இஸ்லாத்தில் மொழி, நிறம் போன்றவற்றிற்கு எந்த மகத்துவமும் இல்லை. ஆனால் குர்ஆனை அரபியில் ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை என்கிறார்கள். மற்றபடி அவரவர் தாய்மொழியில் ஓதினால் நன்மைகள் இல்லை என்கிறார்கள். இது குறித்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும்.
சாதிக்கா முஹம்மது, முரார்பாத்
அல்லாஹ்வுடைய எழுத்தில் ஒரு எழுத்தை ஓதினாலும் அதனால் அவருக்கு ஒரு நன்மை இருக்கின்றது. ஒரு நன்மை என்பது அதைப் போல் பத்து மடங்காகும். அலிஃப், லாம், மீம் என்பதை ஒரே எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்து; லாம் என்பது ஒரு எழுத்து; மீம் என்பது ஒரு எழுத்து என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதீ 2835
இந்த ஹதீஸின்படி குர்ஆனை அதன் மூல மொழியான அரபு மொழியில் ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம் நமது தாய்மொழியில் குர்ஆனின் பொருளை உணர்ந்து படிப்பதற்கு நன்மையே இல்லை என்று எண்ணி விடக் கூடாது.
இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:17)
இதுபோன்று குர்ஆனைப் பற்றி சிந்தித்து படிப்பினை பெறுமாறு வலியுறுத்தும் வசனங்கள் திருக்குர்ஆனில் உள்ளன. அவை அனைத்துமே திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.
அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து தொழுகையை நிலை நாட்டி நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோர் நஷ்டமில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்க்கின்றனர். (அல்குர்ஆன் 35:29)
அல்லாஹ்வின் வேதத்தைப் படிப்போர் நஷ்டமில்லாத வியாபாரத்தைச் செய்வதாக இந்த வசனம் கூறுகின்றது.
செயல்கள் அனைத்தும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (நூல்: புகாரி)
எனவே அல்லாஹ்வின் வேதத்தைப் படிக்கின்றோம் என்ற எண்ணத்துடன் திருக்குர்ஆனை நமது தாய்மொழியில் படித்தாலும் அதற்கு நிச்சயம் நன்மை உண்டு.
ஆனால் அரபு மொழியில் படித்தால் எழுத்துக்குப் பத்து நன்மை என்பதை நபி (ஸல்) அவர்கள் வரையறுத்துக் கூறியுள்ளார்கள். மற்ற மொழிகளில் படிப்பதற்கு இதுபோன்று குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை.
பொதுவாக எந்த ஒரு நூலாக இருந்தாலும் அது இயற்றப்பட்ட மூல மொழிக்கு ஒரு முக்கியத்துவம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. எத்தனை மொழியில் மொழி பெயர்க்கப்பட்டாலும் அந்த நூலின் தனித்தன்மை மாறாமல் இருப்பது மூல மொழியில் மட்டும் தான். சாதாரண நூற்களுக்கே இந்த நிலை இருக்கும் போது திருக்குர்ஆனுக்கு இத்தகைய முக்கியத்துவத்தை அளிப்பதற்கு அதிகமான முகாந்திரம் உள்ளது.
ஏனெனில் திருக்குர்ஆன் என்பது சாதாரண மனித வார்த்தைகள் அல்ல. அவை அல்லாஹ்வின் வார்த்தைகள். அல்லாஹ்வின் வார்த்தைகளை அப்படியே நாம் ஓதுவதற்கென்று சிறப்பு நன்மைகள் இருப்பதை அரபு மொழிக்கு உள்ள சிறப்பு என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. அரபு மொழியில் எதைப் படித்தாலும் நன்மை என்று இஸ்லாம் கூறவில்லை. திருக்குர்ஆனைப் படிப்பதற்கு மட்டுமே நன்மை என்று கூறுவதால் இது திருக்குர்ஆனுக்குரிய சிறப்பு தானே தவிர அரபு மொழிக்குரிய சிறப்பு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, குல் அவூது பிரப்பின்னாஸ் என்ற திருக்குர்ஆன் வசனத்தை ஓதுவதற்குப் பதிலாக குல் அஸ்தயீது பிரப்பின்னாஸ் என்று கூறுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். இரண்டும் அரபு மொழி தான், இரண்டும் ஒரே பொருளைத் தரக் கூடிய வாசகம் தான். அரபு மொழிக்கு சிறப்பு இருப்பதாக இருந்தால் எப்படிக் கூறினாலும் இந்த நன்மை கிடைக்க வேண்டும். ஆனால், குல் அவூது பிரப்பின்னாஸ் என்பதற்குத் தான் குர்ஆன் ஓதிய நன்மை கிடைக்குமே தவிர, குல் அஸ்தயீது பிரப்பின்னாஸ் என்று கூறுவதற்கு அந்த நன்மை கிடைக்காது. எனவே குர்ஆன் ஓதுவதற்கு உள்ள சிறப்பு அரபு மொழிக்கு உள்ள சிறப்பு அல்ல! அது இறைவனின் வார்த்தைகளை, வஹீயை அப்படியே கூறுவதற்கான சிறப்பு என்பதை விளங்கலாம்.
"நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர், "யா அல்லாஹ்! நான் எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன்' என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகி விடுகின்றாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது "நீ அனுப்பிய உனது நபியையும் நம்பினேன்' என்று சொல்வதற்குப் பதிலாக "உனது ரசூலையும் நம்பினேன்' என்று கூறி விட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், "இல்லை. நீ அனுப்பிய உனது நபியை நம்பினேன் என்று கூறுவீராக'' என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : பராஃ இப்னு ஆஸிப் (ர-), நூல் : புகாரி 247
இந்த ஹதீஸில், நபிய்யிக்க என்பதற்குப் பதிலாக ரசூலிக்க என்று நபித்தோழர் கூறி விட்டார். இரண்டும் ஒரே பொருளைத் தரக் கூடிய சொல்லாக இருந்தாலும், நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்ததற்கு மாற்றமாகச் சொல்வதை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. இதிலிருந்து மொழிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, யாருடைய வார்த்தைகள் என்பது தான் நன்மையைத் தீர்மானிக்கின்றன என்பதை அறியலாம்.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (அல்குர்ஆன் 49:13)
இஸ்லாத்தில் மொழி, இனம், குலம், நிறம் ஆகியவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதற்கு இவ்வசனமே போதுமான சான்றாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக