சுலைமான் நபி காலத்தில் இருந்தவர்கள் சூனியம் என்ற கலையின் மூலம் அதிகப்பட்சமாக கணவன் மனைவி உறவைக் கெடுத்துள்ளார்கள். எனினும் அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் இதையும் அவர்களால் செய்ய முடியாது என்று அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.
ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். "நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே மறுத்து விடாதே!'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. அவர்களுக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். "இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை' என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?
அல்குர்ஆன் 2:102
இன்று சூனியக் கலையை அறிந்தவர்கள் என்று சொல்பவர்கள் அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகள் தான். இவர்களை நம்பி ஏமாந்தவர்கள் தான் அதிகம். மேலும் சூனியம் செய்தல் என்பது மாபெரும் பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், " அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான இறைநம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்:புகாரி 2766
0 கருத்துகள்:
கருத்துரையிடுக