சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை என்பது, பக்கா தவ்ஹீத் ஆகும். எல்லா சக்தியும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது. இறைவனை விட்டு விட்டால் யாராலும் எதுவும் செய்ய முடியாது. அவ்லியாக்களுக்கும் சக்தி கிடையாது. அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் உண்டு. ஆனால் அவ்லியாக்களுக்கு அல்லாஹ் அந்த ஆற்றலை வழங்கியுள்ளான் என்றே கூறுகிறோம்.
நமது பதில்
ஒருவன் ஒரு கல்லை வைத்துக் கொண்டு இதற்கு எந்தச் சக்தியும் இல்லை. இதனால் தானாக எதுவும் செய்ய முடியாது. ஆனாலும் இறைவன் இதற்குச் சக்தியை வழங்கியுள்ளான் என்று கூறி, அதை வணங்கினால் அது சரி என்று கூறுவீர்களா?
மக்காவில் இருந்த காஃபிர்கள், தாங்கள் வணங்கிய சிலைகளை அல்லாஹ் என்று கூறினார்களா?
அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். "அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்'' என்றும் கூறுகின்றனர். "வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்'' என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 10:18
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் "அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
அல்குர்ஆன் 39:3
"அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்'' என்றும் "அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'' என்று தான் அந்தச் சிலை வணக்கத்தைப் பற்றிக் கூறினார்கள். அந்தச் சிலைகளை இறைவன் என்று அவர்கள் கூறவில்லையே! இறைவன் தான் சிலைகளுக்கு இந்தச் சக்தியை வழங்கியுள்ளான் என்று தானே நம்பினார்கள். எனவே இதுவும் சரி என்று கூறுவார்களா?
சூரியன், சந்திரன், ஆடு, மாடு, கழுதை, குதிரை ஆகியவற்றிக்கு இறைவன் தான் சக்தியை கொடுத்துள்ளான் என்று கூறிக் கொண்டு அதனிடம், "எனக்குப் பிள்ளைக் கொடு! நோயை நீக்கு!' என்று கூறினால் இது தான் சரியான தவ்ஹீத், பக்காவான தவ்ஹீத் என்று கூறுவார்களா?
இவர்களின் உருப்படாத இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டால் மிகச் சிறந்த தவ்ஹீத் வாதி அபூஜஹ்லாகத் தான் இருப்பான். ஏனெனில் இவர்கள் கூறுவது போன்று தான் அவனும் கூறி வந்தான்.
அப்துல் காதிர் ஜீலானிக்கு அல்லாஹ் சக்தியை வழங்கியுள்ளான் என்றால் அதற்குரிய ஆதாரத்தை முதலில் காட்ட வேண்டும்; நிரூபிக்க வேண்டும். அதற்குரிய ஆதாரத்தை ஒன்றையும் காட்டாமல், அல்லாஹ் தான் அவர்களுக்கு வழங்கியுள்ளான் என்றால் அறிவுடைய எவரும் ஏற்றுக் கொள்வார்களா?
அல்லாஹ், அவ்லியாக்களுக்கு சக்தியை வழங்கியுள்ளான் என்று இவர்களாக நினைத்துக் கொண்டால் அது ஆதாரமாக ஆகி விடாது. இவர்களைப் போன்று தான் மக்கா காஃபிர்கள் நம்பினார்கள்; சிலை வணங்கக் கூடியவர்கள் கூட நம்புகிறார்கள். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொல்கிறார்கள். ஒரு கடவுள் தான், மற்றவை எல்லாம் அந்தக் கடவுளால் ஆற்றல் வழங்கப்பட்டவர்கள், இலாக்கா ஒதுக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். இது கப்ரு வணங்கிகளின் வாதப்படி சரியானதாக அமையும். இதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக