ஷைத்தானால் பைத்தியம் பிடிக்காது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் 2:275 வசனம் இதற்கு மாற்றமாக உள்ளதே! மேலும் ஷைத்தானிடருந்து பைத்தியம் பிடிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் உள்ளது. மேலும் மனிதனைப் பைத்தியமாக்குவதால் ஷைத்தானுக்குப் பெரிய லாபமும் உண்டு. இதன் மூலம் மனிதன் எந்த நற்செயலையும் செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது. எனவே மனிதனை ஷைத்தான் பைத்தியமாக்குகின்றான் என்று விளங்கலாம் அல்லவா? விளக்கவும்.
! "அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!'' என்று அவன் கேட்டான். "நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான். "நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று (ஷைத்தான்) கூறினான். (அல்குர்ஆன் 7:14-16)
இந்த வசனங்களில் ஷைத்தானின் பணி என்ன என்பது பற்றி கூறப்படுகின்றது. கியாம நாள் வரை மக்களை வழி கெடுப்பதற்காக இறைவனிடம் ஷைத்தான் அவகாசம் வாங்கியுள்ளான். இதைத் தவிர வேறெந்த அதிகாரமும் ஷைத்தானுக்கு இல்லை. மனிதனைப் பைத்தியமாக்குவதோ, அல்லது அதைக் குணப்படுத்துவதோ அவனது வேலை இல்லை.
மனிதனைப் பைத்தியமாக்கும் அதிகாரம் ஒருவேளை ஷைத்தானுக்கு இருக்கின்றது என்று வைத்துக் கொண்டாலும் அவன் அதைச் செய்ய மாட்டான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப் பட்டு விட்டது.
1. தூங்குபவர் விழிக்கின்ற வரை 2. சிறுவன் பெரியவராகும் வரை 3. பைத்தியக்காரர் பைத்தியத்தி-ருந்து தெளிவாகும் வரை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர-)
நூல்கள் : நஸயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா 2031
இந்த ஹதீஸின் படி பைத்தியமாக இருப்பவர் எந்தத் தீமையைச் செய்தாலும் அவருக்கு பாவம் எழுதப்படாது. எனவே மனிதன் பைத்தியமாக இருப்பது, மனிதனை வழி கெடுப்பதாக சபதமேற்றுள்ள ஷைத்தானுக்கு மிகப் பெரிய இழப்பாகும். எனவே பைத்தியம் பிடிப்பதற்கும், ஷைத்தானுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். (அல்குர்ஆன்2:275)
இந்த வசனத்தில் மறுமையில் பைத்தியமாக எழுவதை ஷைத்தானால் தீண்டப்பட்டவன் என்று கூறப்படுவதைப் பற்றி கேட்டுள்ளீர்கள்.
பேய் விரட்டுவோர், பிசாசுகளை ஓட்டுவோர் என்று தம்மைப் பற்றிக் கூறிக் கொள்வோர் இவ்வசனத்தைக் காட்டியே மக்களை ஏமாற்ற முயல்கின்றனர்.
தீய காரியங்களைப் பற்றிக் கூறும் போது ஷைத்தான் அதை ஏற்படுத்தினான் என்று கூறுவதை குர்ஆன் அனுமதிக்கிறது.
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்). (அல்குர்ஆன் 38:41, 42)
அய்யூப் நபியவர்களுக்கு நோயும் துன்பமும் ஏற்பட்ட போது ஷைத்தான் தீண்டி விட்டான் என்று கூறுகின்றார்கள். இதனால் நோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று கருதக் கூடாது. கெட்ட காரியத்தை அல்லாஹ்வுடன் சேர்க்கக் கூடாது என்று மரியாதை நிமித்தமாகவே அவ்வாறு அய்யூப் (அலை) கூறினார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அது போல் பைத்தியத்தையும் அல்லாஹ் தான் ஏற்படுத்துகின்றான் என்றாலும் அந்தத் தீமை ஷைத்தானுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
ஷைத்தானால் பைத்தியம் பிடிப்பதி-ருந்து நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பு தேடியதாக ஹதீஸ் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நாம் தேடிப் பார்த்த வரை இவ்வாறு ஹதீஸ் எதையும் காண முடியவில்லை. அப்படியே ஹதீஸ் இருந்தாலும் இந்த இடத்தில் பைத்தியம் என்பதற்கு "வழி கெடுத்தல்' என்ற பொருளைத் தான் தர முடியும். இல்லையென்றால் அல்லாஹ்வின் அதிகாரம் ஷைத்தானுக்கு இருப்பதாக ஆகி விடும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக