இரு தரப்பினருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு முரண்பாடான இரண்டு கருத்துக்களைக் கூறுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இருவருமே தாங்கள் கூறுவது தான் உண்மை என்று வாதிக்கின்றார்கள். இந்நிலையில் அவர்கள் தங்கள் கூற்றுக்கு உரிய ஆதாரத்துடன் நேரடியாக விவாதிப்பதன் மூலம் எது உண்மை என்பதை நிரூபிக்கலாம்.
இதற்கு வழியில்லாத பட்சத்தில் இரு தரப்பினரும் தங்கள் குடும்பத்துடன் ஒரு சபையில் வந்து, தங்கள் கருத்தைக் கூறி, பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு முபாஹலா என்று பெயர்.
உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டா வாதம் செய்தால் "வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:61)
இந்த வசனத்தின் அடிப்படையில் முபாஹலா செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. எனினும் தற்போது அர்த்தமற்ற சில வாதங்களை முன் வைத்து முபாஹலா செய்வது கூடாது என்று சிலர் ஃபத்வா கொடுத்து வருவதால் இது குறித்து நாம் விரிவாக விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
முபாஹலா செய்வதற்கு அனுமதி உள்ளது, ஆனால் முஸ்லிமல்லாதவர்களுடன் மட்டும் தான் செய்ய வேண்டும்; முஸ்லிம்களுக்கு மத்தியில் முபாஹலா செய்யக் கூடாது என்று இவர்கள் கூறுகின்றனர். மேலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் முபாஹலா செய்வது குர்ஆன், ஹதீசுக்கு முரணானது என்றும் கூறி வருகின்றனர்.
ஒரு விஷயம் குர்ஆன், ஹதீசுக்கு முரணானது என்று ஒருவர் கூறினால் அதற்கு நேரடியான தடையை குர்ஆன், ஹதீஸிலிருந்து எடுத்துக் காட்ட வேண்டும். அவ்வாறு எடுத்துக் காட்டவில்லை என்றால் அல்லாஹ்வின் பெயராலும், நபி (ஸல்) அவர்களின் பெயராலும் இட்டுக்கட்டி கூறுகின்றார் என்று தான் பொருள்.
முஸ்லிம்களுக்கிடையே முபாஹலா செய்யக் கூடாது; முஸ்லிமல்லாதவர்களிடம் மட்டும் தான் முபாஹலா செய்ய வேண்டும் என்று இந்த வசனத்திலோ, அல்லது வேறு வசனங்களிலோ, அல்லது ஹதீஸ்களிலோ கூறப்படவேயில்லை.
இந்த வசனத்தில் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் என்ற பிரச்சனையே கூறப்படவில்லை. உண்மையா? பொய்யா? என்பதை முடிவு செய்வதற்குத் தான் முபாஹலாவுக்கு அழைக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான் என்பதை இந்த வசனத்தை மேலோட்டமாகச் சிந்தித்தால் கூட விளங்கலாம்.
இந்த வசனத்தில் "காஃபிர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்'' என்று கூறப்பட்டிருந்தால் இவர்களுடைய வாதத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு கூறப்படாமல் "பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்'' என்று கூறப்படுவதிலிருந்து உண்மை, பொய்யைத் தீர்மானிப்பதற்குத் தான் முபாஹலா செய்யும் வழிமுறையை அல்லாஹ் கற்றுத் தருகின்றான் என்பதை அறிய முடியும்.
நான்கு மாதம் பத்து நாட்கள் என்ற தலாக் குறித்த வசனம் அருளப்பட்ட பிறகு தான் தலாக் அத்தியாயம் அருளப்பட்டது என்று யார் விரும்பினாலும் அவரிடம் முபாஹலா செய்யத் தயாராக இருக்கிறேன் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ஊத், நூல்: அபூதாவூத் 1963
இதே கருத்தில் நஸயீயில் 3464 ஹதீசும் இடம் பெற்றுள்ளது.
நபித்தோழர்களுக்கு மத்தியில் தலாக் வசனம் குறித்த சர்ச்சை ஏற்பட்ட போது அது குறித்து முபாஹலா செய்யத் தயார் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறுகின்றார்கள். இதுபோல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியுள்ளதை நாம் ஹதீஸ் நூற்களில் பார்க்க முடிகின்றது.
இந்தச் சமுதாயத்திற்கு ளிஹார் இல்லை என்று (நிரூபிப்பதற்காக) விரும்பியவரிடம் முபாஹலா செய்ய நான் தயாராக இருக்கின்றேன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
நூல்: ஸுனன் பைஹகீ 7/383, தாரகுத்னீ 3/318
நானும் வாரிசுரிமைச் சட்டத்தில் எனக்கு மாறுபடக் கூடிய இவர்களும் ஒன்றிணைந்து, நம்முடைய கைகளை கஅபாவின் ஒரு மூலையின் மீது வைத்து பிறகு முபாஹலா செய்து, அல்லாஹ்வின் சாபத்தைப் பொய்யர்கள் மீது ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றேன் என்று இப்னுஅப்பாஸ் (ரலி) கூறினார்கள்.
நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக் 10/255
முஸ்லிம்களுக்கு மத்தியில் முபாஹலா செய்யலாம் என்பதால் தான் நபித்தோழர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள். எனவே முஸ்லிமல்லாதவர்களுடன் மட்டுமே முபாஹலா செய்ய வேண்டும் என்று கூறுவது தவறான வாதமாகும்.
முபாஹலா தொடர்பாக மேலே குறிப்பிட்டுள்ள வசனத்திற்கு முந்தைய வசனங்களில் கிறித்தவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான். எனவே இந்த வசனம் கிறித்தவர்கள் தொடர்பாக இறங்கிய வசனம் என்பதால் கிறித்தவர்களுடன் மட்டும் தான் முபாஹலா செய்ய வேண்டும் என்ற ஒரு விநோதமான வாதத்தை முன் வைக்கின்றனர்.
குர்ஆனில் சொல்லப்படும் கட்டளைகள் அனைத்தும் எல்லோருக்கும் பொதுவானது தான். வேதம் கொடுக்கப்பட்டோருக்கு தடை செய்யப்பட்டவை முஸ்லிம்களுக்கு அனுமதி என்றால், அல்லது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டு நமக்குத் தடை என்றால் அது குறித்து குர்ஆனிலோ, ஹதீஸிலோ விளக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பிரத்தியேகக் கட்டளை இல்லாத வரை அது அனைவருக்கும் பொதுவானது தான். இந்த அடிப்படையைக் கூட விளங்காமல் இது போன்ற அர்த்தமற்ற வாதங்களை முன் வைக்கின்றனர்.
யூத, கிறித்தவர்களின் செயல்பாடுகளைக் கண்டித்து நூற்றுக்கணக்கான வசனங்கள் குர்ஆனில் உள்ளன. அவையெல்லாம் யூத கிறித்தவர்களுக்கு மட்டும் தான். முஸ்லிம்களுக்கு இது பொருந்தாது என்று கூற முடியுமா?
எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்காதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 2:41)
இந்த வசனம் யூதர்களைப் பற்றியே குறிப்பிடுகின்றது. அதனால் நாம் குர்ஆனுடைய வசனங்களை அற்ப ஆதாயத்திற்கு விற்கலாம் என்று கூற முடியுமா?
வேதமுடையோரே! நீங்கள் விளங்கிக் கொண்டே ஏன் அல்லாஹ்வின் வசனங்களை மறுக்கிறீர்கள்? (அல்குர்ஆன் 3:70)
வேதமுடையோரே! உண்மையை ஏன் பொய்யுடன் கலக்கிறீர்கள்? அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (அல்குர்ஆன்3:71)
வேதமுடையோரே! நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ்வின் பாதையை விட்டும் ஏன் தடுக்கின்றீர்கள்? தெரிந்து கொண்டே அதைக் கோணலா(ன மார்க்கமா)கச் சித்தரிக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 4:171)
இந்த வசனங்கள் அனைத்திலும் யூத, கிறித்தவர்களை அழைத்தே அல்லாஹ் கூறுகின்றான். எனவே அல்லாஹ்வின் வசனங்களை மறுத்தல், உண்மையை மறைத்தல், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தல் போன்ற காரியங்களை முஸ்லிம்கள் செய்தால் தப்பில்லை என்று கூறுவது எந்த அளவுக்கு மடத்தனமோ அது போலத் தான் இந்த வாதம் அமைந்துள்ளது.
லூத்தையும் (தூதராக அனுப்பினோம்). "உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக்கேடான காரியத்தையா செய்கிறீர்கள்?'' என்று தமது சமுதாயத்திடம் கேட்டார். "நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்'' (என்றும் கூறினார்.) (அல்குர்ஆன் 7:80, 81)
லூத்துடைய சமுதாயத்திற்கு ஓரினச் சேர்க்கையைத் தடை செய்ததாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இதே கருத்தை 27:55 மற்றும் 29:29 ஆகிய வசனங்களிலும் குறிப்பிடுகின்றான். அந்த வசனங்களிலும் லூத்துடைய சமுதாயத்தைப் பற்றியே கூறப்படுகின்றது. எனவே ஓரினச் சேர்க்கை லூத்துடைய சமுதாயத்திற்கு மட்டும் தான் தடை, நமக்கு அனுமதிக்கப் பட்டது தான் என்று யாரேனும் வாதிடுவார்களா?
சமாதி வழிபாடு குறித்த ஹதீஸ்களை எடுத்துக் கொண்டால் யூத, கிறித்தவர்கள் குறித்துத் தான் கூறப்படுகின்றது.
யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்கள் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டனர் என்று நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1330
இந்த ஹதீஸ் யூத, கிறித்தவர்களைக் குறித்துத் தான் கூறுகின்றது. எனவே நாம் நபி (ஸல்) அவர்களின் கப்ரை வழிபடலாம் என்று வாதிட முடியுமா?
இவ்வளவு ஏன்? இந்த வாதத்தின் அடிப்படையில் பார்த்தால் ஒட்டுமொத்த குர்ஆனில் எதையுமே நாம் பின்பற்ற முடியாது. ஏனென்றால் எல்லா வசனங்களும் மக்கத்து முஷ்ரிக்குகள், யூத, கிறித்தவர்களைக் குறித்து அருளப்பட்டவை தான்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!
"அவர்களுக்கு நடக்கிற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கிற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கிற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கிற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 7:194,195)
இந்த வசனங்களை ஆதாரமாகக் காட்டி அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்கக் கூடாது என்று நாம் பிரச்சாரம் செய்யும் போது, ஏகத்துவத்திற்கு எதிரானவர்கள் இந்த வாதத்தைத் தான் எடுத்து வைத்தார்கள். இந்த வசனங்கள் எல்லாம் மக்கத்து முஷ்ரிக்குகள் வணங்கிய சிலைகளைப் பற்றித் தான் கூறுகின்றன, முஹைதீன் அப்துல் காதர் ஜீலானியைப் பற்றி கூறவில்லை என்று அவர்கள் கூறியது போல் தவ்ஹீதுவாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களும் கூறுவது தான் வேதனை.
முஸ்லிம்களுடன் முபாஹலா செய்யக் கூடாது என்பதற்கு இவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம் (?) இதை விட கேலிக் கூத்தானது.
முபாஹலா செய்தால் அதில் பொய் சொல்லியவர்களின் குடும்பத்தினர் ஒரு சிறிய காலத்திற்குள் அழிந்து விட வேண்டும். ஆனால் ஏற்கனவே முஸ்லிம்களுக்குள் முபாஹலா செய்து, இது போன்ற விளைவு எதுவும் ஏற்படவில்லை. 20 வருடங்களுக்கு முன் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கும் காயல்பட்டணத்தைச் சேர்ந்த ஜலீல் முஹைதீன் என்பவருக்கும் முபாஹலா நடைபெற்றது. அதன் பிறகு 20 வருடங்களாகியும் இருவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே முஸ்லிம்களுக்கு மத்தியில் முபாஹலா செய்யக் கூடாது என்று கூறுகின்றனர்.
இவர்கள் எந்த அளவுக்கு மார்க்கத்தை விளங்கி வைத்துள்ளார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
முபாஹலா தொடர்பாக நாம் மேலே சுட்டிக்காட்டிய வசனத்தில், பொய்யர்கள் மீது மரணம் உண்டாகட்டும் என்றோ அல்லது பொய்யர்களுக்கு கை, கால் விளங்காமல் போகட்டும் என்றோ பிரார்த்திக்குமாறு கூறப்படவில்லை. பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் - லஃனத் உண்டாகட்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் லஃனத் என்றால் என்ன அர்த்தம் என்பது கூட விளங்காமல் இந்த வாதத்தை முன் வைக்கின்றனர்.
அல்லாஹ்வின் சாபம் எப்படி ஏற்படும் என்று யாரும் அறிய முடியாது. அது இம்மையிலும் ஏற்படலாம், மறுமையிலும் கிடைக்கலாம். அல்லாஹ்வின் சாபம் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று யாரும் அவனை நிர்ப்பந்திக்க முடியாது. இதே லஃனத் - சாபம் என்ற சொல் பல்வேறு வசனங்களிலும் ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 4:93)
ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்பவனை அல்லாஹ் சபிக்கின்றான் என்று இந்த வசனம் கூறுகின்றது. ஜார்ஜ் புஷ் முதற்கொண்டு எத்தனையோ பேர் முஃமின்களை வேண்டுமென்றே கொலை செய்து கொண்டிருப்பதை நிதர்சனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ்வின் சாபம் என்பதற்கு இவர்கள் கொடுக்கும் அர்த்தத்தின் படி உலகில் எத்தனையோ பேருக்கு கை, கால் விளங்காமல் போயிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் யாரும் கை, கால் விளங்காமலோ அல்லது அழிந்தோ போய் விடவில்லை.
(ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது. (அல்குர்ஆன் 2:161)
அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுத்த பின் அதை முறிப்போர், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப்போர், மற்றும் பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கு சாபம் உள்ளது. அவர்களுக்கு அவ்வுலகில் கேடு உண்டு. (அல்குர்ஆன் 13:25)
நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 24:23)
மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். (அல்குர்ஆன் 2:159)
நயவஞ்சகர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், (தன்னை) மறுப்போருக்கும் நரக நெருப்பை அல்லாஹ் எச்சரித்து விட்டான். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அது அவர்களுக்குப் போதுமானது. அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு. (அல்குர்ஆன் 9:68)
அல்லாஹ்வை மறுப்பவர்கள், அல்லாஹ்விடம் வாக்குறுதிக்கு மாறு செய்தோர், உறவுகளைத் துண்டிப்போர், குழப்பம் விளைவிப்போர், அவதூறு கூறுவோர், அல்லாஹ்வின் சான்றுகளை மறைப்போர், நேர்வழியை மறைப்போர், முனாஃபிக்குகள் ஆகியோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருப்பதாக இந்த வசனங்கள் கூறுகின்றன.
பச்சை குத்திக் கொள்ளும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி 4886)
திருடர்களை அல்லாஹ் சபிப்பானாக என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி 6783)
யூத, கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி 1330)
இவர்களது வாதப்படி அல்லாஹ்வின் சாபம் உள்ளவர்கள் அழிந்து போக வேண்டும் என்றால் உலகில் 90க்கும் மேற்பட்ட சதவிகிதத்தினர் அழிந்து போயிருக்க வேண்டும். ஏனெனில் மேலே குறிப்பிட்ட காரியங்களை அவ்வளவு பேர் செய்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே அல்லாஹ்வின் சாபம் என்பது இவர்கள் குறிப்பிடுவது போல் அழிந்து போவதோ அல்லது உடனடியாக தண்டனைக்குள்ளாவதோ மட்டும் அல்ல. அது எந்த விதத்திலும் ஏற்படலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானியை அழைத்து இருட்டு திக்ரு செய்வது கூடாது என்று கூறி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள், ஜலீல் முஹைதீன் என்பவருடன் முபாஹலா செய்தது உண்மை தான். இன்று அவர்கள் இருவருக்கும் வெளிப்படையாக எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் இரு தரப்பினரின் கொள்கைக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் சிந்தித்தால் முபாஹலாவினால் ஏற்பட்டுள்ள பயன் தெரிய வரும்.
20 வருடத்திற்கு முன்பு ஒரு சிலரை மட்டுமே கொண்டிருந்த இந்த ஏகத்துவக் கொள்கை இன்று தமிழகமெங்கும் பல்கிப் பெருகியிருப்பதை யாரும் மறுக்க முடியாது. இது தான் முபாஹலாவில் உண்மையாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
அதே நேரத்தில் 20 வருடத்திற்கு முன்பு கொடி கட்டிப் பறந்த இருட்டு திக்ருகள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய்க் கொண்டிருக்கின்றன. இது முபாஹலாவில் பொய் கூறியவர்களுக்கு ஏற்பட்ட தோல்வியாகும். இது தான் அல்லாஹ்வின் சாபம் என்று கூற முடியாது என்றாலும் அல்லாஹ்வின் சாபம் இந்த வகையிலும் ஏற்படலாம்.
உண்மை, பொய் குறித்த தீர்ப்பை இறைவனிடம் ஒப்படைத்து விடுவது தான் முபாஹலா ஆகும். அவனது தீர்ப்பு இந்த உலகத்திலேயே நமக்குக் காட்டப்படலாம். அல்லது தெரியாமலும் போகலாம். இறைவனின் உண்மையான தீர்ப்பு என்ன என்பது மறுமையில் தான் தெரிய வரும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக