கேள்வி : என்னுடைய ஒரு ஹிந்து நண்பன் மறு பிறவி இல்லையென்பதை நிரூபித்தால் நான் இஸ்லாத்தில் வந்து விடலாம் எனக் கூறியுள்ளான். எனவே தயவு செய்து பதில் தந்தால் அந்த நண்பனின் சந்தேகம் தீர்க்க வாய்ப்பாக அமையும் இன்ஷா அல்லாஹ்.
ஹெச் .ஜாஃபர் சாதிக்,. கேரளா.
! பதில் : மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம்.
அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்த பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான்.
இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர்.
நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக் கவனியுங்கள்.
இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.
மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும்.
அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிலிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும்.
மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது.
ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.
பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.
புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது.
மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.
அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன?
இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.
ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது.
இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?
ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது, அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.
அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும் நீதிக்கும் சரியாக இருக்குமா?
எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறு பிறவி சரிப்பட்டு வரவில்லை. காரண காரியத்தோடு அலசினாலும் சரிப்பட்டு வரவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக