சிலையை வணங்கக் கூடிய ஒருவரை அநியாயமாக யாரேனும் கொலை செய்து விட்டால் கொல்லப்பட்டவருக்கு சொர்க்கமா? நரகமா? கொலை செய்தவருக்குத் தண்டனை என்ன?
அ. ஸைஃபுல்லாஹ், புளியங்குடி
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம் (அல்குர்ஆன் 5:72)
இணை வைப்பவர்களுக்கு சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டதாக அல்லாஹ் கூறுவதால் கொல்லப்பட்டவர் சுவனம் செல்வார் என்று கூற முடியாது.
அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99:7,8)
இந்த வசனத்தின் அடிப்படையில் கொலை செய்தவர் முஸ்லிமாக இருந்தாலும் அதற்குரிய தண்டனை அவருக்கு உண்டு.
"கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், "ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர். (அல்குர்ஆன் 5:32)
ஒரு மனிதரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதரையும் கொலை செய்வதர் போலாவார் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். முஸ்லிம், முஷ்ரிக் என்று பிரித்துக் கூறாமல் பொதுவாக மனித உயிரைப் பற்றியே இந்த வசனம் கூறுகின்றது. இதன் அடிப்படையில் எந்த உயிரையும் கொல்வது கடும் குற்றம் தான். எனவே கொல்லப்பட்டவர் முஸ்லிமாக இருந்தாலும் இணை வைப்பவராக இருந்தாலும் கொன்றவருக்கு நிச்சயமாக தண்டனை உண்டு என்பதை இதிலிருந்து அறியலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக