ஆதம் நபியைப் படைத்த பின் அவர்களுக்கு உயிர் கொடுத்த போது அவர்கள் அர்ஷின் நிலைப்படியைப் பார்த்தார்கள்; "லாயிலாஹ இல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்று எழுதப்பட்டிருந்தது. இது பற்றி அல்லாஹ்விடம் கேட்ட போது, "இவரை படைக்கவில்லையானால் இவ்வுலகைப் படைத்திருக்க மாட்டேன்'' என்று பதிலளித்ததாக ஹதீஸில் உள்ளது என ஒரு ஆலிம் கூறுகிறார். இது உண்மையா?
சிக்கந்தர்
இரமநாதபுரம்
இந்தக் கருத்தில் ஹாகிமில் ஒரு செய்தி இடம் பெற்றிருக்கிறது. இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்கள் இது ஆதாரப்பூர்வமான செய்தி என்று இச்செய்தியின் இறுதியில் குறிப்பிடுகிறார். ஆனால் இதில் அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்ற மிகவும் பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.
இமாம் ஹாகிமின் கருத்தை அடிப்படையாக வைத்துத் தான் பலர் இந்தச் செய்தியைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் இமாம் ஹாகிமின் கருத்து தவறாகும். அவர்கள் இந்தச் செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஏனெனில் இமாம் ஹாகிம் அவர்கள் தனது மற்றொரு நூலான அல்மத்கல் இலஸ்ஸஹீஹ் என்ற நூலில் அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் தன் தந்தை வழியாக இட்டுக் கட்டப்பட்ட செய்தியை அறிவிப்பவர் என்று கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். (பாகம்: 1, பக்கம்; 154)
இமாம் ஹாகிமைப் போன்று மற்ற ஹதீஸ் கலை அறிஞர்களும் இவரைப் பலவீனமானவர் என்றே குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இந்த செய்தி முற்றிலும் பலவீனமான செய்தியாகும். ஆதாரத்திற்கு ஏற்றது கிடையாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக