ஏனெனில் சிறு பிள்ளையின் தலையில் பிளேடு வைக்க முடியுமா ?
? ஒவ்வொரு குழந்தையும் அகீகாவுக்குப் பொறுப்பாக்கப் பட்டுள்ளது. அதன் சார்பில் ஏழாம் நாள் அகீகா கொடுத்து பெயர் சூட்டி, தலைமுடியை மழிக்க வேண்டும் என்று புகாரி முஸ்லிமில் ஹதீஸ் உள்ளது. பிறந்த குழந்தையின் மண்டை ஓடு மிகவும் எளிதாக இருக்கும் நிலையில் இது எப்படி சாத்தியமாகும்?
அகீகாவுடன் தலைமுடி மழிப்பது தொடர்பான செய்தி தாங்கள் குறிப்பிடுவது போல் புகாரி, முஸ்லிமில் இல்லை. முஸ்னத் அஹ்மதில் 19337வது ஹதீஸாக இது பதிவு செய்யப் பட்டுள்ளது.
ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு மெல்லியதாக இருக்கும் என்பது இந்தக் காலத்தில் மட்டுமல்ல! நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு அவ்வாறு தான் இருந்திருக்கும். எனவே நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றை நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் செய்யுமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் இந்த ஹதீஸை நமது சகோதரர்கள் நடைமுறைப் படுத்தியே வருகின்றார்கள். இதனால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
எனினும் தங்களின் குழந்தைக்கு அவ்வாறு ஏற்படும் என்று நீங்கள் கருதினால் அல்லது இந்தக் கட்டத்தில் முடியை மழிக்க வேண்டாம் என்று மருத்துவர் ஆலோசனை வழங்கினால் அதையும் மீறி இந்த ஹதீஸைச் செயல்படுத்தியாக வேண்டும் என்று மார்க்கம் எந்த நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தவில்லை.
"ஒன்றைச் செய்ய வேண்டாமென நான் உங்களுக்குத் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு நான் உங்களுக்குக் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தி புகாரியில் 7288வது ஹதீஸாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. "எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்'' (அல்குர்ஆன் 2:286) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. எனவே குழந்தைக்கு ஏதும் ஆபத்து வந்து விடக்கூடாது என்று பயந்து ஏழாம் நாளில் தலைமுடியை மழிக்காமல் இருந்தால் அது மார்க்க அடிப்படையில் தவறில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக