திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமான ரமளானை முன்னிட்டு இவ்விதழ், திருக்குர்ஆன் சிறப்பு மலராக வெளியிடப்படுகிறது.
ஏற்கனவே 2003ஆம் ஆண்டு நவம்பர் இதழ் திருக்குர்ஆன் சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. அது முழுக்க முழுக்க திருக்குர்ஆன் கூறும் அறிவியலை மையமாக வைத்து எழுதப்பட்டது.
இந்த இதழ் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தலைப்பில் உருவாக்கப் பட்டுள்ளது.
திருக்குர்ஆன் சிறப்பிதழ் என்று கூறி விட்டு, இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தலைப்பில் எழுதுவது என்ன நியாயம்? என்று கேட்கலாம்.
முறையாக, திருக்குர்ஆன் ஓர் இயற்கை வேதம் என்று தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
ஆனால் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்று கூறினாலும், இறைத் தூதர் ஓர் இயற்கைத் தூதர் என்று கூறினாலும் அது குறிக்கப் போவது திருக்குர்ஆனைத் தான்.
ஏனெனில் இஸ்லாம் என்பது திருக்குர்ஆனின் நேரடி வழிகாட்டல் ஆகும்.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.
அல்குர்ஆன் 2:185
இறைத் தூதர் ஓர் இயற்கைத் தூதர் என்று சொன்னால் அதுவும் குர்ஆனையே குறிக்கும்.
(முஹம்மதே!) மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
அல்குர்ஆன் 16:44
அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ் வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது.
அல்குர்ஆன் 16:64
இறைத் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் விளக்கவுரை என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்து கின்றன. இந்த அடிப்படையில் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தலைப்பில் இந்தத் திருக்குர்ஆன் சிறப்பு மலர் தன் பயணத்தைத் தொடர்கிறது.
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்று அறிந்திருக்கிறோம்; இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்று அறிந்திருக்கிறோம். அது என்ன? இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்? என்று கேட்கலாம்.
இன்று நாம் சுவாசிக்கின்ற காற்றில் கலந்திருக்கும் நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற வாயுக்கள் அனைத்தையும் சரியான விகிதாச்சாரத்தில் அல்லாஹ் அமைத்திருக்கின்றான்.
அது போன்று நமது உடல் சீராக இயங்குவதற்கு உடலில் இவ்வளவு கொழுப்புச் சத்து இருக்க வேண்டும்; இவ்வளவு இனிப்புச் சத்து இருக்க வேண்டும் என எல்லாமே ஒரு சரியான கணக்கின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விகிதாச்சாரத்தைத் தாண்டினால் உடல் கடுமையான நோய்களுக்கு இலக்காகின்றது. இதைத் தான் இயற்கை வகுத்த விதி என்கிறார்கள். இஸ்லாத்தின் அடிப்படையில் இது இறைவன் வகுத்த விதியாகும்.
இப்படியொரு இயற்கை விதியை வகுத்த அந்த நாயன், அதற்கேற்ப மனித சமுதாயம் வாழ்வதற்காக அளித்த விதிகள் தான் திருக்குர்ஆன்.
மார்க்கச் சட்டங்கள், மார்க்க விதிகள் என்பவை, ஏற்கனவே இந்த உலகம் இயங்குவதற்காக அல்லாஹ் வகுத்திருக்கின்ற இயற்கை விதிகளுக்கு ஏற்ப அமைந்தவை தான் என்ற கருத்தை விளக்கவே இந்தத் தலைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
உலகில் உள்ள அறிவியல் அறிஞர்கள் மட்டுமல்லாது நாத்திகர்கள் கூட ஒப்புக் கொள்ளும் விஷயம் அந்த இயற்கை விதிகள் தான். இயற்கை விதிகளை அனைவரும் நம்புகின்றார்கள்.
இவர்கள் நம்பும் அந்த இயற்கை விதிகளை வகுத்த அதே இறைவன் தான் இஸ்லாம் எனும் இந்த விதிகளையும் வகுத்திருக்கிறான் என்பதை உற்று நோக்கச் சொல்வது தான் இந்தத் தலைப்பின் நோக்கம்.
இதைத் தான் வல்ல அல்லாஹ்வும் தனது திருமறையில் கூறுகின்றான்.
உண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக! இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றுதலும் இல்லை. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
அல்குர்ஆன் 30:30
இந்த இயற்கை மார்க்கத்தில் ஓர் இனிய உலா சென்று வருவோம்.
எய்ட்ஸிலிருந்து காக்கும் கத்னா
எல்லாம் வல்ல அல்லாஹ், இஸ்லாத்தை ஓர் இயற்கை மார்க்கம் என்று கூறுகிறான்.
கோடை காலத்தில் வெயில்; மழைக் காலத்தில் மழை என்று இவ்வுலகில் மாறி மாறி வரும் பருவ காலம், மழை பெய்ததும் பூமியில் பச்சைப் பசேல் என்ற புற்பூண்டுகளின் விளைச்சல், உயிரினங்களின் இனப் பெருக்கம், கரையைத் தொட்டு ஆடி மகிழும் கடல் அலைகள், வீசுகின்ற காற்று போன்ற இந்த அமைப்புகளை, அருள்மிகு ஆக்கங்களை இயற்கை என்று நாம் கூறுகிறோம்.
இந்த இயற்கை அமைப்பில் உட்பட்டவன் தான் மனிதன். அவனுடைய உடலில் வளரும் தலை முடி, தாடி, மீசை மற்றும் இதர பகுதிகளில் வளரும் முடிகள், நகம் அனைத்துமே இயற்கைக்கு உட்பட்டது தான்.
மனித உடலில் அமைந்திருக்கும் இந்த இயற்கை அமைப்பைப் பராமரிப்பதும் ஓர் இயற்கையான அம்சம் தான். இதை உலகில் எந்த மார்க்கமும் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. காரணம், அந்த மார்க்கங்கள் இயற்கையானவையல்ல!
இஸ்லாம் தான் இயற்கை மார்க்கம். அதனால் தான் இயற்கை நெறிகளைக் கற்றுக் கொடுக்கிறது.
"இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்து கொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5891
ஹெச்.ஐ.வி. எய்ட்சும், இயற்கை கத்னாவும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய இயற்கையான இந்த ஐந்து அம்சங்களில் கத்னா எனும் விருத்த சேதனமும் ஒன்றாகும்.
இந்த கத்னா, இன்று எய்ட்ஸ் எனப்படும் ஹெச்.ஐ.வி. வைரஸை விட்டும் காக்கும் காப்பரணாகத் திகழ்கிறது.
22.07.07 அன்று பி.பி.சி. வெளியிட்ட செய்தி இதை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் தொடர்பாக உலகளவிலான மிகப் பெரிய மாநாடு விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஆண்களுக்குச் செய்யப்படும் கத்னா (விருத்த சேதனம்) 60 சதவிகித அளவுக்கு எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்ற கண்டுபிடிப்பு உறுதியானது தான் என்பதைக் கூறும் ஆய்வறிக்கை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த ஆய்வறிக்கையை 5000க்கும் மேற்பட்ட குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன என்று பி.பி.சி.யின் செய்தி தெரிவிக்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் மிகக் குறைவு தான். ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் நீண்ட நாட்களாக அறியப்பட்ட உண்மையாகும்.
தென் ஆப்பிரிக்க ஆண்களில் 60 சதவிகிதம் பேரை ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயத்திலிருந்து கத்னா காக்கின்றது என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கண்டுபிடிப்பை அண்மையில் கென்யாவிலும், உகாண்டாவிலும் சேகரித்த ஆதாரம் உறுதி செய்கின்றது.
இவ்வாறு கத்னா ஒரு காவல் அரணாக அமைந்திருப்பதை அறிய முடிகின்றது என்று தனது செய்தியில் பி.பி.சி. தெரிவிக்கிறது.
இந்தக் காவல் அரணுக்கு கத்னா தான் காரணமா? அல்லது அவர்கள் குறைந்த அளவிலான பெண்களிடம் உடலுறவு கொள்வது தான் காரணமா? என்று தெரியவில்லை என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.
அதாவது முஸ்லிம்களிடம் உள்ள விபச்சாரத் தடை, பலதார மணம் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றது.
கத்னா, விபச்சாரத் தடை, பலதார மணம் இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் அது இஸ்லாமிய மார்க்கத்தினால் ஏற்பட்ட கண்ணியம் தான்.
அமெரிக்காவின் "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்திக் குறிப்பையும் இங்கே பார்ப்போம்.
ஹெச்.ஐ.வி. பாதிப்பை விட்டும் பாதியளவுக்கு கத்னா பாதுகாக்கிறது எனறு அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸின் செய்தியாளர் டொனால்டு ஜி. மெக்நெய்ல் குறிப்பிடுகிறார்.
சுரப்பிகளிலிருந்து சுரந்து வரும் உயிரணுக்கள் ஆணுறுப்பின் நுனித் தோல் பகுதியில் தேங்குகின்றன. ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வைரஸானது உடலுறவின் போது, ஏற்கனவே தேங்கி நிற்கும் இந்த உயிரணுத் தொகுதிக்குள் எளிதில் தொற்றிக் கொண்டு விடுகின்றது. அதனால் உடலுறவு கொண்ட அந்த ஆணும் ஹெச்.ஐ.வி. வைரஸின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றான் என்று அந்தச் செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
இங்கு தான், இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்பதை அறிந்து நாம் வியப்பில் ஆழ்கிறோம். இதைத் தான் வல்ல அல்லாஹ்வும் தன் திருமறையில் 30:30 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
மேலே நாம் கண்ட அந்த ஹதீஸ் மீசையைக் கத்தரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.
இன்று உலகில் பலர் தாடியை முழுமையாக மழித்து விட்டு மீசையை வைத்திருக்கின்றனர். அவர்களுடைய மீசை உண்மையில் வாயில் ஒரு வடிகட்டியைப் போல் அமைந்துள்ளது. அவர்கள் குடிக்கின்ற பானங்கள், சாப்பிடும் பண்டங்கள் அனைத்தும் மீசையில் பட்ட பின்னர் தான் உள்ளே செல்கின்றது.
சளி மற்றும் அசுத்தங்கள் தங்கி நிற்கும் இந்த மீசை வழியாக உணவுப் பொருட்கள் செல்வது சுகாதாரக் கேட்டை உருவாக்கும் என்பதால் இதைத் தடுக்கும் விதமாக, மீசையைக் கத்தரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது.
இது போன்று உடல் நாற்றத்திற்குக் காரணமாக அமையும் அக்குள் முடிகளையும், இன உறுப்பின் முடிகளையும் களையச் சொல்கிறது.
நகங்களின் இடுக்குகள் தான் கிருமிகள் அடைக்கலம் புகுமிடம் என்பதால் நகங்களையும் வெட்ட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.
இவற்றை வளர்ப்பது இயற்கையல்ல, களைவது தான் இயற்கை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகுக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார்கள்.
பூமிக்கு உகந்தது புதைப்பதே
ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். "(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.
"என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை நோக்கி நீ நீட்டினால் உன்னைக் கொல்வதற் காக என் கையை உன்னை நோக்கி நான் நீட்டுபவனல்லன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன்''
"உன் பாவத்துடன், என் பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்'' (எனவும் அவர் கூறினார்)
(இவ்வளவுக்குப் பிறகும்) தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே நஷ்டமடைந்தவனாக ஆகி விட்டான்.
தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. "அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்தி ருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே'' எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான்.
அல்குர்ஆன் 5:27-31
அல்லாஹ் கூறும் இந்தச் சுவையான சம்பவம் உலகில் நடந்த முதல் கொலையை விவரிக்கும் அதே வேளையில், ஒருவர் இறந்து விட்டால் அவரைப் புதைக்க வேண்டும் என்ற முன் மாதிரியை அல்லாஹ்வின் இயற்கை வேதமான திருக்குர்ஆன் மனித குலத்திற்குக் கற்றுக் கொடுக்கின்றது.
உலகில் வாழும் 100 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்த நடைமுறையைத் தான் கையாள்கின்றனர். பூமியில் புதைக்கும் இந்த முறை தான் இயற்கைக்கு உகந்ததாகும்.
"இறந்த பின் சடலத்தை எரிப்பதற்குப் பதிலாக, சுற்றுப்புறச் சூழலுக்கு உதவும் விதத்தில் அதைப் பூமியில் ஒரு மரத்திற்கு அடியில் புதையுங்கள். மண்ணில் கலந்து சிதிலமாகும் உடல் அந்த மரத்திற்குச் சத்துக்களை வழங்கும். அந்த மரம் அதைப் பல ஆண்டுகளுக்கு, கார்பன் டை ஆக்ஸைடை உயிர் காக்கும் ஆக்ஸிஜனாக மாற்றித் தருகின்றது. (மனித இனம் மட்டுமல்ல! உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஆக்ஸிஜனை வழங்குவதும் விநியோகிப்பதும் தாவர இனம் தான்.) கார்பன் டை ஆக்ஸைடை, ஆக்ஸிஜனாக மாற்றித் தரும் இந்த அற்புதமான ஒரு செயலைச் செய்யாமல், இறந்த உடலைப் புதைக்காமல், கார்பன்டை ஆக்ஸைடை அதிகப்படுத்தி விடும் நெருப்புக்குள் நம்முடைய உடலை எரிய விடுவது வெட்கக் கேடாகும்'' என்று கூறுகிறார், இனப்பெருக்க உயிரியல் துறை நிபுணர் பேராசிரியர் ரோஜர் ஹார்ட் என்பவர்.
ஆஸ்திரேலியாவில் 850 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஒரு சடலம் எரிக்கப்படுகிறது. சுமார் 90 நிமிடங்களுக்கு எரியும் இந்த நெருப்பினில் 50 கிலோ கார்பன்டை ஆக்ஸைட் வெளியாகின்றது. சடலத் துடன் எரிந்த எரிபொருள் மற்றும் மரக்கட்டைகள் மூலம் வெளியான கார்பன் டை ஆக்ஸைடின் மதிப்பு இந்தக் கணக்கில் சேர்க்கப் படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
சடலங்களை எரிப்பது பூமியைச் சுற்றி உள்ள பசுமைக் குடிலுக்கு மிகவும் ஊறு விளைவிக்கக் கூடிய காரியமாகும் என்று அவர் தெரிவிக்கிறார்.
ஒருவர் இறந்ததும் தன்னுடைய உடலை மண்ணோடு மண்ணாகக் கரையும் வகையில் தானம் செய்வது, அதாவது மண்ணில் அடக்கம் செய்வது வன வளத்தைக் காக்கும் சிறந்த பணியாகும் என்று அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
"ஈழ்ங்ம்ஹற்ண்ர்ய் ன்ய்ஜ்ண்ள்ங் ண்க்ங்ஹ'' ள்ஹஹ்ள் ள்ஸ்ரீண்ங்ய்ற்ண்ள்ற் - "எரிப்பது புத்திசாலித் தனமான காரியமல்ல'' விஞ்ஞானி சொல்கிறார் - என்ற தலைப்பில் மேற்கண்ட செய்திகள் ஹிந்து நாளேட்டில் 19.04.2007 அன்று வெளியான செய்தியாகும்.
இந்த விஞ்ஞானியின் கருத்தை இப்போது கொஞ்சம் அசை போடுவோம்.
உலகில் நூறு கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், அதை விட அதிகமான கிறித்தவர்கள் ஆகியோர் தங்கள் சடலங்களை எரிக்க ஆரம்பித்தால் ஏற்கனவே சூடாகிக் கொண்டிருக்கும் பூமியின் வெப்பத்தை அது அதிகரிக்கச் செய்து, உலகம் வெகு சீக்கிரத்தில் அழிந்து போய் விடும். ஆனால் திருக்குர்ஆனின் வழி காட்டுதலால் இறந்த மனிதர்களின் சடலங்கள் மண்ணில் புதைக்கப் படுகின்றன.
மண்ணில் கிடந்து சிதிலமாகும் இந்த உடல் மரத்திற்கு உரமாகி சத்துக்களை வழங்கும் என்று அந்த அறிவியல் அறிஞரின் கூற்று மேம்போக்கானதல்ல! அறிவியல் உண்மையாகும்.
வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன.
ஒரு தடவை மின் வெட்டி மறையும் போது, காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும், 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது. இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது.
வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன! இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது.
மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன. அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றில் நைட்ரேட்டுகள் உருவாகின்றன. கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது. இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன.
இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடுவதன் மூலமோ மனிதன் நைட்ரஜனைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றான்.
மனிதனுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் அது மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது. மனித உடலில் மட்டுமல்லாது மொத்த உயிரினங் களின் உடலிலும் நைட்ரஜன் கலந்து அந்த உயிரினங்கள் மடிந்ததும் மண்ணில் கலந்து விடுகின்றது. பின்னர் மீண்டும் காற்றிலேயே கலந்து விடுகின்றது. இதற்குப் பெயர் தான் நைட்ரஜன் சுழற்சி என்று வழங்கப்படுகின்றது.
மனிதனால் மரத்துக்குப் பயன்; மரத்தால் மனிதனுக்குப் பயன் என்று மனிதனுக்கும் மரத்திற்கும் உள்ள உறவை இது விளக்குகின்றது. இறந்த உடலை மண்ணில் புதைப்பதன் மூலம் தான் இந்தச் சுழற்சி சாத்தியமாகும். அவ்வாறு புதைப்பது தான் இயற்கையானதாகும். இதையே திருக்குர்ஆனின் பின்வரும் வசனம் குறிப்பிடுகின்றது.
இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப் படுத்துவோம்.
அல்குர்ஆன் 20:55
மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப் படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.
அல்குர்ஆன் 22:5
இந்த வசனங்களின் கருத்து அப்படியே அறிவியல் கண்டு பிடிப்புகளுடன் பொருந்திப் போவதை நாம் பார்க்க முடிகின்றது. மண்ணில் படைக்கப்பட்டவன் மண்ணிலேயே திருப்பப்படுகிறான் என்ற உண்மையையும் இந்த வசனங்கள் தத்ரூபமாக எடுத்துக் காட்டுகின்றன.
மனிதனை மண்ணில் புதைப்பது தான் இயற்கையானது என்பதை அல்லாஹ்வின் வசனங்களிலிருந்தும், அறிவியல் உண்மைகளிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
உலகம் இப்படித் தான் இயங்க வேண்டும் என்ற ஓர் இயற்கை விதியை அல்லாஹ் நிர்ணயித்து உள்ளான். அவனே அதைத் தனது வேதத்தின் மூலம் வழங்கி, இயற்கை விதியையும் வேத விதிகளையும் ஒத்துப் போகச் செய்கிறான். இங்கு இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கமாகத் திகழ்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்கிறோம்.
அத்துடன் நாம் இன்னொரு விளக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மங்கையும் கங்கையும்
மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம்; ஆனால் கங்கையே சூதகமானால் எங்கே போவது? என்று சொல்வார்கள். இமயத்தில் பிறந்த தூய்மையான பளிங்கு போன்ற பனி நீரைக் கொண்ட கங்கை நதி, இன்று எரிக்கப்பட்ட சடலங்களின் சாம்பல்களாலும், சாக்கடைகளாலும் களங்கப்படுகிறது. சடலத்தை எரிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மட்டுமல்ல! சுத்தமான தண்ணீரும் மாசுபட்டுப் போகின்றது.
கங்கை மட்டுமல்லாது இந்தியாவில் ஓடும் அத்தனை ஜீவ, பருவ நதிகளும் இப்படி மாசுபட்டு விட்டன.
நர சாம்பலால் நாறிப் போன தண்ணீர் தான் இன்று குடிநீராக, கோடான கோடி மக்களால் பருகப்படுகிறது. இதுவெல்லாம் ஏன்? இயற்கை மார்க்கமான, இறை மார்க்கமான இஸ்லாத்தை விட்டு விட்டு மனிதர்கள் தாங்களாக உருவாக்கிக் கொண்ட செயற்கை மார்க்கங்களை பின்பற்றுவதால் தான்.
இவற்றைச் சிந்தித்துப் பார்த்து, இஸ்லாத்தின் பக்கம் மக்கள் அனைவரும் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை!
அடக்கத்தலத்தின் ஆகாய விலை
"நகரத்தின் மத்தியிலா வீடு வாங்கப் போகிறீர்கள்? அங்கு சதுர அடிக்கு பத்தாயிரம் ரூபாய் ஆகுமே!' என்று வீடு வாங்குபவர்களிடம் நாம் பேசிக் கொள்வோம். உயிருடன் உள்ளவர் தனக்காக வீடு வாங்கும் போது நாம் இவ்வாறு சொல்வோம். ஆனால் செத்தவருக்கு நிலம் தேடுவோரிடம் இப்படிச் சொன்னால் எப்படியிருக்கும்?
"இந்த மையவாடியிலா அடக்கம் செய்யப் போகிறீர்கள்? அங்கு ஒரு சதுர மீட்டர் நிலம் 7,800 யுவான்; அதாவது ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் 45 ஆயிரம் இந்திய ரூபாய்)' என்று சீனாவில் உள்ளவர்கள் பேசிக் கொள்கின்றனர்.
இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. 03.04.2007 அன்று பி.பி.சி. வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் தான் கூறுகிறோம்.
மத்திய சீனாவின் ஹெனான் மாநிலம் செங்ஸாவ் என்ற இடத்தில் ஒரு சதுர மீட்டர் அடக்கத்தல இடம் 7,800 யுவான் ஆகும். இதே பகுதியில் குடியிருக்க வீடு வேண்டுமென்றால் ஒரு சதுர மீட்டர் 4,000 யுவான் மட்டுமே!
வீட்டுக்குச் செலவு செய்வதை விட இறந்தவரின் அடக்கத்தலத்திற்கு இரு மடங்கு செலவாகின்றது.
சமீபத்தில் சீனாவில் அடக்கத்தல விற்பனையில் உலகளாவிய வணிகம் உள்ளே நுழைந்து அவற்றின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து விட்டன. பொது மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி விட்டனர். அரசாங்கத்தினால் இதைத் தடை செய்யவும் முடியவில்லை. காரணம், இது தொடர்பாக 1997ல் இயற்றப்பட்ட சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளன என்று அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.
சீனா ஏன் இவ்வாறு அவதிக்குள்ளாக வேண்டும்?
கல்லறைகள் சந்திப்பு நாள் என்று ஒரு நினைவு நாளை ஏற்படுத்தி அந்நாளில் சீனர்கள் கல்லறைகளில் போய் குவிகின்றனர். இதற்காக இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் அவர்கள் கல்லறைகளை எழுப்புகின்றனர். அத்துடன் பொதுச் சொத்தாக இருக்க வேண்டிய அடக்கத்தலத்தை தங்கள் குடும்பச் சொத்தாக ஆக்கிக் கொள்கின்றனர். இதனால் தான் சீனர்கள் இந்தச் சீரழிவைச் சந்திக்கின்றனர்.
இறந்தவர்களை மண்ணில் அடக்கம் செய்து விட்டு அதன் மீது கல்லறைகளை, நினைவுச் சமாதிகளை கட்டாமல் இருந்தால் இப்படியொரு பிரச்சனையை சீனர்கள் எதிர் நோக்க வேண்டிய அவசியமில்லை. இந்த இயற்கை முறையைத் தாண்டிச் செல்வதால் இந்தச் சோதனையை சந்திக்கின்றனர்.
சீனர்கள் மட்டுமல்ல! கிறித்தவர் களும் கூட கல்லறை கட்டுவதால் இது போன்ற சோதனையை அனுபவிக்கின்றனர். சென்னை போன்ற பகுதிகளில் கிறித்தவர்களின் கல்லறைக்கு கிட்டத்தட்ட இதே நிலை தான் உள்ளது.
இங்கு தான் இஸ்லாம் என்ற இயற்கை மார்க்கம் இயற்கைக்கு இயைந்த ஓர் உத்தரவைத் தனது இறைத் தூதர் மூலம் பிறப்பிக்கின்றது.
"தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே!'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1609
கப்ரு பூசப்படுவதையும், அதன் மீது அமரப்படுவதையும், அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610
இறைத் தூதரின் இந்த உத்தரவை முஸ்லிம்கள் உலகெங்கிலும் நடைமுறைப்படுத்துகிறார்கள்.
01.08.05 அன்று சவூதி மன்னர் ஃபஹத் மரணம் அடைந்தார். அவர் இறந்ததும் உலகச் சந்தையில் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது.
இப்படிப்பட்ட ஒரு பணக்கார நாட்டு மன்னரின் அடக்கத்தலம் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய வகையில் அமைந்தது. ரியாதில் அல் அவ்து என்ற பொது மயானத்தில் ஆறடி நிலத்தில் ஆடம்பரமின்றி அடக்கம் செய்யப்பட்டார். அவரது சமாதி பல கோடிக்கணக்கான பணச் செலவில் பளிங்கால் அமையவில்லை. இதற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த உத்தரவு தான்.
தரை மட்டத்திற்கு மேல் அடக்கத்தலத்தை உயர்த்தக் கூடாது என்றும், கப்ருகளைப் பூசக் கூடாது என்றும் அவர்கள் கூறி விட்டதால் முஸ்லிம்கள் தங்கள் அடக்கத் தலங்களை மண்ணோடு மண்ணாக ஆக்கிக் கொள்கின்றனர். (தர்ஹாக்கள் என்ற பெயரில் சமாதிகளின் மீது முஸ்லிம் பெயர் தாங்கிகள் கட்டடங்களைக் கட்டியிருப்பதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.)
இஸ்லாம் கற்றுத் தந்துள்ள இந்த இயற்கை முறையினால், எவ்வளவு பேர் இறந்தாலும் அடக்கத்தலத்திற்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது.
அடக்கத் தலத்திற்கு சதுர அடி கணக்கில் நிலம் வாங்குவது, விற்பது போன்ற நெருக்கடிகளையும் முஸ்லிம்கள் சந்திப்பதில்லை. இவ்வாறு அடக்கம் செய்வதால் பொருளாதார ரீதியிலும் பெரும் நன்மை கிடைக்கிறது.
மூளைக்காய்சலுக்கு காரணம்
12.09.2000 அன்று பி.பி.சி.யில் வெளியான ஒரு செய்தி: மூளைக் காய்ச்சலுக்கு உத்தர பிரதேசத்தில் 100 பேர் இறந்தனர். 400 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது அரசாங்கம் அறிவிக்கும் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைத் தாண்டும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நோய் இப்பகுதியில் 22 வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்டது என்றும், இதன் காரணமாக இது வரை 7000 பேர் இறந்திருக்கிறார்கள் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மிக அதிகமாக இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதற்கு மூல காரணம் பன்றிகள் தான். இந்தப் பன்றிகளைக் கொல்ல வேண்டும். அரசியல் காரணங்களால் பன்றிகள் இன்னும் உலா வந்து கொண்டிருக்கின்றன என்றும் அந்தச் சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இவ்வாறு பி.பி.சி.யின் அந்தச் செய்தி கூறுகின்றது.
26.07.07 அன்று ஹிந்து நாளேட்டில் வெளியான செய்தி:
இந்த நோயின் தாக்குதலை விட்டும் காப்பதற்காக 11 மில்லியன் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. (முதலில் பன்றியிடமிருந்தும் பின்னர்) கொசுவின் மூலம் பரவும் இந்த வைரஸ் ஆசியா பசிபிக் பகுதியிலுள்ள 10,000 குழந்தைகளை ஒவ்வொரு வருடமும் பலி வாங்கியுள்ளது.
இத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு தப்பியுள்ளனர். ஆனால் அவர்களின் நரம்பு மண்டலங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இது "ஹிந்து' தரும் தகவலாகும்.
1999ல் இந்நோய் மலேஷியாவில் ஏற்பட்டதும், அந்நாடு 64,000 பன்றிகளைக் கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டது. மலேஷியாவில் இந்நோய் பரவத் தொடங்கியதும் மக்கள் கிராமம் கிராமமாக வெளியேற ஆரம்பித்து விட்டனர் என்று 19.03.1999 அன்று பி.பி.சி. குறிப்பிட்டுள்ளது.
அனுபவமும் அறிவியலும் உணர்த்தும் பாடம்
மூளைக் காய்ச்சல் ஏற்படுவதற்கு மூல காரணம் பன்றிகள் தான். அனுபவப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் இதை மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். சாக்கடையில் குளியல் நடத்தும் பன்றியிடம் உட்கார்ந்து இரத்தத்தை உறிஞ்சிய கொசு நம் வீட்டுக் குழந்தைகள் மீது வந்து உட்கார்ந்து விட்டால் போதும்; குழந்தைக்கு மூளைக் காய்ச்சல் வந்து விடும் என்று வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அளவுக்கு அறிவியல் ரீதியாக உணர்த்தப்படும் இந்நோய்க்குப் பெயர் ஜப்பானீஸ் என்ஸபலைடிஸ் என்பதாகும். இந்நோய் 1871ல் ஜப்பானில் அடையாளம் காணப்பட்டதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. என்ஸபலைடிஸ் என்றால் மூளையில் எரிச்சல் ஏற்பட்டு செயலிழப்பதாகும். இந்த நோயின் வைரஸ் ஃப்லாவிவிரிடியா என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இந்த வைரஸ் வந்து தங்கி வளர்வதும், வாழ்வதும் சாட்சாத் பன்றிகளிடம் தான். அவற்றிடமிருந்து கொசுக்கள் மனிதர்களிடம் அந்நோயைத் தொற்றச் செய்கின்றன.
உலகில் இஸ்லாம் தான் பன்றியின் இறைச்சியைத் தடை செய்கின்றது.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2:173
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்.
அல்குர்ஆன் 5:3
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான்.
அல்குர்ஆன் 16:115
இந்த வசனங்கள் அனைத்தும் பன்றியின் இறைச்சியை உண்பதைத் தடை செய்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, "நிச்சயமாக மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்துள்ளனர்!'' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே அதைப் பற்றிக் கூறுங்கள்!'' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "கூடாது! அது ஹராம்!'' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, "அல்லாஹ் யூதர்களை தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 2236
இதன் மூலம் பன்றியை விற்பனை செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! மர்யமின் புதல்வர் (ஈசா) உங்களிடம் நேர்மையான நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை உடைப்பார்! பன்றியைக் கொல்வார்! காப்பு வரியை (ஜிஸ்யா) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2222
பன்றி என்பது கொல்லப்பட வேண்டிய பிராணி என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.
"நர்தஷீர் எனும் விளையாட்டை விளையாடுபவர் தனது கையை பன்றியின் இறைச்சியிலும், இரத்தத்திலும் தோய்த்தவர் போன்றவர் ஆவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: முஸ்லிம் 4194
பன்றியின் இறைச்சியிலும், இரத்தத்திலும் கை வைப்பது கூட அருவருக்கத்தக்க செயல் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.
பன்றியினால் ஏற்படும் தீமை களை உணர்ந்து தான் இஸ்லாமிய மார்க்கம் இப்படியொரு கடுமையான நிலைபாட்டை எடுக்கின்றது. ஆனால் உலகம் பன்றியின் தீமையை உணர்ந்தபாடில்லை.
ஆந்திர மாநிலத்தில் 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் மூளைக் காய்ச்சல் நோய் தாக்கி 100 குழந்தைகள் இறந்தனர்; 500 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போது முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, உடனே பன்றி வளர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். அதற்கு அதிகாரிகள், "பத்து லட்சம் பேர் பன்றி வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுகின்றனர்; அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யுங்கள்'' என்று பதிலளித்தனர்.
மக்களின் உயிருடன் விளையாடுகின்ற எந்த ஒரு தொழிலையும் ஒழித்துக் கட்டும் இயற்கை மார்க்கமான இஸ்லாமிய ஆட்சியின் அவசியத்தை இங்கு உணர வேண்டும்.
வேதத் தூதரின் வேதியல் விளக்கம்
இரு கண்ணாடித் தொட்டிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டிலும் சம அளவில் கலக்கப்பட்ட சுண்ணாம்பு நீரை ஊற்றுங்கள். ஒரு தொட்டியில் சைக்கிள் டயருக்குக் காற்றடிக்கும் பம்பை வைத்து காற்றை ஊதுங்கள். இன்னொரு தொட்டியில் ஸ்ட்ரா மூலம் நீங்கள் காற்றை ஊதுங்கள். என்ன நடக்கின்றது? இரண்டு பாத்திரங்களில் உள்ள சுண்ணாம்பு நீரும் பால் நிறத்தில் மாறும். ஆனால் ஒரு வித்தியாசம் ஏற்படும்.
வாயினால் ஊதிய, அதாவது நமது மூச்சுக் காற்றுடன் கலந்த அந்தச் சுண்ணாம்பு நீர் மிக மிக விரைவாக பால் நிறத்தைப் பெறுகின்றது. ஆனால் நமது சுவாசக் குழாயில் செல்லாத வெளிக் காற்று கலந்த நீர் மெதுவாகவே பால் நிறத்தை அடையும்.
இதில் என்ன மர்மம் அடங்கியிருக்கின்றது? இதை இந்த வரைபடம் உங்களுக்கு விளக்கும்.
மனித இனம், மிருக இனம், தாவர இனம் போன்ற அத்தனை உயிரினமும் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழ முடியாது.
இந்த ஆக்ஸிஜனைப் பெறுவதற்காக நாம் வெளியிலிருந்து காற்றை உள்ளே இழுத்து உடனே வெளியே விடுகிறோம்.
நம்முடைய உடல் உயிரணுக்களால் அமைந்தது. ஒவ்வோர் உயிரணுவும் தனக்குரிய பணியைச் செய்து கொண்டிருக்கிறது. இந்த உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் தேவை. அந்த ஆக்ஸிஜன் தான் நாம் சாப்பிடும் உணவிலிருந்து நமக்குத் தேவையான சக்தியை உயிரணுக்கள் எடுப்பதற்கு உதவுகிறது.
இந்த ஆக்ஸிஜன் காற்று மூலமாக, நாசித் துவாரம் வழியாக நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நுரையீரலுக்கு வந்த இந்த ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு, உயிரணுக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறது. அந்த உயிரணுக்கள் ஆக்ஸிஜனைப் பெற்றுக் கொண்டு கெட்ட காற்றை, கார்பன் டை ஆக்ஸைடை வெளியே விடுகின்றது. இந்தக் கார்பன்டை ஆக்ஸைடு உடலுக்குள் தங்கினால் அது மிகப் பெரும் கேட்டை உருவாக்கி விடும்.
நாம் உடற்பயிற்சி செய்வதற்காக ஓடுகிறோம். அப்போது நம்முடைய உயிரணுக்கள் மிகக் கடுமையாக வேலை செய்கின்றன. அவற்றுக்கு அப்போது ஆக்ஸிஜன் அதிகமாகத் தேவைப்படுகிறது. இந்த ஆக்ஸிஜன் தேவைக்கு ஏற்ப இரத்த ஓட்டத்தின் வேகமும் அதிகரிக்கும்.
நாம் ஓடும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ நமது இருதயம் வேகமாக அடிக்கும்; அதன் துடிப்பு அதிகரிக்கும்; நமக்கு மூச்சிறைக்கும். ஏன்? இரத்த வேகத்திற்குத் தக்க இருதயம் செயல்பட்டாக வேண்டும் என்பதால் தான்.
இந்த மூச்சிறைப்பின் காரணமாக அதிகமான உடலிலிருந்து அதிகமான கார்பன்டை ஆக்ஸைடு வெளியாகின்றது. உடற்பயிற்சிகளின் போது நாம் அதிகமான ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறோம். அதிகமான கார்பன்டை ஆக்ஸைடை வெளியே விடுகிறோம். சாதாரண நேரத்தை விட இது போன்ற உடற்பயிற்சிகளின் போது அதிகமான ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு, அதற்குத் தக்க கார்பன்டை ஆக்ஸைடை வெளியே விடுகிறோம். வேகமாகச் செல்லும் வாகனத்திற்கு அதிக எரிபொருள் தேவைப்படுவது போல் நமது உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் என்ற எரிபொருள் தேவைப்படுகிறது.
நம்முடைய உடலில் உயிரணுக்கள் எவ்வாறு ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு, கார்பன்டை ஆக்ஸைடை வெளியே விடுகின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
இதை எப்போது கண்டு பிடித்தார்கள்?
ஸ்காட்லாண்ட்டின் இயற்பியல் மற்றும் வேதியியல் அறிஞர் ஜோசப் பிளாக் (1728-1799) என்பவர் 1754ம் ஆண்டு கார்பன்டை ஆக்ஸைடை அடையாளம் கண்டார்.
ஜோசப் பிரிஸ்ட்லே (1733-1804) என்பவர் 1774ம் ஆண்டு ஆக்ஸிஜனைக் கண்டுபிடிக்கிறார்.
ஆக, ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடைப் பற்றிய விபரம் 18ம் நூற்றாண்டில் தான் மனித இனத்திற்குத் தெரிய வருகின்றது. இந்த விபரத்தை 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மத் (ஸல்) அவர்களால் எப்படிச் சொல்ல முடியும்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (எதையும்) பருகும் போது பாத்திரத்திற்குள் மூச்சு விட வேண்டாம்; கழிப்பிடம் சென்றால் பிறப்புறுப்பை வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத்தால் சுத்தம் செய்ய வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூ கத்தாதா (ரலி)
நூல்: புகாரி 153
18ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு செய்தியை ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரால் எப்படிக் கூற முடிந்தது?
எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த வேதியியல் கருத்தைக் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் ஓர் இறைத் தூதர் தான் என்பதை இதிலிருந்து நிரூபணமாகின்றது.
அதனால் தான் அவர்கள் கொண்டு வந்த திருக்குர்ஆன், அறிவியல் உலகை நோக்கி இன்றும் உயிரோட்டமான ஓர் அறைகூவலை விடுகின்றது.
நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 2:23
நாம் இந்த ஆய்வை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்பதற்காக! அதனால் தான், பருகும் போது பாத்திரத்திற்குள் மூச்சு விட வேண்டாம் என்று இயற்கைக்கு எதிரான இந்தக் காரியத்தை இது தடுக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டவே இந்த ஆய்வுரை இங்கு சமர்ப்பிக்கப்படுகிறது.ள
வேலியே பயிரை மேயும் வேதனை
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கத்தோலிக்க திருச்சபை 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவுள்ளது. இந்த ஐநூறு பேரும் கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப் பட்டவர்கள். 660 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்குவதற்காக நீதிபதியின் ஒப்புதலுக்கு, திருச்சபை காத்திருக்கின்றது என்று வாதியின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்தச் செய்தி பி.பி.சி.யில் 15.07.2007 அன்று வெளியானது.
இது 2002ல் பாலியல் பலாத்கார ஊழல் வெடித்த பிறகு திருச்சபை செலுத்த வேண்டிய மிகப் பெரிய தொகையாகும்.
1950 முதல் அமெரிக்காவிலுள்ள டயோசீஸ் பாதிரிகளின் பாலியல் விவகாரத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட நஷ்ட ஈட்டுத் தொகை 2 பில்லியன் டாலர் ஆகும். இதில் கால் பகுதியை லாஸ் ஏஞ்சல்ஸ் திருச்சபை மட்டும் செலுத்தியுள்ளது.
73 வயது நிரம்பிய பால் ஷான்லே என்ற பாதிரியாரும், மற்றொரு பாதிரியும் வாட்டிகன் தலைமையகத்தால் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். நான்கு சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது தான் பால் ஷான்லே மீதான குற்றச்சாட்டு!
இது போன்று பெண்களிடம் நடந்த பாலியல் கொடுமைகளையும் பி.பி.சி.யின் இந்தச் செய்தித் தொகுப்பு பட்டியலிடுகின்றது.
பொதுவாக ஆண், பெண் இரு பாலருமே பால் உணர்வுடன் தான் படைக்கப்பட்டுள்ளனர். ஆண், பெண் இரு பாலர்களுக்கும் பசி, தாகம் ஏற்படுவது போலவே பருவ வயது வந்ததும் பாலியல் தேட்டமும் ஏற்படுகின்றது. இதற்கு ஒரு வடிகால் இல்லையென்றால், மறிக்கப்படும் ஆற்று வெள்ளம் பல வழிகளிலும் பாய்வது போன்று பாலியல் உணர்வு பொங்கி வழிய ஆரம்பித்து விடும்.
இது தான் திருச்சபை பாதிரியார்களின் பாலியல் ஊழல் மூலம் பளிச்சென்று வெளியே தெரிகிறது.
அதனால் தான் துறவு நிலையை மேற்கொள்ளக் கூடாது; அவ்வாறு மேற்கொள்பவர்கள் முஸ்லிம்களே கிடையாது என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் பிரகடனப்படுத்தி விடுகிறார்கள். இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து கேட்டனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள், நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது.
பிறகு, "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே?'' என்று சொல்-க் கொண்டனர்.
அவர்களில் ஒருவர், "நான் என்ன செய்யப் போகின்றேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகின்றேன்'' என்றார்.
இன்னொருவர், "நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகின்றேன்'' என்றார்.
மூன்றாம் நபர், "நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகின்றேன். ஒரு போதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்'' என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தானே! அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவனாவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கின்றேன். விட்டு விடவும் செய்கின்றேன். தொழவும் செய்கின்றேன். உறங்கவும் செய்கின்றேன். மேலும் நான் பெண்களை மணம் முடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)
நூல்: புகாரி 5063
திருமணம் முடித்தவர்களே இன்றைய உலகில் வழி தவறும் போது திருமணம் முடிக்காதவர்களின் நிலையை நாம் சொல்லவும் வேண்டுமா? இது போன்ற காரணங்களால் தான் துறவறத்தைக் கடமையாக்கவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
பின்னர் அவர்களின் அடிச் சுவட்டில் நமது தூதர்களைத் தொடர்ந்து அனுப்பினோம். மர்யமின் மகன் ஈஸாவையும் (அவர்களைத்) தொடர்ந்து அனுப்பினோம். அவருக்கு இஞ்சீலைக் கொடுத்தோம். அவரைப் பின்பற்றியோரின் உள்ளங்களில் இரக்கத்தையும், அன்பையும் ஏற்படுத்தினோம். தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் மீது நாம் விதியாக்கவில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களின் கூலியைக் கொடுத்தோம். அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள்.
அல்குர்ஆன் 57:27
துறவறத்தை இறைவன் கடமையாக்கவில்லை. கிறித்தவர்கள் துறவறத்தைத் தங்களுக்குத் தாங்களே கடமையாக்கிக் கொண்டு, அதைச் சரிவரப் பேணவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அதாவது, துறவறம் என்பது இயற்கையை எதிர்த்து நிற்பது என்று கூறி அதை வெறுக்கிறது.
இஸ்லாத்தைப் போதிக்க வந்த இறைத்தூதர்கள் அனைவருக்கும் மனைவி, மக்களை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 13:38
திருக்குர்ஆன் என்ற இறை வேதம் மனிதனின் இயற்கைக்குத் தக்க திருமணத்தை முடிக்கச் சொல்கிறது. அதாவது, பாலியல் உணர்வுகளை உரிய வழியில், திருமணம் என்ற ஒப்பந்த அடிப்டையில் தீர்த்துக் கொள்ளச் செய்கிறது.
ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்ற ஓரினச் சேர்க்கையையும் இயற்கைக்கு மாற்றமான வெறுக்கத்தக்க நியதி என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
லூத்தையும் (அனுப்பினோம்). "நீங்கள் வெட்கக்கேடான செயலைச் செய்கிறீர்கள்! அகிலத்தாரில் உங்களுக்கு முன் யாரும் இதைச் செய்ததில்லை; சரியான வழியைத் துண்டித்து விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? உங்கள் சபையில் அந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கிறீர்களா?'' என்று அவர் தமது சமுதாயத்துக்குக் கூறிய போது, "நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக'' என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.
அல்குர்ஆன் 29:28, 29
இது போன்ற சீரழிவுக்கு உள்ளாக்கும் காரியத்தைச் செய்த ஒரு சமுதாயத்தையே இறைவன் அழித்து விட்டதாகக் கூறுகிறான்.
இவ்வாறு மனிதனை இயற்கையான இனிய வழியில் செல்லச் செய்வது இஸ்லாமிய வழியாகும். காரணம், அது இறைவன் வழங்கிய இயற்கை நெறியாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக