சாதாரண மனிதர்களின் உயிர் கைப்பற்றப்படுவது போல் நபிமார்களின் உயிர் கைப்பற்றப்படுவதில்லை. மலக்குல் மவ்த் வந்து, உங்களுக்கு மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா என்று கேட்டு அவர்களின் சம்மதத்தின் பேரில் தான் கைப்பற்றுவார்கள் என்று ஒரு மவ்லவி ஜும்ஆவில் கூறினார். இதற்கு ஆதாரம் உள்ளதா?
எஸ்.எம். செய்யது முஹம்மது, சென்னை
இது ஆதாரப்பூர்வமான செய்தி தான். புகாரியில் இந்தக் கருத்தைத் தாங்கிய ஹதீஸ் உள்ளது. எனினும் நபிமார்களின் சம்மதம் கேட்டு உயிரைக் கைப்பற்றுவதாக இல்லை.
"(இறுதியாக) நோயுற்று விடுகின்ற எந்த ஓர் இறைத்தூதருக்கும் உலகவாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்ததில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன். நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் கைப்பற்றப்பட்டார்களோ அந்த நோயின் போது அவர்களின் குரல் கடுமையாகக் கம்மிப் போய்விட்டது. அப்போது அவர்கள், "அல்லாஹ் யார் மீது தன் அருட்கொடைகளைப் பொழிந்தானோ அந்த இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், உத்தமர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)'' என்று சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்களுக்கும் (அந்த இறுதி) வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 4586
இந்த ஹதீஸில் "நோயுற்று விட்ட இறைத்தூதருக்கு உலகம், மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்து, மரணிக்கும் தருவாயில் வாழ்நாளை நீட்டிக்கும் வாய்ப்பை அல்லாஹ் வழங்குகின்றான் என்பதை அறிய முடியும்.
நபிமார்கள் சம்மதித்தால் தான் உயிர் கைப்பற்றப்படும் என்ற கருத்தில் இது கூறப்படவில்லை. மாறாக நபிமார்களின் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அவர்கள் விரும்பினால் மேலும் சிலகாலம் உலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அல்லது மறுமையைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற ஒரு வாய்ப்பை அல்லாஹ் வழங்குகின்றான். இதைத் தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக