தமிழகத்தில் சில பெண்கள் தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குக் குரல் கொடுத்து வருவதாக செய்தியில் அறிந்தேன். இவ்வாறு பெண்கள் தனி அமைப்பாகச் செயல்பட மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஆண்களும் பெண்களும் இருந்துள்ளனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கென்று தனி அமைப்பை உருவாக்கவில்லை. மேலும் போர்க்களங்கள் போன்றவற்றில் கூட ஆண்களின் தலைமையின் கீழ் தான் பெண்கள் உதவிகளைச் செய்து வந்துள்ளனர். இவ்வாறு பெண்கள் தனி அமைப்பாகச் செயல்பட நபிகளார் வாழ்க்கையில் முன்மாதிரி இல்லை.
உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க வேண்டுமென அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தலைமையில் போராட்டங்கள் நடந்ததை சிலர் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இதில் அவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏனெனில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பெண்களுக்கு மட்டும் தனி அமைப்பை ஏற்படுத்தவில்லை. ஆண்களும் பெண்களும் சேர்ந்தே இந்த அணியில் இருந்துள்ளனர்.
மேலும் நபிகளாரின் அங்கீகாரமும் இதற்கு இல்லை. இவ்வாறு நடந்து கொண்டதற்காக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இறுதி நாட்களில் வருத்தப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
மேலும் பெண்களுக்குத் தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை இன்று ஏற்படவும் இல்லை. இஸ்லாமியப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் அமைப்புகள் ஆண்கள் தலைமையில் இருந்து செயல்பட்டு வருகிறது. மேலும் ஊர்களில் உள்ள ஜமாஅத்களில் பெரும்பாலும் பெண்களுக்குச் சாதகமாகவே நடந்து கொள்கின்றனர்.
வரதட்சணை, மாமியார் கொடுமை போன்றவற்றை, தவ்ஹீத் ஜமாஅத்தினர் கடுமையாக எதிர்த்து நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றனர். வரதட்ணை இல்லாத நபிவழித் திருணமங்கள் நிறைந்து வருவது இதற்கு நல்ல சான்று. எனவே பெண்கள் தனி அமைப்பாகச் செயல்பட வேண்டிய அவசியமும் இல்லை; மார்க்கத்தில் இதற்கு முன்மாதிரியும் இல்லை. இது போன்ற அமைப்புகளின் கீழ் செயல்படுவது பெண்களைத் தவறான வழிகளுக்குக் கொண்டு செல்லவே பயன்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக