அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

இஸ்லாமியத் திருமணம்

மண வாழ்வின் அவசியம்.
மனித வாழ்வில் தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில் திருமணம் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. திருமணத்தை மறுப்பவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவதிலிருந்து மணவாழ்க்கையின் அவசியத்தை உணரலாம்.
"மணவாழ்வு, ஆன்மீகப் பாட்டைக்கு எதிரானது'' என்று சில மதங்கள் கூறுவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, திருமணத்தை அதிகமதிகம் வலியுறுத்துகிறது.
உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் துறவறம் மேற்கொள்ள அனுமதி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்து விட் டனர். "அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி தந்திருந்தால் நாங்கள் ஆண்மை நீக்கம் செய்திருப்போம்'' என்று ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்கள்: புகாரி 5074, முஸ்லிம் 2488
நபித்தோழர்களில் சிலர் "நான் மணமுடிக்க மாட்டேன்' என்றும், வேறு சிலர் "நான் உறங்காமல் தொழுது கொண்டிருப்பேன்' என்றும், மற்றும் சிலர் "நான் விடாமல் நோன்பு நோற்பேன்' என்றும் பேசிக் கொண்டனர். இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த போது, இப்படியெல்லாம் கூறியவர்களின் நிலை என்னவாகும்? என்று கூறிவிட்டு, "நான் நோன்பும் வைக்கிறேன்; அதை விட்டு விடவும் செய்கிறேன். நான் தொழவும் செய்கிறேன்; உறங்கவும் செய்கிறேன். பெண்களை மணமுடிக்கவும் செய்கிறேன். யார் எனது வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவரவல்லர்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5063
மேற்கண்ட நபிமொழியிலிருந்து முஸ்லிம்களுக்கு திருமணம் எவ்வளவு அவசியமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
திருமணத்தின் நோக்கம்
திருமணத்தின்  அவசியம் குறித்து இஸ்லாம் இரண்டு காரணங்களைக் குறிப்பிடுகின்றது.
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:1)
சந்ததிகள் பெற்றெடுப்பது திருமணத்தின் நோக்கங்களில் ஒன்று என இதன் மூலம் அறியலாம்.
"உங்களில் யார் பராமரிப்புச் செலவுக்குச் சக்தி பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் திருமணம் என்பது (பிறன்மனை நோக்குவதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும் கற்பைக் காக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி)
நூல்: புகாரி 1905, 5065, 5066
 தகாத நடத்தையிலிருந்து ஒவ்வொருவரும் தன்னைக் காத்துக் கொள்வது திருமணத்தின் மற்றொரு நோக்கமாகும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
திருமண ஒழுங்குகள்
திருமணத்தை இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குகளையும் இஸ்லாம் கற்றுத் தருகின்றது. இஸ்லாம் கூறும் அந்தத் திருமண முறை மற்றவர்களின் திருமண முறையிலிருந்து வித்தியாசமானதாகவும், புரட்சிகரமானதாகவும், நடைமுறைப்படுத்த எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் அமைந்துள்ளது. அந்த ஒழுங்குகளைப் பேணி நடத்தும் போது தான் அது இஸ்லாமியத் திருமணமாக அமையும். அந்த ஒழுங்குகளைக் காண்போம்.
மணப் பெண் தேர்வு செய்தல்
மணப் பெண்ணைத் தேர்வு செய்யும் போது அவள் ஒழுக்கமுடையவளாகவும், நல்ல குணமுடையவளாகவும், இருக்கிறாளா என்பதையே கவனிக்க வேண்டும். பொருளாதாரத்தையோ, குலப்பெருமையையோ, உடல் அழகையோ பிரதானமாகக் கருதக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.
மணமகனைத் தேர்வு செய்யும் போது பெண்களும் ஆண்களின் நன்னடத்தையையே பிரதானமாகக் கொள்ள வேண்டும்.
"பெண்கள் அவர்களின் செல்வத்திற்காகவும், அவர்களின் அழகுக்காகவும், அவர்களின் பாரம்பரியத்திற்காகவும், அவர்களின் நன்னடத்தைக்காகவும் மணந்து கொள்ளப் படுகின்றனர். நீ நன்னடத்தை உடையவளைத் தேர்வு செய்து வெற்றியடைந்து கொள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5090
  பெண் பார்த்தல்
ஒருவரை ஒருவர் திருமணத்திற்கு முன்பே பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியமாகும். ஒவ்வொருவரும் தமக்குரிய வாழ்க்கை துணை பற்றி பல எதிர்பார்ப்புகளை மனதில் வைத்திருப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளுக்கேற்ற வகையில் தமது வாழ்க்கைத் துணை அமையாததை திருமணத்திற்குப் பிறகு அவர்கள் அரிய நேர்ந்தால் அவர்களின் நல்லுறவு பாதிக்கப்படலாம். அதனால் முன்பே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தான் மணமுடிக்க விருப்பதைக் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அவளைப் பார்த்து விட்டாயா?'' எனக் கேட்டார்கள். அவர் "இல்லை'' என்றார். "நீ சென்று அவளைப் பார்த்துக் கொள்! அவர்களின் கண்களில் ஒரு பிரச்சினை உள்ளது'' என்று  கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2552
அன்ஸாரிப் பெண்களின் கண்கள் மற்றவர்களின் கண்களிலிருந்து வித்தியாசமாக இருப்பதைக் காரணம் காட்டி மனைவியை நிராகரித்து விடக் கூடாது என்பதற்காக முன்னரே மணப் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.
முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மனம் பேசினார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்! ஏனெனில் அவ்வாறு பார்ப்பது உங்கள் இருவருக்குமிடையே அன்பை ஏற்படுத்த ஏற்றதாகும் என்று கூறியதாக முகீரா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.
நூல்கள்: திர்மிதீ 1007, நஸயீ 3183, இப்னுமாஜா 1855
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த வழிகாட்டுதலை தமிழக முஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கின்றனர். திருமணத்துக்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது பாவச் செயல் எனவும் கருதுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும்.
பெண் பார்க்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் மணமகனின் தாயும், சகோதரிகளும் தான் பெண் பார்க்கின்றனர். இணைந்து வாழ வேண்டிய இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் உரிமையை இதன் மூலம் மறுக்கின்றனர்.
பெண் பார்ப்பதை வலியுறுத்தி இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.
பெண்ணின் சம்மதம்
பெண்ணின் சம்மதம் பெறாமல் திருமணம் செய்விக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. அவர்களின் சம்மதம் பெறுவதும் மிகவும் அவசியமாகும்.
கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6971, 6964, 5137
 என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.
அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)
நூல்: புகாரி 5139, 6945, 6969
பெண்ணின் பொறுப்பாளர்
மணப் பெண்ணின் சம்மதம் அவசியம் என்றாலும் ஒரு பெண் தானாக தன் திருமணத்தை நடத்திக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மாறாக அவளது பூரண சம்மதத்துடன் அவளது பொறுப்பாளர் தான் நடத்தி வைக்க வேண்டும். மணமகன் சார்பில் இத்தகைய பொறுப்பாளர் எவரும் தேவையில்லை.
பொறுப்புள்ள நபரின் முன்னிலையில் திருமணம் நடக்கும் போது பெண்களை வஞ்சகமாக ஏமாற்றும் ஆண்களிடமிருந்து பெண்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கிறது. பெண்களுக்குச் சேர வேண்டிய மஹர் தொகை போன்றவற்றைப் பெற்றுத் தருவதற்கும் பெண்கள் சார்பில் "வலி' என்னும் பொறுப்பாளர் அவசியமாகும்.
"இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களை மணக்காதீர்கள்'' என்று 2:221 வசனத்தில் ஆண்களுக்குக் கட்டளையிடும் இறைவன் "இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்'' என்று அதே வசனத்தில் கூறுகிறான்.
ஆண்கள் தாமாகவே திருமணம் செய்யலாம் என்பதையும், பெண்களுக்கு அவர்களின் பொறுப்பாளர்கள், பொறுப்பாளர்கள் இல்லாவிட்டால் சமுதாயத் தலைவர்கள் முன்னின்று திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
"அவர்களின் குடும்பத்தார் அனுமதியுடன் அவர்களை மணந்து கொள்ளுங்கள்''
(திருக்குர்ஆன் 4:25)
இந்த வசனமும் ஒரு பெண் தானாக மணமுடித்துக் கொள்வதைத் தடை செய்கிறது.
"பொறுப்பாளர் இன்றி திருமணம் கிடையாது.'' என்று  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்கள்: திர்மிதீ 1020, அபூதாவூத் 1785
கட்டாயக் கல்யாணம்
முஸ்லிம் பெண் ஒரு முஸ்லிமான ஆணை மணமுடிக்க விரும்பினால் அவளது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது பெற்றோரின் கடமையாகும். பணம், பதவி, குலம், அந்தஸ்து போன்ற எந்தக் காரணத்தையும் கூறி பெண்களின் விருப்பத்தை நிராகரிப்பது மறுமையில் கடுமையான குற்றமாகும்.
பெண்களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
(திருக்குர்ஆன் 2:232)
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புவோர் இப்படித் தான் நடக்க வேண்டும் என்று கடுமையான வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான். பெண்களின் இந்த உரிமையைப் பறிப்பவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்வால் விசாரிக்கப்படுவார்கள் என்பதற்காகவே இவ்வாறு கூறுகிறான்.
பெண்கள் தமது விருப்பத்தைத் தெரிவிப்பதைக் கூட பாவச் செயலாகக் கருதும் நிலை சமுதாயத்தில் நிலவுகிறது. ஆனால்  நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண்கள் இது போன்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து "அல்லாஹ்வின் தூதரே என்னை மணமுடித்துக் கொள்கிறீர்களா?'' என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை மணமுடிக்க விரும்பாததால் மற்றொருவருக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்.
நூல்: புகாரி 2311, 5029, 5120.
வெட்கமில்லாமல் இப்படிக் கேட்கலாமா? என்று அவரை நபிகள் நாயகம் (ஸல்) கண்டிக்கவில்லை. விபச்சாரம் செய்வதற்குத் தான் வெட்கப்பட வேண்டுமே தவிர திருமணம் செய்யுமாறு கேட்க எந்த வெட்கமும் தேவையில்லை.
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவரை அபூதல்ஹா மணந்து கொள்ள விரும்பினார். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் "நான் இஸ்லாத்தை ஏற்றவள். நீரும் இஸ்லாத்தை எற்றுக் கொண்டால் உம்மை மணந்து கொள்கிறேன்'' என்றார்கள். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
நூல்: நஸயீ 3288
பெண்கள் தமது வாழ்க்கைத் துணைவரைத் தேர்வு செய்யும் உரிமை பெற்றுள்ளார்கள் என்பதற்கு இவை சான்றுகள்.
ஆனாலும் அவர்கள் பொறுப்பாளர்கள் வழியாகத் தான் திருமணத்தை நடத்திட வேண்டும். பொறுப்பாளர்கள் மறுக்கக் கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.
மஹரும் ஜீவனாம்சமும்
திருமண முறிவு ஏற்படும் போது பெண்களுக்கு ஜீவனாம்சம் என்ற தொகை வழங்கப்பட்டு வருவது பல சமுதாயங்களில் பரவலாக உள்ளது. இஸ்லாம் இத்தகைய ஜீவனாம்சத்தை வழங்கச் சொல்லவில்லை. மாறாக திருமணத்திற்கு முன்பே பெண்களுக்குக் கணிசமான ஒரு தொகையை வழங்கி விடுமாறு இஸ்லாம் கூறுகிறது.
இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப் படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையை தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.
இன்றைய நடைமுறையில் உள்ள ஜீவனாம்சத்தை விட இஸ்லாம் வழங்குகின்ற முன் ஜீவனாம்சம் என்ற மஹர் பாதுகாப்பானது; உத்திரவாதமானது.
பெண்களுக்கு அவர்களின் மஹர் தொகையை மனமுவந்து வழங்கி விடுங்கள் என்பது குர்ஆனின் கட்டளை.
(அல் குர்ஆன் 4:4)
மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.
ஒரு குவியலையே மஹராக நீங்கள் அவர்களுக்குக் கொடுத்தாலும் அதனைத் திரும்பப் பெறலாகாது எனவும் குர்ஆன் கட்டளையிடுகின்றது.
(அல் குர்ஆன் 4:20)
மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களிடம் விடப்பட்டுள்ளதால் அவர்கள் விரும்பினால் அதை விட்டுத் தரலாம்; அல்லது தவணை முறையில் பெற்றுக் கொள்ளலாம்.
 (பார்க்க.. அல்குர்ஆன் 2:237)
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள இந்த உரிமையைப் பெண்கள் பயன்படுத்தத் தவறிவிட்டதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இவர்கள் மஹர் கேட்காததால் ஆண்கள் வரதட்சனை கேட்கும் கொடுமை அதிகமாகி விட்டது.
கொடுக்கக் கடமைப்பட்ட ஆண்கள் கேட்டுப் பெறக் கூடிய அளவுக்கு மானமிழந்து விட்டனர். வரதட்சணை வாங்காதீர்கள் என்பதை விட நீங்கள் கொடுங்கள் என்பது கடுமையான கட்டளையாகும். உண்மையான எந்த முஸ்லிமும் வரதட்சணை கேட்கத் துணிய மாட்டான்.
வரதட்சணை ஓர் வன் கொடுமை
ஆண்கள் தான் பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும்; பெண்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது என்று இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகிறது.
இது தான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமான தீர்ப்பாகும்.
இல்லற வாழ்வில் ஆணும், பெண்ணும் இன்பம் அனுபவிக்கிறார்கள். இருவருமே ஒருவரிடமிருந்து மற்றவர் இன்பத்தை அனுபவிப்பதால் யாரும் யாருக்கும் எதனையும் கொடுக்கத் தேவையில்லை தான்.
ஆனாலும் இந்த இன்பத்தை அடைவதற்காக பெண்கள் தாம் அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும்.
நி    ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்த பின் ஆண் தனது வீட்டிலேயே இருக்கிறான். தனது தாய், தந்தையர் மற்றும் உறவினருடன் இருக்கிறான். ஆனால் அவனை விட வயதில் குறைந்த பெண் தனது பெற்றோரையும், சொந்தங்களையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு வந்து விடுகிறாள். இந்தத் தியாகத்திற்காக பெண்களுக்குத் தான் ஆண்கள் வழங்க வேண்டும்.
நி    திருமணத்திற்குப் பின் மனைவிக்காக கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை. அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் பெண்கள் கணவனுக்காக சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் சேர்த்து பணிவிடை செய்தல் என்று ஏராளமான சுமைகளைத் தம் தலையில் சுமந்து கொள்கின்றனர். மாமியார் கொடுமைகளையும் சில பெண்கள் கூடுதலாக தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் காரணத்துக்காகவும் ஆண்கள் தாம் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
நி    இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் எந்தச் சிரமமும், சுமையும் இல்லை. பெண் தான் சிரமப்படுகிறாள். அவள் எதையும் உண்ண முடியாத மசக்கை நிலையை அடைகிறாள். இயல்பாக நடக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்தைத் தாங்கிக் கொள்கிறாள். அத்துடன் மரணத்தின் வாசல் கதவை தட்டி விட்டு பிரசவித்து மீள்கிறாள். இந்த ஒரு காரணத்துக்காகவே அவளுக்கு கோடி கொடுத்தாலும் போதாது.
நி    பிரசவித்த பின் குழந்தைக்காக தந்தை எதையும் செய்வதில்லை. பாலூட்டுவதும், சீராட்டுவதும், கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பது தான் நேர்மையானது.
நி    அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட்டால் பெண் தனது எல்லா வசந்தங்களையும் துறந்து விடும் நிலையை அடைகிறாள்.
பெண்களுக்கு ஆண்கள் தான் கொடுக்க வேண்டும் என்பதை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறுக்க முடியாது.
வரதட்சணையால் ஏற்படும் கேடுகள்
வரதட்சணை கேட்கும் கொடிய வழக்கம் காரணமாக ஏராளமான தீய விளைவுகள் ஏற்படுகின்றன. வரதட்சணை கேட்போரும், அதை ஆதரிப்போரும் அத்தனை தீய விளைவுகளிலும் பங்காளிகளாகின்றனர்.
நி    வரதட்சணை காரணமாக 15 வயதிலிருந்தே வாழ்க்கைக்கு ஏங்கும் பெண்கள் முப்பது வயது வரை கூட மண வாழ்வு கிடைக்காத நிலையில் உள்ளனர்.
நி    இதன் காரணமாக பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேறி ஓடி விடுகின்றனர். ஏமாற்றப்படுகின்றனர்.
விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர் தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும் ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது.
நி    மணவாழ்வு கிடைக்காது என்ற நிலையில் தம் உயிரை தாமே மாய்த்துக் கொள்ளும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். பெண்ணைப் பெற்றவர்களும் கூண்டோடு தற்கொலை செய்கின்றனர். இந்தப் பாவத்திலும் வரதட்சணை கேட்போர் பங்காளிகளாகின்றனர்.
நி    மணவாழ்வு கிடைக்காது என்பதால் கண்டவனுடன் ஒருத்தி ஓடி விட்டால் அவளது குடும்பத்தில் எஞ்சியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலை ஏற்படும். இதிலும் வரதட்சணை கேட்பவர்களுக்குப் பங்கு இருக்கிறது.
நி    வரதட்சணை வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன் கூட்டியே உணர்பவர்கள் பெண் குழந்தை பிறந்ததும் தாமே தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர். வேறு சிலர் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தை பெண் என்பதை அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர். இந்த மாபாதகச் செயலிலும் வரதட்சணை கேட்பவர்கள் பங்காளிகளாகின்றனர்.
நி    மானத்துடன் வாழ்ந்த ஒருவனை பெண்ணைப் பெற்ற காரணத்துக்காக ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்க வைக்கின்றனர். இந்தப் பாவமும் இவர்களைச் சும்மா விடாது.
நி    பருவத்தில் எழுகின்ற உணர்வுகளுக்கு வடிகால் இல்லாத நிலையில் பெண்களில் பலர் மனநோயாளிகளாகி விடுகின்றனர். இந்தக் கொடுமையிலும் இவர்கள் பங்கு பெற்றுக் கொள்கின்றனர்.
இப்படி ஏராளமான தீமைகளின் மொத்த வடிவமாகத் திகழும் வரதட்சனையை வாங்குவோர் இவ்வளவு பாவங்களுக்கான தண்டனைக்காக தம்மை முன்பதிவு செய்கிறார்கள். நியாயத் தீர்ப்பு வழங்கக் கூடிய இறைவன் முன்னால் நாம் நிறுத்தப்படுவோம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் கூட எவரும் வரதட்சணை கேட்கவே மாட்டார்.
திருமண ஒப்பந்தம்
இஸ்லாம் திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கருதுகின்றது.
அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர்.
(அல்குர்ஆன் 4:21)
"திருமணம் என்பது சடங்குகளின் தொகுப்பன்று; அது வாழ்க்கை ஒப்பந்தம்'' என்று இந்த வசனம் தெளிவாக்குகின்றது.
ஒப்பந்தம் என்பது அதில் சம்மந்தப்பட்ட இரு சாராருக்கும் புரியக் கூடிய மொழியில் அமைந்திருக்க வேண்டும். புரியாத பாஷையில் எவரும் ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள்.
"நான் என் மகளை இவ்வளவு மஹருக்கு அவரது பரிபூரண சம்மதத்துடன் உங்களுக்கு மணமுடித்து தருகின்றேன்'' என்று பெண்ணின் தந்தை (அல்லது அவளது மற்ற பொறுப்பாளர்) கூற, மணமகன் அதை ஏற்றுக் கொள்வதாகக் கூறியவுடன் ஒப்பந்தம் முடிந்து விடும்.
அல்லது "உங்கள் மகளை அவளது பூரண சம்மதத்துடன் இவ்வளவு மஹருக்கு மணமுடித்துத் தருகிறீர்களா?'' என்று மணமகன் கேட்க, பெண்ணின் பொறுப்பாளர் ஏற்றுக் கொண்டாலும் ஒப்பந்தம் முடிந்து விடும்.
இதற்கென்று  குறிப்பிட்ட எந்த வாசகமும் கிடையாது. அரபு மொழியில் தான் அந்த வாசகம் அமைய வேண்டும் என்பதும் கிடையாது.
(குத்பா) திருமண உரை
திருமணத்தின் போது "குத்பா' எனும் உரை நிகழ்த்தும் வழக்கம் பரவலாக உள்ளது. ஆனால் திருமணத்தின் போது "குத்பா' எனும் உரை நிகழ்த்த வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்துவதற்காக எந்தத் திருமணத்திற்கும் சென்றது கிடையாது. அழைக்கப்பட்டதும் கிடையாது.
தமது மகளின் திருமணத்தின் போது கூட அவர்கள் உரை நிகழ்த்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஆயினும் மக்கள் கூடும் இடங்களில் தேவை எனக் கருதினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர். இந்தப் பொதுவான அனுமதியின் அடிப்படையில் திருமண உரையினால் மக்கள் பயன் பெறுவார்கள் என்று கருதினால் அதைத் தடுக்க முடியாது. ஆனால் "குத்பா' எனும் உரை ஏதும் நிகழ்த்தப்படாவிட்டால் திருமணத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படாது.
சாட்சிகள்
திருமணத்தின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. எனினும் அவையனைத்தும் பலவீனமானவையாக உள்ளன.  ஆயினும் கொடுக்கல் வாங்கலின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு குர்ஆன் கூறுகிறது.
"கடன் கொடுக்கும் போது இரண்டு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று திருக்குர்ஆன் 2:282 வது வசனம் கூறுகிறது.
"அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று திருக்குர்ஆன் 4:6 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
மரண சாசனம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு இறைவன் கூறுகிறான். (திருக்குர்ஆன் 5:106)
இதை அடிப்படையாகக் கொண்டு திருமணத்திற்கும் சாட்சிகள் அவசியம் என்பதை அறியலாம்.
திருமணம் செய்த பின் ஒரு தரப்பினர் பிறகு மறுத்து விடக் கூடும் என்பதாலும், விபச்சாரத்தில் ஈடுபடுவோரும் மாட்டிக் கொள்ளும் போது தாங்கள் கணவன் மனைவியர் என்று கூறித் தப்பித்து விடாமல் இருப்பதற்காகவும் ஏனைய கொடுக்கல் வாங்கலின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்வது போலவே திருமணத்திலும் குறைந்தது இரு சாட்சிகள் ஏற்படுத்தப் பட வேண்டும்.
நாளை விவகாரம் ஏற்பட்டால் உள்ளதை உள்ளபடி சொல்வதற்கே சாட்சிகள் தேவைப்படுகின்றன. சடங்குக்காக சாட்சிகள் ஏற்படுத்தப் படவில்லை.
உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டுமானால் திருமணத்தின் முக்கியமான பேச்சுவார்த்தைகள், கொடுக்கல் வாங்கல் அனைத்தும் அவர் பார்வையில் நடக்க வேண்டும். அவர் தான் சாட்சியாக இருக்கத் தக்கவர்.
மணப் பெண்ணின் சம்மதம் பெறப்பட்டதும், மஹர் கொடுக்கப்பட்டதும், எவ்வளவு மஹர் என்பதும் அவருக்குத் தெரிய வேண்டும். இந்த விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில் திருமணத்திற்கு வந்திருக்கும் இரண்டு நபர்களை சாட்சிகளாக ஆக்குவது அர்த்தமற்றதாகும்.
எளிமையான திருமணம்
திருமணங்கள் மிகவும் குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது. பிறர் மெச்ச வேண்டுமென்பதற்காகவும், தம்முடைய செல்வச் செழிப்பு உலகுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் திருமணங்கள் நடத்தப்படக் கூடாது.
வீண் விரயத்தையும், பிறர் மெச்ச வேண்டும் என்று காரியங்கள் செய்வதையும் திருக்குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கின்றது.
வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
(திருக்குர்ஆன் 6:141)
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.
(திருக்குர்ஆன் 7:31)
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
(திருக்குர்ஆன் 17:26, 27)
குறிப்பாக திருமணங்கள் குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்'' என்று  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 23388
திருமண விருந்து
திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா எனப்படுகின்றது. இந்த விருந்து நபிவழியாகும்.
பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை.
மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த "சுன்னத்' நிறைவேறிவிடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே "வலீமா' விருந்தாக வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 371, 2893
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு "முத்து' (சுமார் 1 டீ லிட்டர்) கோதுமையையே "வலீமா' விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர்: சபிய்யா (ரலி)
நூல்: புகாரி 5172
ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5168, 5171, 7421
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த பெரிய "வலீமா' விருந்தில் ஒரு ஆட்டை "வலீமா'வாகக் கொடுத்தார்கள். இதுதான் அவர்கள் வழங்கிய பெரிய விருந்தாகும். எனவே விருந்தின் பெயரால் செய்யப்படும் ஆடம்பரங்களையும் தவிர்க்க வேண்டும்.
வலீமா விருந்துக்கு அழைக்கும் போது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு காட்டக் கூடாது.
செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5177
வலீமா விருந்துக்கு ஒருவர் அழைக்கப்பட்டால் அதை மறுக்கக் கூடாது. மேற்கண்ட ஹதீஸின் தொடரில் "யார் வலீமா விருந்தை ஏற்கவில்லையோ அவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்து விட்டார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.
விருந்தை ஏற்பது அவசியமானாலும் விருந்து நடக்கும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடந்தால், அல்லது தீய நடத்தை உடையவரால் விருந்து வழங்கப்பட்டால் அதைத் தவிர்க்கலாம். தவிர்க்க வேண்டும்.
நான் ஒரு விருந்தைத் தயார் செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவப் படத்தைக் கண்ட போது திரும்பி சென்று விட்டார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: நஸயீ 5256
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த வழியைப் பின்பற்றி நபித்தோழர்களும் இந்த விஷயத்தில் கடுமையான போக்கை மேற்கொண்டுள்ளனர்.
அபூமஸ்வூத்(ரலி) அவர்களை ஒருவர் விருந்துக்கு அழைத்தார். அப்போது அவர்கள் "வீட்டில் உருவச் சிலைகள் உள்ளனவா?'' எனக் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அப்படியானால் அதை உடைத்து எறியும் வரை வர மாட்டேன் என்று கூறி விட்டு, உடைத்து எறிந்த பின்னர் தான் சென்றார்கள்.
நூல்: பைஹகீ பாகம்:7, பக்கம் : 268
என் தந்தை காலத்தில் ஓர் விருந்துக்கு ஏற்பாடு செய்தோம். என் தந்தை மக்களை அழைத்தார். அழைக்கப்பட்டவர்களில் அபூ அய்யூப் (ரலி) அவர்களும் இருந்தார்கள். வீட்டிற்கு வந்த போது பட்டுத் துணியால் சுவர்கள் அலங்காரம் செய்யப்பட்டதைக் கண்டார்கள். என்னைக் கண்டதும் "அப்துல்லாஹ்வே! நீங்கள் சுவர்களுக்கு பட்டால் அலங்காரம் செய்கிறீர்களா?'' எனக் கேட்டார்கள். பெண்கள் எங்களை மிகைத்து விட்டனர்'' என்று என் தந்தை கூறினார். அதற்கு அபூ அய்யூப் (ரலி) அவர்கள் "உம்மை பெண்கள் மிஞ்சி விடுவார்கள் என்று நான் அஞ்சவில்லை'' என்றார்கள். மேலும் "உங்கள் உணவைச் சாப்பிடவும் மாட்டேன். உங்கள் வீட்டிற்குள் வரவும் மாட்டேன்'' என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்றார்கள்.
தப்ரானியின் கபீர் பாகம்: 4, பக்கம்: 118
மிகச் சாதாரணமாக நாம் கருதுகின்ற இந்தக் காரணத்திற்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் விருந்தைப் புறக்கணித்துள்ளனர்.
இதை விட பல நூறு மடங்கு ஆடம்பரங்களும், அனாச்சாரங்களும், வீண் விரயங்களும் மலிந்து காணப்படும் விருந்துகளில் எவ்வித உறுத்தலும் இல்லாமல் நாம் கலந்து கொள்கிறோம். இது சரி தானா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

நாள் நட்சத்திரம் இல்லை
திருமணத்தை நடத்துவதற்கு நல்ல நாள், கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. அவரவரின் விதிப்படி நடக்க வேண்டியவை யாவும் நடக்கும் என்ற நம்பிக்கையுடையவர்கள் குறிப்பிட்ட ஒரு நாளில் நல்லது ஏற்படும் என்றோ, குறிப்பிட்ட இன்னொரு நாளில் கெட்டது ஏற்படும் என்றோ நம்ப முடியாது.
வளர்பிறையில் திருமணம் நடத்தினால் அது சிறப்பாக இருக்கும் என்றோ, தேய் பிறையில் நடத்தினால் தேய்ந்து விடும் என்றோ கிடையாது. இப்படியெல்லாம் நம்புவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
வளர்பிறை பார்த்து, நல்ல நாள் பார்த்து செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் முறிந்து விடுவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இதிலிருந்தும் இது மூட நம்பிக்கை என்பதை உணரலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த அரபியர் "ஷவ்வால்' மாதத்தை பீடை மாதம் என நம்பி அந்த மாதத்தில் நல்ல நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள்.
இதுபற்றி ஆயிஷா (ரலி) குறிப்பிடும் போது "என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஷவ்வால்' மாதத்திலேயே திருமணம் செய்தார்கள். ஷவ்வால் மாதத்திலேயே உறவும் கொண்டார்கள். அவர்களின் மனைவியரில் என்னை விட அவர்களுக்கு விருப்பமானவர் எவர் இருந்தார்?'' என்று குறிப்பிட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 2551, நஸயீ 3184
எனவே திருமணத்தை எந்த மாதத்திலும் நடத்தலாம். எந்த நாளிலும் நடத்திலாம். எந்த நேரத்திலும் நடத்தலாம். குறிப்பிட்ட நாளையோ, நேரத்தையோ கெட்டது என்று ஒதுக்குவது கடுமையான குற்றமாகும்.
"ஆதமுடைய மகன் காலத்தைக் குறை கூறுகிறான். காலத்தைக் குறை கூறுபவன் என்னையே குறை கூறுகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என் கையில் தான் அதிகாரம் இருக்கிறது. இரவு பகலை நான் தான் மாறி மாறி வரச் செய்கிறேன்'' என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4826, 6181, 7491
எனவே ஒரு நாளை கெட்ட நாள் என்று கூறினால், நம்பினால் அல்லாஹ்வையே கெட்டவன் எனக் கூறிய, நம்பிய குற்றம் நம்மைச் சேரும்.



 திருமண துஆ
நமது நாட்டில் வழக்கமாக திருமணத்தின் போது ஒரு துஆ ஓதி வருகின்றனர். அல்லாஹும்ம அல்லிப்  பைனஹுமா..... என்று ஓதப்படும் அந்த துஆ நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலோ ஸஹாபாக்கள் காலத்திலோ, தாபியீன்கள் காலத்திலோ, நான்கு இமாம்களின் காலத்திலோ நடைமுறையில் இருந்ததில்லை. தமிழகத்தைச் சேர்ந்த சிலரது கண்டுபிடிப்பாகும் இது.
ஆதம்-ஹவ்வா போல் வாழ்க! அய்யூப்-ரஹிமா போல் வாழ்க! என்ற கருத்தில் பல நபிமார்களின் இல்லறம் போல் வாழுமாறு பிரார்த்திக்கும் விதமாக இந்த துஆ அமைந்துள்ளது.
அந்த நபிமார்களும் அவர்களின் மனைவியரும் எப்படி இல்லறம் நடத்தினார்கள் என்ற விபரமோ, அவர்களின் மனைவியர் அவர்களுக்கு எந்த அளவு கட்டுப்பட்டு நடந்தனர் என்ற விபரமோ நமக்குத் தெரியாது. அவர்களின் இல்லறம் எப்படி இருந்தது என்பது தெரியாமல் அது போன்ற வாழ்க்கையைக் கேட்பது அர்த்தமற்றதாகும்.
உனக்கு அறிவில்லாத விஷயங்களை நீ பின்பற்ற வேண்டாம் என்று அல்குர்ஆன் கூறுகிறது.
(அல்குர்ஆன் 7:38)
எனவே இது போன்ற துஆக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கூட்டாக வேறு துஆக்களை ஓதுவதற்கும் ஆதாரம் இல்லை.
மணமக்களுக்கு நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் பல துஆக்களைச் செய்துள்ளனர்.
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) தமக்குத் திருமணம் நடந்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது "பாரகல்லாஹு லக'' (அல்லாஹ் உனக்கு பரகத் - புலனுக்கு எட்டாத பேரருள் - செய்வானாக) எனக் கூறினார்கள்.
(புகாரி 5155, 6386.)
இதை ஆதாரமாகக் கொண்டு "பாரகல்லாஹு லக' என்று கூறி வாழ்த்தலாம்.
"பாரகல்லாஹு லகும், வபாரக அலைகும்'' என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்ததாகவும் ஹதீஸ் உள்ளது. (அஹ்மத் 15181)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது "பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்'' என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1011, அபூதாவூத் 1819,  அஹ்மத் 8599
 "அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக'' என்பது இதன் பொருள். ஒவ்வொருவரும் இந்த துஆவை வாழ்த்தைக் கூற வேண்டும்.
தவிர்க்கப்பட வேண்டியவை
திருமணத்தின் போது பல்வேறு சடங்குகள் முஸ்லிம் சமுதாயத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. இஸ்லாத்திற்கும் அந்த சடங்குகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. எனவே அது போன்ற சடங்குகளைத் தவிர்க்க வேண்டும்.
நி    தாலி கட்டுதல் - கருகமணி கட்டுதல்
நி    ஆரத்தி எடுத்தல்
நி    குலவையிடுதல்
நி    திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையைக் கட்டியணைத்து வாழ்த்துதல்
நி    ஆண்களும் பெண்களுமாக மணமக்களைக் கேலி             செய்தல்
நி    வாழை மரம் நடுதல்
நி    மாப்பிள்ளை ஊர்வலம்
நி    ஆடல், பாடல், கச்சேரிகள் நடத்துதல்
நி    திருமண நிகழ்ச்சிகளை போட்டோ எடுப்பது.
நி    பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின் பல             சந்தர்ப்பங்களில் சீர் வரிசை என்ற பெயரில் கேட்டு வாங்குவது.
நி    தலைப்பிரசவச் செலவை பெண் வீட்டார் தலையில்             சுமத்துவது.
நி    முதல் குழந்தைக்கு நகை செய்து போடுமாறு பெண்         வீட்டாரைக் கட்டாயப்படுத்துதல்.
நி    பல்வேறு காரணங்களை காட்டி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண் வீட்டாரிடம் விருந்துகளைக் கேட்பது.
மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்தக் கொடுமைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என்பது நபிமொழி.
நூல்: அபூதாவூத் 3512
அன்பளிப்பு & மொய் (ஸலாமீ)
திருமணத்தின் போதும், மற்ற சமயங்களிலும் உற்றாரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் அன்பளிப்புப் பெறுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.
ஒருவருக்கு அவரது சகோதரர்களிடமிருந்து நல்ல பொருள் ஏதேனும் அவர் கேட்காமலும், எதிர்பார்க்காமலும் கிடைக்குமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும். ஏனெனில் அது அல்லாஹ் அவருக்கு வழங்கிய பாக்கியமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: காலித் பின் அதீ (ரலி)
நூல்: புகாரி 1380, 6630
அன்பளிப்புகளை மறுக்கலாகாது என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது.
"மொய்' என்றும் "ஸலாமீ' என்றும் கூறப்படும் போலித்தனமான அன்பளிப்புகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு பொருளைக் கொடுத்து விட்டு தங்களுக்கு அது திரும்பக் கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே "மொய்' என்பது அமைந்துள்ளது.
கொடுத்து விட்டு திரும்பிப் பெற எண்ணும் போது அது அன்பளிப்பாகாது.
அன்பளிப்புச் செய்து விட்டு அதைத் திரும்ப எதிர்பார்ப்பவன் வாந்தி எடுத்துவிட்டு அதையே திரும்ப சாப்பிடுபவனைப் போன்றவன் என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1490, 2589, 2621, 2623, 3003, 6975
 இந்த வெறுக்கத் தக்க போலி அன்பளிப்புகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
தம்பதியரின் கடமைகள்
பெண்கள் வளைந்த எலும்பு போன்றவர்கள். அதனை நிமிர்த்த முயன்றால் அதனை உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டு விட்டால் அவளிடம் இன்பம் பெறுவாய் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3331, 5184, 5186
"இறை நம்பிக்கையுள்ள ஒரு ஆண் இறை நம்பிக்கையுள்ள தன் மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால் அவன் விரும்பக் கூடிய வேறொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 2672
"நல்ல குணம் கொண்டவர்களே இறை நம்பிக்கையில் முழுமை பெற்றவர்களாவர். உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: அஹ்மத் 7095, திர்மிதீ 1082
"பெண்களை நல்ல முறையில் நடத்துங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளவர்கள். அதைத் தவிர அவர்களிடம் உங்களுக்கு வேறு எந்த உரிமையும் இல்லை'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு பின் அஹ்வஸ் (ரலி)
நூல்: திர்மிதீ 1083
ஒரு பெண், கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: திர்மிதீ 1081
ஒரு முறை நான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், எங்களின் மனைவிமார்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் யாவை? எனக் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "நீ எதை உண்கிறாயோ, அதையே அவளுக்கும் உண்ணக் கொடுப்பாயாக! நீ எதை அணிகிறாயோ அது போன்றதையோ அவளுக்கும் அணிவிக்கக் கொடுப்பாயாக! மேலும், அவளின் முகத்தில் அடிக்காதே! அவளை இழிவுபடுத்தாதே! வீட்டிலில்லாமல் வெளியிடங்களில் வைத்து அவளைக் கண்டிக்காதே! '' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி)
நூல்: அபூதாவூத் 1830
மணமுடிக்கத் தகாதவர்கள்
1. இணை கற்பிப்போரை மணக்கக் கூடாது.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
(திருக்குர்ஆன் 2:221)

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்.91 அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடை களை108 நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
(திருக்குர்ஆன் 60:10)
2. இத்தா முடியும் வரை திருமணம் கூடாது.
கணவனை இழந்த பெண்கள் தமக்குரிய இத்தா காலம் முடியும் வரை திருமணமோ திருமண ஒப்பந்தமோ செய்யக் கூடாது.
(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
(திருக்குர்ஆன் 2:235)
3. தந்தையின் மனைவியை மணக்கக் கூடாது.
உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! ஏற்கனவே நடந்து முடிந்ததைத் தவிர. இது வெட்கக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும்.
(திருக்குர்ஆன் 4:22)

மணக்கக் கூடாத உறவுகள்
ஆண்கள் கீழ்க்காணும் உறவினர்களை மணக்க அனுமதியில்லை.
1. தாய்
2. மகள்
3. சகோதரி
4. தாயின் சகோதரி
5. தந்தையின் சகோதரி
6. சகோதரனின் புதல்விகள்
7. சகோதரியின் புதல்விகள்
8. பாலூட்டிய அன்னையர்
9. பாலூட்டிய அன்னையின் புதல்விகள்
10. மனைவியின் தாய்
11. மனைவியின் புதல்வி
12. மகனின் மனைவி
13. இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்

பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்
1. தந்தை
2. மகன்
3. சகோதரன்
4. தாயின் சகோதரன்
5. தந்தையின் சகோதரன்
6. சகோதரனின் மகன்
7. சகோதரியின் மகன்
8. பாலூட்டிய அன்னையின் கணவன்
9. பாலூட்டிய அன்னையின் மகன்
10. கணவனின் தந்தை
11. கணவனின் புதல்வன்
12. புதல்வியின் கணவன்
13. சகோதரியின் கணவனை சகோதரியுடன் கணவன் வாழும் போது மணப்பது
ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.
திருக்குர்ஆன் 4:23 வசனத்திலிருந்து இதை அறியலாம்.
உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:23
இரத்த சம்பந்தத்தால் யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று மேலே நாம் குறிப்பிட்டோம். அன்னியப் பெண்ணிடம் பால் குடித்ததால் மேற்கண்ட உறவு முறை ஏற்படுமானால் அவர்களையும் மணக்கக் கூடாது.
அதாவது ஒரு பெண்ணிடம் ஒருவன் பாலருந்தி விட்டால் அவள் தாயாகி விடுகிறாள். இதன் காரணமாக அவளது சகோதரி சின்னம்மா அல்லது பெரியம்மா ஆகி விடுவார்கள். எனவே அவரையும் மணக்கக் கூடாத.
அவளது சகோதரன் அல்லது சகோதரியின் மகளையும் மணக்கக் கூடாது. பாலூட்டிய அன்னையை பெற்ற தாய் இடத்தில் வைத்துப் பார்த்தால் அவளது உறவினர்கள் நமக்கு மேற்கண்ட உறவு முறையுடையவர்களாக ஆனால் அவர்களை மணக்கக் கூடாது.
இரத்த சம்பந்தத்தால் தடுக்கப்பட்ட உறவுமுறைகள், பால் அருந்திய உறவு முறையிலும் தடுக்கப்பட்டதாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 2451, 4719
இது தவிர ஒரு பெண்ணை மணந்து அவளுடன் வாழும் போது அவளது தாயின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. அது போல் மனைவியின் தந்தையின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாத.
(புகாரி 4719)
மனைவி மரணித்து விட்டாலோ விவாகரத்து ஆகிவிட்டாலோ மனைவியின் தாயுடைய சகோதரியை, மனைவியின் தந்தையுடைய சகோதரியை மணக்கத் தடையில்லை.
பால்குடிப் பருவமும் அளவும்
எந்த வயதில் பால் குடித்தாலும் ஒரு பெண் தாயாகி விடுவாள் என்று பாலரும் எண்ணுகின்றனர்.
இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைப் பருவத்தில் பால் கொடுத்தால் தான் "தாய் பிள்ளை' என்ற உறவு ஏற்படும்.
பாலூட்டும் பருவம் இரண்டு ஆண்டுகள் தான் என்று திருக்குர்ஆன் 2:233 கூறுகிறது.
மேலும் பசியை அடக்கும் அளவுக்கும், நான்கு தடவைகளுக்கு அதிகமாகவும் பாலூட்டினால் தான் தாய் பிள்ளை என்ற உறவு ஏற்படும்.
பசியைப் போக்குவதே பாலூட்டலாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2453, 4712
ஒரு தடவை இரண்டு தடவைகள் பால் அருந்துவதற்கு திருமணத் தடை ஏதும் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: முஸ்லிம் 2628
ஆயிஷா(ரலி) அவர்களின் மற்றொரு அறிவிப்பில் ஐந்து தடவை பாலருந்தினால் தான் திருமணத் தடை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தாம்பத்திய உறவு
தாம்பத்திய உறவு கொள்வதற்கு என்று ஏராளமான கட்டுக் கதைகளை முஸ்லிம்கள் உண்டாக்கி அதை நம்பி வருகின்றனர். ஆனால் இஸ்லாத்தில் இந்த விஷயத்தில் மிகவும் குறைந்த அளவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாதவிடாயின் போது
மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்திய உறவு கொள்ளக் கூடாது.
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்'' எனக் கூறுவீராக!
(திருக்குர்ஆன் 2:222)
மலப்பாதையில் உறவு கொள்வதும் கடுமையாகத் தடுக்கப்பபட்டுள்ளது.
"தனது மனைவியில் மலப்பாதையில் உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் 1847
இதைத் தவிர தாம்பத்திய உறவில் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
குறிப்பிட்ட நாட்களில் அல்லது குறிப்பிட்ட நேரத்தில் உறவு கொள்ளக் கூடாது என்று அலீ (ரலி) அவர்களின் பெயரால் கூறப்படும் அனைத்தும் கட்டுக் கதையாகும்.
குறிப்பிட்ட முறையில் தான் உறவு கொள்ள வேண்டும். ஒருவரது அந்தரங்கத்தை மற்றவர் பார்க்கக் கூடாது என்றெல்லாம் கூறப்படும் அனைத்தும் கற்பனை செய்யப்பட்ட பொய்களாகும்.
அல்லாஹ் எதையும் மறைப்பவன் இல்லை. மறப்பவனும் அல்ல. தாம்பத்தியத்தில் தடுக்கப்பட வேண்டியவை ஏதும் இருந்தால் அதை அவனே கூறியிருப்பான்.
மேற்கண்ட போதனைகளைத் தம்பதியர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வல்ல இறைவன் இஸ்லாத்தின் இந்தப் போதனைகளைச் செயல்படுத்தி வெற்றியடையக் கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites