அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 1 மே, 2010

நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா ? குர்ஆனில் சில வசனங்கள் சூனியத்ûû வலியுறுத்துவதாகத் தெரிகிறதே ?

 ஏவல், பில்-, சூனியம் போன்றவற்றை யாரும் யாருக்கும் செய்ய முடியாது என்று நம்புகின்றோம். அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் கூட இது தவறான வாதம் என்பது புலப்படும். ஆனால் இறைவன் தன் திருமறையில், "முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்'' பாதுகாவல் தேடுமாறு (அல்குர்ஆன் 113:4) கூறுகின்றானே! மேலும் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட போது தான் அல்லாஹ் இந்த 113, 114 அத்தியாயங்களை அருளி சூனியத்தி-ருந்து நிவாரணம் அடையச் செய்தான் என்று அன்வாருல் குர்ஆன் நூ-ல் கூறப்பட்டுள்ளது. எனவே 113:4 வசனத்தை விளக்கி, நபியவர்களுக்கு சூனியம் செய்யப் பட்டதா என்பதையும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும்.

! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதனொருவன் சூனியம் செய்ததாகவும் 113, 114 ஆகிய இரண்டு அத்தியாயங்களும் அருளப்பட்டு அதன் மூலம் சூனியம் விலகியதாகவும் பரவலாக முஸ்-லிம்களால் நம்பப்படுகிறது.  எனவே இது பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு அதன் விளைவு இருந்தது. ஒரு நாள் அவர்கள் (இறைவனிடம்) பிரார்த்தனை செய்தனர். மீண்டும் பிரார்த்தனை செய்தனர். பின்னர் என்னிடம் "நான் விளக்கம் கேட்ட விஷயத்தில் இறைவன் விளக்கம் தந்து விட்டான். என்னிடம் இருவர் வந்து ஒருவர் தலைமாட்டிலும், மற்றொருவர் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். இவருக்கு என்ன நேர்ந்துள்ளது என ஒருவர் கேட்டார். சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று மற்றவர் கூறினார். சூனியம் வைத்தவன் யார் என ஒருவர் கேட்க, லபீத் பின் அஃஸம் என மற்றவர் விடையளித்தார். எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என ஒருவர் கேட்க சீப்பு, உதிர்ந்த தலைமுடி, பேரீச்சை மரத்தின் பாளை ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளது என்று மற்றவர் கூறினார். எந்த இடத்தில் என்று ஒருவர் கேட்க தர்வான் எனும் கிணற்றுக்குள் என்று மற்றவர் கூறினார்'' என்று கூறினார்கள். பின்னர் அங்கே புறப்பட்டுச் சென்று பின்னர் திரும்பி வந்தனர். அங்குள்ள பேரீச்சை மரங்களின் மேற்பகுதி ஷைத்தானின் தலையைப் போல் இருப்பதாகவும் கூறினார்கள். அதை வெளியேற்றி விட்டீர்களா என்று நான் கேட்டேன். "இல்லை; அல்லாஹ் எனக்கு நிவாரணம் தந்து விட்டான். மக்கள் மத்தியில் தீமைகள் பரவுவதை நான் அஞ்சுகிறேன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். பின்னர் கிணறு மூடப்பட்டது என்று ஆயிஷா (ர-லி) அறிவிக்கிறார்கள்.
இது புகாரி 3268-வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சிறு மாற்றங்களுடன் புகாரியின் வேறு சில எண்களைக் கொண்ட ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளது.  (பார்க்க புகாரி 5763, 5765, 5766, 6063, 6391)
தமது மனைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளாமலே உறவு கொண்டதாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது என்று புகாரி 5769 வது ஹதீஸ் கூறுகிறது.  இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்ததாக அஹ்மத் 23211 வது ஹதீஸ் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் இந்த ஹதீஸ்கள் யாவும் ஏற்கத்தக்க அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படுபவை. ஆயினும் இவ்வாறு நடந்திருக்க முடியாது என்று கருதும் அளவுக்கு வேறு பல சான்றுகளும் கிடைக்கின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் எனக் கூறிய போது அதை ஏற்க மறுத்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறியே நிராகரித்தனர். இந்தக் குற்றச்சாட்டை திருக்குர்ஆன் மறுக்கிறது.
சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.  (அல்குர்ஆன் 17:47)
"அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?'' என்றும் "சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.  (அல்குர்ஆன் 25:8)
அநியாயக்காரர்கள் தாம் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறுகின்றனர் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.
நபிமார்கள் பலரும் இவ்வாறு விமர்சிக்கப்பட்டதாக 26:153, 26:185, 17:101 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
நபிமார்களுக்கு குறிப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்க முடியாது என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. அவ்வாறு கூறுபவர்கள் அநியாயக்காரர்கள், நிராகரிப்பவர்கள் எனவும் இவ்வசனங்கள் கூறுகின்றன.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் வைக்கப்பட்டனர் எனக் கூறும் ஹதீஸ்களில் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டதாகத் தான் கூறப்படுகிறது. உடல் பாதிப்பையாவது பொருட்படுத்தாமல் விட்டு விடலாம். மனநிலை பாதிப்பை சாதாரணமாகக் கருத முடியாது.
செய்யாததைச் செய்ததாகக் கூறுவதும், தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் ஈடுபட்டதாக எண்ணுவதும் கடுமையான மனநிலை பாதிப்பைக் காட்டுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாம் என்ன செய்கிறோம் என்பதைக் கூட நினைவில் வைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது உண்மையாக இருந்தால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வேதம், அவர்கள் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகி விடும். குர்ஆனுடைய ஒவ்வொரு வசனத்திலும் இதனால் சந்தேகம் ஏற்பட்டு விடும். "இது ஏன் அந்த ஆறு மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இருக்க முடியாது'' என்ற கேள்வி எழும். ஒவ்வொரு ஹதீஸிலும் இது போன்ற கேள்விகள் எழும்.
ஆனால் இம்மார்க்கத்தை, திருக்குர்ஆனை நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் உறுதி மொழி தருகிறான். (15:9)
இவ்வேதத்தைப் பாதுகாப்பது என்றால் அதைக் கொண்டு வந்தவரின் மனநிலையை முத-லில் பாதுகாத்தாக வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலையே பாதிக்கப்பட்டால் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படாத நிலை ஏற்பட்டு விடும். இதன் காரணமாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்க முடியாது என்று விளங்கலாம்.
மனிதர்களையே அல்லாஹ் தனது தூதர்களாக நியமிக்கிறான். அவர்கள் அனைவரும் மனிதத் தன்மையுடன் தான் அனுப்பப்பட்டனர்.
தங்களைப் போலவே மனிதராக இருப்பவர், தங்களைப் போலவே உண்பவர், குடும்பம் நடத்துபவர் எப்படி இறைவனின் தூதராக இருக்க முடியும் என்ற எண்ணம் தான் தூதர்களை அம்மக்கள் நம்ப மறுத்ததற்குக் காரணமாக இருந்தது.
தங்களைப் போலவே உள்ள ஒரு மனிதரை இறைவனின் தூதர் என்று மக்கள் ஏற்க மறுப்பது இயல்பானது தான் என்பதால் தான் எல்லாத் தூதர்களும் தம்மைத் தூதர்கள் என்று மெய்ப்பிக்க அற்புதங்கள் வழங்கப்பட்டு அனுப்பப்பட்டனர். எந்தத் தூதரும் அற்புதம் வழங்கப்படாமல் அனுப்பப்படவில்லை.  (3:184, 7:101, 9:70, 10:13, 10:74, 35:25, 40:22, 40:50, 57:25, 64:6)
அற்புதங்கள் மூலம் தான் இறைத்தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்க முடியும் என்றிருக்கும் போது இறைத்தூதராக இல்லாதவரும், இறைவனின் எதிரிகளாக இருப்போரும் இறைத்தூதர்கள் செய்வதைப் போன்று அற்புதங்கள் நிகழ்த்தினால் இறைத்தூதர்களின் அற்புதத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். உம்மைப் போலவே உமது எதிரிகளும் செய்கிறார்களே என்று கேட்டு விடுவார்கள். இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு சிந்தித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டிருக்க முடியாது என்று விளங்கலாம்.
ஏதோ ஒரு கிணற்றில் ஏதோ ஒரு பொருளை மறைத்து வைத்தது அல்லாஹ்வின் தூதரின் மனநிலையை மாற்றியது என்றால் இது மிகப் பெரிய அற்புதமே. இத்தகைய அற்புதம் நடந்திருந்தால் இதையே காரணமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மக்கள் நிராகரித்திருப்பார்கள்.
"அல்லாஹ் உங்களைத் தூதராக நியமித்ததை நாங்கள் பார்க்கவில்லை; நீங்கள் செய்து காட்டிய சில அற்புதங்கள் காரணமாகவே உங்களைத் தூதர் என நம்பினோம்; இப்போது உங்களையே புரட்டிப் போடும் அளவுக்கு உங்கள் எதிரிகள் அற்புதம் நிகழ்த்திக் காட்டிவிட்டதால் உங்களை எப்படி இறைத்தூதராக நாங்கள் ஏற்போம்'' என்று கேட்டிருப்பார்கள்.
ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய நிகழ்ச்சியை நடத்திக் காட்டி நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் தடம் புரளச் செய்ய மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்க முடியாது என்று தெரிகிறது.
மேலும் மூஸா நபியவர்கள் தம்மை இறைத்தூதர் எனக் கூறிய போது அதை எதிரிகள் சூனியம் எனக் கூறினார்கள். சூனியக்காரர்களுடன் போட்டிக்கும் ஏற்பாடு செய்தனர்.
போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள் செய்த வித்தையைப் பற்றி அல்லாஹ் கூறும் போது "மகத்தான சூனியத்தைச் செய்து காட்டினர்'' எனக் கூறுகிறான்.(7:116)
அவர்கள் செய்த மகத்தான சூனியத்தினால் செய்ய முடிந்தது என்ன என்பது பற்றியும் திருக்குர்ஆன் கூறுகிறது.
"அவர்கள் தமது கைத்தடிகளையும், கயிறுகளையும் போட்ட போது அவர்களின் சூனியம் காரணமாக அவை சீறுவது போல் அவருக்குத் தோற்றமளித்தது'' என்று 20:66 வசனம் கூறுகிறது.
அவர்கள் செய்தது சூழ்ச்சி தான் என்று 20:69 வசனம் கூறுகிறது.
அவர்கள் மக்களின் கண்களை வயப்படுத்தி பயமுறுத்தினார்கள் என்று 7:116 வசனம் கூறுகிறது.
சூனியத்தின் மூலம் கண்களை ஏமாற்ற முடியுமே தவிர உண்மையில் எதையும் மாற்ற முடியாது என்பது இவ்வசனங்களின் மூலம் தெரிகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்மையாகவே மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக மேற்கண்ட ஹதீஸ்கள் கூறுவது இதற்கு முரணாக அமைந்துள்ளது.
மேலும் நபிமார்கள் அற்புதங்கள் கொண்டு வந்த போது எதிரிகள் அதை சூனியம் என்று கூறினார்கள்.
(பார்க்க திருக்குர்ஆன் 5:110, 6:7, 10:2, 10:76, 15:15, 21:3, 10:77, 27:13, 28:36, 34:43, 37:15, 40:30, 46:7, 54:2, 74:24, 61:6)
நபிமார்கள் கொண்டு வந்த அற்புதங்களை சூனியம் என்று கூறி அவர்கள் மறுத்ததாக மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. சூனியம் என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் தந்திர வித்தை என்று அவர்களே விளங்கியிருந்ததால் தான் இவ்வாறு கூறி அற்புதங்களை நிராகரித்தனர். உண்மையாகவே நடக்கும் அற்புதம் வேறு. சூனியம் என்னும் ஏமாற்று வித்தை வேறு என்று அவர்கள் விளங்கி வைத்திருந்தனர்.
இதிலி-ருந்து சூனியத்தால் உடலுக்கோ மனநிலைக்கோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பது தெரிகிறது. மேற்கண்ட ஹதீஸ்கள் இதற்கும் முரணாக அமைந்துள்ளன.
இந்த நிலையில் என்ன செய்வது?
குர்ஆனைப் போலவே ஹதீஸ்களும் மார்க்கத்தின் மூல ஆதாரம் என்பதில் ஐயமில்லை. ஆயினும் மிகச் சில ஹதீஸ்கள் குர்ஆனுடன் எந்த வகையிலும் இணைக்க முடியாத நிலையில் உள்ளன. ஏற்கத்தக்கவை என முடிவு செய்யப்பட்ட ஹதீஸ்களில் இத்தகைய ஹதீஸ்கள் சுமார் 50க்கும் குறைவாக உள்ளன.
இவற்றை அப்படியே ஏற்பதால் குர்ஆனின் பல வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காக இத்தகைய ஹதீஸ்களை நாம் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும். திருக்குர்ஆன் மறுக்கப்பட்டாலும் இத்தகைய ஹதீஸ்களை அப்படியே ஏற்பேன் என்று கூற முடியாது.
உதாரணத்திற்காக ஒரு ஹதீஸை நாம் சுட்டிக் காட்டலாம்.
ஒரு குழந்தை அன்னியப் பெண்ணிடம் பால் அருந்தினால் பத்து தடவை அருந்தினால் தான் தாய் என்ற உறவு ஏற்படும் என்று குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் ஐந்து தடவை என்று மாற்றப்பட்டது. அது குர்ஆனில் ஓதப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) மரணித்தார்கள் என்று ஆயிஷா (ரலி-) அறிவிக்கிறார்கள்.   (முஸ்லி-ம் 2634, 2635)
நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை மேற்கண்ட வசனம் குர்ஆனில் இருந்தது உண்மை என்றால் அது இன்றளவும் இருக்க வேண்டும். ஆனால் ஆயிஷா (ர-) கூறும் அந்த வசனம் குர்ஆனில் இல்லை.
மேற்கண்ட ஹதீஸை ஏற்றுக் கொண்டால் நபிகள் நாயகத்துக்குப் பின் குர்ஆனில் சில வசனங்கள் நீக்கப்பட்டன என்ற கருத்து வரும். இறைவனோ குர்ஆனை நாம் பாதுகாப்போம் என்கிறான். இதற்கு மாற்றமாக இருப்பதால் இந்த ஹதீஸை நாம் ஏற்காது விட்டு விட வேண்டும். இதை ஏற்று குர்ஆனை நிராகரிக்கும் நிலைக்கு வந்து விடக் கூடாது.
ஸாலி-ம் எனும் இளைஞர் அபூஹுதைபா (ர-லி) வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தமது மனைவியுடன் ஸா-லிம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபூஹுதைபாவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. இது பற்றி அபூஹுதைபாவின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது “ஸாலி-முக்குப் பாலூட்டு! இதனால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும்''என்று கூறியதாக முஸ்லி-ம் 2638, 2636, 2639, 2640 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.
அன்னிய இளைஞர் ஒருவருக்குப் பால் கொடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) நிச்சயம் கட்டளையிட்டிருக்க மாட்டார்கள். பால் ஊட்டுதல் என்பது இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தான் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியை ஏற்காது நாம் விட்டு வருகிறோம். நம்மால் கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை இந்த அறிவிப்பில் இருக்கலாம். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்கிறோம்.
இது போன்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸையும் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும்.
மேலும் ஆயிஷா (ர-லி) அறிவிக்கும் அந்தச் சம்பவத்தில் பலவிதமான முரண்பாடுகளும் உள்ளன. அது இந்தக் கருத்தை மேலும் அதிகப்படுத்துகின்றது.
சூனியம் வைக்கப்பட்ட பொருளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறப்படுத்தாமல் கிணற்றை மூடினார்கள் என்று புகாரி 5763, 3268, 5766 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.
ஆனால் அப்பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) வெளியே எடுத்து அப்புறப்படுத்தியதாக புகாரி 5765வது ஹதீஸ் கூறுகிறது.
ஆட்களை அனுப்பி அப்பொருட்களை வெளியே எடுத்ததாக நஸயீ 4012-வது ஹதீஸ் கூறுகிறது.
இரண்டு வானவர்கள் வந்து தமக்குள் பேசிக் கொண்டதாக புகாரியில் இடம் பெறும் ஹதீஸ்கள் கூறுகின்றன. ஆனால் ஜிப்ரீல் (அலை) நபிகள் நாயகத்திடம் வந்து சூனியம் வைக்கப்பட்ட விபரத்தைத் தெரிவித்ததாக நஸயீ 4012, அஹ்மத் 4701 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.
இதன் காரணமாகவும் இந்தச் செய்தியில் ஏற்படும் சந்தேகம் அதிகரிக்கின்றது.
113, 114 ஆகிய இரு அத்தியாயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தை அகற்றுவதற்காக அருளப்பட்டது என்று பல விரிவுரை நூல்களில் எழுதப்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக ஏற்கத்தக்க எந்த ஹதீஸையும் அவர்கள் எடுத்துக் காட்டவில்லை. இவ்விரு அத்தியாயங்களும் மக்காவில் அருளப்பட்டதா? மதீனாவில் அருளப்பட்டதா? என்பதிலேயே கருத்து வேறுபாடு உள்ளது என்பது தான் உண்மையாகும்.
எனவே இவ்விரு அத்தியாயங்களுக்கும், சூனியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுவதாகக் கூறப்படுவதைத் தான் சிலர் சான்றாகக் காட்டுகின்றனர். இது சூனியம் செய்யும் பெண்களையே குறிக்கிறது என்று இவர்கள் கூறுகின்றனர்.
இவர்களின் வாதப்படி நபிகள் நாயகத்துக்கு லபீத் என்ற ஆண் தான் சூனியம் வைத்தான். எனவே சூனியம் செய்யும் பெண்களுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை.
இவர்கள் வாதப்படி இந்த அத்தியாயத்தில் சூனியம் வைக்கும் பெண்களிடமிருந்து தான் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். ஆண்கள் சூனியம் செய்தால் அதிலி-ருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லை என்ற கருத்து வரும்.
முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பதற்கு சூனியக்காரிகள் என்று அல்லாஹ்வின் தூதர் விளக்கம் கூறவில்லை.
ஹதீஸ்களின் துணையுடன் இதை விளங்கினால் ஷைத்தானைத் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் என்பதை அறியலாம்.
மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது. தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2269, 1142)
முடிச்சு என்றவுடன் நூலி-ல் போடப்படும் முடிச்சு என்று சிலர் நினைத்து விடுகின்றனர். மூஸா நபியவர்கள் தமது நாவில் உள்ள முடிச்சை நீக்குமாறு அல்லாஹ்விடம் கேட்ட போது (20:27) முடிச்சு என்று தான் கூறினார்கள். நாக்கில் முடிச்சு போடப்பட்டுள்ளது என இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.
மேலும் ஊதுதல் என்ற சொல்லும் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது. ஷைத்தானின் ஊதுதலை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (அபூதாவூத் 651)
தீய சக்திகளைக் குறிக்கும் போது பெண்பாலாகக் குறிக்கும் வழக்கம் அரபு மொழியில் உள்ளது. இதன் காரணமாகவே பெண்பாலாக இங்கே குறிப்பிடப்படுகிறது. எனவே இவ்விரு அத்தியாயங்களுக்கும் சூனியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
மேலும் மனிதர்களிடமிருந்து உம்மைக் காப்பாற்றுவேன் என்றும் நபிகள் நாயகத்திற்கு அல்லாஹ் உத்திரவாதம் தருகிறான். (பார்க்க திருக்குர்ஆன்5:67)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மையாக இருந்தால் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டவர்களை அவர்களின் எதிரிகள் தன்னுணர்வு அற்றுப் போகும் அளவுக்கு ஆக்கி விட்டார்கள் எனும் போது நபிகள் நாயகத்தின் ஆன்மீக பலத்தை விட எதிரிகளின் ஆன்மீக பலம் அதிகம் என்ற எண்ணம் ஏற்பட்டு இஸ்லாத்தின் வளர்ச்சியும் தடைப்பட்டிருக்கும். ஆனால் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக அறிவிப்பாளர்களைப் பொருத்த வரை ஆதாரப்பூர்வமான செய்திகள் இருந்தாலும் அதை விட ஆதாரப்பூர்வமான திருக்குர்ஆனின் போதனைகளுக்கு முரணாக இருப்பதால் திருக்குர்ஆனுக்கே முத-லிடம் கொடுக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்து அவர்களை யாரும் முடக்கவில்லை என்பது தான் சரியான கருத்தாகும்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites