அவர்களின் வாதம்:
இறந்தவர் வர மாட்டார் என்று சொன்னால், இறந்து போன நபி மூஸா (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் முன்னால் தோன்றி, ஐம்பது ரகஅத் தொழுகையை ஐந்து ரகஅத் தொழுகையாகக் குறைப்பதற்கு எப்படி உதவி செய்தார்கள்? அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களே! அப்போது நபி (ஸல்) அவர்கள், "இறந்தவர்களிடம் உதவி வாங்க மாட்டேன், அது ஷிர்க்' என்று சொன்னார்களா? இறந்தவர்களிடம் உதவி கிடைக்கும் என்றால் ஏன் அந்த உதவியை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
நமது பதில்:
நபி (ஸல்) அவர்களது மிஃராஜ் பயணத்தின் போது முதலில் ஒரு நாளைக்கு ஐம்பது நேரம் தொழ வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டான். அப்போது நபி மூஸா (அலை) அவர்கள், நபிகளாரிடம் "உம்முடைய சமுதாயத்தினரால் இதைச் செயல்படுத்த முடியாது. எனவே உம் இறைவனிடம் சென்று இதைக் குறைத்துக் கேளுங்கள்'' என்று கூறினார்கள். அதன்படி இறுதியாக ஐந்து நேரத் தொழுகையாகக் குறைத்து, கடமையாக்கப்பட்டது.
இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டுபவர்கள் இதில் உள்ளபடி நடந்தால் நாமும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
எப்படி மூஸா நபி அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாக வந்து தொழுகையை குறைக்கச் சொன்னார்களோ அதைப் போன்றே அப்துல் காதிர் ஜீலானி அவர்களும் நேரடியாக வந்து நமக்கு உதவி செய்யட்டும் ஏற்றுக் கொள்கிறோம். இவ்வாறு நேரடியாக உதவி செய்வதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் நாம் மறுக்கவில்லை.
நபி மூஸா (அலை) அவர்கள் எப்படி நபி (ஸல்) அவர்களின் கண் முன்னால் தோன்றினார்களோ அதைப் போன்று அப்துல் காதிர் ஜீலானி அவர்களையும் நம் முன்னர் தோன்றச் சொல்லுங்கள்; உடனே ஏற்றுக் கொள்கிறோம்.
இந்த வாதத்தை நாம் எடுத்து வைக்கும் போது, "காஃபிர்கள் அல்லாஹ்வை நேரடியாகக் கொண்டு வந்து காட்டுங்கள் என்று கூறினால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார்கள்?
அல்லாஹ்வை மனிதக் கண்களால் பார்க்க முடியாது. எனவே அல்லாஹ்வை நேரடியாகக் காட்ட முடியாது என்று சொல்வோம். நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வை நேரடியாகப் பார்க்க விரும்பிய போது அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.
நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது "என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார்.
அதற்கு (இறைவன்) "என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது "நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார்.
அல்குர்ஆன் 7:143
அல்லாஹ்வின் ஒளியைத் தாங்கும் சக்தி இங்கு யாருக்கும் இல்லை. இதை உணர்த்த, மலைக்கு அல்லாஹ் தன் ஒளியை காட்டிய போது அது தூள் தூளாகி விட்டது. எனவே மனிதர்கள் யாரும் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது.
ஆனால் அப்துல் காதிர் ஜீலானி அப்படியா? அவர் ஒரு மனிதர்! அவரை எத்தனையோ மனிதர்கள் பார்த்திருக்கிறார்கள். அவ்வாறு பார்த்தவர்கள் யாருக்கும் ஒன்றும் ஆகி விடவில்லையே! எனவே, அவரை நேரடியாகக் காட்சி தந்து உதவி செய்யச் சொல்லுங்கள். எப்படி மூஸா நபி அவர்கள் நபிகளார் முன்னிலையில் வந்து நேரடியாகப் பேசினார்களோ அதைப் போன்று பேசச் சொல்லுங்கள் என்கிறோம்.
"அப்துல் காதிர் ஜீலானி அவர்களே! எங்கள் வறுமையை நீக்குங்கள்! எங்களுக்கு பணத்தை தாருங்கள்!'' என்று ஒருவர் கேட்கட்டும்! அதற்கு அப்துல் காதிர் ஜீலானி காட்சியளித்து பணத்தைத் தரட்டும், பார்க்கலாம். நேரடியாக வந்தால் யாரிடமும் நாம் உதவி பெறலாம். அதில் எந்த தடையும் இல்லையே!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக