அகீகா கொடுப்பது சுன்னத்தா? கொடுக்காவிட்டால் தண்டனை கிடைக்குமா? ஏழாவது நாள் கொடுக்காவிட்டால் மற்ற நாட்களில் கொடுக்கலாமா? குழந்தை பிறந்த ஊரில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா? ஏழாவது நாள் குழந்தையின் தலை மிகவும் மிருதுவாக இருக்கும் நிலையில் மொட்டை அடிப்பது சாத்தியமா?
"ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவிற்கு அடைமானமாக இருக்கிறது. தனது ஏழாவது நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்பட்டு, அந்தக் குழந்தையின் தலை முடி இறக்கப்பட்டு, பெயர் வைக்கப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸம்ரத் பின் ஜுன்துப் (ரலி)
நூல்: நஸயீ 4149
இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தை பிறந்த ஏழாவது நாளில் ஆடு அறுத்துப் பலியிட வேண்டும். அதே நாளில் குழந்தைக்குப் பெயரிட்டு, தலை முடியைக் களைய வேண்டும்.
அகீகா தொடர்பாக வரக் கூடிய செய்திகளில் ஏழாவது நாள் கொடுக்க வேண்டும் என்று இடம் பெறும் செய்தி மட்டுமே ஆதாரப்பூர்வமாக உள்ளது. 14ம் நாள், 21ம் நாள் ஆகிய நாட்களில் அகீகா கொடுக்கலாம் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பலவீனமானவையாக உள்ளன. எனவே குழந்தை பிறந்த ஏழாவது நாள் அகீகா கொடுப்பது தான் சுன்னத்தாகும். மற்ற நாட்களில் கொடுப்பதற்கு ஆதாரம் இல்லை.
குழந்தை பிறந்த ஊரில் தான் அகீகா கொடுக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை. மேலும் அகீகா கட்டாயக் கடமை, கொடுக்க விட்டால் தண்டனை என்று ஹதீஸ்களில் கூறப்படவில்லை என்றாலும் நபி (ஸல்) அவர்கள் ஒரு செயலை கற்றுத் தந்தால் அதை இயன்ற வரை நாம் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
சக்தி இல்லாவிட்டால் கடன் வாங்கியாவது அதை நிறைவேற்றித் தான் ஆக வேண்டும் என்று எந்த வணக்கத்தையும் மார்க்கம் கட்டளையிடவில்லை.
"ஒன்றைச் செய்ய வேண்டாமென நான் உங்களுக்குத் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு நான் உங்களுக்குக் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தி புகாரியில் 7288வது ஹதீஸாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
"எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்'' (அல்குர்ஆன் 2:286) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
எனவே அகீகாவை நிறைவேற்றுவதற்குத் தேவையான பொருள் வசதி இல்லாவிட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் நிறைவேற்ற இயலாவிட்டாலோ குற்றமில்லை.
ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு மெல்லியதாக இருக்கும் என்பது இந்தக் காலத்தில் மட்டுமல்ல! நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு அவ்வாறு தான் இருந்திருக்கும். எனவே நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றை நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் செய்யுமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் இந்த ஹதீஸை நமது சகோதரர்கள் நடைமுறைப் படுத்தியே வருகின்றார்கள். இதனால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
எனினும் தங்களின் குழந்தைக்கு அவ்வாறு ஏற்படும் என்று நீங்கள் கருதினால் அல்லது இந்தக் கட்டத்தில் முடியை மழிக்க வேண்டாம் என்று மருத்துவர் ஆலோசனை வழங்கினால் மேற்கண்ட புகாரி 7288வது ஹதீஸ் மற்றும் திருக்குர்ஆன் 2:286 வசனத்தின் அடிப்படையில் இந்த சுன்னத்தை நிறைவேற்றாமல் இருப்பது குற்றமில்லை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக