ஒருவர் ஓரளவு குர்ஆன் ஹதீஸ்களைத் தெரிந்து வைத்துள்ளார். அவர் மற்றவர்களுக்கும் இக்கருத்தை எடுத்துக் கூறுகின்றார். ஆனால் அவர் அவற்றை தனது நடைமுறையில் செயல்படுத்தவில்லை. தான் செய்யாவிட்டாலும் அடுத்தவருக்கு எத்தி வைக்கலாம் என்று வாதாடுகின்றார். இது சரியா?
! தான் செய்யாததை அடுத்தவர்களுக்கு மட்டும் சொல்வது மார்க்கத்தில் மிகவும் கண்டிக்கப்பட்ட செயலாகும்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது. (அல்குர்ஆன் 61:2,3)
இத்தகையவர்களுக்கு மறுமையில் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவது போன்று அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, "இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலகத்தில்) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கு அவர், "நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன். ஆனால் அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை செய்ய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன். ஆனால் அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்'' என்று கூறுவார்.
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று உஸாமா பின் ஸைத் (ர-) அறிவிக்கின்றார்கள்.
நூல் : புகாரி 3267
0 கருத்துகள்:
கருத்துரையிடுக