது. ஓரு நன்மை அது போன்று 10 மடங்காக ஆக்கப்படும். அலிஃப். லாம். மீம் என்பதை ஓரு எழுத்து என்று நான் சொல்லமாட்டேன். மாறாக அலிஃப் ஓரு எழுத்து லாம் ஓரு எழுத்து மீம் ஓரு எழுத்து என்றே கூறுவேன் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அலிஃப் லாம் மீம் என்று நாம் கூறினால் ஓரு எழுத்திற்கு 10 நன்மை என்ற வீதம் மூன்று எழுத்திற்கு 30 நன்மைகள் கிடைக்கிறது.
நூல் : ( திர்மிதி 2835 )
அன்றைய அரபுகள் ஓட்டகத்தை பெரிய செல்வமாகக் கருதினார்கள்.பெரிய திமில் உள்ள ஓட்டகத்தை அதிகம் அதிகம் விரும்பினார்கள். புத்ஹான் என்ற இடத்திற்குச் சென்று தவறுசெய்யாமலும் உறவைத் துண்டிக்காமலும் பெரிய திமிலையுடைய இரண்டு ஓட்டகங்களை (இலவசமாக) பெற்றுவர உங்களில் யாரேனும் விரும்புவாரா? என்று நபி(ஸல்)அவர்கள் அந்த அரபுகளிடம்  கேட்டார்கள். அதற்கு சஹாபாக்கள் நாங்கள் அனைவரும் இதை விரும்புவோம் என்று கூறினார்கள். உங்களில் ஓருவர் பள்ளிவாசலுக்குச் சென்று அல்லாஹ்வின் வேதத்தில் இரண்டு வசனங்களை அறிந்துகொள்வது அல்லது ஓதுவது இரண்டு ஓட்டகங்களை விட அவருக்கு சிறந்ததாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
நூல் : (முஸ்லிம் :1336)
குர்ஆனை ஓதும்போது அல்லாஹ்வின் அமைதி நம்மை சூழ்ந்துகொள்கிறது. அல்லாஹ்வின் வீட்டில் ஓன்று கூடி குர்ஆனை ஓதிக்கொண்டும் ஓருவர் மற்றவருக்கு அதை கற்றுக்கொடுத்துக்கொண்டும் ஓரு கூட்டம் இருந்தால் அவர்களின் மீது அமைதி இறங்காமல் இல்லை.இன்னும் மலக்குமார்களும் அருளும்  அவர்களை சூழ்ந்தும் கொள்கிறது. தன்னிடம் இருப்போரிடம் அல்லாஹ் அவர்களைப் பற்றி (புகழ்ந்து.) கூறுகிறான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.                           
நூல் : (முஸ்லிம் :4867)
குர்ஆன் ஓதப்படும் வீட்டில் தான் வானவர்கள் வருகிறார்கள். இந்த வீட்டில் தான் அல்லாஹ்வின் அருளும் இறங்குகிறது. அபூஹீரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.வீட்டில் குர்ஆன் ஓதப்படுகின்ற காரணத்தினால் அவ்வீட்டில் இருப்பவர்களுக்கு வீடு விசாலமாகிறது. மலக்குமார்கள் அங்கு வருகிறார்கள். ஷைய்த்தான்கள் அதை விட்டும் ஓடிவிடுகிறார்கள். அதில் அபிவிருத்தி அதிகம் ஏற்படுகிறது. வீட்டில் குர்ஆன் ஓதப்படாத காரணத்தினால் அந்த வீடு அதன் உரிமையாளர்களுக்கு நெருக்கடியாக இருக்கும். மலக்குமார்கள் அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். ஷைய்த்தான்கள் வருகிறார்கள்.அதன் அபிவிருத்தியும் குறைந்துவிடுகிறது.
நூல் : ( தாரமீ : 3175 )   
மனத்தூய்மையுடன் தர்மத்தை மறைவாக செய்தாலும் பகிரங்கமாக செய்தாலும் அதற்கு நன்மை உண்டு.இதேப் போன்று குர்ஆனை பகிரங்கமாகவும் இரகசியமாகவும் ஓதலாம். குர்ஆனை பகிரங்கமாக ஓதுபவன் தர்மத்தை பகிரங்கமாக செய்தவனைப் போன்றவன். குர்ஆனை இரகசியமாக ஓதுபவன் தர்மத்தை இரகசியமாக செய்தவனைப் போன்றவன் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்
நூல் : (திர்மிதி : 2843, (நஸயீ : 2514)
இவ்வுலகில் குர்ஆனின் அடிப்படையில் வாழ்ந்தவர்கள் மறுமையில் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். மறுமை நாளில் குர்ஆன் அல்லாஹ்விடத்தில் வந்து குர்ஆனின் அடிப்படையில் வாழ்ந்தவனுக்கு மதிப்புமிக்க கிரீடத்தை அணிவிக்குமாறு முறையிடும். அவருக்கு அந்த மதிப்புமிக்க கிரீடம் அணிவிக்கப்படும். பிறகு மேலும் அவருக்கு சிறப்பை அதிகப்படுத்தும் படி கோரும். அவருக்கு மதிப்புமிக்க ஆடை அணிவிக்கப்படும். பிறகு எனது இறைவா! அவரை நீ திருப்திக்கொள்வாயாக என்று கூறும். அல்லாஹ்வும் அவரை பொருந்திக்கொள்வான். பிறகு நீங்கள் ஓதுங்கள் .உயர்ந்துகொண்டே செல்ங்கள். .ஓவ்வொரு ஆயத்திற்கும் உமக்கு நன்மை அதிகமாகிக்கொண்டே  இருக்கும் என்று கூறுவான்.
நூல் : (திர்மிதி : 2839)
குர்ஆனை மனனம் செய்தவர் மறுமை நாளில்  அதை ஓத ஓத அவரின் அந்தஸ்த்து கூடிக்கொண்டே செல்லும் என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். குர்ஆன் உடையவருக்கு நீங்கள் ஓதுங்கள். (அந்தஸ்த்தில்) உயர்ந்து கொண்டே செல்லுங்கள். உலகத்தில் நீங்கள் நிறுத்தி நிதானமாக ஓதியதைப் போன்று நிறுத்தி நிதானமாக ஓதுங்கள். நீங்கள் ஓதும் இறுதி ஆயத்தில்தான் உங்கள் அந்தஸ்து உள்ளது என்று சொல்லப்படும்.
நூல் : (திர்மிதி : 2838) (அபூதாவுத் : 1252)  
    குர்ஆனில் எதையும் மனப்பாடம் செய்யாமல் நாம் இருக்கக்கூடாது.ஏனெனில் யாருடைய உள்ளத்தில் சிறிதளவும் குர்ஆன் இல்லையோ அவர் பாலடைந்த வீட்டைப் போன்றவர் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : ( திர்மிதி 2837 )
குர்ஆன் நமக்கு பல கட்டளைகளை இடுகிறது. எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை தெளிவாக கூறுகிறது. என்றாலும் இந்தக் குர்ஆனை ஏற்றுக்கொண்டுள்ள மக்கள் குர்ஆன் சொல்லும் விஷயங்களைப் பொருட்படுத்துவதில்லை. மனம் போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் பயம் அவர்களிடத்தில் இல்லை. மலைகளுக்கு குர்ஆனை அல்லாஹ் இறக்கியிருந்தால் நம்மால் செயல்படுத்த முடியாமல் போய்விடுமோ என்று பயந்து அவைகள் வெடித்து சிதறியிருக்கும். இந்தக் குர்ஆனை நாம் மலையின் மீது இறக்கியிருந்தால் அல்லாஹ்வின் பயத்தினால் வெடித்து சிதறுவதை நபியே நீ பார்ப்பாய் என்று அல்லாஹ் சொல்கிறான்.
அல்குர்ஆன் (59 :21)
குர்ஆனையே நமது முழுவாழ்கையாக ஆக்கிக்கொள்ள வேண்டும். ஆயிஷா(ரலி) அவர்களிடத்தில் சஃத் பின் ஹிஷாம் அவர்கள் நபி(ஸல்)அவர்களின் குணத்தைப் பற்றி எனக்கு கூறுங்கள் என்று கேட்டார்கள். அவர்களுடைய குணம் குர்ஆனாகவே இருந்தது என்று ஆயிஷா (ரலி)அவர்கள் கூறினார்கள்.
நூல் : (அஹ்மத் : 24139)
இன்று சிலர் அறியாமல் குர்ஆனை இறந்தவரிடத்தில் ஓதுகின்றனர். இவ்வாறு ஓதுவதற்கு எந்த நம்பத்தகுந்த ஹதீஸுýம் இல்லை. அல்லாஹ் இந்தக் குர்ஆன் உயிருள்ளவர்களை எச்சரிப்பதற்கு இறக்கியதாக யாசீன் சூராவில் கூறுகிறான். மரணித்தவர்களுக்கு அல்ல.
அல்குர்ஆன் (36 : 70)
குர்ஆன் நமக்கு உதவும் நன்பனாகவும் அமையும்.. நமக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடியதாகவும் அமையும். குர்ஆனை நாம் படித்து முறையாக அதை செயல்படுத்திவந்தால் அது நமக்கு உதவும் நன்பனாகிவிடும். அதன் அடிப்படையில் செயல்படாமல் அதைப்படிக்காமல் மனம்போனப் போக்கில் போனால் மறுமை நாளில் நமக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடியதாக ஆகிவிடும்."குர்ஆன் தன்னை உடையவனுக்கு பரிந்துரை செய்து அவனை சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்லும்."  (அதனடிப்படையில் செயல்படாதவனுக்கு) எதிராக சாட்சி கூறி அவனை நரகத்திற்கு அழைத்துச்செல்லும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : (தாரமீ : 3191)
 நபி(ஸல்)அவர்கள் குர்ஆனை ஓதுபவருக்கும் ஓதாதவருக்கும் ஓரு சிறந்த உதாரணத்தை சொல்லியிருக்கிறார்கள். குர்ஆனை ஓதுகின்ற நல்லவர் எலும்பிச்சைப் பழத்தைப் போன்றவர். எலும்பிச்சையின் வாடையும் நன்றாக இருக்கும். அதன் சுவையும் நன்றாக இருக்கும், குர்ஆனை ஓதாத நல்லவர் பேரித்தம் பழத்தைப் போன்றவர். இப்பழத்தில் வாடை இருக்காது. ஆனால் இதன் சுவை இனியது. குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகன் துளசிச்செடியைப் போன்றவன். இதன் மனம் நன்றாக இருக்கும்.ஆனால் இதன் சுவை கசப்பு. குர்ஆனை ஓதாத நயவஞ்சகன் குமட்டிக்காயைப் போன்றவன். இதில் மனமும் இல்லை. இதன் சுவையும் கசப்பு.
 நூல் : (புகாரி 5020)
இரண்டு விஷயங்களைத் தவிர மற்ற எந்த விஷயத்திலும் பொறாமை கொள்வது கூடாது.
1.ஓரு மனிதர் நன்கு குர்ஆனை ஓதுகிறார். தொழுகையில் குர்ஆனை அதிகமாக ஓதுகிறார்.இரவு முழுவதும் நின்று வணங்குகிறார்.இவர் செய்யும் இந்த நல்லச்செயலை நாமும் செய்ய வேண்டும். இவரை விட அழகாக குர்ஆனை ஓத வேண்டும் என்று பொறாமைப்படுவதில் குற்றமில்லை. இதில் எல்லோரும் பொறாமைப்பட வேண்டும்.
2. ஓருவர் அதிகமான பொருளை வைத்திருக்கிறார். அப்பொருளை ஏழை எளியவர்களுக்கு இரவு பகலாக தர்மம் செய்கிறார். இவரைப் போன்று நாமும் அதிகமானப் பொருளைப் பெற்று அதிகம் தர்மம் செய்ய வேண்டும் என்று பொறாமைப்படுவதில் தவறில்லை. இதில் பொறாமைப்பட வேண்டும்,
நூல் : (புகாரி 5025)
குர்ஆனை நாம் நன்றாகப் படித்தால் மட்டும்  போதாது. ஓதத் தெரியாத மக்களுக்கு ஓதக் கற்றுக்கொடுக்க வேண்டும். நாமும் கற்று பிறருக்கு கற்றுக்கொடுக்கும் போதுதான் நாம் சிறந்தவர்களாக ஆகமுடியும். குர்ஆனை தாமும் கற்று பிறருக்கு கற்றுக்கொடுப்பவரே உங்களில் சிறந்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : (புகாரி 5028)
குர்ஆனை நாம் தினமும் வழமையாக ஓதிவர வேண்டும். நாம் எதையாவது மனனம் செய்திருந்தால் அதை ஓவ்வொரு நாளும் அடிக்கடி ஓதிக்கொள்ள வேண்டும். ஏனெனில் குர்ஆனாகிறது ஓட்டகத்தைப் போன்றதாகும். ஓட்டகத்தை நாம் கட்டிப்போட்டு கண்காணித்து வந்தால் அது நம்மிடமே இருக்கும். அதை அவிழ்த்து விட்டுவிட்டால் காணாமல் போய்விடும். இதைப் போல குர்ஆனை நாம் தொடர்ந்து ஓதி வந்தால் நாம் மனனம் செய்தது மறக்காமல் இருக்கும். ஓதுவதை விட்டுவிட்டால் குர்ஆன் நாம் மறந்துவிடுவோம்.
 நூல் : (புகாரி 5031)
இன்றைக்கு ரமலான் வந்துவிட்டால் இரவுத்தொழுகையில் ஆலிம்கள் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதாமல் வேகமாக ஓதுகிறார்கள்.  இப்படி குர்ஆன் ஓதுவதை அல்லாஹ் தடுத்துள்ளான். நிறுத்தி நிதானமாக ஓதும்படி நமக்கு கட்டளையிடுகிறான். (நபியே)குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக என்று நமது நபி(ஸல்)அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
அல்குர்ஆன் ( 73 : 4 )
ஜிப்ரயீல் (அலை)அவர்கள் நபி(ஸல்)அவர்களுக்கு வசனங்களை ஓதிக்காட்டும் போது
நபி(ஸல்)அவர்கள் மனனம் செய்வதற்காக அவசர அவசரமாக குர்ஆனை ஓதுவார்கள். இவ்வாறு செய்யக்கூடாது என்று அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான்.
அல்குர்ஆன் ( 75 : 16 )
இனிமையானக் குரலில் குர்ஆன்
நாம் குர்ஆன் ஓதுவதை அல்லாஹ் மிகவும் விரும்பி கேட்கிறான் என்று பின்வரும் ஹதீஸ் உணத்துகிறது. நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதை அல்லாஹ் செவிகொடுத்து  கேட்பதைப் போன்று வேறேதையும் அவன் செவிகொடுத்து கேட்பதில்லை என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : (புகாரி 5024)
நாம் குர்ஆனை ஓதும்போது இனிமையானக் குரலில் அழகாக ஓத வேண்டும் .ஏனென்றால் நபி(ஸல்)அவர்கள் குர்ஆனை உங்களது குரல்களால் அழகுபடுத்துங்கள் என்று கூறியுள்ளார்கள்.
நூல் : (நஸயீ : 1005) (அபூதாவுத் : 1256)
நிறுத்தி நிதானமாக இனிமையான குரலில் அழகாக நபி(ஸல்) அவர்கள்  ஓதியுள்ளார்கள். அல்பர்ரா பின் ஆஸிப் என்ற நபித்தோழர் நபி(ஸல்)அவர்கள் ஓதிய முறையைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார். நபி(ஸல்) அவர்கள் வத்தீனி வஸ்ஸைத்தூன் அத்தியாயத்தை இஷா தொழுகையில் ஓதியதை நான் செவியுற்றேன்.அவர்களின் சப்தத்தை விட அழகிய சப்தத்தை வேறு எவரிடத்திலும் நான் கேட்டதில்லை.
நூல் : (புகாரி 769)
எங்காவது குர்ஆன் ஓதப்பட்டால் அதை நாம் செவிதாழ்த்திக் கேட்க வேண்டும் என்று திருமறைக் குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது.
அல்குர்ஆன் ( 7:204 )
மற்றவர் ஓதுவதையும் நாம் விரும்பி கேட்க வேண்டும். நபி(ஸல்)அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)அவர்களிடம் தன்னிடத்தில் குர்ஆனை ஓதிக்காட்டும் படி கூறினார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)அவர்கள் குர்ஆன் உங்கள் மீது இறக்கப்பட்டிருக்க நான் உங்களுக்கே ஓதிக்காட்டுவதா? என்று கேட்டார்கள். பிறரிடமிருந்து அதை கேட்க நான் விரும்புகிறேன் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
இப்னு மஸ்ஊத் (ரலி)அவர்கள் 4 வது அத்தியாயமான அந்நிஸா சூராவை ஓதினார்கள். ஓவ்வொரு சமுதாயத்திலிருந்தும் சாட்சியை நாம் கொண்டுவரும்போதும் உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்(4 41) என்னும் வசனத்தை இப்னு மஸ்ஊத் (ரலி)அவர்கள் ஓதியபோது நபி(ஸல்)அவர்கள் ஓதுவதை நிறுத்துங்கள் என்று கூறினார்கள். நபி(ஸல்)அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வந்துகொண்டிருந்தது. நாமும் குர்ஆனைப் படிக்கும் போது பொருள் உணர்ந்து உருக்கத்துடன் படிக்க வேண்டும்.
நூல் : ( புகாரி 5055 )
அப்துல்லாஹ் பின் ஷீகைர்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் நபி(ஸல்)அவர்கள் தொழதுகொண்டிருக்கும் போது வந்தேன். சட்டி கொதிக்கும் சப்தத்தைப் போன்று சப்தம் அவர்களுடைய நெஞ்சிலிருந்து வந்ததுகொண்டிருந்தது .(அதாவது அழதுகொண்டிருந்தார்கள்.)
நூல் : (அபூதாவுத் : 769) (நஸயீ : 1199) (அஹ்மத் : 15722)

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites