மாற்று மதத்தைச் சார்ந்தவர்களை நோய் விசாரிக்கலாமா? அவர்களுக்கு நோய் நிவாரணத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கலாமா?
முஹம்மத் ஹுஸைன்
திருவாரூர்
முஸ்லிமாக இருப்பவர், மற்றொரு முஸ்லிம் நோயுற்றிருக்கும் போது விசாரிப்பது அவசியமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
"ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, நோயுற்றால் நோய் விசாரிக்கச் செல்வது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரீ 1240)
மாற்று மதத்தவர்கள் நோயுற்று இருக்கும் போது நோய் விசாரிக்கச் செல்ல வேண்டுமென கட்டளையிடா விட்டாலும் அதை (நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து அவனது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு "இஸ்லாத்தை ஏற்றுக் கொள்!'' என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், "அபுல்காஸிம் - நபி (ஸல்) அவர்களின் - கூற்றுக்குக் கட்டுப்படு'' என்றதும். அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள் "இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும்'' எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினாôர்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1356
மாற்று மதத்தவர்களை நோய் விசாரிக்கலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் மிகத் தெளிவான சான்றாகும்.
அவர்களது நோய் நிவாரணத்திற்கு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யலாமா? என்ற கேள்விக்கு செய்யலாம் என்பதே பதில். காரணம். மாற்று மதத்தவர்கள் ஓரிறைக் கொள்கையை நிராகரிக்கும் போது அவர்களின் பாவங்களை மன்னிக்குமாறு கோருவதைத் தான் அல்லாஹ் தடுத்துள்ளான்.
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக் கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. (அல்குர்ஆன் 9:113)
பாவமன்னிப்பு கேட்பது தான் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்காக நாம் நோய் நிவாரணம் கேட்கலாம். அதே நேரத்தில் "அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்குரிய நல்வாய்ப்பை அவர்களுக்கு வழங்கு' என்று கேட்பதும் முக்கியமானதாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக