அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

? எங்களது ஊரில் ஒரு மௌலவி பயான் செய்யும் போது இறந்தவர்களிடம் நாம் நம்முடைய தேவைகளைக் கேட்கலாம் என்றும்
 இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்றும் கூறினார். அதற்கு ஆதராமாக பத்ருப்போரில் கொல்லப் பட்டவர்களுடன் நபியவர்கள் பேசியுள்ளார்கள் என்ற ஹதீஸையும், இறந்தவர்கள் செருப்போசையைக் கேட்கிறார்கள் என்ற ஹதீஸையும் கூறினார். மேலும் மிஃராஜ் பயணத்தில் இறந்து விட்ட மூஸா நபியவர்கள் நபியவர்களுக்கு தொழுகையைக் குறைக்க உதவி செய்துள்ளார்கள் என்றும் கூறினார். இதனுடைய உண்மையான விளக்கம் என்ன?
அப்துல் கரீம், சென்னை
இறந்து போன நல்லடியார்களிடம் முஸ்-லிம்கள் சிலர் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் உருண்டோடிய பின்பும் இவ்வாறு பிரார்த்தனை செய்கின்றனர்.
திருக்குர்ஆனின் 2:259 வசனத்தில் மிகச் சிறந்த நல்லடியார் ஒருவரைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான். அவரை அல்லாஹ்  நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்கிறான். அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற் பரப்பிலேயே அவரது உடல் கிடந்தது.
ஆயினும் தாம் எத்தனை ஆண்டுகள் இவ்வாறு இருந்தோம் என்பதைக் கூட அவரால் அறிய இயலவில்லை. ஒரு நாள் தூங்கியதாகவே நினைக்கிறார்.
பூமிக்குள் அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே இந்த நல்லடியாரின் உடல் இருந்தும் அவரால் தனக்கு என்ன நேர்ந்தது என்பதையே அறிய முடியவில்லை என்றால் பூமிக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள், எவ்வாறு இவ்வுலகில் மற்றவர்களின் நிலைகளை அறிவார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
மேலும் இவர் நல்லடியார் என்று நம்மால் அடித்துச் சொல்ல முடியும். ஆனால் தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் நல்லடியார்களாகத் தான் இருப்பார்கள் என்று எந்த உறுதியும் கூற முடியாது. மறுமையில் தான் அது பற்றிய விபரம் தெரியும். எனவே சமாதிகளில் வழிபாடுகள் நடத்துவோருக்கு எதிராக இந்த ஒரு வசனமே போதுமானதாகும்.
மேலும் திருமறைக் குர்ஆனில் 18வது அத்தியாயத்தில் குகை இளைஞர்களான நல்லடியார்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான். நீண்ட காலம் அவர்களை இறைவன் நித்திரை கொள்ளச் செய்கிறான். அவர்களும் பூமியின் மேற்பரப்பில் தான் கிடக்கின்றார்கள்.
ஆனால் அவர்களுக்கு இறைவன் திரும்பவும் உயிரைக் கொடுத்தவுடன் எத்தனை நாட்கள் அவர்கள் தூங்கினார்கள் என்பதைக் கூட அவர்கள் அறியவில்லை. மேலும் அவர்கள் கண் விழித்த போது உலகத்தின் சூழ்நிலையையும் அவர்களால் அறிய முடியவில்லை. இதனை 18வது அத்தியாயம் 19வது வசனத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
மேலும் ஈஸா (அலை) அவர்கள் நபியும், மிகச் சிறந்த நல்லடியாரும் ஆவார்கள். அவர்களை இறைவன் மறுமையில் அழைத்து "மர்யமின் மகன் ஈஸாவே! "அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!' என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?'' என்று கேட்பான்.
அதற்கு அவர் பதிலளிக்கும் போது "நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமை இல்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று அவர் பதிலளிப்பார்.
"நீ எனக்குக் கட்டளையிட்ட படி "எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!' என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை'' என்று கூறிவிட்டு "நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களை யும் கண்காணிப்பவன்'' என்று கூறுவார்.
"நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப் பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்''
என்று அவர்கள் கூறுவதிலிருந்து  ஈஸா (அலை) அவர்களுக்கு தாம் கைப்பற்றப்பட்ட பிறகு நடந்த விஷயங்கள் தெரியவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இதற்கு மற்றொரு சான்றையும் நாம் கூறலாம்.
மறுமையில் பித்அத் செய்த ஸஹாபாக்கள் கவ்ஸர் தடாகத்தில் நீர் அருந்த வரும் போது தடுத்து நிறுத்தப் படுவார்கள். அப்போது நபியவர்கள் "என்னுடைய தோழர்கள், என்னுடைய தோழர்கள்'' என்று கூறுவார்கள். அதற்கு "முஹம்மதே! இவர்கள் உமக்குப் பிறகு மார்க்கத்தில் எவற்றையெல்லாம் புதிதாக ஏற்படுத்தினார்கள்  என்பதை நீர் அறிய மாட்டீர்'' என்று பதிலளிக்கப்படும். இதனை நாம் புகாரி (3349) மற்றும் இன்னும் பல நூற்களில் காணலாம்.
நபியவர்கள் தான் நல்லடியார் களிலேயே மிகச் சிறந்தவர்கள். இறையச்சமிக்கவர்கள். ஆனால் அவர்களும் கூட தாம் இறந்த பிறகு இவ்வுலகில் உள்ளதை அறிந்து கொள்ள முடியாது என்பதை நாம் மேற்கண்ட செய்தியிலிருந்து தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
மேலும் மூஸா (அலை) அவர்களும், ஆதம் (அலை) அவர்களும் உரையாடிய செய்தியை நாம் புகாரி (3409, 4736, 4738) முஸ்லிம் போன்ற நூற்களில் காண முடிகின்றது. இவ்வுலகில் உள்ளவர்கள் கூறுவதை இறந்தவர்கள் செவியேற்க முடியுமென்றால் மூஸா நபியவர்கள் இன்றைய கப்ரு வணங்கிகள் இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்யும் போது பேசுவதைப் போன்றே பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இறைவனிடம் பின்வருமாறு கோரிக்கை வைக்கிறார்கள். "இறைவா! எங்களையும், தன்னையும் சுவர்க்கத் திலிருந்து வெளியேற்றினாரே அந்த எங்களுடைய தந்தையாகிய ஆதமைக் எங்களுக்குக் காட்டு''  (அபூதாவூத் 4080) என்று கூறினார்கள். அப்போது இறைவன் ஆதம் நபியை மூஸாவிற்கு எடுத்துக் காட்டினான். பிறகு தான் மூஸா நபி ஆதமோடு உரையாடினார்கள்.
இறைவன் தன்னுடைய வல்லமையால் நாம் ஒருவரிடம் நேரடியாகப் பேசுவதைப்  போன்று ஆதமை மூஸாவிற்கு எடுத்துக் காட்டிய பிறகு தான் மூஸா நபி ஆதமிடம் பேசுகிறார்கள் என்றால் இதுவல்லாத முறையில் யாரும் யாரோடும் தொடர்பு கொள்ள முடியாது என்பதைத் தான் இந்தச் சம்பவம் நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.
இவ்வாறு தான் மிஃராஜ் தொடர்பான சம்பவத்திலும் மூஸா மற்றும் மற்ற நபிமார்களை இறைவன் நபியவர்களுக்கு நேரடியாகவும் உடலோடும் உயிரோடும் எடுத்துக் காட்டினான். அப்போது தான் நபியவர்கள் மூஸா நபியோடு உரையாடினார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இன்றைய கப்ரு வணங்கிகள் உயிரோடு இருப்பதாகக் கருதுகின்ற நல்லடியார்கள் யாரும் உயிரோடும், உடலோடும் எடுத்துக் காட்டப்படவில்லை.
யாராக இருந்தாலும் உயிரோடும் உடலோடும் இருந்தால் தான் அவர்களிடம் பேசமுடியும் என்பதைத் தான் மேற்கண்ட சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. மேலும் இந்த இரண்டு சம்பவங்களும் இறைவனுடைய வல்லமைக்குத் தான் சான்றே தவிர இறந்தவர்கள் கேட்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள முடியாது.
கற்களுக்குக் கேட்கும் சக்தியோ, பார்க்கும் சக்தியோ கிடையாது. இறைவன் நாடினால் கல்லைக் கூட பேச வைப்பான். இதனால் எல்லா கற்களுக்கும்  பேசும் சக்தி உண்டு என்று கூறிவிட முடியாது. இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அவற்றைப் பின்னால் காண்போம்.
மேலும் மிஃராஜ் என்ற நிகழ்ச்சி இறைவனின் மாபெரும் வல்லமைக்குரிய சான்றாகும். அதில் இறைவன் இறந்தவர்களை மட்டும் எடுத்துக் காட்டவில்லை. உலகில் இனி பிறக்க இருப்பவர்களையும், அவர்கள் சுவர்க்க வாசிகளா? நரக வாசிகளா? என்பதையும் இறைவன் எடுத்துக் காட்டியுள்ளான்.
உலகில் அப்போது வாழ்ந்து கொண்டிருந்து பிலால் அவர்களுக்குத் தெரியாமலேயே பிலால் அவர்களின் காலடி ஓசையை நபியவர்கள் சுவர்க்கத்தில் கேட்டுள்ளார்கள். இன்றைக்கும் உலகத்தில் வாழக்கூடிய தஜ்ஜால் நபியவர்களுக்கு மிஃராஜ் பயணத்தில் எடுத்துக் காட்டப் பட்டுள்ளான்.
எனவே மிஃராஜ் நிகழ்ச்சியில்  நபியவர்களுக்கு இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட உலக மக்கள் அனைவரும், இனி பிறக்கவிருப்பவர்களும், தஜ்ஜாலும் நாம் பேசுவதையெல்லாம் கேட்பார்கள். அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள். எனவே அவர்களிடமும் நாம் பிரார்த்தனை செய்யலாம் என்று இந்த கப்ருவணங்கிகள் கூறுவார்களா? எதை எப்படிப் புரிய வேண்டும் என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. அவ்வளவு தான்.
ஒரு மனிதன் இறந்து விட்டான் என்றால் அவன் இறைவனின் கைப்பிடிக்குள் சென்று விடுகிறான். அவனுக்கும் இவ்வுலகிற்கும் மத்தியில் பர்ஸக் எனும் திரை மறைவு வாழ்க்கை ஏற்பட்டு விடுகிறது.
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (39:42)
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது. ( 23:99,100)
ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கும், இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப் பின்னால் புலனுக்குத் தெரியாத மிகப் பெரிய திரை போடப்பட்டு விடுகிறது என்று இந்த வசனம் (திருக்குர்ஆன் 23:100) கூறுகிறது.
இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்தித்தல், இறந்தவர்களை வழிபடுதல், இறந்தவர்களிடம் கோரிக்கை வைத்தல், நேர்ச்சை செய்தல் போன்ற காரியங்களைச் செய்பவர்களுக்கு இவ்வசனம் சரியான மறுப்பாக அமைந்துள்ளது.
இறந்தவர்களுக்கும், இந்த உலகத்திற்கும் திரை போடப்படுகிறது என்று சொன்னால் இந்த உலகில் உள்ளவர்கள் செய்யும் எதையும் இறந்தவர்கள் அறிந்து கொள்ளவே முடியாது.
அறிந்து கொள்ளவே முடியாது எனும் போது அவர்களால் எதுவும் செய்யவும் முடியாது என்பதை அறிந்து கொள்ளலாம். இது காஃபிர்களுக்கு மட்டும் தான். நல்லவர்களுக்கு இல்லை என்று சிலர் கூறலாம். ஆனால் இந்தத் திரை நல்லவர்களுக்கும் தான் என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
அல்லாஹ்வின் பாதையில் இறைவனுக்காக உயிரைக் கொடுத்தவர்கள் நல்லடியார்கள் என்பதையும், அவர்கள் மரணித்த பின்பும் உயிரோடு இருப்பதாகவும் இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். (3:169)
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள் (2:154)
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உண்மையில் நல்லடியார்களாக இருந்தாலும், அவர்கள் இறைவனிடத்தில் உணவளிக்கப்பட்டு உயிரோடு இருந்தாலும் அவர்கள் இவ்வுலகில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ள முடியாது என்பதை இவ்வசனத்திற்கு விளக்கமாக நபியவர்கள் கூறியதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுடைய சகோதரர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்ட போது அல்லாஹ் அவர்களுடைய  உயிர்களை ஒரு பச்சை நிறப் பறவையின் உடலிலே ஆக்கினான். அது சுவர்க்கத்தின் ஆறுகளிலே சுற்றித் திரிகிறது. அதனுடைய பழங்களை சாப்பிடுகிறது. அர்ஷினுடைய நிழலிலே தொங்க விடப்பட்டுள்ள தங்கத்தாலான கூடுகளிலே அது தங்குகிறது. அவர்கள் அழகிய உணவையும், குடி பானத்ததையும், தங்குமிடத்தையும் பெற்றுக் கொண்ட போது "எங்களைப் பற்றி, நாங்கள் சுவர்க்கத்திலே உணவளிக்கப்பட்டு உயிரோடு இருக்கிறோம் என்பதை எங்களுடைய சகோதரர்களுக்கு எடுத்துக் கூறுபவர் யார்? (இவ்வாறு கூறுவது) அவர்கள் ஜிஹாது செய்வதை வெறுக்காமல் இருப்பதற்கும் போரிலே கோழைத்தனம் கொள்ளாமல் இருப்பதற்கும் காரணமாக அமையும்'' என்று கூறினார்கள். எனவே அல்லாஹ் "நான் அவர்களுக்கு எடுத்துக் கூறுகிறேன்'' என்று கூறி மேற்கண்ட 3:169 வசனத்தை இறக்கியருளினான்.
அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் (2158)
சுவர்க்கத்தில் உள்ள நல்லடியார்கள் இவ்வுலகத்தினரோடு தொடர்பு கொள்ள முடியாது என்பதைத் தான் "எங்களைப் பற்றி அறிவிப்பவர் யார்?'' என்று அவர்கள் கேட்பதிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இறந்தவர்கள் இவ்வுலகத்தாரோடு தொடர்பு  கொள்ள முடியுமென்றால் அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும் அவர்களின் சார்பாக இறைவன் தான் தன்னுடைய நபிக்கு திருமறை வசனத்தை இறக்கினானே தவிர அவர்கள் இவ்வுலக மக்களோடு நேரடியாகப் பேசுவதற்கு அனுமதி வழங்கவில்லை. இதிலிருந்தே இறந்தவர்கள் ஒருபோதும் இவ்வுலகத்தாருடன் தொடர்பு கொள்ள முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
மேலும் 2:154 வசனத்தில் "அவர்கள் உயிருடன் உள்ளனர்'' என்பதுடன் "எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்'' என்றும் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் உயிருடன் இருப்பது நாம் உணர்ந்துள்ள கருத்தில் அல்ல. நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தையே இது தரும். மேலும் அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் கொல்லப்பட்டாரா? அல்லது பெருமைக்காகப் போருக்குச் சென்று கொல்லப்பட்டாரா? என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் தான் கொல்லப்பட்டார் என்று நாம் முடிவு செய்ய முடியாது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
மேலும் இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பதைப் பல்வேறு இடங்களில் திருமறைக் குர்ஆனில் இறைவன் தெளிவாகக் கூறியுள்ளான்.
செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தோரை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப் படுவார்கள் (6:36)
அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். "எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். (16:21)
நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது. (27:80)
குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை (35:19-22)
இவ்வசனத்தில் உயிரோடு உள்ளவர்களும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள் என்று இறைவன் கூறுகிறான். இதிலிருந்தே உயிரோடு உள்ளவன் கேட்பான் என்றால் இறந்தவர்கள் கேட்க மாட்டார்கள் எள்பதை விளங்கிக் கொள்ளலாம். அதனைத் தான் இறைவன் அதைத் தொடர்ந்து, மண்ணறையில் உள்ள செவியேற்க முடியாதவர்களை நபியவர்கள் நினைத்தாலும் கேட்க வைக்க முடியாது என்பதைத் தெளிவு படுத்துகின்றான்.
அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.  நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (35:13-14)
மேற்கண்ட வசனத்தில் இறைவன் நேரடியாக உயிரோடு உள்ள  ஒருவரை அழைப்பதைப் பற்றி பேசவில்லை. ஏனென்றால் நாம் நேரடியாக ஒருவரை அழைத்தோம் என்றால் அவர் நம்முடைய அழைப்பை செவியேற்பார். இங்கு இறைவன் செவியேற்க மாட்டார்கள் என்றும், பதிலளிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிடுகிறான். அப்படியென்றால் இது இறந்தவர் களையும், சிலைகளையும், மறைவாக உள்ளவர்களையும்  பிரார்த்தனை செய்வதைப் பற்றித் தான் கூறுகிறது என்பதை அறிவுடைய ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும்.
இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பது தான் திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் போதிக்கின்ற, நம்முடைய அறிவும் ஒத்துக் கொள்கின்ற பொதுவான விதியாகும். ஆனால் சில விதி விலக்குகளும் உள்ளன.
இவ்வுலகில் உள்ள அனைவரும் ஒரே ஆண் பெண்ணிலிருந்தே பிறந்தார்கள் என்பது பொதுவான விதியாகும். ஆனால் ஆதம் நபியவர்களுக்கும், ஹவ்வா (அலை) அவர்களுக்கும், தாயும், தகப்பனும் இல்லை.
அதே போன்று ஈஸா (அலை) அவர்களுக்குத் தந்தை இல்லை. எனவே ஒருவன் ஆதம் நபிக்கு தந்தையில்லை. எனவே உலகில் எந்த மனிதருக்கும் தந்தையிருக்க முடியாது என்று சட்டம் எடுத்தால் அவனை நாம் பைத்தியக் காரன், கிறுக்கன் என்று தான் கூறுவோம்.
இது போன்று தான் இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பது பொதுவான விதியாகும். அதே நேரத்தில் "மக்கள் மய்யித்தை அடக்கம் செய்து விட்டு திரும்பிச் செல்லும் போது செருப்போசையைக் கேட்கிறது'' (முஸ்லிம் 5116) என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் எப்போதும் கேட்கிறது என்று நாம் விளங்கிக் கொள்ளலாகாது.
அப்படி நாம் விளங்கக் கூடாது என்பதற்காகத் தான் நபியவர்கள் "திரும்பிச் செல்லும் போது செருப்போசையைக் கேட்கிறது'' என்று கூறுகிறார்கள். திரும்பிச் செல்லும் போது என்ற வார்த்தை எப்போதும் கேட்காது, திரும்பிச் செல்லும் போது மட்டும் தான் கேட்கும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
எனவே இதிலிருந்து இறந்தவர்கள் எப்போதும் கேட்கிறார்கள் என்று கூறுபவர்கள் பல்வேறு திருமறை வசனங்களையும், ஹதீஸ்களையும் மறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள். இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுபவர்கள் வசதியாக ஒன்றை மறைத்து விடுவார்கள்.
மக்கள் திரும்பிச் சென்றவுடன் மலக்குமார்கள் இறந்தவரிடம் வந்து விசாரணை செய்கிறார்கள். அவர் மலக்குகளின் கேள்விகளுக்கு பதில் கூறி விட்டால் மலக்குகள் அவரை நோக்கி "அல்லாஹ் அவரை அவருடைய படுக்கையிலிருந்து எழுப்புகின்ற வரை நெருக்கமான வர்களைத் தவிர வேறு யாரும் எழுப்ப முடியாதே அப்படிப்பட்ட புது மாப்பிள்ளை போன்று தூங்கு என்று கூறி விடுவார்கள். தீயவராக இருந்தால் அவருக்கு கியாமத் நாள் வரை வேதனை செய்யப்படும் என்பதையும் நாம் ஹதீஸ்களில் காண்கிறோம். (திர்மிதி 991)
இறந்தவர்களை இறைவன் கியாமத் நாளில் தான் எழுப்புவான். எனவே இறந்துவிட்ட நல்லடியார்கள் கியாமத் நாள் வரை நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள்  எதையும் அறிய மாட்டார்கள் என்பதைத் தான் நாம் இந்த ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
மேலும் பத்ருப் போரில் இறந்த காஃபிர்களை நோக்கி நபியவர்கள் பேசியதாக வரக் கூடிய செய்தியும் இறந்தவர்கள் எப்போதும் கேட்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள முடியாததாகும். நபியவர்கள் கூறிய பதிலிலிருந்தே இதனை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
நபியவர்கள் கிணற்றில் போடப்பட்ட காஃபிர்களை நோக்கி பேசும் போது உமர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே உயிரில்லாத உடல்களிடம் என்ன பேசுகிறீர்கள்?'' என்று கேட்கிறார்கள். அதற்கு நபியவர்கள் பதிலளிக்கும் போது "நான் அவர்களிடம் கூறுவதை இப்போது அவர்கள் கேட்கிறார்கள்'' (நஸயீ 2049) என்று கூறுகிறார்கள்.
இறந்தவர்கள் எப்போதும் கேட்பார்கள் என்றிருக்குமானால் நபியவர்கள் இறந்தவர்கள் கேட்கிறார்கள் என்று பொதுவாகக் கூறியிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு கூறவில்லை. "இப்போது கேட்கிறார்கள்'' என்று தான் கூறுகிறார்கள்.
எனவே அந்த நேரம் தவிர எப்போதும், வேறு யாரும் அவ்வாறு கேட்க மாட்டார்கள் என்பதைத் தான் நாம் விளங்கிக் கொள்ள முடியும். எனவே இது பத்ருப் போரில் கொல்லப்பட்ட காஃபிர்களுக்கு மட்டும் தான் உரியதே தவிர அனைத்து இறந்தவர்களுக்கும் உரியது கிடையாது.
மேலும் இந்த ஹதீஸில் ஒரு பகுதியை இவர்கள் வசதியாக மறைத்து விடுகிறார்கள். இந்த ஹதீஸின் மூலம் இறந்தவர்கள் எப்போதும் கேட்கிறார்கள் என்ற இல்லாத கருத்தை விளங்கிக் கொள்ளக் கூடிய இவர்கள் நபியவர்கள் இதனைத் தொடர்ந்து "அவர்கள் கேட்டாலும் பதிலளிக்க சக்தி பெற மாட்டார்கள்'' (முஸ்லிம் 5121) என்று கூறுகின்ற வாசகத்தை மறைத்து விடுகின்றார்கள்.
ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸிலிருந்து இறந்தவர்கள் எப்போதும் கேட்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் "அவர்கள் பதிலளிக்க சக்தி பெற மாட்டார்கள்'' என்றும் வருகிறது. ஆனால் நபியவர்களின் இந்தக் கூற்றுக்கு மாற்றமாக இவர்கள் இறந்தவர்கள் பதிலளிப்பார்கள் என்றும் நம்பிக்கை வைத்துள்ளனர். இது மாபெரும் இணை வைப்புக் காரியமாகும்.
இவை தவிர "அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்தனை செய்யக் கூடாது'' என்று கூறும் நூற்றுக் கணக்கான வசனங்கள் உள்ளன.
(பார்க்க திருக்குர்ஆன் 2:186, 3:38, 7:29, 7:55, 7:56, 7:180, 7:194, 7:197, 10:12, 10:106, 13:14, 14:39, 14:40, 16:20, 17:56, 17:110, 19:4, 21:90, 22:12, 22:13, 22:62, 22:73, 23:117, 27:62, 31:30, 35:13, 35:14, 35:40, 39:38, 40:12, 40:20, 40:60, 40:66, 46:4, 46:5)
அவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites