அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

(ரஹ்) (அலை) (ஸல்) (ரலி) - என்றால் என்ன?

கேள்வி: (ரஹ்) (அலை) (ஸல்) (ரலி) - என்றால் என்ன? அதன் விளக்கம் என்ன? அதன் அர்த்தம் என்ன? அதை ஏன் போடுகின்றீர்கள்? அதை ஏன் அந்த காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு மட்டும் போடுகிறீர்கள்? அதை ஏன் இப்போது உள்ள முஸ்லிம்களுக்கு போடுவதில்லை?
- என்று மாற்று மதத்தினர் கேட்கும்போது நாம் எப்படி விளக்கமாக கூற வேண்டும்?
- தஸ்லீம், சென்னை.
பதில்: ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கமாகும். எழுத்தில் ஸல் என்று கூறப்பட்டாலும் வாசிக்கும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்கவேண்டும். "அவர் மீது அல்லாஹ் சிறப்பருள் புரியட்டும். சாந்தியை வழங்கட்டும்'' என்பது இதன் பொருள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்படும் போது அவர்களுக் காக ஸலவாத் கூறவேண்டும். அதாவது அவர்களுக்காக இறையருள் வேண்டி துஆச் செய்யவேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி வலியுறுத்தியுள்ளனர். எனவே, முஹம்மது நபியவர்களைப் பற்றிக் கூறும் போது, "அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும் என்பதையும் சேர்த்துக் கூறுகிறோம்.
ஒவ்வொரு சமுதாயமும் தங்களுக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட நபிமார்களைக் கடவுளர்களாக ஆக்கி விட்ட நிலையில் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கடவுளாக ஆக்காமல் இந்த அடைமொழித் தடுத்து வருகிறது.
நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசும் போதெல்லாம் ஸலவாத் என்ற பெயரில் அவர்களுக்கு நாம் துஆச் செய்கிறோமே தவிர அவர்களிடம் துஆச் செய்யமாட்டோம் என்ற தெளிவை முஸ்லிம் சமுதாயத்துக்கு ஸலவாத் என்னும் பழக்கம் உருவாக்கியுள்ளது.
(அலை) என்பது அலை ஹிஸ்ஸலாம் அல்லது அலை ஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்பதன் சுருக்கமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) தவிர மற்ற நபிமார்களைப் பற்றிக் கூறும் போது இவ்வாறு பயன்படுத்தி வருவது வழக்கமாகவுள்ளது. "அவர் மீது இறைவனின் சிறப்பருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக'' என்பது இதன் பொருள். அதாவது ஸல்லஸ்லாஹு அலைஹி வஸல்லம் என்பதற்கு என்ன பொருளோ அதே பொருள் தான் அலை ஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்பதற்கும் பொருளாகும்.
நபிகள் நாயகம் (அலை) என்றோ மூஸா (ஸல்) என்றோ பயன்படுத்தினால் அதில் எந்தத் தவறும் இல்லை. பழங்கால நூல்களில் இப்படிப் பலரும் பயன்படுத் தியுள்ளனர்.
ஆனாலும் ஸல் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் (அலை) என்பதை மற்ற நபிமார்களுக்கும் பயன்படுத்துவதை வழக்கமாக ஆக்கிவிட்டனர்.
(ரலி) என்பது ரலியல்லாஹு அன் ஹு என்பதன் சுருக்கமாகும். அவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்பது இதன் பொருள். இதை எந்த இறை நம்பிக்கையாளருக்கும் பயன் படுத்தலாம். எல்லோருக்கும் இறைவனின் பொருத்தம் தேவையானதுதான்.
ஆனாலும், இதை நபித்தோழர் களுக்கு மட்டுமே பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது. கட்டாயமான ஒன்றல்ல. நபித்தோழர் அல்லாத மற்றவர்களுக்கும் (ரலி) என்பதைப் பயன்படுத்துவது மார்க்கச் சட்டப்படி குற்றமல்ல.
உங்களைக் கூட தஸ்னீம் (ரலி) எனக் கூறலாம்.
ஆனாலும் (ரலி) என்பது அதன் அர்த்தத்தைக் கடந்து நபித்தோழர்களின் அடையாளமாகவே இன்று ஆகிவிட்டது. மற்றவர்களுக்கு ரலி என்று பயன் படுத்தினால் அவர்கள் நபித்தோழர் களாக இருப்பார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும். இதைக் கவனத்தில் கொண்டு மற்றவர்களுக்கு இதைப் பயன்படுத்தாமல் தவிர்க்கலாம்.
ரஹ் என்பது ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்பதன் சுருக்கம். அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக என்பது இதன் பொருள். எல்லா நம்பிக்கையாளர் களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். ஏனெனில் அனைவருக்குமே அல்லாஹ் வின் அருள் தேவை தான். ஆனால், நடைமுறையில் இறந்தவர்களுக்கு மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது. அதுவும் பிரபலமானவர்களுக்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனக்கோ உங்களுக்கோ இதைப் பயன்படுத்தினால் நாம் எந்தக் காலத்திலோ வாழ்ந்து மடிந்தவர்கள் என்று மக்கள் நினைப் பார்கள்.
இதை எவருக்கும் பயன்படுத்தலாம். மார்க்க ரீதியாக இதற்குத் தடை இல்லை.
இதை முஸ்லிமல்லாதவர்கள் கேட்டதாக நீங்கள் கூறுவது நம்பும்படி இல்லை. இருந்தாலும் முஸ்லிம்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்பதால் இது பற்றி விளக்கம் தரப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites