திருக்குர்ஆனின் 64:16 வசனத்தில் உங்களால் இயன்றவரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றான். சிறு சிறு பாவங்கள் செய்பவர்கள் இதை ஆதாரமாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வே இயன்ற வரை தான் இறையச்சத்துடன் நடக்க வேண்டும் என்று கூறுகின்றான் என்று கூறலாம் அல்லவா? இதற்கு விளக்கம் என்ன?
நாஸர் இப்னு இப்ராஹீம், கோவை
உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்! (நல்வழியில்) செலவிடுங்கள்! அது உங்களுக்குச் சிறந்தது. தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோர் தான் வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 64:16)
இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்பதற்கு இயலாவிட்டால் பாவங்கள் செய்யலாம் என்று பொருளல்ல. பாவங்கள் செய்வதற்கு இயலாமையைக் காரணம் காட்ட முடியாது. என்னால் மது அருந்தாமல் இருக்க முடியவில்லை; அதனால் நான் மது அருந்தி விட்டேன் என்று யாரும் கூற முடியாது. நமக்குக் கட்டளையிடப்பட்ட வணக்கங்களைச் செய்வதற்குத் தான் இதைப் பொருத்திப் பார்க்க முடியும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ் இதற்கு விளக்கமாக அமைந்துள்ளது.
நான் எதை உங்களுக்கு விட்டு விட்டேனோ அதை நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் கேள்வி கேட்டதும், அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7288, முஸ்லிம் 4348
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், தடை செய்து விட்டால் விலகிக் கொள்ளுங்கள், செய்யுமாறு கட்டளையிட்டால் இயன்ற வரை கட்டுப்படுங்கள் என்று கூறுகின்றார்கள். எனவே தடை செய்யப்பட்ட காரியங்களைச் செய்வதில், அதாவது பாவம் செய்வதில் இயன்ற வரை தவிர்ந்து கொள்ளலாம், இயலாவிட்டால் பாவம் செய்யலாம் என்று கூறுவதற்கு இதை ஆதாரமாகக் காட்ட முடியாது.
கட்டளையிடப்பட்ட செயல்களைச் செய்யும் போது, தவிர்க்க முடியாத சில காரணங்களால் அதில் குறைபாடு ஏற்படலாம். அல்லது சலுகையைப் பயன்படுத்தும் நிலை ஏற்படலாம். இதுபோன்ற கட்டங்களில் இயன்ற வரை அதை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என்பதைத் தான் இந்த வசனம் சுட்டிக் காட்டுகின்றது. இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்று கூறி விட்டு அதன் தொடர்ச்சியாக தர்மத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இதையும் சேர்த்துப் பார்த்தால் நன்மையான காரியங்களைச் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய செய்தியாகத் தான் இந்தக் கட்டளையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளங்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக