அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

தஸ்பீஹ் மணி மூலம் தஸ்பீஹ் செய்வது கூடுமா? நபிமொழிகளில் இதற்கு ஆதாரம் உள்ளதா?

கேள்வி: தஸ்பீஹ் மணி மூலம் தஸ்பீஹ் செய்வது கூடுமா? நபிமொழிகளில் இதற்கு ஆதாரம் உள்ளதா?
மெஹ்ருன் நிஸா, அம்மாபட்டிணம்
தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாம் என்று கூறுபவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றை முதலில் பார்ப்போம்.
நான் தஸ்பீஹ் செய்வதற்காக வைத்துள்ள நன்காயிரம் பேரீச்சம் கொட்டைகள் என் முன்னால் இருக்க நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது, "இதைக் கொண்டு தான் நீ தஸ்பீஹ் செய்வாயா?'' என்று கேட்டு விட்டு, "இதைக் கொண்டு நீ செய்யும் தஹ்பீஹை விட கூடுதலான ஒன்றை நான் உனக்குக் கற்றுக் கொடுக்கட்டுமா?'' என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் "ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று நீ சொல்'' என கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)
நூல்: திர்மிதீ 3477
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பேரீச்சம் கொட்டைகளைக் கொண்டு தஸ்பீஹ் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் எந்தத் தடையையும் செய்யவில்லை; மேலும் அவர்களின் மனைவி பேரீச்சம் கொட்டைகளைக் கொண்டு தஹ்பீஹ் செய்ததை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளதால் தற்போது நவீன காலத்தில் தஸ்பீஹ் மணி கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் தஸ்பீஹ் செய்யப்படுகிறது. எனவே இதைக் கூடாது என்று கூற முடியாது என்று வாதிடுகின்றனர்.
இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல! இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள் இச்செய்தியின் இறுதியில், "இது அறியப்பட்ட அறிவிப்பாளர் வரிசையில் அமையவில்லை'' என்று குறை கூறியுள்ளார்கள்.
மேலும் இதன் மூன்றாவது அறிவிப்பாளர் ஹாஷிம் பின் ஸயீத் என்பவர் பலவீனமானவர். அதன் இரண்டாவது அறிவிப்பாளர் கினானா என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே இந்தச் செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை. இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.
இதைப் போன்று இன்னொரு செய்தியையும் தஸ்பீஹ் மணிக்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள்.   
நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரு பெண்மணியிடம் சென்றோம். அப்பெண்மணியின் முன்னால் அவள் தஸ்பீஹ் செய்வதற்குப் பயன்படும் பேரீச்சம் கொட்டைகளோ அல்லது சிறு கற்களோ இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் (அப்பெண்மணியிடம்) இதை விட உனக்கு இலகுவான அல்லது சிறந்ததை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்...
அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1282, திர்மிதீ 3491
இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல! இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் ஹுஸைமா என்பவர் யாரென அறிப்படாதவர். இவர் நம்பகமானவரா? நினைவாற்றல் மிக்கவரா? என்பன போன்ற விவரங்கள் இல்லை. எனவே இவரை ஹாபிழ் இப்னு ஹஜர் மற்றும் தஹபீ ஆகியோர் இவரை யாரென அறியப்படாதவர் என்று குறை கூறியுள்ளனர். எனவே இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் காட்ட முடியாது.
மேலும் தஸ்பீஹ் மணி என்பது மாற்று மதத்தவர்களின் வழிபாடுகளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதாகும். அங்கு தான் சில கொட்டைகளை வைத்து பின்னப்பட்ட மாலைகளைப் பயன்படுத்தித் துதிப்பார்கள். எனவே இந்தப் பழக்கத்தைப் பின்பற்றுவது கூடாது.
"யார் மாற்றுமதக் கலச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (நூல்: பஸ்ஸார்)
மேலும் கைகளால் தஸ்பீஹ் செய்ய வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்திகளும் நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன.
"உங்கள் விரல்களால் (தஸ்பீஹ் செய்து) எண்ணுங்கள்! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்பட்டு அவைகள் பேச வைக்கப்படும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: யுஸைரா (ரலி), நூல்கள்: அஹ்மத் 25841, திர்மிதீ 3507
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் பற்றி சில அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். இரண்டாவது அறிவிப்பாளர் ஹுமைளா பின்த் யாஸிர் என்பவரும் மூன்றாவது அறிவிப்பாளர் ஹானீ பின் உஸ்மான் என்பவரும் யாரென அறியப்படாதவர்கள். இவ்விருவரையும் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் நம்பகமானவர் என்று கூறவில்லை; இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென அறியப்படாதவரையும் நம்பகமானவர் பட்டியலில் இணைத்து விடுவார் என்பதால் அவரின் கூற்று மதிப்பற்றது என்று விமர்சனம் செய்யப்படுகிறது.
இந்தச் செய்தி பலவீனமானதாக இருந்தாலும் நஸயீ என்ற நபிமொழித் தொகுப்பு நூலில் ஆதாரப்பூர்வமான செய்தி இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் தங்கள் கைகளால் தஹ்பீஹ் செய்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: நஸயீ 1331
இந்தச் செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் அதா பின் யஸீத் என்பவர் மூளை குழம்பியவர் என்ற விமர்சனம், இந்த ஹதீஸில் எந்தப் பலவீனத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் அதா பின் யஸீத் என்பவரிடம் இந்தச் செய்தியில் செவியுற்ற ஹம்மாத் பின் ஸைத் என்பவர், இவர் மூளை குழப்பம் ஏற்படுவதற்கு முன்னர் கேட்டவர் என்று யஹ்யா பின் அல்கத்தான் அவர்கள் குறிப்பிடும் செய்தி "தஹ்தீபுத் தஹ்தீப்' என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக அமைந்துள்ளதால் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி விரல்களால் தஹ்பீஹ் செய்வதே நபிவழியாகும்.

மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரமா ?

 மார்க்கத்தில் மெட்டி அணிவது கூடுமா? மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே! இதற்கு விளக்கம் அளிக்கவும்.
என். ஆமினம்மாள், தொண்டி
பெண்கள் திருமணமானதற்கு அடையாளமாகக் கால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணிந்து கொள்ளும் மோதிரம் போன்றுள்ள அணிகலனுக்கு மெட்டி என்று கூறுகின்றனர். இந்த அணிகலனை, பெரும்பாலும் மாற்று மதத்தில் திருமணமானதற்கு அடையாளமாக அணிகின்றனர். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் திருமணத்திற்கு அடையாளமாக இதை அணியவில்லை. சாதாரண அணிகலனாக அணிந்துள்ளனர்.
"நபி (ஸல்) அவர்கள் ஒரு பெருநாள் அன்று பெண்கள் பகுதியில் தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டபோது மோதிரங்களையும் மெட்டிகளையும் பிலாலின் ஆடையில் அப்பெண்கள் போடலானார்கள்'' என்று புகாரி (979, 4895) ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.
மெட்டியை மதச்சடங்காக இல்லாமல் அது ஒரு அணிகலன் என்ற அடிப்படையில் அணிந்து கொள்ளலாம். எப்படி ஒரு மோதிரத்தை விரும்பிய போது போட்டுக் கொண்டு விரும்பிய போது கழற்றி விடுகிறோமோ அதே அடிப்படையில் இதையும் பயன்படுத்தலாம். மேலும் திருமணம் ஆனவர்கள் என்றில்லாமல் அனைவரும் இதைப் பயன்படுத்தலாம்; எந்த விரலிலும் அணியலாம் என்ற அடிப்படையில் போட்டுக் கொள்வதில் தவறில்லை.

லிப்ஸ்டிக் பயன்படித்துக் கொண்டு பெண்கள் வெளியில் செல்லலாமா ?

பர்தா அணிந்து, மார்க்கம் சொல்கின்ற முறையில் வெளியில் செல்லக்கூடிய பெண்கள் அலங்காரமாக லிப்ஸ்டிக் போன்ற பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டு செல்லலாமா?
எம். மெஹ்ராஜ், ஈரோடு.
அந்நியர்கள் இருக்கும் இடங்களுக்குச் செல்லும் பெண்கள் இவ்வகையான கூடுதல் அலங்காரங்களைத் தவிர்க்க வேண்டும். கணவன் மற்றும் கீழ்க்கண்ட வசனங்களில் கூறப்படுபவர்கள் இருக்கும் இடங்களில் மட்டுமே கூடுதலான அலங்காரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
(அல்குர்ஆன் 24:31)

பாங்கு சொல்லும் போது மட்டும் பெண்களில் பலர் தலையை மறைக்கின்றனரே இது சரியா ?

 பெண்களில் பலர் பாங்கு சொல்லும் போது (முந்தானையின்) துûணியை தலையில் போட்டுக் கொள்வதும் பாங்கு முடிந்த பிறகு துணியை எடுத்து விடுவதுமாக இருக்கிறார்கள். இவ்வாறு செய்வது சரியா?
ஏ.எஸ்.எம். பஷீருத்தீன், கிள்ளை
அந்நிய ஆண்களுக்கு முன்னால் பெண்கள் தலையை மறைத்து இருக்க வேண்டுமென நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள். (முஸ்லிம் 5235)
ஆனால் பாங்கு சொல்லும் போது தலையில் துணியைப் போட வேண்டுமென கட்டளையிடவில்லை. சில ஊர்களில் ஆண்களும் கூட பாங்கு சொல்லும் போது தலையில் துணியைப் போட்டு, பாங்கு முடிந்தவுடன் துணியை எடுத்து விடுகிறார்கள். இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.

வரலாற்றுச் செய்திகளை ஆதாரமாக எடுப்பது குர்ஆன் ஹதீஸிற்கு எதிரானதா?

இஸ்லாத்தின் அடிப்படைகள் எத்தனை?
இஸ்லாத்தின் அடிப்படை இரண்டு தான். ஒன்று திருக்குர்ஆன், இரண்டு நபிமொழிகள். இந்த இரண்டைத் தவிர வேறு எதையும் ஆதாரமாகக் கூறக் கூடாது என்று நாம் கூறி வருகிறோம். இதற்கு அவர்கள் மறுப்பு இதோ:
"இஸ்லாத்தின் அடிப்படை திருக்குர்ஆன், ஹதீஸ் என்று கூறியவர்கள் தங்கள் நூல்களில் அல்பிதாயா வந்நிஹாயா, தபகாத், பத்ஹுல் பாரீ என்று குறிப்பிட்டு உள்ளார்கள். இவை ஹதீஸ் நூல்களா? இதில் இடம் பெற்றிருக்கும் செய்திகளுக்கு அறிவிப்பாளர் வரிசை உண்டா?'' என்று விளக்கம் கேட்கின்றனர்.
நமது விளக்கம்
நமது நிலைபாடு என்ன என்பதை விளங்காமல் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று.
இஸ்லாத்தின் அடிப்படை இரண்டு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் அடிப்படை ஆதாரம் இரண்டு என்பது எதற்கு? நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதரான நாற்பதாவது வயதிலிருந்து அவர்கள் இறந்த 63வது வயது வரை நடந்த செய்திகளுக்குத் தான். ஏனெனில் அந்தச் செய்திகள் தான் நாம் பின்பற்ற வேண்டியவை.
எனவே அந்தச் செய்தி ஆதாரப் பூர்வமானதாக இருக்க வேண்டும். பலவீனமானதாக இருக்கக் கூடாது. சங்கிலித் தொடர் இருக்க வேண்டும். அறிவிப்பாளருக்கிடையே தொடர்பு இருக்க வேண்டும்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதராக ஆவதற்கு முன்னர் நடந்த செய்திகளை நாம் பின்பற்றத் தேவையில்லை.
நபி (ஸல்) அவர்கள் எந்த வருடம் பிறந்தார்கள்? அவர்களின் தந்தை எப்போது இறந்தார்கள்? என்பதில் நாம் எதைப் பின்பற்றப் போகிறோம்? எனவே இது போன்ற வரலாற்றுச் செய்திகளில் தான் நாம் அவர்கள் கூறுகின்ற நூல்களிலிருந்து ஆதாரம் காட்டுகிறோம். இது ஒரு தகவலுக்குத் தானே தவிர பின்பற்றுவதற்கு இல்லை.
நாம் மட்டுமல்ல! அன்றைய அறிஞர்கள் கூட இது போன்ற செய்திகளுக்கு அறிவிப்பாளர் வரிசை உண்டா? என்று ஆய்வு செய்வதில்லை. நல்லவரா? கெட்டவரா என்று நபிமொழிக்கு ஆய்வு செய்வதைப் போன்று ஆய்வு செய்ததும் இல்லை. வரலாற்றுச் செய்திகளில் அது இட்டுக் கட்டப்பட்டதா? அதை யாரேனும் மறுத்துள்ளனரா? என்பது தான் கவனத்தில் கொள்ளப்படுகிறது.
பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லாத செய்திகளில் அறிவிப்பாளர் வரிசை கவனிக்கப்படுவதில்லை. நபிமொழிக்கு வழங்கிய அளவிற்கு மற்ற செய்திகளுக்கு எந்த அறிஞர்களும் முக்கியத்துவம் அளித்ததில்லை. நபிமொழிகள் பேணப்பட்டுள்ளதைப் போன்று மற்ற எந்தச் செய்திகளும் பாதுகாக்கப்படவில்லை. எனவே வரலாற்றுச் செய்திகளில் நபிமொழிக்கு உள்ள நிபந்தனைகளை நாம் எதிர்பார்க்கக் கூடாது

திருஷ்டி கழிப்பது சரியா ?

 மிளகாய் போன்ற சில பொருட்களை வைத்து ஓதி அதை தலையைச் சுற்றி எச்சில் துப்பி எறிந்தால் திருஷ்டி போய்விடும் என்று கூறுகிறார்களே, இதற்கு ஹதீஸில் ஆதாரம் உள்ளதா?
மெஹ்ராஜ், ஈரோடு
மிளகாய் போன்ற பொருட்களை வைத்து ஓதி, தலையை சுற்றிப் போடுவதற்கு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டவில்லை. ஆனால் சில பிராத்தனைகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அதை ஓதி வரலாம்.
அவூது பிகலிமாத்தில்லாஹித் தாம்மா, மின் குல்லி ஷைத்தானின் வஹாம்மா. வமின் குல்லி ஐனின் லாம்மா (அல்லாஹ்வின் முழுமையான சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத் துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்) எனும் இந்தச் சொற்களின் மூலம் நபி (ஸல்) அவர்கள், ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோருக்காகப் பாதுகாப்புத் தேடி வந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 3371

ஆதம் நபியவர்கள் அர்ஷின் கீழ் "லாயிலாஹ இல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தார்களா ?

 ஆதம் நபியைப் படைத்த பின் அவர்களுக்கு உயிர் கொடுத்த போது அவர்கள் அர்ஷின் நிலைப்படியைப் பார்த்தார்கள்; "லாயிலாஹ இல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்று எழுதப்பட்டிருந்தது. இது பற்றி அல்லாஹ்விடம் கேட்ட போது, "இவரை படைக்கவில்லையானால் இவ்வுலகைப் படைத்திருக்க மாட்டேன்'' என்று பதிலளித்ததாக ஹதீஸில் உள்ளது என ஒரு ஆலிம் கூறுகிறார். இது உண்மையா?
சிக்கந்தர்
இரமநாதபுரம்
இந்தக் கருத்தில் ஹாகிமில் ஒரு செய்தி இடம் பெற்றிருக்கிறது. இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்கள் இது ஆதாரப்பூர்வமான செய்தி என்று இச்செய்தியின் இறுதியில் குறிப்பிடுகிறார். ஆனால் இதில் அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்ற மிகவும் பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.
இமாம் ஹாகிமின் கருத்தை அடிப்படையாக வைத்துத் தான் பலர் இந்தச் செய்தியைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் இமாம் ஹாகிமின் கருத்து தவறாகும். அவர்கள் இந்தச் செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஏனெனில் இமாம் ஹாகிம் அவர்கள் தனது மற்றொரு நூலான அல்மத்கல் இலஸ்ஸஹீஹ் என்ற நூலில் அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் தன் தந்தை வழியாக இட்டுக் கட்டப்பட்ட செய்தியை அறிவிப்பவர் என்று கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். (பாகம்: 1, பக்கம்; 154)
இமாம் ஹாகிமைப் போன்று மற்ற ஹதீஸ் கலை அறிஞர்களும் இவரைப் பலவீனமானவர் என்றே குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இந்த செய்தி முற்றிலும் பலவீனமான செய்தியாகும். ஆதாரத்திற்கு ஏற்றது கிடையாது.

மாற்று மதத்தைச் சார்ந்தவர்களை நோய் விசாரிக்கலாமா? அவர்களுக்கு நோய் நிவாரணத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கலாமா?

 மாற்று மதத்தைச் சார்ந்தவர்களை நோய் விசாரிக்கலாமா? அவர்களுக்கு நோய் நிவாரணத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கலாமா?
முஹம்மத் ஹுஸைன்
திருவாரூர்
முஸ்லிமாக இருப்பவர், மற்றொரு முஸ்லிம் நோயுற்றிருக்கும் போது விசாரிப்பது அவசியமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
"ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, நோயுற்றால் நோய் விசாரிக்கச் செல்வது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரீ 1240)
மாற்று மதத்தவர்கள் நோயுற்று இருக்கும் போது நோய் விசாரிக்கச் செல்ல வேண்டுமென கட்டளையிடா விட்டாலும் அதை (நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள்  அவனிடம் வந்து அவனது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு "இஸ்லாத்தை ஏற்றுக் கொள்!'' என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், "அபுல்காஸிம் - நபி (ஸல்) அவர்களின் - கூற்றுக்குக் கட்டுப்படு'' என்றதும். அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள் "இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும்'' எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினாôர்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1356
மாற்று மதத்தவர்களை நோய் விசாரிக்கலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் மிகத் தெளிவான சான்றாகும்.
அவர்களது நோய் நிவாரணத்திற்கு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யலாமா? என்ற கேள்விக்கு செய்யலாம் என்பதே பதில். காரணம். மாற்று மதத்தவர்கள் ஓரிறைக் கொள்கையை நிராகரிக்கும் போது அவர்களின் பாவங்களை மன்னிக்குமாறு கோருவதைத் தான் அல்லாஹ் தடுத்துள்ளான்.
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக் கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. (அல்குர்ஆன் 9:113)
பாவமன்னிப்பு கேட்பது தான் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்காக நாம் நோய் நிவாரணம் கேட்கலாம். அதே நேரத்தில் "அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்குரிய நல்வாய்ப்பை அவர்களுக்கு வழங்கு' என்று கேட்பதும் முக்கியமானதாகும்.

வட்டித் தொழில் செய்பவரிடம் வேலை செய்யலாமா?

வட்டித் தொழில் செய்பவரிடம் வேலை செய்யலாமா?
ஏ. பாத்திமா நிஸா
அம்மாபட்டிணம்
வட்டித் தொழில் நடக்கும் அலுவலகங்களில் கண்டிப்பாக வேலைக்குச் செல்லக் கூடாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் வட்டித் தொழில் தொடர்புள்ள அனைத்தையும் சபித்துள்ளார்கள்.
வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (3258)
நபி (ஸல்) அவர்கள் வட்டிக்குத் துணை போகும் அனைத்தையும் சபித்துள்ளதால் இந்தத் தொழிலில் நாம் வேலை செய்யக்கூடாது. அதே நேரத்தில் ஒருவர் வட்டித் தொழில் செய்கிறார், அவர் வீட்டில் வட்டியில் தொடர்பு இல்லாத வேலைக்குச் சென்றால் அதைத் தடுக்க முடியாது. எனினும் நல்ல மனிதர்கள், நல்ல தொழில் செய்பவர்களிடம் வேலை செய்வது சிறந்ததாகும். நல்ல பண்பாட்டையும் நல்லொழுக்கத்தையும் நமக்குக் கிடைக்க அது வழிவகை செய்யும். கெட்டவர்களிடமும் கெட்ட தொழில் செய்பவர்களிடமும் நாம் சேரும் போது அவர்களின் கெட்ட செயல்கள் நமக்கும் ஒட்டிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

மறுமை நாள் வரும் போது முஸ்லிம்கள், யூதர்களை ஓட ஓட விரட்டுவார்களா ?

 "மறுமை நாள் வரும் போது முஸ்லிம்கள், யூதர்களை ஓட ஓட விரட்டுவார்கள். அப்போது அவர்கள் மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளும் போது அந்த மரம் எனக்குப் பின்னால் ஒரு யூதன் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று கூறும், ஒரு மரத்தைத் தவிர'' என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளதா?
ஜஃபர் சாதிக்
சிக்கல்
உலகம் அழியும் இறுதிக் காலத்தில் தஜ்ஜால் என்று மாபெரும் பொய்யன் ஒருவன் வருவான். அவன் பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களை நரகத்தின் பால் அழைப்பான். அந்நேரத்தில் ஈஸா (அலை) அவர்கள் வானத்தில் இருந்து இறங்கி வந்து தஜ்ஜாலைக் கொல்வார்கள். அப்போது முஸ்லிம்கள் ஈஸா (அலை) அவர்கள் பின்னாலும் யூதர்கள் தஜ்ஜால் பின்னாலும் செல்லுவார்கள். போர் கடுமையாகி யூதர்கள் தப்பிக்க கல்லுக்கும் மரத்திற்கும் பின்னால் ஒளிந்து கொள்வார்கள். ஆனால் அந்த கல்லும் மரமும், "எனக்கு பின்னால் ஒரு யூதன் ஒளிந்துள்ளான், அவனைக் கொல்'' என்று கூறும்.
(முஸ்லிம்களாகிய) நீங்கள் யூதர்களுடன் போரிடுவீர்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களில் ஒருவர் கல்லின் பின்னால் ஒளிந்து கொள்ள, அந்தக் கல், "அல்லாஹ்வின் அடியானே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். அவனைக் கொன்று விடு'' என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ்பின்உமர்(ரலி)
நூல்கள்: புகாரீ (2925, 2926, 3593), முஸ்லிம் (5200)
முஸ்லிமின் (5237) அறிவிப்பில் உஸ்பஹான் பகுதி யூதர்கள் 70 ஆயிரம் பேர் தஜ்ஜால் பின்னால் இருப்பார்கள் என்று இடம் பெற்று இருக்கிறது.
முஸ்லிமின் அறிவிப்பில், "மரத்திற்குப் பின்னாலும் யூதர்கள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது அந்தக் கல் அல்லது மரம், "அல்லாஹ்வின் அடியானே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். அவனைக் கொன்று விடு'' என்று கூறும். "கர்கத்' என்ற மரம் மட்டும் இவ்வாறு சொல்லாது'' என்று இடம் பெற்றுள்ளது.
முஸ்லிம்கள் யூதர்களுடன் போரிடும் வரை மறுமை நாள் வராது. எந்த அளவுக்கென்றால் அவர்களில் ஒருவர் கல்லின் பின்னால், மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ள, அந்தக் கல், அல்லது மரம் "முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியானே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். அவனைக் கொன்று விடு'' என்று கூறும். "கர்கத்' என்ற மரத்தைத் தவிர. ஏனெனில் இது யூதர்களின் மரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ்பின்உமர்(ரலி)
நூல்: முஸ்லிம் (5200)
"கர்கத்' என்ற மரம் கடுமையான முற்களை உடையது என்று லிஸானுல் அரப் உட்பட பல அகராதி நூல்களில் கூறப்பட்டுள்ளது. இது பைத்துல் மக்திஸ் (ஜெரூஸலம்) பகுதியில் இருக்கிறது என்று இமாம் நவவீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

பிறை போட்ட கொடியை வீட்டில் தொங்க விடுதால் பரக்கத் கிடைக்குமா ?

  பலர் தங்கள் வீடுகளில் பிறை போட்ட பச்சைக் கொடி ஏற்றி ஃபாத்திஹா ஓதுகிறார்களே! இதனால் ஏதேனும் புண்ணியம் கிடைக்குமா? இது எதற்காகச் செய்கிறார்கள்? நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்து உள்ளார்களா?
ஷர்ஃபுன்னிஸா, கிள்ளை சிதம்பரம்
நபியவர்கள் போர்க்களங்களில் அடையாளத்திற்காகக் கொடிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதைத் தவிர கொடிக்கும் மார்க்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
இன்றைக்குப் பரவலாக இஸ்லாமிய சமுதாயத்தினர் பிறை போட்ட பச்சைக் கொடியைப் புனிதமாக கருதுகின்றனர். பிறை போட்ட பச்சைக் கொடிக்கும் மார்க்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதைக் கட்டி ஃபாத்திஹா ஓதுவதில் எந்தப் புண்ணியமும் கிடையாது. ஃபாத்திஹா என்பதே மார்க்கத்தில் இல்லாத ஒன்றாகும்.
நம்முடைய தமிழகத்தில் பரவலாக பல்வேறு விஷயங்களுக்கு ஃபாத்திஹா என்ற பெயரில் ஒருவரை அழைத்து ஓதச் செய்கின்ற நடைமுறை உள்ளது. இது முழுக்க முழுக்க மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறையாகும். நபியவர்களோ, ஸஹாபாக்களோ இவ்வாறு செய்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
ஃபாத்திஹா ஓதி அதன் நன்மையை இறந்தவர்களுக்குச் சேர்த்து வைப்பதாக அதனைச் செய்யக் கூடியவர்கள் கூறுகின்றனர். நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே  அவர்களுடைய பாசத்திற்குரிய மனைவி ஹதீஜா (ரலி) அவர்கள் மரணித்துள்ளனர். எத்தனையோ ஸஹாபாக்கள் பல போர்க்களங்களில் கொல்லப் பட்டுள்ளனர். அவர்களில் யாருக்கும் நபியவர்கள் ஒன்றாம் ஃபாத்திஹா, இரண்டாம் ஃபாத்திஹா, ஏழாம் ஃபாத்திஹா, நாற்பதாம் ஃபாத்திஹா, வருஷ ஃபாத்திஹா என்று ஓதியதாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
இவையெல்லாம் நபியவர்கள் காட்டித் தராத பித்அத்தான காரியங்களாகும். இன்னும் சொல்லப் போனால் இவ்வாறு ஃபாத்திஹா ஓதி அதன் நன்மைகளை இறந்தவர் களுக்குச் சேர்த்து வைக்கின்றோம் என்று கூறுவது இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமானதாகும்.
ஒருவர் இறந்து விட்டார் என்றால் அவருடைய அமல்கள் அனைத்தும் நின்று போய் விடுகிறது. நாம் செய்கின்ற எந்த ஒரு நன்மையும் அவர்களைச் சென்றடையாது. இதற்கு ஏராளமான திருக்குர்ஆன் வசனங்கள் ஆதாரமாக உள்ளன.
"ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப் படவில்லையா? (53:38,39)
ஒவ்வொருவனும், தான் செய்ததற்கு பிணையாக்கப் பட்டுள்ளான். (73:38)
(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்'' என்றும் கூறுவீராக!  (6:164)
ஒவ்வொரு மனிதனும் அவன் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டவன். (52:21)
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் ஒருவர் மற்றவரின் பாவத்தைச் சுமக்க முடியாது என்றும் ஒரு மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு எதுவும் கிடையாது என்றும்  கூறுகின்றன.
இறந்து விட்ட உறவினர்களுக் காகவோ, மற்றவர்களுக்காகவோ நாம் நன்மைகள் செய்து அவர்களுக்குச் சேர்த்து விட முடியாது என்பதை இவ்வசனங்கள் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன.
நபியவர்கள், இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களாக சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றைத் தவிர வேறு எந்தக் காரியங்களை நாம் செய்தாலும் அது அவர்களுக்கு எந்தப் பலனும் அளிக்காது என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக் கொள்ளக்  கூடியவர்களும்  இது போன்ற ஃபாத்திஹாக்களை ஓதி வருகின்றனர். ஆனால் இது அவர்களுடைய மத்ஹபிற்கே எதிரானதாகும்.  இதைக் கூட அவர்கள் சிந்திப்பதில்லை.
இமாம் ஷாஃபி அவர்களின் கருத்தைக் காண்போம்.
"ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' (53:39) இந்த திருவசனத்திலிருந்து ஷாஃபி (ரஹ்) அவர்களும் அவரைப் பின்பற்றியவர்களும் பின்வருமாறு சட்டம் எடுக்கிறார்கள்: "குர்ஆன் ஓதி அதன் நன்மையை இறந்தவர்களுக்குச் சேர்த்து வைப்பது அவர்களை அடையாது. ஏனென்றால் இது (இறந்தவர்களாகிய) அவர்கள் செய்த செயல் அல்ல. இன்னும் அவர்களுடைய சம்பாத்தியமும் அல்ல. இதன் காரணமாகத் தான் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய சமுதாயத்தை முன்னோக்கி (அதைச்) செய்யுமாறு தூண்டவும் இல்லை. நேரடியாகவோ அல்லது  (மறைமுகமான) சுட்டிக் காட்டுதலின் மூலமோ நபி (ஸல்) அவர்கள் இதற்கு வழிகாட்டவில்லை. நபித்தோழர்களில் எந்த ஒருவரும் கூட இவ்வாறு செய்ததாக (எந்தச் செய்தியும்) பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு செய்வது நன்மையானதாக இருந்தால் இதில் அவர்கள் நம்மை முந்தியிருப்பார்கள். 
(நூல்: தப்ஸீர் இப்னு கஸீர், 53:39 வசனத்தின் விரிவுரை)
சிலர் இவ்வாறு ஃபாத்திஹாக்கள் ஓதுவது நல்ல காரியம் தானே என்று கூறுகின்றனர். இதுவும் மார்க்கத்தை விளங்காதவர்களுடைய கூற்றாகும்.
இறைவன் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை நபியவர்கள் வாழும் போதே முழுமைப்படுத்தி விட்டான். எதுவெல்லாம் நல்ல காரியமாக இருக்குமோ அவையனைத்தையும் இறைவன் தன் தூதர் மூலம் காட்டித் தந்து விட்டான். அவர்கள் காட்டித் தந்ததைத் தவிர வேறு எந்த நல்ல காரியமும் இல்லை. இவ்வாறு தான் ஒவ்வொரு முஃமினும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக் கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். (5:3)
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நாம் கட்டளையிடாத காரியத்தை யார் செய்கிறாரோ அது (அல்லாஹ்விடம்) மறுக்கப்படும்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 3243
நபியவர்களோடு முழுமைப்படுத்தப் பட்ட மார்க்கத்தில் இது போன்ற ஃபாத்திஹாக்கள் என்று எந்த ஒரு காரியமும் இருந்ததில்லை. எனவே இவையனைத்தும் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கின்ற பித்அத்தான காரியங்களாகும். இவற்றைத் தவிர்ந்து கொள்வது தான் நம்முடைய ஈமானுக்குப் பாதுகாப்பானதாகும்.

திருஷ்டிக்காக குழந்தைகளின் கன்னத்தில் கருப்புப் பொட்டை வைக்கலாமா ?

கேள்வி: திருஷ்டிக்காக குழந்தைகளின் கன்னத்தில் கருப்புப் பொட்டை தாய்மார்கள் வைக்கிறார்கள். மார்க்கத்தின் அடிப்படையில் இது தவறா?
ரைஹானா, தூத்துக்குடி
பதில்: முஸ்லிம்கள் அனைவரும் எந்த ஒரு துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் அது அல்லாஹ்வின் மூலம் தான் வருகிறது என்று உளமாற நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை வந்து விட்டால் இது போன்ற மூடப் பழக்க வழக்கங்கள் தன்னால் ஓடிவிடும். குழந்தைக்குப் பொட்டு வைப்பதால் கண் திருஷ்டி வராது என்று அல்லாஹ்வின் விதியை மறந்தவர்கள் தான் நினைப்பார்கள்.
தாயத்து கட்டியிருப்பவனை நபி (ஸல்) அவர்கள், இணை வைப்பாளன் என்று கூறினார்கள். தீமைகளை அகற்றுபவன் அல்லாஹ் என்பதை மறந்து விட்டு, சாதாரண கயிறு அகற்றுவதாக அவன் நினைத்தது தான் இதற்குக் காரணம்.
இது போலவே அல்லாஹ்வின் மேல் வைக்க வேண்டிய நம்பிக்கையை கருப்புப் பொட்டின் மீது வைப்பதால் இதுவும் தடுக்கப்பட்டதாகி விடுகிறது. அல்லாஹ் பின்வரும் வசனங்களில் அவன் நாடினால் தான் தீமைகளோ அல்லது நன்மைகளோ ஏற்படும் என்று கூறுகிறான்.
"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 9:51)
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:107)
இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. (அல்குர்ஆன் 57:22)
எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. அல்லாஹ்வை நம்பும் உள்ளத்திற்கு அவன் வழி காட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 64:11)
மேலும் இச்செயல் மாற்றார்கள் கடைப்பிடிக்கும் மூடப் பழக்க வழக்கம். இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகளுக்கு அணுவளவும் இடம் கிடையாது. அரபுகளிடத்தில் காணப்பட்ட ஏராளமான மூடநம்பிக்கைகளை இஸ்லாம் தான் ஒழித்தது. இஸ்லாம் எவ்வாறு மூடநம்பிக்கைகளை களைந்தெடுத்தது என்பதைப் பின்வரும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஃபாவை) வலம் வந்தார்கள். ஹும்ஸ் கிளையார்களைத் தவிர.
அறிவிப்பவர்: உர்வா (ரலி)
நூல்: புகாரி (1665)
அன்சாரிகள் ஹஜ் செய்து விட்டு வரும் போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல் வழியாக செல்ல மாட்டார்கள். மாறாக வீட்டின் பின் வாசல் வழியாக வருவார்கள். அப்போது அன்சாரி களைச் சார்ந்த ஒருவர் (முன்)  வீட்டின் வழியே சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது. அப்போது, "உங்கள் வீடுகளுக்குப் பின் வாசல் வழியாக செல்வது நன்மையான காரியமன்று. மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். ஆகவே வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்'' (2:189) என்ற இறை வசனம் அன்சாரிகளாகிய எங்கள் விஷயத்தில் இறங்கியது.
அறிவிப்பவர்: பராஉ (ரலி)
நூல்: புகாரி (1803)
அல்பஹீரா என்பது (பால் கறக்கக் கூடாத ஒட்டகம் என்று) ஷைத்தான்களுக்காகத் தடை செய்யப்பட்டு விடுமோ அந்த ஒட்டகத்தின் பெயராகும். அதன் பாலை மக்களில் எவருமே கறக்க மாட்டார்கள். சாயிபா என்பது அரபுகள் தங்கள் கடவுள்களுக்காக (நேர்ச்சை செய்து) மேய விட்ட ஒட்டகமாகும். ஆகவே அதன் மேல் சுமை ஏதும் சுமத்தப்படாது.
நபி (ஸல்) அவர்கள், "குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் ஆமிர் பின் லுஹை என்பவர் நரகத்தில் தன் குடலை இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கக் கண்டேன். அவர் தான் முதன் முதலில் சாயிபா ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து விட்டவர்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (3521)
இது போன்ற ஏராளமான மூட நம்பிக்கைகளை இஸ்லாம் களைந்து எடுத்திருக்கின்றது. எனவே திருஷ்டிக்காகப் பொட்டு வைப்பது என்பது இஸ்லாத்திற்கு முரணான மூட நம்பிக்கை. முஸ்லிம்கள் இதை அணுவளவும் உண்மை என்று நம்பி விடக் கூடாது.

தண்ணீரை சிக்கனமாகத் தான் பயன்படுத்த வேண்டுமா?

 அதிகமாகப் பயன்படுத்தினால் மறுமையில் தண்டனை உள்ளதா?
ஏ. சமா பர்வீன் பி.ஏ. திருவிடைமருதூர்
எந்த ஒன்றையும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதும் வீண்விரயம் செய்வதும் இஸ்லாத்தில் குற்றமாகும். குற்றத்திற்குரிய தண்டனையை அல்லாஹ் மறுமையில் வழங்குவான். இதற்குப் பின்வரும் வசனங்கள் சான்றாக அமைந்துள்ளன.
விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)
வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 6:141)
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் 7:31)

ஸஜ்தா திலாவத்தின் சட்டம் ? அதற்குரிய வசனங்கள் என்னென்ன?

? ஸஜ்தா திலாவத் என்று சொல்லப்படும் குர்ஆனில் உள்ள ஸஜ்தா வசனங்கள் என்னென்ன? அதனுடைய சட்டம் என்ன? ஸஜ்தா செய்யும் போது உளூ இருப்பது அவசியமா?

தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தாச் செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம்.
இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை? அதாவது எந்தெந்த வசனங்களை ஓதும் போது நாம் ஸஜ்தாச் செய்ய வேண்டும்? என்று நாம் பார்த்தால் தற்போது 14 வசனங்கள் ஸஜ்தா வசனங்களாக நடைமுறையில் உள்ளதைக் கண்டு வருகின்றோம். ஆனால் குர்ஆனின் ஓரத்தில் மொத்தம் 15 வசனங்களில் ஸஜ்தாச் செய்ய வேண்டுமென எழுதி வைத்துள்ளனர். 15 வசனங்களில் ஹஜ் எனும் அத்தியாயத்தில் இரண்டு வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இமாம் அபூஹனீபா அவர்கள் ஹஜ் அத்தியாயத்தில் ஒரேயொரு ஸஜ்தா வசனம் மட்டுமே உள்ளது என்று கூறுகின்றார். ஆனால் அதே சமயம் ஸாத் எனும் அத்தியாயத்தில் வரும் வசனத்தை ஸஜ்தா வசனமாக எடுத்துக் கொள்கின்றார்.
இமாம் ஷாஃபி அவர்கள் ஹஜ் அத்தியாயத்திலுள்ள இரண்டு வசனங்களையும் ஸஜ்தா வசனங்களாகக் கணக்கிடுகின்றார். ஆனால் ஸாத் (38வது) அத்தியாயத்திலுள்ள வசனத்தை விட்டு விடுகின்றார். ஆக இரண்டு பேருமே 14 வசனங்களை ஸஜ்தா வசனங்கள் என்று கூறுகின்றார்கள்.
ஆனால் இதற்குச் சான்றாக வைக்கப்படும் ஹதீஸ்கள் பலவீனமானவையாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்ஆனில் 15 ஸஜ்தாக்களை என்னிடம் ஓதிக் காண்பித்தார்கள் என்றும், அவற்றில் (காஃப் அத்தியாயத்திலிருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம் பெறும் மூன்று ஸஜ்தாக்களும், சூரத்துல் ஹஜ்ஜில் இடம் பெறும் இரண்டு ஸஜ்தாக்களும் அடங்கும்'' என்று  அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் 1193வது ஹதீஸாகவும் இப்னுமாஜாவில் 1047வது ஹதீஸாகவும் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் மேற்கண்ட 15 இடங்களிலும் ஸஜ்தா செய்யப்படுகின்றது.  ஆனால் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல!  இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஹாரிஸ் பின் ஸயீத் என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். அதனால் குர்ஆனில் 15 ஸஜ்தா வசனங்கள் என்ற கருத்து ஆதாரமற்றதாக ஆகி விடுகின்றது.
"நான் நபி (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன். ஆனால் முஃபஸ்ஸலான அத்தியாயங் களிலிருந்து எதுவும் அவற்றில் இடம் பெறவில்லை.  அல்அஃராஃப், ரஃது, நஹ்ல், பனீ இஸ்ராயீல், மர்யம், ஹஜ், ஃபுர்கான், நம்ல், ஸஜ்தா, ஸாத், ஹாமீம் ஆகியவையே ஸஜ்தாவுக்குரிய அந்த அத்தியாயங்களாகும்'' என்று அபூ தர்தா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இப்னுமாஜாவில் 1046 வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸின் அடிப்படையில் குர்ஆனில் 11 ஸஜ்தா வசனங்கள் என்று கூறுவோரும் உள்ளனர். ஆனால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மஹ்தீ பின் அப்துர்ரஹ்மான் பின் உபைதா பின் காதிர் என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்றதாகி விடுகின்றது.
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன்.  நஜ்ம் அத்தியாயத்தில் இடம் பெற்றிருக்கும் அந்த ஸஜ்தாவும் அடங்கும்'' என்று அபூதர்தா (ரலி) அறிவிக்கும் இன்னோர் அறிவிப்பு திர்மிதியில் 519வது ஹதீஸாகவும் இப்னுமாஜாவின் 1045 வது ஹதீஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்து.
இவ்விரண்டிலும் உமர் திமிஷ்கி என்பவர் இடம் பெறுகின்றார். இவரும் யாரென அறியப்படாதவர். எனவே இந்த ஹதீசும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தை வலுப்படுத்துவதாக அமையவில்லை.
"ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால் அது சிறப்பிக்கப்பட்டுள்ளதா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன்.  அதற்கவர்கள், "ஆம்! யார் அவ்விரு வசனங்களின் போதும் ஸஜ்தாச் செய்ய மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓத வேண்டாம்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: திர்மிதீ 527
இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே இதை வலுவற்றது என்று கூறுகின்றார்கள்.  மேலும் இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெற்றிருக்கும் அப்துல்லாஹ் பின் லஹீஆ பலவீனமானவர்.  இதில் இடம் பெறும் இன்னோர் அறிவிப்பாளரான மிஷ்ரஹ் பின் ஹாஆன் என்பவர் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார். எனவே இந்த ஹதீசும் பலவீனமானதாக உள்ளது.
மொத்தத்தில் 15 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்ற கருத்துக்களாகி விடுகின்றன. அப்படியானால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த ஸஜ்தாக்கள் எத்தனை? என்று பார்க்கும் போது, நான்கு வசனங்களை ஓதும் போது நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக அறிய முடிகின்றது.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு (53வது) அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ, மண்ணையோ எடுத்து தமது நெற்றிக்குக் கொண்டு சென்று, "இவ்வாறு செய்வது எனக்குப் போதும்'' என்று கூறினார். பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரீ 1067, 1070
இதே கருத்து புகாரீயில் 1071, 4862, 4863 ஆகிய ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன.
ஸாத் (38வது) அத்தியாயம் ஓதப்படும் போது ஸஜ்தா கட்டாயமில்லை. (ஆனால்) நபி (ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 1069, 3422
அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நான் இஷாத் தொழுத போது, "இதஸ்ஸமாவுன் ஷக்கத்' என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய வசனம் வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். இது பற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, "நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இதற்காக) நான் ஸஜ்தாச் செய்திருக்கின்றேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கின்ற வரை (மரணிக்கின்ற வரை) நான் அதை ஓதி ஸஜ்தாச் செய்து கொண்டு தான் இருப்பேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ராஃபிவு
நூல்: புகாரீ 766, 768, 1078
"இதஸ்ஸமாவுன் ஷக்கத், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க ஆகிய அத்தியாயங்களில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஜ்தாச் செய்தோம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 905, 906
மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் நஜ்மு (53வது அத்தியாயம்), ஸாத் (38வது அத்தியாயம்), இன்ஷிகாக் (84வது அத்தியாயம்), அலக் (96வது அத்தியாயம்) ஆகிய நான்கு அத்தியாயங்களை ஓதும் போது அதிலுள்ள ஸஜ்தா வசனங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்துள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது.
இந்த ஸஜ்தா வசனங்களை ஓதும் போதும் ஸஜ்தாச் செய்வது கட்டாயமில்லை. விரும்பினால் ஸஜ்தாச் செய்யலாம் என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
நான் நபி (ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல்: புகாரீ 1072, 1073
ஸஜ்தா திலாவத்தின் போது எவ்வாறு ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதில் பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறுகின்றனர்.
ஸஜ்தா திலாவத்தின் போது உளூ இருப்பது அவசியம்; ஸஜ்தாவுக்குச் செல்லும் போது அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும்; எழும் போதும் அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும்; கைகளை உயர்த்த வேண்டும்; முடிக்கும் போது ஸலாம் கூற வேண்டும் என்று பல கருத்துக்களைக் கூறுகின்றனர். இவற்றிற்கு சில சான்றுகளையும் காட்டுகின்றனர். அவற்றின் விவரங்களைக் காண்போம்.
ஸஜ்தா திலாவத்திற்கு உளூ அவசியம் என்று சொல்பவர்களின் ஆதாரம்:
தூய்மையான நிலையில் தவிர ஒரு மனிதன் ஸஜ்தா செய்ய மாட்டான். தூய்மையான நிலையில் தவிர (திருக்குர்ஆனை) ஓத மாட்டான். தூய்மையான நிலையில் தவிர ஜனாஸாத் தொழுகை தொழ மாட்டான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: பைஹகீ (431)
இந்த செய்தி நபிகளாரின் சொல் அல்ல! நபித்தோழரின் கூற்றே! நபித்தோழரின் கூற்று மார்க்கமாகாது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
மேலும்  இப்னு உமர் (ரலி) அவர்களின் செயல் இதற்கு நேர் மாற்றமாகவும் இடம் பெற்றுள்ளது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் உளூ இல்லாமல் ஸஜ்தா செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள் என்று புகாரியில் இடம் பெற்றுள்ளது. 1070வது ஹதீஸிற்கு அடுத்த செய்தியில் இமாம் புகாரி இதை இடம் பெறச் செய்துள்ளார்கள். அறிவிப்பாளர் வரிசையுடன் முஸன்னஃப் இப்னு அபீ ஷைபாவில் இடம் பெற்றுள்ளது.
ஒரே நபித்தோழர் மூலம் இரண்டு முரண்பட்ட செய்திகள் வந்துள்ளதால் இந்தச் செய்தி மேலும் பலவீனம் அடைகிறது.
ஸஜ்தா திலாவத்தில் ஸஜ்தா செய்யும் போது அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும் என்று சொல்பவர்களின் ஆதாரம்:
நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டினார்கள். ஸஜ்தா வசனங்களைக் கடந்து செல்லும் போது அவர்கள் தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்வார்கள். நாங்களும் அவர்களுடன் ஸஜ்தா செய்வோம்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1204, பைஹகீ 3592
இச்செய்தியில் இடம் பெற்றிருக்கும் மூன்றாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் அல்உமரீ என்பவர் பலவீனமானவர். இவரை ஏராளமான ஹதீஸ் கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். எனவே பலவீனமான செய்தியை வைத்து சட்டம் சொல்ல முடியாது.
ஸஜ்தா திலாவத்தின் போது கைகளை உயர்த்த வேண்டும் என்ற கருத்திற்கு யாரும் நேரடியான சான்றுகளை சமர்ப்பிக்கவில்லை. இமாம் ஷாபீ, அஹ்மத் ஆகியோர் இக்கருத்தை சொல்கின்றனர். (அவ்னுல் மஃபூத்)
ஸஜ்தா திலாவத்தின் போது ஸஜ்தா செய்த பின்னர் ஸலாம் கூற வேண்டும் என்று சொல்பவர்களின் ஆதாரம்:
அதா, இப்னு ஸீரீன், இஸ்ஹாக் பின் ராஹவைஹி ஆகியோர் இக்கருத்தைக் கொண்டவர்கள். இதற்கும் யாரும் நேரடியான சான்றுகளைக் காட்டவில்லை. தொழுகையின் ஆரம்பம் தக்பீர் ஆகும். முடிவு ஸலாம் ஆகும் என்ற நபிவழியை இதற்குச் சான்றாக காட்டுகின்றனர். இந்தச் சான்றும் சரியானதல்ல. ஏனெனில் வெறும் ஸஜ்தா மட்டும் தொழுகையாகக் கணிக்கப்படுவதில்லை. .தொழுகையில் ஸஜ்தா அல்லாத வேறு எத்தனையோ காரியங்கள் சேர்ந்தவை தான் தொழுகையாகும். எனவே இதைச் சான்றாக வைத்து ஸலாம் கூற வேண்டும் என்று சொல்ல முடியாது.
ஸஜ்தா திலாவத்தின் போது உளூ இருப்பது அவசியம்; ஸஜ்தாவுக்குச் செல்லும் போது அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும்; எழும் போதும் அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும்; கைகளை உயர்த்த வேண்டும்; முடிக்கும் போது ஸலாம் கூற வேண்டும் என்ற கருத்துக்களுக்கு ஏற்றுக் கொள்ளும் வகையில் ஆதாரப் பூர்வமான எந்தச் சான்றுகளும் இல்லை. எனவே இவற்றைக் கடைப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை.
ஸஜ்தா வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதே ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் கிடைக்கும் சட்டமாகும். எனவே ஸஜ்தா செய்து அதில் ஓத வேண்டிய துஆவை ஓதினால் போதுமானது.

டில்லி ஜாமியா மஸ்ஜிதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்களா ?

? ஒரு நாள் டில்லி ஜாமியா மஸ்ஜிதில் நபி (ஸல்) அவர்கள் வந்து ஹவுளில் உளூச் செய்ததாகவும் அப்போதிருந்த மன்னரின் சிப்பாய்கள் பார்த்ததாகவும் அது மன்னரின் கனவிலும் தெரிந்ததாகவும் உடனே மன்னர் ஓடிச் சென்று பார்த்த போது, ஹவுளின் தண்ணீர், உளூச் செய்ததன் அடையாளமாக கலங்கி இருந்ததாகவும், உடனே அங்கு ஒரு சின்னம் கட்டி வைத்து அதில் உருதுவில் எழுதப் பட்டிருப்பதாகவும் அங்கு போய் வந்த ஒருவர் சொல்கிறார். அது உண்மையா?
எஸ்.ஏ. அமீர் அலீ, கிள்ளை
இதைப் போன்ற கதைகள் ஏராளமாக தமிழ் மக்கள் மத்தயில் உலா வருகிறன. மதீனாவில் நடந்த உண்மைச் சம்பவம்! முடி இல்லாமல் பிறந்த குழந்தை! என்று பல கற்பனைப் பாத்திரங்கள் முஸ்லிம்களிடம் சுற்றி வருகிறன. இது போன்ற சம்பவங்கள் அடிப்படை இல்லாத கற்பனை செய்திகள் தான்.
நீங்கள் குறிப்பிட்ட அந்தச் சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் டில்லி ஜாமியா மஸ்ஜிதில் உளூச் செய்ய வந்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தப் பள்ளிக்கு என்று  குறிப்பிட்டு எதற்காக வந்தார்கள்? ஏன் அவர்கள் கட்டிய மஸ்ஜிதுன் நபவிக்கு வரவில்லை. அங்கு தண்ணீர் தீர்ந்து விட்டதா? உலகிலேயே மிகச் சிறந்த பள்ளியாகத் திகழும் கஅபத்துல்லாஹ்விற்குச் செல்லாமல் ஏன் இங்கு வந்தார்கள்?
நபி (ஸல்) அவர்களுக்குத் தொழுகை இப்போதும் கடமையாக இருக்கிறதா?
வந்தது நபிகள் நாயகம் தான் என்று அங்கிருந்தவர்களும், கனவில் கண்ட மன்னரும் எப்படித் தெரிந்து கொண்டார்கள்?
ஒரு பேச்சுக்கு, அவர்கள் வந்துள்ளார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அங்கு நினைவுச் சின்னம் அமைக்க மார்க்கம் அனுமதிக்கிறதா?
இதைப் போன்ற நினைவுச் சின்னங்கள் ஏற்படுத்துவதற்குப் பாடமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு துல்கஅதா மாதத்தில்  உம்ரா செய்வதற்காக சுமார் 1500 தோழர்களுடன் மக்கா நோக்கிப் பயணமானார்கள். வழியில் மக்காவிலிருந்து சற்று தூரத்தில் உள்ள ஹுதைபிய்யா என்னும் இடத்தில் தங்கினார்கள். தம் நோக்கத்தை மக்காவாசிகளிடம் தெரிவித்து வருமாறு உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவிற்கு நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். ஆனால் மக்காவாசிகள்  முஸ்லிம்களை மக்கா நகருக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. அத்துடன் வந்துள்ள முஸ்லிம்கள் மீது போர் தொடுக்க மக்காவாசிகள் தயாராக இருப்பதாகவும் நபிகளாருக்குச் செய்தி கிடைத்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். அப்போது மக்காவாசிகள் போர் தொடுத்தால் போரில் பின்வாங்க மாட்டோம் என்று நபித்தோழர்கள் பைஅத் (உறுதி மொழி) அளித்தனர். இது அங்கிருந்த ஒரு மரத்தடியில் நடந்தது. இந்த உறுதி மொழியைப் பற்றி அல்லாஹ்வும் பின்வருமாறு பாராட்டியுள்ளான்.
அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான். (அல்குர்ஆன் 48:18)
குறிப்பிட்ட மரத்தடியை அல்லாஹ் சொல்லியிருப்பதால் அந்த மரத்தடியை சிலர் புனிதமானதாகக் கருதி ஹஜ் செய்யப் போகும் போது அங்கு தொழுது வந்தனர். இது தொடர்பாக அன்றைய காலத்தில் வாழ்ந்த நபித்தோழரிடம் கேட்கப்பட்டது.
நான் ஹஜ்ஜுக்குச் சென்று கொண்டிருந்த போது, தொழுது கொண்டிருந்த ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றேன். "இது என்ன தொழுமிடம்?'' என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், "இது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  பைஅத்துர் ரிள்வான் எனும் உறுதிப் பிரமாணம் வாங்கிய மரம் இருந்த இடமாகும்'' என்று கூறினார். பின்னர் நான் ஸயீத் பின் முஸய்யப் அவர்களிடம் வந்து இது பற்றித் தெரிவித்தேன். அப்போது அவர்கள் அந்த மரத்தினடியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவரில் ஒருவரான என் தந்தை  (முஸய்யப் (ரலி) அவர்கள் உறுதிப் பிரமாணம் நடந்து முடிந்த ) "மறு ஆண்டு நாங்கள் அங்கு சென்ற போது  அந்த மரத்தை மறந்து விட்டோம். எங்களால்  அதனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை' என்று கூறினார்கள் எனத் தெரிவித்து விட்டு பிறகு ஸயீத் அவர்கள், "முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களே அதனை அறிய முடியவில்லை. நீங்கள் அறிந்து விட்டீர்களா? அப்படியானால் நீங்கள் அதிகம் தெரிந்தவர்கள் தாம்'' என்று (பரிகாசமாகக்)கூறினார்கள்.
அறிவிப்பவர்: தாரிக்
நூல்: புகாரீ (4163)
நபி (ஸல்) அவர்கள் தமது கால் பட்டால், கை பட்டால் அவைகள் புனிதமாக மாறிவிடும் என்ற கருத்தை ஊட்டி தமது தோழர்களை உருவாக்கவில்லை. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து உடன் படிக்கை எடுத்த மரத்தை - அல்லாஹ்வால் சொல்லப்பட்ட அந்த மரத்தைப் புனிதமாகக் கருதவில்லை. எனவே தான் அடுத்த ஆண்டு அங்கு சென்ற போது அந்த மரம் எதுவென்றே அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.
உமர் (ரலி) அவர்கள் காலத்திலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அந்த மரம் பரக்கத் நிறைந்த மரம் என்று கருதி மக்கள் கூட்டம் அங்கு சென்று வந்தது. அப்போது உமர் (ரலி) அவர்கள் அந்த மரத்தை வெட்டி எறியச் சொன்னார்கள்.
ஷஜ்ரத்துர் ரிள்வான் (திருப்தி கொள்ளப்பட்ட மரம்) என்று கூறப்படும் ஒரு மரத்திற்கு மக்கள் சென்று அங்கு தொழுது வந்தார்கள். இந்த விஷயம் உமர் (ரலி) அவர்களுக்கு எட்டிய போது அவர்களை எச்சரித்தார்கள். (அம்மரத்தை வெட்டுமாறு) கட்டளையிட்டார்கள். அது வெட்டப்பட்டது. (நூல்: தபக்காதுல் குப்ரா- இப்னு ஸஅத், பாகம்: 2, பக்கம்: 100)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கனவில் வந்தார்கள் என்றால் அவர்கனை முன்னதாகப் பார்த்தவர் தான் அடையாளம் காண முடியும். 1000 வருடங்களுக்குப் பின்னர் தோன்றிய ஒருவர் நபிகளாரை எவ்வாறு அடையாளம் காணமுடியும்? அப்படியே தெரிந்தாலும் அவர்கள் உளூச் செய்த இடம் என்பதால் அதற்கு நினைவுச் சின்னம் எழுப்புவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் கிடையாது.

பல் துலக்குவதை மிகவும் வலியுறுத்தி இங்கு கூறுகின்றார்கள்.

எனது சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் அவர்களைப் பல் துலக்குமாறு கட்டளையிட்டிருப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 887
ஒவ்வொரு தொழுகையின் போதும், அதாவது ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்து வேளையாவது தமது சமுதாயத்தினர் பல் துலக்க வேண்டும் என்பது அவர்களது ஆர்வம்; அவா!
இப்படி எந்த ஒரு தலைவரேனும் தம் சமுதாயத்திற்கு, பல் துலக்கலைப் பற்றிப் பாடம் நடத்தியுள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை! அப்படி நடத்த வேண்டிய அவசியமும் இல்லை! ஆனால் இந்தத் தலைவர் மட்டும் இப்படிப் பாடம் நடத்துகிறார்களே! அது ஏன்?
அவர்கள் இயற்கை மார்க்கத்தைப் போதிக்க வந்த இறைத்தூதர். அதனால் பால் நிறப் பற்களை சரியாகப் பராமரிக்கச் சொல்கிறார்கள்.
இன்று அறிவியல் சொல்கிறது: மனிதன் ஒரு நாளைக்கு, காலையில் எழுந்ததும், இரவில் படுக்கும் போதும், சாப்பிட்ட பிறகும் பல் துலக்க வேண்டும். ஏனெனில் மனிதன் சாப்பிட்ட உணவின் துகள்கள், குறிப்பாக இனிப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் பற்களில் ஒட்டிக் கொள்கின்றன. இவற்றிலிருந்து சில பாக்டீரியா எனும் நுண்ணுயிரிகள் வாழத் துவங்கி விடுகின்றன.
வாய்க்குள் ஆக்ஸிஜன் கிடைக்காத போது அவை அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமிலம், பல் எனாமலில் இருக்கும் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸைக் கரைத்து விடுகின்றது. இதற்கு உங்ம்ண்ய்ங்ழ்ஹப்ண்ள்ஹற்ண்ர்ய் - கனிமச் சத்து அரிமானம் என்று பெயர். இது தான் பற்சிதைவுக்கு வழிவகுக்கின்றது.
நாவில் ஓடும் உமிழ் நீர் இதை ஓரளவுக்குச் சரி செய்கிறது. ஆனால் அதே சமயம் பாக்டீரியாக்கள் கொத்தாக பற்களில் படிமானத்தை ஏற்படுத்தி விட்டால் இந்த உமிழ் நீர் அதற்குள் ஊடுறுவ முடியாது. அப்போது பல்லைச் சிதைத்து வலியை ஏற்படுத்தும். அத்துடன் நிற்பதில்லை. நேரடியாக மூளையைப் பாதித்து விடுகின்றது. மனிதன் மரணத்தைத் தழுவ நேரிடுகின்றது.
இது பற்கள் மூலம் ஏற்படும் அதிகப்பட்ச பாதகம்! வாய் துர்நாற்றம்
பல் இடுக்குகளில் மாட்டிக் கொண்ட உணவுத் துகள்களில் குடித்தனம் நடத்தும் நுண்ணுயிரிகள் தான் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதனால் நம்மிடம் பேசுவோர் முகத்தைத் திருப்பிக் கொள்ள நேரிடுகிறது.
அது மட்டுமின்றி ஈறுகள் தொற்று நோய்க்குள்ளாகி இரத்தம் கசியவும், சீழ் வழியவும் ஆரம்பித்து விடுகிறது. இந்நோய்க்கு பயோரிய்யா என்று பெயர். இது பற்களால் ஏற்படும் குறைந்த பட்ச பாதகமாகும்.
இதனால் தான் இயற்கை மார்க்கமான இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பல் துலக்குவதில் இவ்வளவு கவனம் எடுத்துள்ளார்கள். தமது சமுதாயத்தையும் இதில் கவனம் எடுக்கச் சொல்கிறார்கள்.

பொருளாதாரம்
நாம் வாழ்கின்ற பூமியில் மேடு பள்ளங்கள் இருப்பது போலவே மனித வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள் இருக்கின்றன. ஆம்! ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இருக்கின்றது. இந்த ஏற்றத்தாழ்வு இயற்கையானது. மனித இனத்தின் செயல்பாட்டுக்காக இறைவன் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறான். இதை எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறுகின்றான்.
உமது இறைவனின் அருட்கொடையை அவர்கள் தான் பங்கிடுகிறார்களா? இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் வாழ்க்கையை நாமே பங்கிடுகிறோம். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பணியாளராக ஆக்குவதற்காகச் சிலரை விட சிலரின் தகுதிகளை உயர்த்தினோம். அவர்கள் திரட்டுவதை விட உமது இறைவனின் அருள் சிறந்தது.
அல்குர்ஆன் 43:32
செத்துப் போன
செங்கொடி சித்தாந்தம்
இப்படி ஓர் ஏற்றத்தாழ்வு இல்லையெனில் மனித வாழ்க்கை ஸ்தம்பித்து விடும். இந்த இயற்கை நியதிக்கு எதிராகக் கிளம்பியது தான் செங்கொடி சித்தாந்தம், அதாவது கம்யூனிஸக் கொள்கை!
கிறித்தவர்கள் தங்களுடைய வேதத்தில் கைவரிசை காட்டியதால் அது கலப்படத்திற்கு உள்ளானது. அந்தக் கலப்பட, கரை பட்ட வேதத்தை பாதிரிகள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி மக்களை ஏமாற்றியதுடன் மக்களின் சொத்துக்களைச் சூறையாடினர்.
மதப் பாதிரிமார்கள் ஒரு பக்கம் மக்களைச் சுரண்டினர். மறு பக்கத்தில் பணக்காரர்கள் மக்களைக் கொத்தடிமைகளாக நடத்தினர். இதில் நிலவும் சுரண்டலை ஒழிப்பதற்குப் பதிலாக, பணக்காரர்களை ஒழிக்கப் பாடுபட்டதால் கம்யூனிஸ சித்தாந்தம் பெரும் தோல்வியைத் தழுவியது. வெகு சீக்கிரத்திலேயே ரஷ்யாவிலும், சீனாவிலும் சாவைத் தழுவியது.
இஸ்லாமிய மார்க்கம் ஓர் இயற்கை மார்க்கம். ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியவன் அந்த இயற்கை விதியின் நாயனான எல்லாம் வல்ல அல்லாஹ் அல்லவா? அதனால் தான் ஏழை, செல்வந்தர் இரு சாராருக்கும் மத்தியில் ஓர் இணைப்புப் பாலத்தை ஏற்படுத்துகிறான். இதன் மூலம் சுரண்டலைத் தடுக்கிறான். மூன்று விதமான வழிகளில் இவ்வாறு சுரண்டலைத் தடுக்கிறான்.
1. கட்டாய தர்மம் (ஜகாத்)
2. விரும்பி வழங்கும் தர்மம்
3. கடன் வழங்குதல்
"இஸ்லாமிய மார்க்கம் ஏழைகளின் மார்க்கம், அந்த ஏழைகளுக்கு எதுவுமில்லாமல் பணக்காரர்கள் மட்டும் பொருளாதாரத்தை அனுபவிக்க நினைத்தால் அந்தப் பொருளாதாரத்தை இறைவன் அழித்து விடுவான்' என்று திருக்குர்ஆன் அருளப்படத் துவங்கிய, ஆரம்ப காலத்திலேயே மக்களின் உள்ளங்களில் பதியச் செய்து விடுகின்றது.
தோட்டத்தைத் துடைத்தெடுத்த சோதனை
அந்தத் தோட்டத்துக்குரியோரை சோதித்தது போல் இவர்களையும் நாம் சோதித்தோம். "காலையில் அதை அறுவடை செய்வோம்'' என்று அவர்கள் சத்தியம் செய்து கூறினர்.
இறைவன் நாடினால் (அறுவடை செய்வோம்) என்று அவர்கள் கூறவில்லை.
எனவே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது உமது இறைவனிடமிருந்து சுற்றி வளைக்கக் கூடியது அ(த்தோட்டத்)தைச் சுற்றி வளைத்தது.
அது காரிருள் போல் ஆனது.
"நீங்கள் அறுவடை செய்வதாக இருந்தால் உங்கள் விளை நிலத்துக்குச் செல்லுங்கள்! இன்று உங்களிடம் எந்த ஏழையும் நுழைந்து விட வேண்டாம்'' என்று அவர்கள் குறைந்த சப்தத்தில் பேசிக் கொண்டே காலையில் ஒருவரை ஒருவர் அழைக்கலானார்கள்.
தடுக்க ஆற்றலுடையோராகவே அவர்கள் சென்றார்கள்.
அழிக்கப்பட்ட அ(த்தோட்டத்)தை கண்ட போது நாம் வழி மாறி (வேறு இடம்) வந்து விட்டோம் என்றனர்.
இல்லை! நாம் (அனைத்தையும்) இழந்து விட்டோம்.
அவர்களில் நடுநிலையாக நடந்து கொண்டவர் "நீங்கள் இறைவனைத் துதித்திருக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?'' என்று கேட்டார்.
"எங்கள் இறைவன் தூயவன். நாங்கள் அநீதி இழைத்து விட்டோம்'' என்றனர்.
அவர்களில் ஒருவர் மற்றவரிடம் குறை கூறியோராக முன்னோக்கினார்கள்.
"எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே! நாங்கள் வரம்பு மீறி விட்டோமே!'' என்றனர்.
"இதை விடச் சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாக்கித் தரக் கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர்கள்'' (என்றும் கூறினர்.)
இப்படித் தான் (நமது) வேதனை இருக்கும். மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?
அல்குர்ஆன் 68:17-33
ஒரு குருணை அளவு கூட ஏழைகளுக்குப் போய் விடக் கூடாது என்று குறியாக இருந்த அவர்களது விளைச்சலை ஒரு நொடியில் ஓய்த்துக் கட்டி விடுகிறான்.
கஞ்சன் காரூன் வரலாறு
காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். "மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக!
அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்).
"என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது'' என்று அவன் கூறினான். "இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான்'' என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.
தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். "காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப் பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்'' என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர்.
"உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினர்.
அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.
"அந்தோ! தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும் வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்காவிட்டால் நம்மையும் பூமியில் புதையச் செய்திருப்பான். அந்தோ! (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று முதல் நாள் அவனது நிலைமைக்கு ஆசைப்பட்டோர் அன்று காலையில் கூறலானார்கள்.
பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர் களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.
அல்குர்ஆன் 28:76-83
ஏழைகளுக்குத் தர்மம் கொடுக்காதவர்களையும் அவர்களது சொத்துக்களையும் இந்தப் பூபாகத்தில் கூட வைத்திருக்க மாட்டேன் என்று பூமியில் புதையச் செய்து விடுகிறான்.
இவ்வாறு ஏழைகள் மீது அல்லாஹ் வைத்திருக்கும் மதிப்பையும் மரியாதையையும், குர்ஆன் இறங்கிய ஆரம்ப கால கட்டத்திலேயே நன்கு உணர்த்தி விட்டான்.

எய்ட்ஸ்க்கு மருந்து

"பதினைந்து வயதுக்கு உட்பட்ட 70,000 குழந்தைகள் ஹெச்.ஐ.வி. எனும் வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளார்கள்; அதாவது எய்ட்ஸ் எனும் கொடிய நோய்க்கு ஆளாகியுள்ளார்கள்''
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடந்த 25.08.07 அன்று இதை ராஜ்யசபாவில் அறிவித்தார்.
இந்தியாவில் மட்டுமல்ல! உலகெங்கும் உள்ள சிறு குழந்தைகள் இன்றைக்கு எய்ட்சுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். உலகில் ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட 38.6 மில்லியன் மக்களில் இந்தக் குழந்தைகளும் விதிவிலக்கல்ல!
இதில் வேதனை என்னவெனில் இந்தத் தீமை எப்படி ஏற்பட்டது என்பதை இந்த உலகம் இன்னும் உணராமல் இருப்பது தான். பாதுகாப்பான உடலுறவுக்குக் காண்டத்தை உபயோகியுங்கள் என்று வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம்.
"பாதுகாப்பான உடலுறவுக்குத் திருமணமே சிறந்த வழி'' என்று சொன்னால் அதன் மூலம் விபச்சாரம் தவிர்க்கப்படுவதுடன் எய்ட்ஸ் நோய் பரவுவதும் தடுக்கப்படும். இப்படி அறிவிப்பதை விட்டு விட்டு, பாதுகாப்பான உறவுக்கு காண்டத்தைப் பயன்படுத்துங்கள் என்று, அதாவது காண்டம் அணிந்து விபச்சாரம் செய்யுங்கள் என இன்று வரை அரசாங்கம் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட விளம்பரம் தொடர்ந்து கொண்டு போனால் எய்ட்ஸின் பாதிப்பும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
உலகில் உள்ள மனிதனை எந்த இயற்கை நியதியில் படைத்தானோ அந்த இறைவனின் நியதிப்படி நடக்காத வரை எய்ட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவுவதைத் தடுக்க முடியாது.
உலகில் உள்ள மார்க்கங்களில் இஸ்லாத்தைப் போன்று வேறு எந்த மதமும், விபச்சாரத்திற்குக் கடுமையான தண்டனையை விதிக்கவில்லை.
இஸ்லாமிய ஆட்சியில் மண முடிக்காத ஒரு ஆணோ அல்லது பெண்ணோ விபச்சாரம் செய்து விட்டால் அவருக்கு 100 கசையடிகள் கொடுத்து நாடு கடத்த வேண்டும்.
மணம் முடித்த ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவரைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்.
இது தான் விபச்சாரத்திற்கு இஸ்லாம் வழங்கும் தண்டனையாகும்.
விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.
அல்குர்ஆன் 24:2
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்த போது அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, "நான் விபச்சாரம் செய்து விட்டேன்'' என்று சொன்னார்.
உடனே நபி (ஸல்) அவர்கள் அவரை விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபச்சாரம் புரிந்து விட்டதாக) நான்கு தடவை ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.
ஆகவே நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து, "உனக்கு என்ன பைத்தியமா?'' என்று கேட்டார்கள். பிறகு, "உனக்குத் திருமணம் ஆகி விட்டதா?'' என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார்.
எனவே அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டு சென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அவர் மீது கற்கள் விழுந்த போது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். பாறைகள் நிறைந்த (அல்லாஹர்ரா எனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டார்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 5270
உலகில் எய்ட்ஸ் ஏற்படுத்தும் பாதிப்புகளை உணர்ந்தவர்கள், சிந்தனையாளர்கள் அனைவரும், விபச்சாரத்திற்கு இத்தகைய தண்டனை வழங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்தச் சட்டத்தைத் தங்கள் நாடுகளில் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட முன்வைக்கின்றனர்.
இது போன்ற ஒரு சிறப்பான சட்டம் உலகெங்கும் நடைமுறையில் இருக்குமானால் இந்தக் கொடிய நோயை விட்டும் மக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.
விபச்சாரத்திற்கு இவ்வளவு கடுமையான தண்டனையை இஸ்லாம் ஏற்படுத்தியிருக்கும் அதே வேளையில் திருமணத்திற்குரிய வழிகளை மிகவும் எளிதாக்கி இருக்கின்றது.
அத்துடன் மனிதர்களின் பாலுணர்வுத் தேவையை, தேட்டத்தை உணர்ந்து அவர்களுக்குப் பலதார மணத்தையும் அனுமதிக்கின்றது.
பொதுவாக ஓர் ஆணுக்கு அவனுடைய பாலுணர்வுத் தேட்டம் ஒரு பெண் என்ற வட்டத்தில் நிற்பதில்லை. இரண்டு, மூன்று என்று அவனது தேட்டம் இருக்கும்.
மனிதனின் இயற்கை சுபாவத்தை உணர்ந்த இயற்கை மார்க்கமான இஸ்லாம், நான்கு பெண்களை ஒருவர் திருமணம் முடிக்கலாம் என்ற அனுமதியை வழங்குகின்றது.
உன்னுடைய தேவையை இந்த வரையறைக்குள் வைத்துக் கொள்! இந்த வரம்பைத் தாண்டாதே! எய்ட்ஸ் போன்ற கடுமையான நோய்களை வரவழைத்துக் கொள்ளாதே! என்று இந்த இயற்கை மார்க்கம் கூறுகின்றது.
அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.
அல்குர்ஆன் 4:3
உலகில் இஸ்லாமிய மார்க்கம், அதாவது இயற்கை மார்க்கம் மட்டும் மனிதனின் தேவையை அறிந்து, அதற்கான தீனியைக் கொடுத்து பசியைத் தணிக்கிறது.
அதையும் மீறி வேலி தாண்டினால் கடுமையாகத் தண்டிக்கிறது. எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் மனிதனைத் தாக்காமல் தடுத்துக் காக்கிறது.

பிளேக் நோய்க்கு தீர்வு
1994ம் ஆண்டு சவூதி மற்றும் வளைகுடா நாடுகள் அனைத்தும் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்தை ரத்துச் செய்தன. இதற்குக் காரணம் என்ன? அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட பிளேக் நோய் தான்.
இந்த பிளேக் மற்றும் காலரா நோயினால் குஜராத் மாநிலம் பல்லாயிரக்கணக்கான பொருளாதார நஷ்டத்தைச் சந்தித்தது. மக்கள் அங்கிருந்து வேறு நகரங்களுக்குத் தப்பியோட ஆரம்பித்தனர். இவ்வாறு உலகில் ஏதேனும் ஓர் ஊரில் காலரா மற்றும் பிளேக் நோய் ஏற்படும் போது அவ்வூரிலுள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறலாமா? இதற்கு உலகில் எந்த ஒரு மதமோ, இஸமோ, சட்டமோ விடை சொல்லவில்லை. ஆனால் இயற்கை மார்க்கமான இஸ்லாம் தான் இதற்கு ஒரு தீர்வைச் சொல்கின்றது.
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், ஷாம் நாட்டிற்குப் போகலாமா? என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்துக் கருத்து கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்து கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவெடுத்தார்கள்.
அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல நான் கேட்டேன்'' என்று கூறினார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5279
மேற்கண்ட ஹதீஸில் கூறப்படும் இந்த உத்தரவு பெரும் அறிவியல் கருத்தைத் தாங்கி நிற்கின்றது. ஓர் ஊரில் இது போன்ற நோய் ஏற்பட்டால் அவ்வூர் மக்கள் அங்கேயே தங்கி விட்டால் அந்நோய் அவ்வூருடன் நின்று விடும். வெளியே சென்றார்கள் என்றால் நோயும் வெளியூர்களில் பரவ ஆரம்பித்து விடும். அது போன்று வெளியூரிலுள்ளவர்களும் அந்த ஊருக்குச் செல்லாமல் இருந்தால் அதிலிருந்து பாதுகாப்புப் பெற முடியும். இதைத் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவிக்கின்றார்கள்.
இன்று உலக நாடுகள் இந்த முறையைத் தான் கையாள்கின்றன. பறவைக் காய்ச்சல் ஏற்பட்டு விட்டாலோ, நீல நாக்கு நோய் ஏற்பட்டு விட்டாலோ இந்த அடிப்படையில் தான் தடை செய்கிறார்கள்.
குஜராத் பிளேக் நோயின் போது இந்த முறையைப் பின்பற்றித் தான் வளைகுடா நாடுகள் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்தை நிறுத்தின.
அறிவியலில் வளர்ந்து விட்ட நாடுகள் கடைப்பிடிக்கும் இந்த முறையை, எழுதப்படிக்கத் தெரியாத ஒருவர் கூறுகின்றார் என்றால் நிச்சயம் அவர் தனது சொந்தக் கருத்தாக இதைக் கூறியிருக்க முடியாது. அனைத்தையும் அறிந்த இறைவனின் கருத்தாகத் தான் இது இருக்க முடியும். அவர் கொண்டு வந்த மார்க்கமும் மனித சிந்தனையில் உருவானது அல்ல. இறைவனால் வழங்கப்பட்ட இயற்கை மார்க்கம் தான் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

நோய் தீர்க்கும் தாய்ப்பால்
உலகத்தில் 4000 பாலூட்டி இனங்கள் இருப்பதாக இன்றைய அறிவியல் கூறுகின்றது. அந்தப் பாலூட்டி இனங்கள் அனைத்தும் தமக்குப் பிறந்த குட்டிகளுக்கு செயற்கைப் பால் புகட்டுவது கிடையாது. இயற்கையான தாய்ப்பாலைத் தான் புகட்டுகின்றன.
பசு தன் கன்றுக்கும், குதிரை, கழுதை, ஆடு போன்றவை தமது குட்டிகளுக்கும் பாலூட்டுவதை நாம் பார்க்க முடிகின்றது.
ஆனால் பாலூட்டி இனத்தில் உள்ள மனித இனம் தான் இந்த இயற்கை அருட்கொடைக்கு எதிராகச் செயல்படுகின்றது.
இதனால், தாய் தன்னுடைய உடலையும் கெடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தான் பெற்ற பிள்ளையின் உடல் நலத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகிறாள்.
ஆகாரம் அல்ல! அவ்டதம்!
ஒரு தாய் தனக்குச் சுரக்கும் பாலில் என்ன அடங்கியிருக்கிறது என்று தெரிந்திருந்தால் அதைக் குழந்தைக்குக் கொடுக்க ஒரு போதும் தயங்க மாட்டாள்; தவிர்க்க மாட்டாள்.
ஒரு குழந்தை பிறந்தவுடன் தாய் முதன் முதலில் கொடுக்க வேண்டியது தாய்ப்பால் தான். வேறெதையும் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது. வீட்டிலுள்ள வயதான பெண்மணிகள், நாட்டு மருந்து என்ற பெயரில் பிறந்த குழந்தைக்கு எதையேனும் புகட்டி விடுகின்றனர். இது மாபெரும் தவறாகும். முதன் முதலில் தாய்ப்பாலைத் தவிர வேறெதையும் கொடுக்கவே கூடாது.
குழந்தை பிறந்தவுடன் முதன் முதலில் சுரக்கும் அந்தத் தாய்ப்பால் வெறும் ஆகாரம் மட்டுமல்ல! அந்தக் குழந்தை வளர்ந்து, வாலிபமாகி, வயோதிகமடையும் வரை, ஆயுட்காலம் வரை காக்கும் அவ்டதம் (மருந்து) ஆகும்.
முதலில் சுரந்து வரும் பாலுக்கு சீம்பால் (ஈர்ப்ர்ள்ற்ழ்ன்ம்) என்று குறிப்பிடுவர். இதன் ஒவ்வொரு சொட்டும் நோய் எதிர்ப்பு மருந்தாகும். அதனால் இந்த சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்கத் தவறிவிடக் கூடாது. இந்தச் சீம்பால் சுவாசம், குடல் சம்பந்தமான நோய்களைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தியை உள்ளடக்கியிருப்பது மட்டுமல்லாமல், அனைத்து நோய் எதிர்ப்பு சக்தி உயிரணுக்களும் இதில் அடங்கியிருக்கின்றன.
இந்தத் தாய்ப்பால் நூற்றுக்கும் மேற்பட்ட கலவையைக் கொண்டிருக்கின்றது. செயற்கைப் பால் ஒருபோதும் இந்தக் கலவைகளைப் பெற முடியவே முடியாது.
கஹஸ்ரீற்ர்ச்ங்ழ்ழ்ண்ய் என்ற ஒரு சேர்மானம் தாய்ப்பாலில் உள்ளது. இது, கிருமி நாசினிகள், காளான் நாசினிகள் போன்ற எதிர்ப்பு சக்தியுடன் கூடிய பல்முனை புரதச் சத்துக்களைக் கொண்டதாகும்.
மேலும் தாய்ப்பாலில் அடங்கியுள்ள ஆம்ண்ய்ர்ஹஸ்ரீண்க், ஈஹ்ள்ற்ண்ய்ங், ஙங்ற்ட்ண்ர்ய்ண்ய்ங், பஹன்ழ்ண்ய்ங் ஆகியவை மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு மிக மிக இன்றியமையாதவை.
மூளை வளர்ச்சிக்கு மிக மிக அவசியம் தாய்ப்பால் தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாணவர்களின் புத்திசாலித்தனத்தை மதிப்பீடு செய்வதற்காக, அறிவுத்திறன் அளவெண் சோதனை நடத்துவார்கள். இதில் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் 8 புள்ளிகள் குறைவாக இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இப்படி உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி அத்தனைக்கும் மூலாதாரமாக அமைவது தாய்ப்பால் தான்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு புரதச் சத்து, கனிமச் சத்து, துரித வளர்ச்சி, புத்திக் கூர்மை ஆகிய நன்மைகள் கிடைப்பதுடன், கேன்ஸர், ஆஸ்துமா, சுவாசம் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், காது புண், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கின்றது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மருத்துவச் செலவுகள் இல்லை. அதாவது நோய்கள் தாக்கும் சாத்தியங்கள் குறைவு.
இது தவிர தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் இதனால் பலவிதமான நன்மைகள் ஏற்படுகின்றன.
தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்
1. பிரசவத்தின் போது விரிந்த கருப்பை தாய்ப்பால் கொடுப்பதால் சுருங்குகிறது.
2. பால் கொடுக்கும் தாய்க்கு 200 முதல் 500 வரை கலோரி வெளியேறுகிறது. சாதாரணமாக இந்தக் கலோரியை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றால் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்ட வேண்டும்.
3. வாழ்க்கையில் 6 மாத காலம் தாய்ப்பால் கொடுத்த பெண்ணுக்கு மார்பகப் புற்று நோய் வருவதில்லை.
4. பால் கொடுக்கும் காலத்தில் மாதவிலக்கு தள்ளிப் போகிறது.
5. எல்லாவற்றுக்கும் மேலாக தாய், பிள்ளையின் பாசப் பிணைப்பு! தாய், தன் பிள்ளைக்குப் பால் கொடுக்கும் கட்டம் உண்மையில் உலகில் ஓர் உன்னத நிலையாகும்.
தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள் நீண்டு கொண்டே செல்கின்றன. அதனால் தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகளை இத்துடன் நிறுத்திக் கொண்டு, தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதால் ஏற்படும் தீமைகளைப் பார்ப்பபோம்.
தாய்ப்பால் கொடுக்காததால் ஏற்படும் தீமைகள்
1. குழந்தைக்குப் பால் கொடுக்காத தாய்க்கு மார்பகப் புற்று நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
2. பால் கொடுக்காவிட்டால் உதிரப் போக்கு அதிகமாகி உடலிலிருந்து இரும்புச் சத்து அதிகம் வெளியேறும்.
3. தாயின் உடல் எடை அதிகரித்தல்.
4. செயற்கைப் பால் கொடுக்கும் புட்டியிலும், ரப்பரிலும் கிருமிகள் சேர்வதால் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் ஏற்படுதல்.
5. தாய்ப்பால் கொடுப்பதற்கென எந்தத் தயாரிப்பும் தேவையில்லை. ஆனால் பயணத்தில் இருக்கும் போது செயற்கைப் பால் தயாரிக்க முடியாததால் குழந்தைக்கு ஏற்படும் வேதனை.
இது போன்ற எண்ணற்ற தீமைகள் உள்ளன. எனவே ஒரு தாய் தனது நலத்தையும், தான் உயிரையே வைத்திருக்கும் குழந்தையின் நலத்தையும் கவனித்துக் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
இயற்கை வேதத்தின்   இனிய உத்தரவு
மனித இனம் இந்த இயற்கைச் செயலை மீறும் என்று மனித இயல்பைத் தெரிந்த எல்லாம் வல்ல இறைவன், தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என தனது திருமறை மூலம் உத்தரவிடுகின்றான்.
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 2:233
உலகத்தில் எந்தச் சித்தாந்தமும், மதமும் காட்டாத வழிமுறையை மக்களுக்குத் திருக்குர்ஆன் காட்டுகிறது. காரணம் இது ஓர் இயற்கை வேதம் என்பதால் தான்.
எவ்வளவு காலம் பால் கொடுக்க வேண்டும் என்பதையும் இந்த இயற்கை வேதம் தெளிவுபடுத்தி விடுகின்றது. தாய்ப்பால் கொடுக்க முடியாத அன்னையருக்கு ஒரு மாற்று வழியையும் இந்தத் திருக்குர்ஆன் கற்றுத் தருகின்றது. அது தான் செவிலியர் முறை!
மனிதனுக்கு மனிதப் பால் தான் கொடுக்க வேண்டும். அதற்கு மாட்டுப் பாலோ அல்லது மாவுப் பாலோ மாற்றுப் பரிகாரமாகாது.
மாட்டுப் பால், கன்றுக் குட்டியின் கனமான குடலுக்குத் தான் பொருத்தம். மாவுப் பால் இரசாயனக் கலவைகளின் சங்கமம். இதை உட்கொண்ட எந்தக் குழந்தையும் வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு ஆட்படாமல் இருந்ததில்லை.
அதனால் மனிதனைப் படைத்த அந்த இறைவன் செவிலித் தாய் முறையை செயல்படுத்தச் சொல்கிறான். இன்று தாய்மார்கள், அல்லாஹ் கூறும் இந்த அரிய அறிவுரையைச் செயல்படுத்த முன்வருதில்லை.
தவ்ஹீது ஜமாஅத்திலுள்ள தாய்மார்கள் அல்லாஹ் கூறும் இந்த வழிமுறையைச் செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
பால் சுரக்கும் பெண்கள் இதை ஒரு தொழிலாகச் செய்வதன் மூலம் தங்களுக்கு ஒரு வருவாயை தேடிக் கொள்வதுடன், குழந்தைகளின் நலத்தையும் பாதுகாத்து நன்மைகளைப் பெறலாம்.
இயற்கை மார்க்கத்தின் இந்த இனிய வழிகாட்டலை இவ்வுலகில் அறிமுகப்படுத்தி இஸ்லாத்தின் மாண்பை மக்களுக்கு உணரச் செய்யலாம்.

பற்களைப் பாழாக்காதீர்
உலகில் எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்; மறைந்திருக்கிறார்கள். அந்தத் தலைவர்களுடைய குடும்ப வாழ்க்கையிலோ அல்லது பொது வாழ்க்கையிலோ உள்ள அனைத்துச் செயல்பாடுகளும் பதிவாகவில்லை. ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு அம்சமும் பதியப்பட்டுள்ளது. காரணம், அவர்கள் அல்லாஹ்வின் தூதர்! அதுவும் இறுதித் தூதர் என்பதால் அவர்களுடைய எல்லா செயல்பாடுகளும் பதிவாகி விட்டன.
(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களை என் நெஞ்சின் மீது சாய்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அப்துர் ரஹ்மானிடம், அவர் பல் துலக்கும் ஈரமான (பேரீச்சங்)குச்சி இருந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பார்வையை அவர் பக்கம் செலுத்த, நான் அந்தப் பல் துலக்கும் குச்சியை எடுத்து அதை (வாயில் வைத்து என் பற்களால் அதன் முனையை) மென்றேன். அதை உதறிப் பக்குவப்படுத்திய பின் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதனால் பல் துலக்கினார்கள்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விட அழகாகப் பல் துலக்கியதை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கி முடித்தவுடன் "தம் கையை' அல்லது "தம் விரலை' உயர்த்திப் பிறகு, "(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)'' என்று மும்முறை பிரார்த்தித்தார்கள்.  பிறகு (தம் ஆயுளை) முடித்துக் கொண்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 4438
மரணப் படுக்கையின் போதும் அந்தத் தலைவர் பல் துலக்கும் பழக்கத்தை கைக்கொண்டிருந்தார்கள். அந்த அளவுக்கு அதில் ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள்.
"பல் துலக்குவது தொடர்பாக நான் உங்களுக்கு அதிகமாக வலிறுத்தியிருக்கின்றேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 888

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்

திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமான ரமளானை முன்னிட்டு இவ்விதழ், திருக்குர்ஆன் சிறப்பு மலராக வெளியிடப்படுகிறது.
ஏற்கனவே 2003ஆம் ஆண்டு நவம்பர் இதழ் திருக்குர்ஆன் சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. அது முழுக்க முழுக்க திருக்குர்ஆன் கூறும் அறிவியலை மையமாக வைத்து எழுதப்பட்டது.
இந்த இதழ் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தலைப்பில் உருவாக்கப் பட்டுள்ளது.
திருக்குர்ஆன் சிறப்பிதழ் என்று கூறி விட்டு, இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தலைப்பில் எழுதுவது என்ன நியாயம்? என்று கேட்கலாம்.
முறையாக, திருக்குர்ஆன் ஓர் இயற்கை வேதம் என்று தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
ஆனால் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்று கூறினாலும், இறைத் தூதர் ஓர் இயற்கைத் தூதர் என்று கூறினாலும் அது குறிக்கப் போவது திருக்குர்ஆனைத் தான்.
ஏனெனில் இஸ்லாம் என்பது திருக்குர்ஆனின்  நேரடி வழிகாட்டல் ஆகும்.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.
அல்குர்ஆன் 2:185
இறைத் தூதர் ஓர் இயற்கைத் தூதர் என்று சொன்னால் அதுவும் குர்ஆனையே குறிக்கும்.
(முஹம்மதே!) மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
அல்குர்ஆன் 16:44
அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ் வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது.
அல்குர்ஆன் 16:64
இறைத் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் விளக்கவுரை என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்து கின்றன. இந்த அடிப்படையில் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தலைப்பில் இந்தத் திருக்குர்ஆன் சிறப்பு மலர் தன் பயணத்தைத் தொடர்கிறது.
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்று அறிந்திருக்கிறோம்; இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்று அறிந்திருக்கிறோம். அது என்ன? இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்? என்று கேட்கலாம்.
இன்று நாம் சுவாசிக்கின்ற காற்றில் கலந்திருக்கும் நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற வாயுக்கள் அனைத்தையும் சரியான விகிதாச்சாரத்தில் அல்லாஹ் அமைத்திருக்கின்றான்.
அது போன்று நமது உடல் சீராக இயங்குவதற்கு உடலில் இவ்வளவு கொழுப்புச் சத்து இருக்க வேண்டும்; இவ்வளவு இனிப்புச் சத்து இருக்க வேண்டும் என எல்லாமே ஒரு சரியான கணக்கின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விகிதாச்சாரத்தைத் தாண்டினால் உடல் கடுமையான நோய்களுக்கு இலக்காகின்றது. இதைத் தான் இயற்கை வகுத்த விதி என்கிறார்கள். இஸ்லாத்தின் அடிப்படையில் இது இறைவன் வகுத்த விதியாகும்.
இப்படியொரு இயற்கை விதியை வகுத்த அந்த நாயன்,  அதற்கேற்ப மனித சமுதாயம் வாழ்வதற்காக அளித்த விதிகள் தான் திருக்குர்ஆன்.
மார்க்கச் சட்டங்கள், மார்க்க விதிகள் என்பவை, ஏற்கனவே இந்த உலகம் இயங்குவதற்காக அல்லாஹ் வகுத்திருக்கின்ற இயற்கை விதிகளுக்கு ஏற்ப அமைந்தவை தான் என்ற கருத்தை விளக்கவே இந்தத் தலைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
உலகில் உள்ள அறிவியல் அறிஞர்கள் மட்டுமல்லாது நாத்திகர்கள் கூட ஒப்புக் கொள்ளும் விஷயம் அந்த இயற்கை விதிகள் தான். இயற்கை விதிகளை அனைவரும் நம்புகின்றார்கள்.
இவர்கள் நம்பும் அந்த இயற்கை விதிகளை வகுத்த அதே இறைவன் தான் இஸ்லாம் எனும் இந்த விதிகளையும் வகுத்திருக்கிறான் என்பதை உற்று நோக்கச் சொல்வது தான் இந்தத் தலைப்பின் நோக்கம்.
இதைத் தான் வல்ல அல்லாஹ்வும் தனது திருமறையில் கூறுகின்றான்.
உண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக! இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றுதலும் இல்லை. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
அல்குர்ஆன் 30:30
இந்த இயற்கை மார்க்கத்தில் ஓர் இனிய உலா சென்று வருவோம்.

எய்ட்ஸிலிருந்து காக்கும் கத்னா
எல்லாம் வல்ல அல்லாஹ், இஸ்லாத்தை ஓர் இயற்கை மார்க்கம் என்று கூறுகிறான்.
கோடை காலத்தில் வெயில்; மழைக் காலத்தில் மழை என்று இவ்வுலகில் மாறி மாறி வரும் பருவ காலம், மழை பெய்ததும் பூமியில் பச்சைப் பசேல் என்ற புற்பூண்டுகளின் விளைச்சல், உயிரினங்களின் இனப் பெருக்கம், கரையைத் தொட்டு ஆடி மகிழும் கடல் அலைகள், வீசுகின்ற காற்று போன்ற இந்த அமைப்புகளை, அருள்மிகு ஆக்கங்களை இயற்கை என்று நாம் கூறுகிறோம்.
இந்த இயற்கை அமைப்பில்  உட்பட்டவன் தான் மனிதன். அவனுடைய உடலில் வளரும் தலை முடி, தாடி, மீசை மற்றும் இதர பகுதிகளில் வளரும் முடிகள், நகம் அனைத்துமே இயற்கைக்கு உட்பட்டது தான்.
மனித உடலில் அமைந்திருக்கும் இந்த இயற்கை அமைப்பைப் பராமரிப்பதும் ஓர் இயற்கையான அம்சம் தான். இதை உலகில் எந்த மார்க்கமும் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. காரணம், அந்த மார்க்கங்கள் இயற்கையானவையல்ல!
இஸ்லாம் தான் இயற்கை மார்க்கம். அதனால் தான் இயற்கை நெறிகளைக் கற்றுக் கொடுக்கிறது.
"இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்து கொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5891
ஹெச்.ஐ.வி. எய்ட்சும், இயற்கை கத்னாவும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய இயற்கையான இந்த ஐந்து அம்சங்களில் கத்னா எனும் விருத்த சேதனமும் ஒன்றாகும்.
இந்த கத்னா, இன்று எய்ட்ஸ் எனப்படும் ஹெச்.ஐ.வி. வைரஸை விட்டும் காக்கும் காப்பரணாகத் திகழ்கிறது.
22.07.07 அன்று பி.பி.சி. வெளியிட்ட செய்தி இதை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் தொடர்பாக உலகளவிலான மிகப் பெரிய மாநாடு விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஆண்களுக்குச் செய்யப்படும் கத்னா (விருத்த சேதனம்) 60 சதவிகித அளவுக்கு எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்ற கண்டுபிடிப்பு உறுதியானது தான் என்பதைக் கூறும் ஆய்வறிக்கை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த ஆய்வறிக்கையை 5000க்கும் மேற்பட்ட குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன என்று பி.பி.சி.யின் செய்தி தெரிவிக்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் மிகக் குறைவு தான். ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் நீண்ட நாட்களாக அறியப்பட்ட உண்மையாகும்.
தென் ஆப்பிரிக்க ஆண்களில் 60 சதவிகிதம் பேரை ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயத்திலிருந்து கத்னா காக்கின்றது என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கண்டுபிடிப்பை அண்மையில் கென்யாவிலும், உகாண்டாவிலும் சேகரித்த ஆதாரம் உறுதி செய்கின்றது.
இவ்வாறு கத்னா ஒரு காவல் அரணாக அமைந்திருப்பதை அறிய முடிகின்றது என்று தனது செய்தியில் பி.பி.சி. தெரிவிக்கிறது.
இந்தக் காவல் அரணுக்கு கத்னா தான் காரணமா? அல்லது அவர்கள் குறைந்த அளவிலான பெண்களிடம் உடலுறவு கொள்வது தான் காரணமா? என்று தெரியவில்லை என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.
அதாவது முஸ்லிம்களிடம் உள்ள விபச்சாரத் தடை, பலதார மணம் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றது.
கத்னா, விபச்சாரத் தடை, பலதார மணம் இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் அது இஸ்லாமிய மார்க்கத்தினால் ஏற்பட்ட கண்ணியம் தான்.
அமெரிக்காவின் "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்திக் குறிப்பையும் இங்கே பார்ப்போம்.
ஹெச்.ஐ.வி. பாதிப்பை விட்டும் பாதியளவுக்கு கத்னா பாதுகாக்கிறது எனறு அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸின் செய்தியாளர் டொனால்டு ஜி. மெக்நெய்ல் குறிப்பிடுகிறார்.
சுரப்பிகளிலிருந்து சுரந்து வரும் உயிரணுக்கள் ஆணுறுப்பின் நுனித் தோல் பகுதியில் தேங்குகின்றன. ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வைரஸானது உடலுறவின் போது, ஏற்கனவே தேங்கி நிற்கும் இந்த உயிரணுத் தொகுதிக்குள் எளிதில் தொற்றிக் கொண்டு விடுகின்றது. அதனால் உடலுறவு கொண்ட அந்த ஆணும் ஹெச்.ஐ.வி. வைரஸின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றான் என்று அந்தச் செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
இங்கு தான், இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்பதை அறிந்து நாம் வியப்பில் ஆழ்கிறோம். இதைத் தான் வல்ல அல்லாஹ்வும் தன் திருமறையில் 30:30 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
மேலே நாம் கண்ட அந்த ஹதீஸ் மீசையைக் கத்தரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.
இன்று உலகில் பலர் தாடியை முழுமையாக மழித்து விட்டு மீசையை வைத்திருக்கின்றனர். அவர்களுடைய மீசை உண்மையில் வாயில் ஒரு வடிகட்டியைப் போல் அமைந்துள்ளது. அவர்கள் குடிக்கின்ற பானங்கள், சாப்பிடும் பண்டங்கள் அனைத்தும் மீசையில் பட்ட பின்னர் தான் உள்ளே செல்கின்றது.
சளி மற்றும் அசுத்தங்கள் தங்கி நிற்கும் இந்த மீசை வழியாக உணவுப் பொருட்கள் செல்வது சுகாதாரக் கேட்டை உருவாக்கும் என்பதால் இதைத் தடுக்கும் விதமாக, மீசையைக் கத்தரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது.
இது போன்று உடல் நாற்றத்திற்குக் காரணமாக அமையும் அக்குள் முடிகளையும், இன உறுப்பின் முடிகளையும் களையச் சொல்கிறது.
நகங்களின் இடுக்குகள் தான் கிருமிகள் அடைக்கலம் புகுமிடம் என்பதால் நகங்களையும் வெட்ட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.
இவற்றை வளர்ப்பது இயற்கையல்ல, களைவது தான் இயற்கை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகுக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார்கள்.

பூமிக்கு உகந்தது புதைப்பதே
ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். "(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.
"என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை நோக்கி நீ நீட்டினால் உன்னைக் கொல்வதற் காக என் கையை உன்னை நோக்கி நான் நீட்டுபவனல்லன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன்''
"உன் பாவத்துடன், என் பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்'' (எனவும் அவர் கூறினார்)
(இவ்வளவுக்குப் பிறகும்) தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே நஷ்டமடைந்தவனாக ஆகி விட்டான்.
தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. "அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்தி ருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே'' எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான்.
அல்குர்ஆன் 5:27-31
அல்லாஹ் கூறும் இந்தச் சுவையான சம்பவம் உலகில் நடந்த முதல் கொலையை விவரிக்கும் அதே வேளையில், ஒருவர் இறந்து விட்டால் அவரைப் புதைக்க வேண்டும் என்ற முன் மாதிரியை அல்லாஹ்வின் இயற்கை வேதமான திருக்குர்ஆன் மனித குலத்திற்குக் கற்றுக் கொடுக்கின்றது.
உலகில் வாழும் 100 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்த நடைமுறையைத் தான் கையாள்கின்றனர். பூமியில் புதைக்கும் இந்த முறை தான் இயற்கைக்கு உகந்ததாகும்.
"இறந்த பின் சடலத்தை எரிப்பதற்குப் பதிலாக, சுற்றுப்புறச் சூழலுக்கு உதவும் விதத்தில் அதைப் பூமியில் ஒரு மரத்திற்கு அடியில் புதையுங்கள். மண்ணில் கலந்து சிதிலமாகும் உடல் அந்த மரத்திற்குச் சத்துக்களை வழங்கும். அந்த மரம் அதைப் பல ஆண்டுகளுக்கு, கார்பன் டை ஆக்ஸைடை உயிர் காக்கும் ஆக்ஸிஜனாக மாற்றித் தருகின்றது. (மனித இனம் மட்டுமல்ல! உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஆக்ஸிஜனை வழங்குவதும் விநியோகிப்பதும் தாவர இனம் தான்.) கார்பன் டை ஆக்ஸைடை, ஆக்ஸிஜனாக மாற்றித் தரும் இந்த அற்புதமான ஒரு செயலைச் செய்யாமல், இறந்த உடலைப் புதைக்காமல், கார்பன்டை ஆக்ஸைடை அதிகப்படுத்தி விடும் நெருப்புக்குள் நம்முடைய உடலை எரிய விடுவது வெட்கக் கேடாகும்'' என்று கூறுகிறார், இனப்பெருக்க உயிரியல் துறை நிபுணர் பேராசிரியர் ரோஜர் ஹார்ட் என்பவர்.
ஆஸ்திரேலியாவில் 850 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஒரு சடலம் எரிக்கப்படுகிறது. சுமார் 90 நிமிடங்களுக்கு எரியும் இந்த நெருப்பினில் 50 கிலோ கார்பன்டை ஆக்ஸைட் வெளியாகின்றது. சடலத் துடன் எரிந்த எரிபொருள் மற்றும் மரக்கட்டைகள் மூலம் வெளியான கார்பன் டை ஆக்ஸைடின் மதிப்பு இந்தக் கணக்கில் சேர்க்கப் படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
சடலங்களை எரிப்பது பூமியைச் சுற்றி உள்ள பசுமைக் குடிலுக்கு மிகவும் ஊறு விளைவிக்கக் கூடிய காரியமாகும் என்று அவர் தெரிவிக்கிறார்.
ஒருவர் இறந்ததும் தன்னுடைய உடலை மண்ணோடு மண்ணாகக் கரையும் வகையில் தானம் செய்வது, அதாவது மண்ணில் அடக்கம் செய்வது வன வளத்தைக் காக்கும் சிறந்த பணியாகும் என்று அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
"ஈழ்ங்ம்ஹற்ண்ர்ய் ன்ய்ஜ்ண்ள்ங் ண்க்ங்ஹ'' ள்ஹஹ்ள் ள்ஸ்ரீண்ங்ய்ற்ண்ள்ற் - "எரிப்பது புத்திசாலித் தனமான காரியமல்ல'' விஞ்ஞானி சொல்கிறார் - என்ற தலைப்பில் மேற்கண்ட செய்திகள் ஹிந்து நாளேட்டில் 19.04.2007 அன்று வெளியான செய்தியாகும்.
இந்த விஞ்ஞானியின் கருத்தை இப்போது கொஞ்சம் அசை போடுவோம்.
உலகில் நூறு கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், அதை விட அதிகமான கிறித்தவர்கள் ஆகியோர் தங்கள் சடலங்களை எரிக்க ஆரம்பித்தால் ஏற்கனவே சூடாகிக் கொண்டிருக்கும் பூமியின் வெப்பத்தை அது அதிகரிக்கச் செய்து, உலகம் வெகு சீக்கிரத்தில் அழிந்து போய் விடும். ஆனால் திருக்குர்ஆனின் வழி காட்டுதலால் இறந்த மனிதர்களின் சடலங்கள் மண்ணில் புதைக்கப் படுகின்றன.
மண்ணில் கிடந்து சிதிலமாகும் இந்த உடல் மரத்திற்கு உரமாகி சத்துக்களை வழங்கும் என்று அந்த அறிவியல் அறிஞரின் கூற்று மேம்போக்கானதல்ல! அறிவியல் உண்மையாகும்.
வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன.
ஒரு தடவை மின் வெட்டி மறையும் போது, காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும், 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது.  இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது.
வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன!  இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது.
மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன.  அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றில் நைட்ரேட்டுகள் உருவாகின்றன.  கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது.  இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன.
இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடுவதன் மூலமோ மனிதன் நைட்ரஜனைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றான்.
மனிதனுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் அது மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது.  மனித உடலில் மட்டுமல்லாது மொத்த உயிரினங் களின் உடலிலும் நைட்ரஜன் கலந்து அந்த உயிரினங்கள் மடிந்ததும் மண்ணில் கலந்து விடுகின்றது.  பின்னர் மீண்டும் காற்றிலேயே கலந்து விடுகின்றது.  இதற்குப் பெயர் தான் நைட்ரஜன் சுழற்சி என்று வழங்கப்படுகின்றது.
மனிதனால் மரத்துக்குப் பயன்; மரத்தால் மனிதனுக்குப் பயன் என்று மனிதனுக்கும் மரத்திற்கும் உள்ள உறவை இது விளக்குகின்றது. இறந்த உடலை மண்ணில் புதைப்பதன் மூலம் தான் இந்தச் சுழற்சி சாத்தியமாகும். அவ்வாறு புதைப்பது தான் இயற்கையானதாகும். இதையே திருக்குர்ஆனின் பின்வரும் வசனம் குறிப்பிடுகின்றது.
இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப் படுத்துவோம்.
அல்குர்ஆன் 20:55
மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப் படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.
அல்குர்ஆன் 22:5
இந்த வசனங்களின் கருத்து அப்படியே அறிவியல் கண்டு பிடிப்புகளுடன் பொருந்திப் போவதை நாம் பார்க்க முடிகின்றது. மண்ணில் படைக்கப்பட்டவன் மண்ணிலேயே திருப்பப்படுகிறான் என்ற உண்மையையும் இந்த வசனங்கள் தத்ரூபமாக எடுத்துக் காட்டுகின்றன.
மனிதனை மண்ணில் புதைப்பது தான் இயற்கையானது என்பதை அல்லாஹ்வின் வசனங்களிலிருந்தும், அறிவியல் உண்மைகளிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
உலகம் இப்படித் தான் இயங்க வேண்டும் என்ற ஓர் இயற்கை விதியை அல்லாஹ் நிர்ணயித்து உள்ளான். அவனே அதைத் தனது வேதத்தின் மூலம் வழங்கி, இயற்கை விதியையும் வேத விதிகளையும் ஒத்துப் போகச் செய்கிறான். இங்கு இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கமாகத் திகழ்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்கிறோம்.
அத்துடன் நாம் இன்னொரு விளக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மங்கையும் கங்கையும்
மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம்; ஆனால் கங்கையே சூதகமானால் எங்கே போவது? என்று சொல்வார்கள். இமயத்தில் பிறந்த தூய்மையான பளிங்கு போன்ற பனி நீரைக் கொண்ட கங்கை நதி, இன்று எரிக்கப்பட்ட சடலங்களின் சாம்பல்களாலும், சாக்கடைகளாலும் களங்கப்படுகிறது. சடலத்தை எரிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மட்டுமல்ல! சுத்தமான தண்ணீரும் மாசுபட்டுப் போகின்றது.
கங்கை மட்டுமல்லாது இந்தியாவில் ஓடும் அத்தனை ஜீவ, பருவ நதிகளும் இப்படி மாசுபட்டு விட்டன.
நர சாம்பலால் நாறிப் போன தண்ணீர் தான் இன்று குடிநீராக, கோடான கோடி மக்களால் பருகப்படுகிறது. இதுவெல்லாம் ஏன்? இயற்கை மார்க்கமான, இறை மார்க்கமான இஸ்லாத்தை விட்டு விட்டு மனிதர்கள் தாங்களாக உருவாக்கிக் கொண்ட செயற்கை மார்க்கங்களை பின்பற்றுவதால் தான்.
இவற்றைச் சிந்தித்துப் பார்த்து, இஸ்லாத்தின் பக்கம் மக்கள் அனைவரும் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை!

அடக்கத்தலத்தின் ஆகாய விலை
"நகரத்தின் மத்தியிலா வீடு வாங்கப் போகிறீர்கள்? அங்கு சதுர அடிக்கு பத்தாயிரம் ரூபாய் ஆகுமே!' என்று வீடு வாங்குபவர்களிடம் நாம் பேசிக் கொள்வோம். உயிருடன் உள்ளவர் தனக்காக வீடு வாங்கும் போது நாம் இவ்வாறு சொல்வோம். ஆனால் செத்தவருக்கு நிலம் தேடுவோரிடம் இப்படிச் சொன்னால் எப்படியிருக்கும்?
"இந்த மையவாடியிலா அடக்கம் செய்யப் போகிறீர்கள்? அங்கு ஒரு சதுர மீட்டர் நிலம் 7,800 யுவான்; அதாவது ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் 45 ஆயிரம் இந்திய ரூபாய்)' என்று சீனாவில் உள்ளவர்கள் பேசிக் கொள்கின்றனர்.
இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. 03.04.2007 அன்று பி.பி.சி. வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் தான் கூறுகிறோம்.
மத்திய சீனாவின் ஹெனான் மாநிலம் செங்ஸாவ் என்ற இடத்தில் ஒரு சதுர மீட்டர் அடக்கத்தல இடம் 7,800 யுவான் ஆகும். இதே பகுதியில் குடியிருக்க வீடு வேண்டுமென்றால் ஒரு சதுர மீட்டர் 4,000 யுவான் மட்டுமே!
வீட்டுக்குச் செலவு செய்வதை விட இறந்தவரின் அடக்கத்தலத்திற்கு இரு மடங்கு செலவாகின்றது.
சமீபத்தில் சீனாவில் அடக்கத்தல விற்பனையில் உலகளாவிய வணிகம் உள்ளே நுழைந்து அவற்றின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து விட்டன. பொது மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி விட்டனர். அரசாங்கத்தினால் இதைத் தடை செய்யவும் முடியவில்லை. காரணம், இது தொடர்பாக 1997ல் இயற்றப்பட்ட சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளன என்று அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.
சீனா ஏன் இவ்வாறு அவதிக்குள்ளாக வேண்டும்?
கல்லறைகள் சந்திப்பு நாள் என்று ஒரு நினைவு நாளை ஏற்படுத்தி அந்நாளில் சீனர்கள் கல்லறைகளில் போய் குவிகின்றனர். இதற்காக இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் அவர்கள் கல்லறைகளை எழுப்புகின்றனர். அத்துடன் பொதுச் சொத்தாக இருக்க வேண்டிய அடக்கத்தலத்தை தங்கள் குடும்பச் சொத்தாக ஆக்கிக் கொள்கின்றனர். இதனால் தான் சீனர்கள் இந்தச் சீரழிவைச் சந்திக்கின்றனர்.
இறந்தவர்களை மண்ணில் அடக்கம் செய்து விட்டு அதன் மீது கல்லறைகளை, நினைவுச் சமாதிகளை கட்டாமல் இருந்தால் இப்படியொரு பிரச்சனையை சீனர்கள் எதிர் நோக்க வேண்டிய அவசியமில்லை. இந்த இயற்கை முறையைத் தாண்டிச் செல்வதால் இந்தச் சோதனையை சந்திக்கின்றனர்.
சீனர்கள் மட்டுமல்ல! கிறித்தவர் களும் கூட கல்லறை கட்டுவதால் இது போன்ற சோதனையை அனுபவிக்கின்றனர். சென்னை போன்ற பகுதிகளில் கிறித்தவர்களின் கல்லறைக்கு கிட்டத்தட்ட இதே நிலை தான் உள்ளது.
இங்கு தான் இஸ்லாம் என்ற இயற்கை மார்க்கம் இயற்கைக்கு இயைந்த ஓர் உத்தரவைத் தனது இறைத் தூதர் மூலம் பிறப்பிக்கின்றது.
"தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே!'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1609
கப்ரு பூசப்படுவதையும், அதன் மீது அமரப்படுவதையும், அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610
இறைத் தூதரின் இந்த உத்தரவை முஸ்லிம்கள் உலகெங்கிலும் நடைமுறைப்படுத்துகிறார்கள்.
01.08.05 அன்று சவூதி மன்னர் ஃபஹத் மரணம் அடைந்தார். அவர் இறந்ததும் உலகச் சந்தையில் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது.
இப்படிப்பட்ட ஒரு பணக்கார நாட்டு மன்னரின் அடக்கத்தலம் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய வகையில் அமைந்தது. ரியாதில் அல் அவ்து என்ற பொது மயானத்தில் ஆறடி நிலத்தில் ஆடம்பரமின்றி அடக்கம் செய்யப்பட்டார். அவரது சமாதி பல கோடிக்கணக்கான   பணச் செலவில் பளிங்கால் அமையவில்லை. இதற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த உத்தரவு தான்.
தரை மட்டத்திற்கு மேல் அடக்கத்தலத்தை உயர்த்தக் கூடாது என்றும், கப்ருகளைப் பூசக் கூடாது என்றும் அவர்கள் கூறி விட்டதால் முஸ்லிம்கள் தங்கள் அடக்கத் தலங்களை மண்ணோடு மண்ணாக ஆக்கிக் கொள்கின்றனர். (தர்ஹாக்கள் என்ற பெயரில் சமாதிகளின் மீது முஸ்லிம் பெயர் தாங்கிகள் கட்டடங்களைக் கட்டியிருப்பதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.)
இஸ்லாம் கற்றுத் தந்துள்ள இந்த இயற்கை முறையினால், எவ்வளவு பேர் இறந்தாலும் அடக்கத்தலத்திற்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது.
அடக்கத் தலத்திற்கு சதுர அடி கணக்கில் நிலம் வாங்குவது, விற்பது போன்ற நெருக்கடிகளையும் முஸ்லிம்கள் சந்திப்பதில்லை. இவ்வாறு அடக்கம் செய்வதால் பொருளாதார ரீதியிலும் பெரும் நன்மை கிடைக்கிறது.

மூளைக்காய்சலுக்கு காரணம்
12.09.2000 அன்று பி.பி.சி.யில் வெளியான ஒரு செய்தி: மூளைக் காய்ச்சலுக்கு உத்தர பிரதேசத்தில் 100 பேர் இறந்தனர். 400 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது அரசாங்கம் அறிவிக்கும் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைத் தாண்டும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நோய் இப்பகுதியில் 22 வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்டது என்றும், இதன் காரணமாக இது வரை 7000 பேர் இறந்திருக்கிறார்கள் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மிக அதிகமாக இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதற்கு மூல காரணம் பன்றிகள் தான். இந்தப் பன்றிகளைக் கொல்ல வேண்டும். அரசியல் காரணங்களால் பன்றிகள் இன்னும் உலா வந்து கொண்டிருக்கின்றன என்றும் அந்தச் சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இவ்வாறு பி.பி.சி.யின் அந்தச் செய்தி கூறுகின்றது.
26.07.07 அன்று ஹிந்து நாளேட்டில் வெளியான செய்தி:
இந்த நோயின் தாக்குதலை விட்டும் காப்பதற்காக 11 மில்லியன் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. (முதலில் பன்றியிடமிருந்தும் பின்னர்) கொசுவின் மூலம் பரவும் இந்த வைரஸ் ஆசியா பசிபிக் பகுதியிலுள்ள 10,000 குழந்தைகளை ஒவ்வொரு வருடமும் பலி வாங்கியுள்ளது.
இத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு தப்பியுள்ளனர். ஆனால் அவர்களின் நரம்பு மண்டலங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இது "ஹிந்து' தரும் தகவலாகும்.
1999ல் இந்நோய் மலேஷியாவில் ஏற்பட்டதும், அந்நாடு 64,000 பன்றிகளைக் கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டது. மலேஷியாவில் இந்நோய் பரவத் தொடங்கியதும் மக்கள் கிராமம் கிராமமாக வெளியேற ஆரம்பித்து விட்டனர் என்று 19.03.1999 அன்று பி.பி.சி. குறிப்பிட்டுள்ளது.
அனுபவமும் அறிவியலும் உணர்த்தும் பாடம்
மூளைக் காய்ச்சல் ஏற்படுவதற்கு மூல காரணம் பன்றிகள் தான். அனுபவப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் இதை மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். சாக்கடையில் குளியல் நடத்தும் பன்றியிடம் உட்கார்ந்து இரத்தத்தை உறிஞ்சிய கொசு நம் வீட்டுக் குழந்தைகள் மீது வந்து உட்கார்ந்து விட்டால் போதும்; குழந்தைக்கு மூளைக் காய்ச்சல் வந்து விடும் என்று வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அளவுக்கு அறிவியல் ரீதியாக உணர்த்தப்படும் இந்நோய்க்குப் பெயர் ஜப்பானீஸ் என்ஸபலைடிஸ் என்பதாகும். இந்நோய் 1871ல் ஜப்பானில் அடையாளம் காணப்பட்டதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. என்ஸபலைடிஸ் என்றால் மூளையில் எரிச்சல் ஏற்பட்டு செயலிழப்பதாகும். இந்த நோயின் வைரஸ் ஃப்லாவிவிரிடியா என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இந்த வைரஸ் வந்து தங்கி வளர்வதும், வாழ்வதும் சாட்சாத் பன்றிகளிடம் தான். அவற்றிடமிருந்து கொசுக்கள் மனிதர்களிடம் அந்நோயைத் தொற்றச் செய்கின்றன.
உலகில் இஸ்லாம் தான் பன்றியின் இறைச்சியைத் தடை செய்கின்றது.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2:173
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்.
அல்குர்ஆன் 5:3
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான்.
அல்குர்ஆன் 16:115
இந்த வசனங்கள் அனைத்தும் பன்றியின் இறைச்சியை உண்பதைத் தடை செய்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, "நிச்சயமாக மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்துள்ளனர்!'' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே அதைப் பற்றிக் கூறுங்கள்!'' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "கூடாது! அது ஹராம்!'' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, "அல்லாஹ் யூதர்களை தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 2236
இதன் மூலம் பன்றியை விற்பனை செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! மர்யமின் புதல்வர் (ஈசா) உங்களிடம் நேர்மையான நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை உடைப்பார்! பன்றியைக் கொல்வார்! காப்பு வரியை (ஜிஸ்யா) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2222
பன்றி என்பது கொல்லப்பட வேண்டிய பிராணி என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.
"நர்தஷீர் எனும் விளையாட்டை விளையாடுபவர் தனது கையை பன்றியின் இறைச்சியிலும், இரத்தத்திலும் தோய்த்தவர் போன்றவர் ஆவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: முஸ்லிம் 4194
பன்றியின் இறைச்சியிலும், இரத்தத்திலும் கை வைப்பது கூட அருவருக்கத்தக்க செயல் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.
பன்றியினால் ஏற்படும் தீமை களை உணர்ந்து தான் இஸ்லாமிய மார்க்கம் இப்படியொரு கடுமையான நிலைபாட்டை எடுக்கின்றது. ஆனால் உலகம் பன்றியின் தீமையை உணர்ந்தபாடில்லை.
ஆந்திர மாநிலத்தில் 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் மூளைக் காய்ச்சல் நோய் தாக்கி 100 குழந்தைகள் இறந்தனர்; 500 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போது முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, உடனே பன்றி வளர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். அதற்கு அதிகாரிகள், "பத்து லட்சம் பேர் பன்றி வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுகின்றனர்; அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யுங்கள்'' என்று பதிலளித்தனர்.
மக்களின் உயிருடன் விளையாடுகின்ற எந்த ஒரு தொழிலையும் ஒழித்துக் கட்டும் இயற்கை மார்க்கமான இஸ்லாமிய ஆட்சியின் அவசியத்தை இங்கு உணர வேண்டும்.

வேதத் தூதரின் வேதியல் விளக்கம்
இரு கண்ணாடித் தொட்டிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டிலும் சம அளவில் கலக்கப்பட்ட சுண்ணாம்பு நீரை ஊற்றுங்கள். ஒரு தொட்டியில் சைக்கிள் டயருக்குக் காற்றடிக்கும் பம்பை வைத்து காற்றை ஊதுங்கள். இன்னொரு தொட்டியில் ஸ்ட்ரா மூலம் நீங்கள் காற்றை ஊதுங்கள். என்ன நடக்கின்றது? இரண்டு பாத்திரங்களில் உள்ள சுண்ணாம்பு நீரும் பால் நிறத்தில் மாறும். ஆனால் ஒரு வித்தியாசம் ஏற்படும்.
வாயினால் ஊதிய, அதாவது நமது மூச்சுக் காற்றுடன் கலந்த அந்தச் சுண்ணாம்பு நீர் மிக மிக விரைவாக பால் நிறத்தைப் பெறுகின்றது. ஆனால் நமது சுவாசக் குழாயில் செல்லாத வெளிக் காற்று கலந்த நீர் மெதுவாகவே பால் நிறத்தை அடையும்.
இதில் என்ன மர்மம் அடங்கியிருக்கின்றது? இதை இந்த வரைபடம் உங்களுக்கு விளக்கும்.
மனித இனம், மிருக இனம், தாவர இனம் போன்ற அத்தனை உயிரினமும் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழ முடியாது.
இந்த ஆக்ஸிஜனைப் பெறுவதற்காக நாம் வெளியிலிருந்து காற்றை உள்ளே இழுத்து உடனே வெளியே விடுகிறோம்.
நம்முடைய உடல் உயிரணுக்களால் அமைந்தது. ஒவ்வோர் உயிரணுவும் தனக்குரிய பணியைச் செய்து கொண்டிருக்கிறது. இந்த உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் தேவை. அந்த ஆக்ஸிஜன் தான் நாம் சாப்பிடும் உணவிலிருந்து நமக்குத் தேவையான சக்தியை உயிரணுக்கள் எடுப்பதற்கு உதவுகிறது.
இந்த ஆக்ஸிஜன் காற்று மூலமாக, நாசித் துவாரம் வழியாக நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நுரையீரலுக்கு வந்த இந்த ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு, உயிரணுக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறது. அந்த உயிரணுக்கள் ஆக்ஸிஜனைப் பெற்றுக் கொண்டு கெட்ட காற்றை, கார்பன் டை ஆக்ஸைடை வெளியே விடுகின்றது. இந்தக் கார்பன்டை ஆக்ஸைடு உடலுக்குள் தங்கினால் அது மிகப் பெரும் கேட்டை உருவாக்கி விடும்.
நாம் உடற்பயிற்சி செய்வதற்காக ஓடுகிறோம். அப்போது நம்முடைய உயிரணுக்கள் மிகக் கடுமையாக வேலை செய்கின்றன. அவற்றுக்கு அப்போது ஆக்ஸிஜன் அதிகமாகத் தேவைப்படுகிறது. இந்த ஆக்ஸிஜன் தேவைக்கு ஏற்ப இரத்த ஓட்டத்தின் வேகமும் அதிகரிக்கும்.
நாம் ஓடும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ நமது இருதயம் வேகமாக அடிக்கும்; அதன் துடிப்பு அதிகரிக்கும்; நமக்கு மூச்சிறைக்கும். ஏன்? இரத்த வேகத்திற்குத் தக்க இருதயம் செயல்பட்டாக வேண்டும் என்பதால் தான்.
இந்த மூச்சிறைப்பின் காரணமாக அதிகமான உடலிலிருந்து அதிகமான கார்பன்டை ஆக்ஸைடு வெளியாகின்றது. உடற்பயிற்சிகளின் போது நாம் அதிகமான ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறோம். அதிகமான கார்பன்டை ஆக்ஸைடை வெளியே விடுகிறோம். சாதாரண நேரத்தை விட இது போன்ற உடற்பயிற்சிகளின் போது அதிகமான ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு, அதற்குத் தக்க கார்பன்டை ஆக்ஸைடை வெளியே விடுகிறோம். வேகமாகச் செல்லும் வாகனத்திற்கு அதிக எரிபொருள் தேவைப்படுவது போல் நமது உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் என்ற எரிபொருள் தேவைப்படுகிறது.
நம்முடைய உடலில் உயிரணுக்கள் எவ்வாறு ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு, கார்பன்டை ஆக்ஸைடை வெளியே விடுகின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
இதை எப்போது கண்டு பிடித்தார்கள்?
ஸ்காட்லாண்ட்டின் இயற்பியல் மற்றும் வேதியியல் அறிஞர் ஜோசப் பிளாக்  (1728-1799) என்பவர் 1754ம் ஆண்டு கார்பன்டை ஆக்ஸைடை அடையாளம் கண்டார்.
ஜோசப் பிரிஸ்ட்லே (1733-1804) என்பவர் 1774ம் ஆண்டு ஆக்ஸிஜனைக் கண்டுபிடிக்கிறார்.
ஆக, ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடைப் பற்றிய விபரம் 18ம் நூற்றாண்டில் தான் மனித இனத்திற்குத் தெரிய வருகின்றது. இந்த விபரத்தை 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மத் (ஸல்) அவர்களால் எப்படிச் சொல்ல முடியும்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (எதையும்) பருகும் போது பாத்திரத்திற்குள் மூச்சு விட வேண்டாம்; கழிப்பிடம் சென்றால் பிறப்புறுப்பை வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத்தால் சுத்தம் செய்ய வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூ கத்தாதா (ரலி)
நூல்: புகாரி 153
18ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு செய்தியை ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரால் எப்படிக் கூற முடிந்தது?
எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த வேதியியல் கருத்தைக் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் ஓர் இறைத் தூதர் தான் என்பதை இதிலிருந்து நிரூபணமாகின்றது.
அதனால் தான் அவர்கள் கொண்டு வந்த திருக்குர்ஆன், அறிவியல் உலகை நோக்கி இன்றும் உயிரோட்டமான ஓர் அறைகூவலை விடுகின்றது.
நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 2:23
நாம் இந்த ஆய்வை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்பதற்காக! அதனால் தான், பருகும் போது பாத்திரத்திற்குள் மூச்சு விட வேண்டாம் என்று இயற்கைக்கு எதிரான இந்தக் காரியத்தை இது தடுக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டவே இந்த ஆய்வுரை இங்கு சமர்ப்பிக்கப்படுகிறது.ள

வேலியே பயிரை மேயும் வேதனை
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கத்தோலிக்க திருச்சபை 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவுள்ளது. இந்த ஐநூறு பேரும் கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப் பட்டவர்கள். 660 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்குவதற்காக நீதிபதியின் ஒப்புதலுக்கு, திருச்சபை காத்திருக்கின்றது என்று வாதியின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்தச் செய்தி பி.பி.சி.யில் 15.07.2007 அன்று வெளியானது.
இது 2002ல் பாலியல் பலாத்கார ஊழல் வெடித்த பிறகு திருச்சபை செலுத்த வேண்டிய மிகப் பெரிய தொகையாகும்.
1950 முதல் அமெரிக்காவிலுள்ள டயோசீஸ் பாதிரிகளின் பாலியல் விவகாரத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட நஷ்ட ஈட்டுத் தொகை 2 பில்லியன் டாலர் ஆகும். இதில் கால் பகுதியை லாஸ் ஏஞ்சல்ஸ் திருச்சபை மட்டும் செலுத்தியுள்ளது.
73 வயது நிரம்பிய பால் ஷான்லே என்ற பாதிரியாரும், மற்றொரு பாதிரியும் வாட்டிகன் தலைமையகத்தால் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். நான்கு சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது தான் பால் ஷான்லே மீதான குற்றச்சாட்டு!
இது போன்று பெண்களிடம் நடந்த பாலியல் கொடுமைகளையும் பி.பி.சி.யின் இந்தச் செய்தித் தொகுப்பு பட்டியலிடுகின்றது.
பொதுவாக ஆண், பெண் இரு பாலருமே பால் உணர்வுடன் தான் படைக்கப்பட்டுள்ளனர். ஆண், பெண் இரு பாலர்களுக்கும் பசி, தாகம் ஏற்படுவது போலவே பருவ வயது வந்ததும் பாலியல் தேட்டமும் ஏற்படுகின்றது. இதற்கு ஒரு வடிகால் இல்லையென்றால், மறிக்கப்படும் ஆற்று வெள்ளம் பல வழிகளிலும் பாய்வது போன்று பாலியல் உணர்வு பொங்கி வழிய ஆரம்பித்து விடும்.
இது தான் திருச்சபை பாதிரியார்களின் பாலியல் ஊழல் மூலம் பளிச்சென்று வெளியே தெரிகிறது.
அதனால் தான் துறவு நிலையை மேற்கொள்ளக் கூடாது; அவ்வாறு மேற்கொள்பவர்கள் முஸ்லிம்களே கிடையாது என்று  முஹம்மத் (ஸல்) அவர்கள் பிரகடனப்படுத்தி விடுகிறார்கள். இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து கேட்டனர்.  அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள், நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது.
பிறகு, "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே?'' என்று சொல்-க் கொண்டனர்.
அவர்களில் ஒருவர், "நான் என்ன செய்யப் போகின்றேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகின்றேன்'' என்றார்.
இன்னொருவர், "நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகின்றேன்'' என்றார்.
மூன்றாம் நபர், "நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகின்றேன். ஒரு போதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்'' என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தானே! அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன்.  அல்லாஹ்வைப் பயந்து நடப்பவனாவேன்.  ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கின்றேன். விட்டு விடவும் செய்கின்றேன்.  தொழவும் செய்கின்றேன்.  உறங்கவும் செய்கின்றேன்.  மேலும் நான் பெண்களை மணம் முடித்தும் உள்ளேன்.  ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)
நூல்: புகாரி 5063
திருமணம் முடித்தவர்களே இன்றைய உலகில் வழி தவறும் போது திருமணம் முடிக்காதவர்களின் நிலையை நாம் சொல்லவும் வேண்டுமா? இது போன்ற காரணங்களால் தான் துறவறத்தைக் கடமையாக்கவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
பின்னர் அவர்களின் அடிச் சுவட்டில் நமது தூதர்களைத் தொடர்ந்து அனுப்பினோம். மர்யமின் மகன் ஈஸாவையும் (அவர்களைத்) தொடர்ந்து அனுப்பினோம். அவருக்கு இஞ்சீலைக் கொடுத்தோம். அவரைப் பின்பற்றியோரின் உள்ளங்களில் இரக்கத்தையும், அன்பையும் ஏற்படுத்தினோம். தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் மீது நாம் விதியாக்கவில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களின் கூலியைக் கொடுத்தோம். அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள்.
அல்குர்ஆன் 57:27
துறவறத்தை இறைவன் கடமையாக்கவில்லை. கிறித்தவர்கள் துறவறத்தைத் தங்களுக்குத் தாங்களே கடமையாக்கிக் கொண்டு, அதைச் சரிவரப் பேணவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அதாவது, துறவறம் என்பது இயற்கையை எதிர்த்து நிற்பது என்று கூறி அதை வெறுக்கிறது.
இஸ்லாத்தைப் போதிக்க வந்த இறைத்தூதர்கள் அனைவருக்கும் மனைவி, மக்களை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 13:38
திருக்குர்ஆன் என்ற இறை வேதம் மனிதனின் இயற்கைக்குத் தக்க திருமணத்தை முடிக்கச் சொல்கிறது. அதாவது, பாலியல் உணர்வுகளை உரிய வழியில், திருமணம் என்ற ஒப்பந்த அடிப்டையில் தீர்த்துக் கொள்ளச் செய்கிறது.
ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்ற ஓரினச் சேர்க்கையையும் இயற்கைக்கு மாற்றமான வெறுக்கத்தக்க நியதி என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
லூத்தையும் (அனுப்பினோம்). "நீங்கள் வெட்கக்கேடான செயலைச் செய்கிறீர்கள்! அகிலத்தாரில் உங்களுக்கு முன் யாரும் இதைச் செய்ததில்லை; சரியான வழியைத் துண்டித்து விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? உங்கள் சபையில் அந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கிறீர்களா?'' என்று அவர் தமது சமுதாயத்துக்குக் கூறிய போது, "நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக'' என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.
அல்குர்ஆன் 29:28, 29
இது போன்ற சீரழிவுக்கு உள்ளாக்கும் காரியத்தைச் செய்த ஒரு சமுதாயத்தையே இறைவன் அழித்து விட்டதாகக் கூறுகிறான்.
இவ்வாறு மனிதனை இயற்கையான இனிய வழியில் செல்லச் செய்வது இஸ்லாமிய வழியாகும். காரணம், அது இறைவன் வழங்கிய இயற்கை நெறியாகும்.

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites