அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

பெண்களுக்குரிய சட்டங்கள்

தலாக்
அல்லாஹ் கூறும் முத்தலாக்கும் முல்லாக்கள் கூறும் முத்தலாக்கும்
இஸ்லாமிய மார்க்கம் பெண் களுக்குப் பல்வேறு பாதுகாப்புகளை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானது தலாக் எனும் விவாகரத்தாகும். மனைவியைப் பிடிக்காத கணவன் அவளை விவாக ரத்து செய்து பிரிவதற்குப் பதிலாக கொலை செய்யும் கொடுமைகள் நிகழ்வதற்கு விவாக ரத்துச் சட்டங்களில் காட்டப்படும் கடுமை தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் விவாக ரத்து சட்டத்தை எளிதாக்கியிருப்பதால் இதுபோன்ற கொலைகளை விட்டும் பெண்கள் பாதுகாப்பு பெற்றுள்ளார்கள்.
அகிலங்களைப் படைத்த இறைவனால் அருளப்பட்ட இந்த அற்புதமான சட்டம், அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய முறையில் நடைமுறைப் படுத்தப் படாததால் இன்று மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்தைக் குறித்து விமர்சனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
மார்க்கத்தின் பல்வேறு விஷயங்களில் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமான சட்டங்களை உருவாக்கி நடைமுறைப் படுத்தி வரும் மத்ஹபுகள் தலாக் விஷயத்திலும் தலையிட்டு தவறான நடைமுறையை உருவாக்கி வைத்துள்ளன. இதன் காரணமாக முஸ்லிம்களிலேயே பலர் தலாக் சட்டம் குறித்த உண்மை நிலை தெரியாததால் தங்களது வாழ்க்கையைப் பாழ் படுத்திக் கொண்டுள்ளனர்.
எனக்கும், என் மனைவிக்கும் ஏற்பட்ட சிறிய பிரச்சனையில் அவசரப்பட்டு, அவளை முத்தலாக் கூறி விட்டேன். ஆனால் தற்போது நான் செய்தது தவறு என்று எண்ணி மீண்டும் சேர்ந்து வாழ முடியுமா? என்று கேட்டால் ஆலிம்களும், ஜமாஅத்தாரும் கூடாது என்கின்றனர். இதற்கு மார்க்க அடிப்படையில் தீர்வு என்ன? என்று மார்க்கத் தீர்ப்பு கோரி நமது ஜமாஅத்துக்கு வரும் கடிதங்கள் ஏராளம். நம்மை அணுகாமல் ஜமாஅத்தினரின் தீர்ப்பைக் கேட்டு பிரிந்து வாழும் கணவன் மனைவியர் எத்தனையோ அல்லாஹ்வே அறிவான். எனவே முத்தலாக் குறித்த முழுமையான விளக்கத்தைப் பார்ப்பது அவசியமாகும்.
விவாக ரத்துச் சட்டம் இஸ்லாத்தில் எளிமையாக்கப் பட்டிருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விவாகரத்துச் செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை. அதற்கு முன் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு வழிகாட்டுகிறது. கடைசி கடைசியாகவே "தலாக்' எனும் ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டும் எனக் கூறுகிறது.
சொல்லித் திருத்துதல்
இல்லற வாழ்வில் பிரச்சினையைச் சந்திக்கும் கணவன், மனைவியிடம் பக்குவமாக அவளது குறைகளைச் சுட்டிக் காட்டி அவளது குடும்பக் கடமைகளை உணர்த்தி, குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி, தான் அவளைப் பராமரிக்கும் பொறுப்பில் இருப்பதையும் விவாகரத்தினால் அவள் சந்திக்க நேரும் பாதிப்புகளையும் இனிய மொழிகளால் எடுத்துரைக்க வேண்டும்.
"அப்பெண்கள் உங்களுக்கு மாற்றமாக நடப்பார்கள் என்றஞ்சினால் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்'' (அல்குர்ஆன் 4:34) என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
இப்போதனையிலிருந்து, பெண்கள் மட்டுமே தவறு செய்யக் கூடியவர்கள் என்றும் ஆண்களிடம் தவறே ஏற்படாது என்றும் கருதி விடக் கூடாது. ஏனெனில் இஸ்லாம் இதை விடவும் அழுத்தமாக ஆண்களுக்கு அறிவுரை சொல்லத் தவறவில்லை.
"நீங்கள் மனைவியருடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது முறையில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கலாம்; நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அனேக நன்மைகளை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கலாம்''. (அல்குர்ஆன் 4:19) என்று இறைவன் கூறுகிறான்.
"நீங்கள் உங்கள் துணைவிகளிடம் ஏதேனும் தீய குணங்களைக் கண்டால் உடனே அவர்களை வெறுத்து விடாதீர்கள். நீங்கள் கவனிப்பீர்களாயின், அவர்களிடம் வேறு நல்ல குணங்களைக் காண்பீர்கள்!'' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சிறந்த அறிவுரையைக் கூறியுள்ளனர்.
(நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
தள்ளித் திருத்தல்
இனிய மொழியில் எடுத்துரைத்தும் மனைவி தன் போக்கிலிருந்து திருந்தாத போது, அடுத்த கட்டமாக, தனது அதிருப்தியையும், அவள் மீதுள்ள கோபத்தையும் வெளிப்படுத்துவதற்காகவும் தாம்பத்ய உறவின் தேவையை அவளுக்கு உணர்த்துவதற்காகவும் நிரந்தரமாகவே பிரிய நேரிடும் என்பதை அவளுக்குப் புரியவைப்பதற்காகவும் அவளுடன் தாம்பத்ய உறவு கொள்வதைத் தற்காலிகமாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
"அவர்களைப் படுக்கையிலிருந்து (தற்காலிகமாக) விலக்கி விடுங்கள்'' (அல்குர்ஆன்4:34) என்று இறைவன் அடுத்த அறிவுரையை வழங்குகிறான்.
தன் மீது கணவன் மோகமும் இச்சையும் கொண்டிருக்கிறான்; தன்னை அவனால் தவிர்க்க முடியாது என்று பெண் இயல்பாகவே இறுமாந்திருக்கிறாள். இந்த நிலையில், அவளது பெண்மையும், அண்மையும் கணவனால் புறக்கணிக்கப்படும் போது, அவளது தன்மானம் சீண்டப் படுவதையும் தனது உறவைக் கணவனால் தவிர்த்துக் கொள்ள முடியும் என்பதையும் தெளிவாக உணரும் போது, நிலைமையின் விபரீதத்தை அவள் புரிந்து கொள்ள முடியும். இதனால் தலாக் தவிர்க்கப் பட்டு குடும்பத்தில் சுமூக உறவு ஏற்படலாம்.
அடித்துத் திருத்துதல்
மேற்சொன்ன இரு நடவடிக்கைகளும் கூட மனைவியிடம் மாற்றத்தை  ஏற்படுத்தவில்லையாயின் மூன்றாவது நடவடிக்கையாக அவளை அடித்துத் திருத்த இஸ்லாம் அனுமதிக்கிறது!
"அவர்களை (இலேசாக) அடியுங்கள்'' (அல்குர்ஆன் 4:34)
அடித்தல் என்று சொன்னால், பலவீனமான பெண் மீது தனது பலத்தைப் பிரயோகிப்பதோ அல்லது மிருகங்களை அடிப்பது போன்றோ அடிப்பது என்று அர்த்தமில்லை.
ஏனெனில் எந்தச் சந்தர்ப்பத்திலும் மனைவியின் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும் படி அடிப்பதையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள். (நூல்: முஸ்லிம்)
கணவனால் அடிக்கப் பட்டால், அவளது பெண்மையும், தன்மானமும் சீண்டப்படுவதை இன்னும் தெளிவாக அவள் உணர்ந்து கொள்வதோடு கணவன் "எதற்கும்' தயாராக இருப்பதையும் புரிந்து கொள்கிறாள். இதனால் அவளது போக்கில் நிச்சயமாக மாற்றம் ஏற்பட்டு விவாகரத்துச் செய்யப்படும் நிலை தவிர்க்கப்படுகிறது.
விவாகரத்து என்ற அளவுக்குச் செல்வதைத் தடுக்கவே இலேசாக அடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது. இதையும் பெண்ணுரிமை பேசுவோர் குறை கூறுவார்கள்.
இலேசாக அடியுங்கள் என்று கூறும் இஸ்லாமிய மார்க்கத்தை நம்பியவர்களை விட அடிப்பது பற்றிப் பேசாத மற்ற சமுதாயத்தினர் தான் பெண்களை அதிகமாக அடித்து உதைத்துச் சித்திரவதை செய்கிறர்கள்.
ஆண் வலிமை உள்ளவனாகவும் பெண் வலிமை குறைந்தவளாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். இருவரும் தனித்திருக்கும் போது இரண்டு போலீசாரைக் காவலுக்கு நிறுத்தி வைக்க முடியாது. இந்த நிலையில் கோபம் ஏற்பட்டால் பலம் வாய்ந்தவர்கள் பலவீனர்கள் மீது பாய்வது வழக்கமான ஒன்றுதான். இதை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியாது.
இலேசாக அடியுங்கள் என்று கூறுவதன் மூலம் கண் மண் தெரியாமல் அடிப்பதைத் தடுத்து நிறுத்த முடியும்!  மனைவியரைச் சித்திரவதைப் படுத்துவது முஸ்லிம்களிடம் மற்றவர்களை விட குறைவாகவே இருப்பதற்கு இதுவே காரணம் என்பதை உணர வேண்டும்.
ஜமாஅத் தீர்வு
கணவன் மனைவியருக் கிடையேயுள்ள பிணக்கு மேற் சொன்ன மூன்று நடவடிக்கைகளுக்குப் பின்னரும் தொடரு மானால், அவர்கள் பிரச்சனையில் ஜமாஅத் (முஸ்லிம்களின் கூட்டமைப்பு) தலையிடும்.
"(கணவன் மனைவி ஆகிய) அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக் கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விரு வருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.''
(அல்குர்ஆன் 4:35)
எந்தப் பிரச்சனையிலும் சம்மந்தப் பட்டவர்களே பேசித் தீர்க்க விரும்பினால் பெரும்பாலும் தீர்வு ஏற்படுவதில்லை. ஏனெனில் உணர்வுப் பூர்வமாகப் பிரச்சனையை அணுகுவதால் சில வேளை சிக்கல் மேலும் முற்றிப் போகலாம். தத்தம் நிலையிலேயே பிடிவாதமாக நிற்பர். தம்பதியர் உறவும் இதில் விதிவிலக்கில்லை.
இதன் காரணமாக இந்தப் பிரச்சனையில் நேரடித் தொடர்பில்லாத ஆனால் தம்பதியர் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வதில் அக்கறையும் ஆசையும் கொண்ட அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே நடுவர்களாக, ஜமாஅத் நியமித்துச் சிக்கலைத் தீர்க்க முயல வேண்டும். இதனால் தம்பதியர் தரப்புக் குற்றச் சாட்டுக்கள், விருப்பு வெறுப்பற்ற, ஒருதலைப் பட்சமற்ற கோணத்தில் அணுகப்பட்டு, சமூகமான, ஒத்த தீர்வு காணப்படும். இதனால் தலாக் தவிர்க்கப்படும்.
இந்த நான்கு நடவடிக்கைகளாலும் கூட இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமேயில்லை! இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.
தலாக் கூறிட மூன்று வாய்ப்புக்கள்
தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இது தான் தலாக் கூறுவதற்கு இஸ்லாம் காட்டும் நெறியாகும்.
ஒரு கணவன், தன் மனைவியை முதல் தலாக் கூறினால் அவர்களிடையே நிலவிய உறவு முழுமையாக நீங்கி விடுவதில்லை. தற்காலிகமாக நீங்கி விடுகின்றது. கணவன் விரும்பினால் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மனைவியுடன் சேர்வதன் மூலம், இல்லறத்தைத் தொடங்குதல் மூலம், சேர்ந்து கொள்வோம் என்று கூறுவதன் மூலம் இப்படி ஏதேனும் ஒரு முறையில் மீண்டும் சேர்ந்து வாழலாம்.
அந்தக் காலக்கெடு எது?
ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவள் கர்ப்பினியாக இருந்தால் அவள் குழந்தையைப் பெற்றெடுப்பதற்குள் மீண்டும் அவர்கள் சேர்ந்து கொள்ளலாம்.
உதாரணமாக அவள் மூன்று மாதக் கர்ப்பிணியாக இருந்தால் சுமார் ஏழு மாதங்களுக்குள் அவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு உள்ளது. அவள் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தால் குழந்தையைப் பெற்றெடுத்த உடன் கெடு முடிந்து விடும்.
ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறும் போது மனைவி கர்ப்பிணியாக இல்லாவிட்டால் மூன்று மாதவிடாய் ஏற்பட்டு தூய்மை யாவதற்குள் இருவரும் சேர்ந்து கொள்ளலாம். (ஏறத்தாழ இரண்டரை முதல் மூன்று மாதங்கள் இதற்கு ஆகலாம்)
ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறும் போது மனைவி மாதவிடாய் நின்று போன வயதான பருவத்தில் இருந்தால் மூன்று மாதங்களுக்குள் அவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.
இதற்கு என எந்தச் சடங்கும் கிடையாது.
இதற்கான திருக்குர்ஆன் சான்றுகள் வருமாறு:
உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும்.
(அல்குர்ஆன் 65:4)
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள்.
(அல்குர்ஆன் 2:228)
முதல் தடவை தலாக் கூறியவுடன் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை இவ்வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
மேற்கூறப்பட்ட காலக் கெடுவுக்குள் இருவரும் சேர்ந்து கொள்ளாவிட்டால் அதன் பிறகு சேரவே முடியாதா என்றால் அதுவும் இல்லை. பத்து வருடங்கள் கழித்து இருவரும் சேர்ந்து வாழ விரும்பினாலும் சேர வழியுண்டு. அதாவது இருவரும் மீண்டும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வது தான் அந்த வழி.
 1. மூன்று மாதவிடாய்க் காலம், 2. மூன்று மாதங்கள்,  3. பிரசவித்தல் ஆகிய கெடுவுக்குள் சேர்வதாக இருந்தால் திருமணம் செய்யாமல் சேர்ந்து கொள்ளலாம்.
 குறிப்பிட்ட கெடு முடிந்து விட்டால் திருமணத்தின் மூலம் சேர்ந்து வாழலாம்.
இது முதல் தடவை தலாக் கூறிய பின் ஏற்படும் விளைவாகும்.
குறிப்பிட்ட கெடுவுக்குள் அவர்கள் சேர்ந்து கொண்டாலும், குறிப்பிட்ட கெடு கடந்த பின் திருமணம் செய்து கொண்டாலும் விவாகரத்துச் செய்வதற்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்புகளில் ஒன்று குறைந்து விடும். இன்னும் இரண்டு தடவை மட்டுமே தலாக் கூறும் உரிமையைப் பயன்படுத்த முடியும்.
இவ்வாறு சேர்ந்து வாழும் போது மீண்டும் அவர்களிடையே பிணக்கு ஏற்பட்டு, வாழ்வைத் தொடர இயலாத நிலை ஏற்பட்டால் இரண்டாவது தலாக்கைக் கூறலாம்.
தலாக் கூறும் இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்தினால் அப்போதும் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது.
முதல் வாய்ப்பைப் பயன் படுத்திய பின் சேர்ந்து கொண்டது போன்று அந்தக் கெடுவுக்குள் திரும்ப அழைத்துக் கொள்ளலாம்; அல்லது கெடு முடிந்த பிறகு அவள் சம்மதித்தால் மீண்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; அல்லது அப்படியே விட்டு விடலாம்.
இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். (அல்குர்ஆன் 2:229)
என்ற வசனத்திலிருந்து இதை அறியலாம்.
இரண்டாவது முறையும் திரும்ப அழைத்துக் கொண்டாலோ, கெடு முடிந்து மீண்டும் அவளையே மணந்து கொண்டாலோ மூன்று தடவை தலாக் கூறலாம் என்ற உரிமையில் ஒன்று தான் மிச்சமாகவுள்ளது.
எனவே எஞ்சியுள்ள அந்த ஒரு வாய்ப்பை - கடைசி வாய்ப்பை - மிகக் கவனமாகவே ஒருவன் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, அவனது மனம் எளிதில் ஒப்பாத, அவனால் ஜீரணிக்க இயலாத, மிகக் கடுமையான நிபந்தனையை இஸ்லாம் விதித்துள்ளது. அந்த நிபந்தனையை அறிந்த எந்தக் கணவனும் இந்தக் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தத் தயங்குவான்.
(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாகரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.
(அல்குர்ஆன் 2:230)
இந்தக் கடைசி ஒரு வாய்ப்பையும் அவன் பயன்படுத்தி விட்டால் அந்த நிமிடமே திருமண உறவு நிரந்தரமாக நீங்கி விடும். மீண்டும் சேர்வதற்கு எந்தக் கெடுவும் இல்லை. அவளை மறு திருமணம் செய்ய விரும்பினால் அவள் இன்னொருவனுக்கு வாழ்க்கைப்பட்டு அவனும் தலாக் கூறி விட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.
இவை தவிர மாதவிடாய்க் காலத்தில் தலாக் கூறி விட்டால் அது தலாக்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்ற கருத்தில் புகாரியில் 5332வது ஹதீஸில் காணப்படுகின்றது.
முத்தலாக் - ஒரு விளக்கம்
இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். (அல்குர்ஆன் 2:229)
இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு தடவை என்பது திரும்பப் பெறுவதற்குரிய இரண்டு தலாக்குகள் ஆகும். அதாவது இவ்விரு தலாக்குகளுக்குப் பிறகு மூன்றாவது முறை தலாக் விட்டால் அவர் தனது மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ள முடியாது. எனவே இத்தலாக் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ வேண்டும் என்பதை இந்த வசனம் விளக்குகிறது.
தடவை என்பதன் பொருளைத் தவறாக விளங்கிக் கொண்டதால் ஒருவன் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அவன் மூன்று வாய்ப்புக்களையும் பயன்படுத்தி விட்டான், அவன் மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விட்டான் என்று மத்ஹபுகளில் சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இரண்டு தலாக்குகள் என்று கூறவில்லை. மாறாக தலாக் என்பது இரண்டு தடவைகள் என்று கூறுகின்றான். குறிப்பிட்ட காலக் கெடு முடிவடையாத வரை ஒரு தடவை என்பது பூர்த்தியாகாது. ஒருவர் தன் மனைவியை நோக்கி ஒரே சமயததில், உன்னை மூன்று முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் முன்னூறு முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் அவர் ஒரு தடவை தலாக் கூறியதாகத் தான் பொருள்.
தடவை என்பதன் பொருளை விளங்கிக் கொள்ள சில உதாரணங்களைக் கூறலாம்.
ஒருவர் ஒரு மணி நேரம் குளித்துக் கொண்டேயிருக்கின்றார். அதன் பிறகு அவர் தலையைத் துவட்டிக் கொள்கிறார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் நாம் ஒரு தடவை என்று தான் கூறுவோம்.
இன்னொருவர் பத்து நிமிடம் குளிக்கின்றார். பிறகு வெளியே வந்து தலையைத் துவட்டிக் கொள்கிறார். மீண்டும் போய்க் குளிக்கின்றார். இப்படியே ஒரு மணி நேரத்தில் 5 தடவை இது போன்று செய்கின்றார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் 5 தடவை என்று கூறுவோம்.
ஒருவர் சாப்பிடுவதற்கு அமர்ந்து 10 இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். இவர் ஒரு தடவை சாப்பிட்டுள்ளார்.
மற்றொருவர் இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் அமர்ந்து இரண்டு இட்லி சாப்பிடுகின்றார். இவர் முன்னவரை விடக் குறைவாகச் சாப்பிட்டிருந்தாலும் இரண்டு தடவை சாப்பிட்டார் என்று தான் கூறுவோம்.
இதை இங்கு குறிப்பிடக் காரணம் ஒரு தடவை என்றால் அதற்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருக்க வேண்டும்.
இது போலத் தான் தலாக்கின் தடவை என்பதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு தலாக் விட்டால் மூன்று மாத விடாய்க்குள்ளாக மீட்டி விட்டால் ஒரு தடவை தலாக் நிறைவேறி விட்டதாகப் பொருள். ஒரு தலாக் கூறி விட்டு, உரிய காலக் கெடுவுக்குள் மீட்டாமல் ஒருவர் ஆயிரம் முறை தலாக் என்று கூறினாலும் அது ஒரு தலாக் தான். ஏனென்றால் ஒரு தடவை என்பது இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அதை எத்தனை முறை கூறினாலும் ஒரு தடவை தான்.
இது தான் மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் இடம் பெறும் தடவை என்பதன் பொருள்.
இதை வெறும் அறிவுப் பூர்வமாக நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தின் நடைமுறையை ஆராய்ந்து தான் கூறுகின்றோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தது என்னவெனில், ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் ஒருவன் தலாக் கூறத் தனக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று வாய்ப்புக்களில் ஒரு வாய்ப்பைத் தான் பயன்படுத்தியிருக்கிறான் என்பது தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது
அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2689
நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் மூன்று ஆண்டு காலத்திலும் மூன்று (தலாக் என்பது) ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று அபுஸ்ஸஹ்பா என்பவர் இப்னு அப்பாஸிடம் கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: தாவூஸ்
நூல்: முஸ்லிம் 2690, 2691
அப்து யஸீத் மகனான ருகானா தனது மனைவியை ஒரே அமர்வில் முத்தலாக் விட்டு விட்டார். பின்னர் அதற்காகப் பெரிதும் கவலைப் பட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அவளை எப்படி தலாக் விட்டாய்?'' என்று கேட்டார்கள். நான் அவளை முத்தலாக் விட்டேன் என்று அவர் பதில் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஒரே அமர்விலா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். "அது ஒரு தலாக் தான். நீ விரும்பினால் அவளை மீட்டிக் கொள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் அவளை மீட்டிக் கொண்டார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 2266
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வெறுமனே இவ்வாறு நடைமுறையில் இருந்தது என்று மட்டும் கூறவில்லை. அதற்குச் சான்றாக ருகானாவுடைய சம்பவத்தைச் சமர்ப்பிக்கின்றார்கள்.
நாம் இவ்வாறு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் ஹதீஸை ஆதாரமாகக் காட்டும் போது, முத்தலாக் கூடும் என்ற கருத்துடைய மத்ஹபுக்காரர்கள் அதற்கு எதிராக ஒரு சான்றை முன் வைக்கின்றார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "என்னுடைய மனைவியை நான் ஒரேயடியாக தலாக் விட்டு விட்டேன்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "நீ அதைக் கொண்டு என்ன நாடினாய்?'' என்று கேட்டார்கள். நான் அதற்கு, "ஒரேயொரு தலாக்கைத் தான்'' என்று பதிலளித்தேன். "அல்லாஹ்வின் மீதாணையாகவா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் மீதாணையாக'' என்றேன். "அப்படியானால் நீ என்ன நாடினாயோ அது தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:  ருகானா
நூல்: திர்மிதீ 1097
இந்த ஹதீஸில் முத்தலாக் என்று ருகானா கூறியதும், அதைக் கொண்டு என்ன நாடினாய்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்கின்றார்கள். அதற்கு அவர், ஒன்றைத் தான் என்று கூறுகின்றார் அல்லவா? எனவே தான் ஒரு தலாக் நிறைவேறுகின்றது. மூன்றை நாடியிருந்தால் மூன்று நிறைவேறி விடும் என்று இவர்கள் வாதிடுகின்றார்கள். ஆனால்  இவர்கள், நபி (ஸல்) அவர்கள் காலத்திலும், அபூபக்ர் (ரலி) காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காக இருந்தது என்ற ஹதீசுக்கு எந்தப் பதிலும் கூறுவதில்லை. அதைக் கண்டு கொள்வதுமில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக மேற்கண்ட திர்மிதீ ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதல்ல. இமாம் திர்மிதீ அவர்களே இதைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். இந்த ஹதீஸைப் பற்றி இமாம் புகாரியிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் இதில் குழப்பம் இருக்கிறது என்று பதிலளித்தார்கள் என்று இமாம் திர்மிதீ அந்த ஹதீஸின் அடியில் குறிப்பிடுகின்றார்கள். மேலும் இதில் இடம் பெறும் அப்துல்லாஹ் பின் யஸீத் என்பார் பலவீனமானவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் தமது தக்ரீபில் குறிப்பிடுகின்றார்கள். எனவே இந்த வாதம் வலுவிழந்து விடுகின்றது.
இரண்டாவது ஆதாரம்
ருகானா என்பவர் தனது மனைவியை ஒரேயடியாக தலாக் கூறினார். அதைக் கொண்டு என்ன நாடினாய்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஒன்றைத் தான் நினைத்தேன் என்று அவர் கூறியதும், நீ நாடியது போலவே அது ஒன்று தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற கருத்தில் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.
முத்தலாக் கூடும் என்ற கருத்துடையவர்கள் இதைத் தங்களின் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். அதாவது ருகானா என்பவர் மூன்று தலாக் என்று கூறியதாக வரும் அறிவிப்பு சரியில்லை. ஒரேயடியாக கூறியதாக வரும் அறிவிப்பு தான் சரியானது என்பது அவர்களது வாதம். இதை வலுப்படுத்தும் விதமாக அபூதாவூத் அவர்களின் அடிக்குறிப்பை எடுத்துக் காட்டுகின்றனர்.
"இந்த ஹதீஸ் தான் மிகச் சரியானதாகும். காரணம், அந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் ருகானாவின் மகனும், அவரது உறவினரும் ஆவார். ஒருவரின் பிள்ளை தான் அவரது தந்தையைப் பற்றி நன்கு தெரிந்தவராவார்'' என்று  இமாம் அபூதாவூத் குறிப்பிடுகிறார்கள்.
இமாம் அபூதாவூதின் இந்தக் கூற்றை ஆதாரமாகக் கொண்டு, ஒரேயடியாக தலாக் விட்ட ஹதீஸ் தான் சரியானது என்று இவர்கள் வாதிக்கின்றார்கள்.
ருகானா என்பவர் முத்தலாக் கூறினார் என்ற அறிவிப்பு சரியானதா? அல்லது ஒரேயடியாக தலாக் கூறினார் என்ற அறிவிப்பு சரியானதா? என்பதற்கு விடை கண்டு விட்டால் இதற்குத் தெளிவு கிடைத்து விடும். முரண்பட்ட இரண்டில் ஏதேனும் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும்.
அபூதாவூத் அவர்கள் எதைச் சரியானது என்று கூறுகின்றார்களோ அந்த ஹதீஸ் சரியானதல்ல. அபூதாவூத் அவர்கள் தமது நூலில், "ருகானா முத்தலாக் கூறினார்'' என்ற ஹதீஸையும் வெளியிட்டுள்ளார்கள்; "ஒரேயடியாக தலாக் சொன்னார்'' என்ற ஹதீஸையும் வெளியிட்டுள்ளார்கள். அவர் வெளியிட்ட இரண்டு ஹதீஸ்களும் பலவீனமானவை என்றாலும் இரண்டையும் ஒப்பிடும் போது ஒரேயடியாக என்ற ஹதீஸ் பலவீனம் குறைந்ததாக உள்ளது.
ஆனால் முத்தலாக் கூறினார் என்று பலமான அறிவிப்பு ஒன்று உள்ளது. அதை அஹ்மத் இமாம் பதிவு செய்துள்ளார்கள். அதனுடன் ஒப்பிடும் போது ஒரேயடியாக என்ற ஹதீஸ் ஏற்கத்தக்கதாக இல்லை.
அஹ்மதில் இடம் பெறும் அந்த ஹதீஸ் இது தான்.
அப்து யஸீத் மகனான ருகானா தனது மனைவியை ஒரே அமர்வில் முத்தலாக் விட்டு விட்டார். பின்னர் அதற்காகப் பெரிதும் கவலைப் பட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அவளை எப்படி தலாக் விட்டாய்?'' என்று கேட்டார்கள். நான் அவளை முத்தலாக் விட்டேன் என்று அவர் பதில் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஒரே அமர்விலா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். "அது ஒரு தலாக் தான். நீ விரும்பினால் அவளை மீட்டிக் கொள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் அவளை மீட்டிக் கொண்டார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 2266
ஷைகுல் இஸ்லாமின் சரியான பதில்
ருகானா ஒரே சமயத்தில் முத்தலாக் விட்டு விட்டார் என்று அபூதாவூதின் 1886 ஹதீஸ் மற்றும் நபி (ஸல்) அவர்கள் சத்தியம் செய்யச் சொன்ன திர்மிதீ 1097 ஹதீஸ் ஆகியவற்றின் அறிவிப்பாளர்களை விட மேற்கண்ட ஹதீஸில் தரமும், வலுவும் மிக்க அறிவிப்பாளர்கள் ஆவர் என்று இமாம் அஹ்மத் அவர்கள் தெளிவு படுத்தி, இந்த ஹதீஸ் தான் மிகச் சரியானது என்று நிரூபிக்கின்றார்கள்.
ஏனெனில் அபூதாவூதின் ஹதீஸ்களில் அறிவிப்பாளர்கள் எப்படிப் பட்டவர்கள்? அவர்கள் நீதமானவர்களா? நினைவாற்றல் உள்ளவர்களா? என்ற விபரமெல்லாம் அறியப்படாதவர்கள். இதனாலேயே இதை இமாம் புகாரி அவர்களும், இமாம் அஹ்மத், அபூஉபைத், இப்னு ஹஸ்மு இன்னும் ஏனைய அறிஞர்களும் பலவீனமானது என்று தெரிவிக்கின்றனர்.
ஆனால் இதற்கு நேர் மாற்றமாக, மேற்கூறப்பட்ட அஹ்மதின் 2266வது ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை மிக அழகான வரிசையாகும். ஏனெனில் இந்த ஹதீஸை அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) ஆவார். அவர்களின் இந்த ஹதீஸ் அவர்களே அறிவிக்கும் முஸ்லிம் 2689 ஹதீசுக்கு முழுமையாக ஒத்திருக்கின்றது. மேலும் இந்த அஹ்மத் ஹதீஸின் அறிவிப்பாளர்கள் இப்னு அப்பாஸ், இக்ரிமா, தாவூத் பின் ஹுசைன், முஹம்மத் பின் இஸ்ஹாக், ஸஃத் பின் இப்ராஹீம் ஆகியோர் மார்க்கச் சட்ட வல்லுநர்கள் ஆவார்கள்.
முத்தலாக்கும் ஒரே தலாக் தான் என்று தாவூஸ், இக்ரிமா, இப்னு இஸ்ஹாக் ஆகியோர் தீர்ப்பளித்ததைப் போன்று அதை நடைமுறைப் படுத்தியிருக்கின்றார்கள். எனவே முத்தலாக்கையும் ஒரே அமர்வில் சொன்னவர் நபிவழிக்கு எதிராக நடந்தவராவார். அத்தகையவர் நபி வழியின் பக்கமே திருப்பப் படவேண்டும் என்று இந்த அறிஞர்களில் சிலர் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளனர்.
இமாம் அபூதாவூத் அவர்கள் முத்தலாக் தொடர்பான இரண்டு ஹதீஸ்களை அறிவித்து விட்டு, அதில் ஒன்றை விட மற்றொன்று வலுவானது என்று கூறியுள்ளார்கள். அதாவது ஒரு அறியாத தொடரை விட மற்றொரு அறியாத தொடர் வலுவானது என்று முற்படுத்தியுள்ளார்கள் என்று தான் ஆகுமே தவிர ஒரேயடியாக என்ற அறிவிப்பு சரியானது என்றாகி விடாது.
எனவே தாவூத் பின் ஹுசைன் அறிவிக்கும் அஹ்மத் 2266 ஹதீஸ் தான் இத்துறையைச் சார்ந்த விற்பன்னர்களின் ஒருமித்த கருத்துப்படி ருகானாவின் எல்லா ஹதீஸ்களையும் விட முதலிடத்தில் இருக்கின்றது. ஆனால் இந்த ஹதீஸ் அதிகமான மார்க்க அறிஞர்களுக்குக் கிடைக்காதது தான் வேதனைக்குரிய விஷயம்.
இவ்வாறு ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் தமது பதாவா, பாகம் 33, பக்கம் 67ல் விளக்கி, மத்ஹபுகளின் கோட்டையைத் தகர்த்தெறிகின்றார்கள்.
ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி)யிடம் வந்து, நான் என் மனைவியை மூன்று தலாக் கூறிவிட்டேன் என்று கேட்ட போது, உன் மனைவி உன்னை விட்டு பிரிந்து விடுகின்றாள் என்று தீர்ப்பளித்ததாக முஜாஹித் அறிவிக்கும் செய்தி அபூதாவூத் 1878ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்களது காலத்து நடைமுறையை அறிவித்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே அதற்கு மாற்றமாகவும் தீர்ப்பளித்துள்ளதால் இதை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது என்று சிலர் வாதிக்கின்றனர்.
இந்த இரு அறிவிப்புகளும் முரண்பட்டிருந்தாலும் இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. முதலாவது ஹதீஸ் நபி (ஸல்) அவர்களது காலத்து நடைமுறையை விளக்குகின்றது. ஆனால் மேற்கண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்படவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொந்த முடிவு கூறப்படுகின்றது. இப்னு அப்பாஸ் (ரலி) சொந்த முடிவை ஏற்பதை விடவும் நபி (ஸல்) அவர்களின் முடிவு தான் ஏற்கத் தக்கது என்பதை எந்த முஸ்லிமும் மறுக்க முடியாது.
எனது பாட்டனார் தனது மனைவியை 1000 தலாக் என்று கூறி விட்டார். இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, உன்  பாட்டனார் அல்லாஹ்வை அஞ்சவில்லை. மூன்று தலாக் இப்போது நிகழ்ந்து விடும். மீதி 997 தலாக் வரம்பு மீறியதாகும். அல்லாஹ் நாடினால் அதற்காக அவரை மன்னிக்கலாம். அல்லது தண்டிக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உபாதா பின் ஸாமித் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் முஸன்னப் அப்துர்ரஸாக்கில் 11339வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முத்தலாக் செல்லும் என்று கூறுபவர்கள் இதையும் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். ஆனால் இது பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் அலா என்பவரும், உபைதுல்லாஹ் பின் வலீத் என்வரும் பலவீனமானவர்கள். மேலும் இதில் இடம் பெறும் இப்ராஹீம் பின் உபைதுல்லாஹ் என்பவர் யாரென்று அறியப்படாதவர். எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
மனைவியைப் பிரிந்து செல்லும் அளவுக்கு வெறுப்பைக் காட்ட இறைவன் வழங்கிய மூன்று சந்தர்ப்பங்களே தலாக். ஒரு தடவை கோபம் கொண்டு அவன் ஆயிரம் தலாக் என்று கூறினாலும் அவன் பயன்படுத்தியது ஒரு சந்தர்ப்பத்தைத் தான்.
மனைவியின் மீது கடுமையான வெறுப்பு ஏற்பட்டு நிதானம் தவறியே தலாக் கூறுகிறான். இதில் எந்த வார்த்தையையும் அவன் பயன்படுத்தி விடக் கூடும். இப்படி இரண்டு சந்தர்ப்பங்கள் அவனுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சந்தர்ப்பத்தைக் கருத்தில் கொள்ள வேண்டிய இவ்விஷயத்தில் பயன்படுத்தும் சொல்லைக் கருத்தில் கொண்டதால் முத்தலாக் பற்றி இப்படி ஒரு தவறான கருத்து முஸ்லிம்களில் சிலரிடையே ஏற்பட்டு விட்டது. நபிவழியைப் பின்பற்றும் எந்த முஸ்லிமும் இப்படிப்பட்ட தவறான கருத்தை ஏற்க மாட்டார்.
அதாவது மூன்று தலாக் கூறிவிட்டேன் என்று ஒருவன் மனைவியிடம் கூறினால் அவன் ஒரு சந்தர்ப்பத்தைத் தான் பயன்படுத்தியுள்ளான்.
குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவன் அவளுடன் சேரலாம். காலம் கடந்து விட்டால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். இதன் பிறகு மேலும் இரண்டு தடவை விவாகரத்துக் கூறும் உரிமை அவனுக்கு உள்ளது.
மூன்று தலாக் என்ற சொல்லைப் பயன்படுத்தி விட்டால் இனி மேல் மனைவியுடன் சேரவே முடியாது என்ற மத்ஹபுகளின் தீர்ப்புகள் தான் மற்றவர்களால் அதிகம் விமர்சிக்கப் படுகிறது. முஸ்லிம்கள் இஸ்லாத்தில் இல்லாத இந்த நம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும்.

இல்லறம் சிறக்க இனிய வழிகள்.
மனிதனின் வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒன்று திருமணம். இது ஜாதி, மதங்களைக் கடந்து மனித வாழ்க்கையில் அவசியமான ஒன்றாக ஒன்றிப் போய் விட்டது. ஏழை, பணக்காரன், அரசன், ஆண்டி, ஆன்மீகவாதி, நாத்திகவாதி என்று எல்லா தரப்பினரும் திருமண சுகத்தை அனுபவிக்க ஆசைப்படுகின்றனர். படைத்த இறைவன் இவ்வாறே மனிதனை ஆசை உள்ளவனாகப் படைத்துள்ளான்.
பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப் பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது. (அல்குர்ஆன் 3:14)
மனிதனாகப் பிறந்த எல்லா ஆண்மகனும் பெண்கள் மீது ஆசைப் படக் கூடியவனாகவே படைக்கப் பட்டுள்ளான் என்பதை இறைமறை வசனம் தெளிவு படுத்தியுள்ளது. அதனால் தான் இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகவும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத் தூதர்களும் திருமணம் முடித்து, குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். (அல்குர்ஆன் 13:38)
"திருமணம் செய்ய வசதி வாய்ப்பு உள்ளவர்கள் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும்'' என நபி (ஸல்) அவர்களும் கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.
"இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப் படுத்தக் கூடியதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரீ 5066, முஸ்லிம் 2485
மனிதனின் வாழ்க்கையில் மிக அவசியமான இத்திருமணத்தை வசதியில்லாத ஜோடிகளுக்கு வசதியுள்ளவர்கள் முடித்து வைக்குமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)
மனிதனின் வாழ்க்கையில் அவசியம் தேவைப்படும் இந்தத் திருமணம், பெரும்பாலான வர்களின் வாழ்க்கையில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் புரிந்த பிறகு சில நாட்கள் அல்லது சில மாதங்களில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டு, அது தொடர்கதையாக மாறி விடுகிறது. பலரின் வாழ்க்கையே தொடர்பு அறுந்து அந்தரத்தில் தொங்குகிறது.
மனித வாழ்க்கையில் பிரித்துப் பார்க்க முடியாத இந்தத் திருமணம் ஏன் சில நாட்களில் கசக்கத் துவங்குகிறது? இதற்குக் காரணம் என்ன? இன்பமான வாழ்க்கை அமைய என்ன வழி வகைகள் இருக்கின்றன? என்பன குறித்து மார்க்கம் என்ன சொல்கிறது? என்று பார்ப்போம்.
இல் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமானால் முதலில் முக்கியமான ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி இருவரும் தவறு செய்பவர்களே! என்பதை ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
தாம் எதிர் பார்த்த அளவிற்கு முழுமையாக யாரும் இருக்க மாட்டார்கள். கொஞ்சம் அப்படியும் இப்படியும் தான் இருக்கும். குறிப்பாக பெண்கள் நாம் எதிர் பார்த்த அளவிற்கு இருப்பது மிகக் கஷ்டம் தான். அவர்களிடம் பல குறைகள் நமக்கு தென்படலாம். அப்போது நாம் பொறுத்துக் கொண்டு அவளிடம் இருக்கும் மற்ற நற்பண்புகளை எண்ணி திருப்தி கொள்ள வேண்டும். அப்பெண்ணிடம் இருக்கும் சில குறைகள் கூட நமக்கு நன்மைகளை பெற்றுத் தரலாம்.
அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத் திருப்பான். (அல்குர்ஆன் 4:19)
தான் விரும்பியபடி நடக்கவில்லை, என் விருப்பதிற்கு மாற்றமாக நடக்கிறாள் என்ற எண்ணம் தான் பெரும்பாலும் கணவன், மனைவியிடம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த எண்ணத்திற்கு முதலில் முட்டுக்கட்டை போட வேண்டும்.
பெண்கள் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறிய பின்வரும் பொன்மொழி அழகிய அறிவுரையாகும்.
"பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால்  அவளை ஒடித்தே விடுவாய். அவளை அனுபவிக்க நினைத்தால் அவள் கோணலாக இருக்கும் நிலையிலேயே அனுபவிப்பாய்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 5184, முஸ்லிம் 2669
பெண்களை அவர்கள் வழியிலேயே விட்டுப் பிடிப்பது தான் புத்திசாலித் தனம். அவர்களைத் திருத்துகிறேன் என்று எண்ணி முழுமையாக அப்பெண்ணை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
திருமணம் வாழ்க்கை சிக்கலாக அமைவதற்கு இன்னொரு காரணம் மணப்பெண்ணை மார்க்கத்தின் அடிப்படையில் தேர்வு செய்யாமல் பணத்தையும் அழகையும் மட்டும் பார்த்து தேர்வு செய்வது தான்.
"நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக 3. அவளது அழகிற்காக 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 5090, முஸ்லிம் 2661
மார்க்கம் தெரிந்து, அதன் படி நடக்கக் கூடிய பெண்ணை மணமகளாகத் தேர்வு செய்ய வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளை முழுமையாக புறக்கணிக்கப்படுவது குடும்ப வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தக் காரணமாக அமைகின்றது.
கணவன், மனைவிக்கு மத்தியில் சிக்கல் ஏற்படும் போது, அவர்களைச் சேர்த்து வைக்கும் நல்ல நோக்கத்தில் அவர்களை அழைத்து, மார்க்கம் கூறும் அறிவுரைகளைச் சொல்லும் போது, மார்க்கத்தைப் பற்றி தெரிந்திருந்தால் அந்த அறிவுரைகளை மதித்து சேர்ந்து வாழ முயற்சிப்பார்கள். மார்க்கத்தின் அடிப்படையே தெரியாதவர்களாக அந்தத் தம்பதி இருந்தால் எப்படி மார்க்கத்தின் போதனைகளை செவி சாய்த்துக் கேட்பார்கள்?
எனவே மணமகளையோ, மணமகனையோ தேர்வு செய்யும் போது இஸ்லாத்தின் அடிப்படை பற்றித் தெரியுமா? தொழும் பழக்கம் இருக்கிறதா? திருக்குர்ஆன் ஓதத் தெரியுமா? நற்பண்புகள் இருக்கிறதா? என்பதை முதலில் தெரிந்து இதற்கு முதலிடம் கொடுத்துத் தேர்வு செய்யுங்கள்.
"இவ்வுலகம் இன்பங்களாகும். இவ்வுலக இன்பங்களில் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),  நூல்: முஸ்லிம்
"அதிகம் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடிய, அன்பு செலுத்தக் கூடியவர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஃகல் பின்
யஸார் (ரலி),  நூல்: நஸயீ 3175
"அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக! என்ற வசனம் இறங்கிய போது முஸ்லிம்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. அப்போது உமர் (ரலி) அவர்கள், "நான் உங்கள் கவலையை நீக்குகிறேன்'' என்று கூறி விட்டு (நபியவர்களிடம்) சென்று "அல்லாஹ்வின் தூதரே! தங்களின் தோழர்களுக்கு இந்த வசனம் பெரும் கவலையை ஏற்படுத்தி விட்டது'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்களில் மீதமுள்ள செல்வங்களை தூய்மைப் படுத்துவதற்குத் தான் அல்லாஹ் ஸகாத்தை கடமையாக்கியுள்ளான். வாரிசுரிமையை உங்களுக்குப் பிறகு வருபவர்களுக்காக ஏற்படுத்தியுள்ளான்'' என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹு அக்பர்'' என்று கூறினார்கள். பின்னர் "மனிதன் சேமிப்பதிலேயே சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டு விட்டு "கணவன் பார்க்கும் போது மகிழ்ச்சியூட்டுவாள். அவன் கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் இல்லாத போது கற்பைப் பாதுகாப்பாளே அப்படிப்பட்ட நல்லொழுக்கமுள்ள பெண்மணி'' என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1471
மேற்கூறிய நபிமொழிகளின் படி மணமக்களைத் தேர்வு செய்திருந்தால் பெரும்பாலான பிரச்சனைகளைச் சரி செய்து விடலாம்.
குடும்ப வாழ்க்கை அமைதியாக இன்பமாக இருக்க மார்க்கம் சொல்லும் வழிமுறைகள் என்ன? என்பதை இத்தொடரில் நாம் பார்த்து வருகிறோம். இதன் தொடர்ச்சியாக இன்னும் சில வழிமுறைகளைக் காண்போம்.
சிறு சிறு உதவிகளைச் செய்தல்
கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பு அதிகரிக்க, மனைவி வீட்டு வேலைகள் செய்யும் போது அவளுக்குத் துணையாக இருந்து உதவ வேண்டும். காய்கறி நறுக்கும் போது, ரொட்டி சுடும் போது இது போன்ற காரியங்களில் மனைவி ஈடுபடும் போது சிறு சிறு உதவிகளைச் செய்தால் கணவன் மீதுள்ள அன்பு மேலும் அதிகரிக்கும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறான உதவிகளைச் செய்து வந்துள்ளார்கள்.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை) செவியுற்றால் (தொழுகைக்குப்) புறப்பட்டு விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத்
நூல்: புகாரீ 5363
"நபி (ஸல்) அவர்கள் வீட்டில் வேலை செய்வார்களா?'' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், "தனது ஆடையைத் தைப்பார்கள்; கிழிந்த செருப்பை தைப்பார்கள்; வீட்டில் ஆண்கள் செய்ய முடிகின்ற வேலைகளை செய்வார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: உர்வா
நூல்: அஹ்மத் 23756
அஹ்மதின் மற்றொரு அறிவிப்பில் (24998) ஆட்டின் பாலைக் கறப்பார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டில் ஆண்கள் செய்ய முடிந்த வேலைகளைச் செய்து தம் மனைவியருக்கு உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு எத்தனையோ அலுவல்கள் இருந்தும் தம் குடும்பத்தினருக்காக நேரத்தை ஒதுக்கியது அவர்களின் சிறந்த பண்பாட்டைக் காட்டுகிறது. இறைத்தூதர் அவர்களே இவ்வாறு நடந்திருந்தால் நாம் எந்தளவிற்கு நடக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் சிறு சிறு உதவிகள் கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பையும் பாசத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும்.
ஊட்டி விடுதல்
சாப்பிடும் போது மனைவிக்கு ஒரு கவள உணவையாவது ஊட்டி விட்டால் கணவனின் மீது உள்ள அன்பை அதிகரிக்கச் செய்வதோடு இறையருளையும் பெற்றுத் தரும்.
"உன் மனைவியின் வாயில் ஊட்டக் கூடிய ஒரு கவள உணவு உட்பட அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ செலவழிப்பதற்குக் கூலி வழங்கப்படாமல் இருக்காது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ்(ரலி)
நூல்கள்: புகாரீ 1296, முஸ்லிம் 3076
மாதவிடாய் நேரத்தில்...
பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சுத்தமாக இருக்க மாட்டார்கள் என்று கூறி யூதர்கள் அவர்களைத் தனி அறையில் அடைத்து வைத்தனர். பொதுவாக இந்த நேரத்தில் அனைவரும் பெண்களை ஒதுக்கியே வைப்பார்கள். எனவே இதைப் போன்ற நேரங்களில் அவர்களிடம் அன்புடன் நடந்து கொண்டால் கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். வீடுகளில் அவர் களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, "நபியே! அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே மாதவிலக்குற்ற போது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்'' என்று தொடங்கும் (2:222வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து நபி (ஸல்) அவர்கள், "தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 507
மாதவிடாய் ஏற்பட்டுள்ள நேரத்தில் உடலுறவைத் தவிர மற்ற அனைத்துக் காரியங்களையும் செய்து கொள்ளலாம். அவர்களுடன் பேசுவது, அவர்கள் சமைத்ததைச் சாப்பிடுவது போன்ற எந்தக் காரியத்தையும் செய்யலாம். இதற்கு நபி (ஸல்) அவர்களே சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துள்ளார்கள்.
நான் மாதவிடாயுடன் இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவிவிடுவேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 295
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது எனது மடியில் சாய்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 297
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப்  இருக்கும் போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க் காரியாக இருக்கும் நிலையில் அவர்களது தலையைக் கழுவுவேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 301
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் (ஏதேனும் பானத்தை) பருகி விட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்து விட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 505
மாதவிடாய் என்று கூறி மற்றவர்கள் பெண்களை ஒதுக்கி வைக்கும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் அனைத்து உதவிகளையும் பெற்று வந்துள்ளார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் தண்ணீரை வாய் வைத்துக் குடித்து விட்டுத் தரும் போது, ஆயிஷா (ரலி) அவர்கள் எந்த இடத்தில் வாய் வைத்து குடித்தார்கள் என்பதைக் கவனித்து, அதே இடத்தில் வாய் வைத்து குடித்துள்ளார்கள். இறைச்சியைக் கொடுக்கும் போதும் ஆயிஷா (ரலி) அவர்கள் கடித்த அதே இடத்தில் கடித்து, மாதவிடாய் நேரத்தில் பெண்களிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரியப்படுத்துகின்றார்கள்.
இந்த நேரம் மட்டுமல்ல! ஒரு பெண் கவலையோடு இருக்கும் போதும், தனக்கு உறுதுணையாக யாரும் இல்லை என்று அவள் எண்ணும் போதும் அவளிடம்  கணவன் இது போன்று நடந்து கொண்டால் நிச்சயம் கணவனிடம் மனைவி மதிப்பும் மரியாதையும் வைப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை.

இல்லறக் கல்மைகள் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல்
மார்க்கம் தடை செய்யாத விசயங்களில் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் விரும்பியதை செயல்படுத்தவேண்டும். இவ்வாறு செயல்படுத்தும் போது அவர்களின் ஆசை நிறைவேறுவதுடன் கணவன் மீதும் மதிப்பும் மாரியாதையும் உயரும்.
உதாரணமாக எதாவது ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு சொன்னால் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும். முடியவில்லையானால் இன்னொரு நாளில் அழைத்துச் செல்வதாக கூறி அதன்படி நடக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் கணவன் மனைவி உறவு சீர்படும், சிறப்பாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே நடந்து கொண்டார்கள்.
ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவே அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ நீ பார்க்க ஆசைப்படுகிறாயா? எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.
(பிறகு அவர்களை நோக்கி) அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள் என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது உனக்கு போதுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்படியானால் (உள்ளே) போ! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (950)
நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்!
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: 5236
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விளையாட்டை பார்க்க ஆசைப்பட்ட போது அதற்கு நபி (ஸல்) அவர்கள் தடையாக இருக்கவில்லை. மாறாக ஆயிஷா (ரலி) அவர்களுக்காக தானும் பார்த்ததுடன், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் போதும்! போதும்! என்று சொல்லும் அளவுக்கு தன் தோளை விளையாட்டை பார்க்கும் சாதனமாக மாற்றிக் கொடுத்துள்ளார்கள். இறைத் தூதராக இருந்த நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ பணிகள் இருந்த போதும் மனைவியின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து அதற்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளார்கள்.
நான் (சிறுமியாக இருந்த போது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பிவைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்த்து) விளையாடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (6130)
ஆசையோடு தன் தோழிகளுடன் வியைôடிக் கொண்டிருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை கடிந்து கொள்ளவும் இல்லை, தடுக்கவும் இல்லை. மாறாக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அவர்களின் தோழிகளிடம் மீண்டும் விளையாட அனுப்பியுள்ளார்கள்.
இதைப்போன்று மனைவியின் தோழிகளை பார்ப்பதற்கு அவர்களுடன் பேசுவதற்கு அனுமதிக் கேட்டால் கணவன்மார்கள் அனுமதி அளிக்க வேண்டும். பெற்றோர்களிடம் கூட பேசுவதற்கும் பார்ப்பதற்கும் அனுமதி மறுக்கும் கணவன்மார்கள் நபிகளாரின் இந்த முன்மாதிரியை சிந்திக்க வேண்டும்.
விளையாடுதல்
திருமணம் முடிப்பவர்கள் கணவன் மனைவி அன்புடனும் பாசத்துடனும் இருக்க, தாங்கள் அன்பை வெளிப்படுத்த வண்ணம் சிரித்து விளையாடுவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆர்வப்படுத்தப்பட்டுள்ளது.
கன்னிப் பெண்ணை மணந்து நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே, நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரீ (5367)
கணவன் மனைவியுடனும் மனைவி கணவனுடனும் விளையாடுவதற்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கும் வயது வரம்பு ஏதும் கிடையாது.
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றேன். அப்போது நான் இளம்வயது பெண்ணாக இருந்தேன்.எனக்கு சதை போட்டு உடல் கனத்திருக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் (ஓட்டப் பந்தயம் வைத்து) முந்தித் செல்லுங்கள்! என்றார்கள்.அவர்கள் முந்திச் சென்றார்கள். என்னைப் பார்த்து வா! உன்னை நான் முந்திச் செல்கிறேன் என்றார்கள். அவர்களை முந்திச் சென்று (இறுதியில்) நானே முந்தினேன். நபி (ஸல்) அவர்கள் அமைதியானார்கள். எனக்கு சதைப் போட்டு நான் கனத்துவிட்டேன். (ஓட்டப் பந்தயம் விசயத்தையும்) நான் மறுந்துவிட்டேன். இன்னொரு முறை அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றேன். அப்போதும் மக்களிடம் (ஓட்டப் பந்தயம் வைத்து) முந்தித் செல்லுங்கள்! என்றார்கள்.அவர்கள் முந்திச் சென்றார்கள். பின்னர் என்னைப் பார்த்து வா! உன்னை நான் முந்திச் செல்கிறேன் என்றார்கள். நான் அவர்களுடன் ஓடினேன். (இறுதியில்) என்னை நபிகளார் முந்திவிட்டார்கள்.சிரித்துக் கொண்டு அதற்கு இது சரியாகிவிட்டது என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: அஹ்மத் (25075),அபூதாவூத் (2214)
எந்த பயணத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது என்ற விவரம் இல்லை. எனினும் குறைந்த பட்சம் நபிகளாரின் வயது என்ன? என்பதை நாம் தெரிந்து கொள்ளமுடியும். நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் கலந்தகொண்ட பயணங்கள் மதீனா வாழ்க்கையில்தான் நடந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு போகும் போது வயது 53. மதீனா சென்றவுடனே இந்த நிகழ்ச்சி நடந்திருந்தாலும் அவர்களின் வயது 53 ஆக இருக்கவேண்டும்.
நபிகளாரின் வயது (குறைந்தபட்சம்) 53 ஆக இருக்கும் போது தன் மனைவியிடம் ஓட்டபந்தயம் வைத்து தோற்றுபோய், பல வருடங்கள் கழித்து அதை நினைவில் வைத்து வெற்றிக் கொண்டது. கணவன் மனைவியிடம் வயது வரம்பின்றி இதுபோன்ற விளையாட்டுகளில் விளையாடி மகிழ்விக்கலாம் என்பதை மிகத் தெளிவாக பறைசாட்டுகிறது. இவ்வாறு நடப்பதும் கணவன், மனைவியிடம் அன்பை அதிகரிக்க உதவும் என்பதை அறியலாம்.
தனித்துப் பயணம்
ஒழுக்கத்தைப் பேணுவதற்கு இஸ்லாம் காட்டிய வழிமுறைகளில் ஒன்று, திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட நெருங்கிய உறவினர்கள் இல்லாமல் தனிமையில் ஒருநாள் பயண தூரம் வெளியில் செல்லக் கூடாது என்ற சட்டமாகும். ஏனெனில் இரவு வரும் போது தனித்து இருக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம், அதனால் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
"ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒரு மனிதர் எழுந்து "அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 3006
"அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல், ஒரு இரவு  தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 1088
தனிமை
அந்நிய ஆணுடன் ஒரு பெண் தனித்து இருக்கக் கூடாது. ஏனெனில் தனிமையில் இருக்கும் போது மூன்றாவது நபராக ஷைத்தான் இருந்து கொண்டு தவறான காரியத்தைச் செய்யத் தூண்டுவான்.
உங்களில் ஒருவர் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் ஷைத்தான் அவ்விருவரில் மூன்றாமவனாக இருக்கிறான்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: அஹ்மத் 109
இதைப் போன்று தனிமையில் பெண்கள் இருக்கும் போது அந்நிய ஆண்கள் உள்ளே வர அனுமதி கேட்டால் அனுமதிக்கக் கூடாது. இதுவும் தவறிழைப்பதற்கு வாய்ப்பாக அமையும்.
மேலும் வரக்கூடியவர் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே! அனுமதிக்கக் கூடாது. கணவனின் அண்ணன் தம்பிகள் உட்பட மஹ்ரம் இல்லாத எவரையும் அனுமதிக்கக் கூடாது.
அந்நியரை அனுமதிக்கக் கூடாது
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், பாத்திமா (ரலி) அவர்களிடம் (வீட்டில் உள்ளே வர) அனுமதி கோரினார்கள். பாத்திமா (ரலி) அவர்கள் அனுமதி வழங்கினார்கள். அப்போது "அலீ (ரலி) அவர்கள் இருக்கிறார்களா?'' என்று அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) கேட்டார்கள். அவர்கள் "இல்லை'' என்றார்கள். அவர்கள் திரும்பிச் சென்று விட்டார்கள்.
மீண்டும் ஒரு முறை அனுமதி கோரினார்கள். (அனுமதி வழங்கப்பட்டது) அப்போது, "நான் இங்கு இல்லாத போது (உள்ளே) நுழைய மறுத்ததன் காரணம் என்ன?'' என்று அலீ (ரலி) அவர்கள், அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு "கணவர் இல்லாத வீடுகளில் நாங்கள் நுழைவதை நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை செய்தார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸாலிஹ்
நூல்: அஹ்மத் 17156
நபி (ஸல்) அவர்கள் "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என்று உங்களை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள். "ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)
நூல்: புகாரீ 3281
குழைந்து பேசக்கூடாது
அந்நியர்கள் வீட்டிற்கு வந்தாலோ அல்லது தொலைபேசியில் பேசினாலோ குழைந்து பேசக்கூடாது. இது ஆண்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். தீயவர்கள் தவறாக நடக்க ஊக்குவிக்கும்.
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (அல்குர்ஆன் 33:32)
நறுமணங்களைத் தவிர்த்தல்
தெருவில் செல்லும் போதும், ஆண்கள் இருக்கும் அவைகளுக்குச் செல்லும் போதும் நறுமணத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மல்லிகைப் பூ போன்ற காமத்தை கிளறக் கூடிய பூக்களையும் அந்நிய ஆண்களிடம் செல்லும் போது தவிர்க்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் போகும் போது கூட நறுமணத்தைத் தவிர்க்கக் கட்டளை இட்டுள்ளார்கள்.
"(பெண்களே!) நீங்கள் இஷாத் தொழுகையில் கலந்து கொள்ள (பள்ளிவாசலுக்கு)ச் செல்லும் போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜைனப் (ரலி)
நூல்: முஸ்லிம் 758
"எந்தப் பெண்மணி நறுமணத்தைப் பூசிக் கொண்டு (ஆண்களில்) அவைகளுக்குச் சென்றால் இவ்வாறு, இவ்வாறு போன்றவள். அதாவது விபச்சாரியாவாள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: திர்மிதீ 2710
ஆண்களிடம் முஸாஃபஹா
அந்நிய ஆண்களிடம் கைலாகு (முஸாஃபஹா) செய்வதும் கூடாது. இதுவும் தவறிழைப்பதற்குத் தூண்டும் காரணிகளில் ஒன்றாக அமையும்.
"நபி (ஸல்) அவர்களது கை, அவர்களுக்குச் சொந்தமான பெண்களை (துணைவியரை)த் தவிர வேறந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை''
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 7214
ஊர் சுற்றுதல்
பொதுவாக பெண்கள் தெருக்களில் கடைவீதிகளில் சுற்றித் திரிவதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் மட்டும் வெளியே செல்ல வேண்டும்.
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக் கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 33:33)

கணவன் காணாமல் போய் விட்டால்?
மத்ஹபுகள் பெண்களுக்கு இழைத்து வரும் அநீதிகளில் மிக முக்கியமானது, காணாமல் போன கணவன் பற்றி சட்டமாகும். மனைவியை விட்டு விட்டு கணவன் காணாமல் போய் விட்டான்.  அவனது மனைவி என்ன செய்வாள்? இதோ ஹனபி மத்ஹப் கூறுவதைக் கேளுங்கள்.
இருவரது திருமண உறவைப் பிரிக்கக் கூடாது,  தொன்னூறு ஆண்டுகள் கழிந்த பின் அவன் இறந்து விட்டதாக முடிவு செய்யப்படும்.  அவனது மனைவி அப்போது இத்தா இருப்பாள்.
கன்ஸுத்தகாயிக், பாகம்1, பக்கம் 220
கணவன் பிறந்ததிலிருந்து தொன்னூறு வருடம் எனக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது ஹனபி மத்ஹபின் கருத்து. இதையே கன்ஸ் என்ற நூலில் அதன் ஆசிரியர் தேர்வு செய்திருக்கின்றார். அது தான் மிகவும் மிதமானது என்கின்றார் ஹிதாயாவின் ஆசிரியர். இந்தக் கருத்தில் தான் தீர்ப்பு உள்ளது என்கிறார் தகீரா ஆசிரியர். 120 வருடங்கள் என பிற்கால அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
எனது சமுதாயத்தின் வயது அறுபதுக்கும் எழுபதுக்கும் இடைப்பட்டதாகும் என்று நபி (ஸல்) அவர்களின் சொல்லை அடிப்படையாகக் கொண்டு எழுபது வருடம் என்று இப்னு ஹுமாம் குறிப்பிடுகின்றார். எனவே இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது பெரும்பான்மையான கருத்தாக உள்ளது.
இது காணாமல் போனவருக்கு மத்ஹபு கூறும் சட்டமாகும்.
இவர்கள் வழங்கும் தீர்ப்பு ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டுவது போல் உள்ளதல்லவா? ஒரு மார்க்கத் தீர்ப்பைச் சொல்லும் போது கெஞ்சமாவது தங்கள் சிந்தனை ஓட்டத்தைச் செலுத்த வேண்டாமா?
30 வயதிலுள்ள ஒருவனுக்கு 20 வயது மனைவி இருக்கின்றாள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது கணவன் காணாமல் போய் விட்டால் அந்தப் பெண் இன்னும் 40 வருடங்கள் அல்லது 60 வருடங்கள் அல்லது 90 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகு அவள் வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது நடைமுறைக்குச் சாத்தியமா? பெண் என்பவள் எந்த உணர்ச்சியும் அற்ற மரக் கட்டையா? அவளுக்கென்று எந்த ஆசையும் கிடையாதா? என்ன அர்த்தத்தில் இவர்கள் இவ்வாறு உளறியுள்ளார்கள்?
இப்போது இந்த மத்ஹபுவாதிகளிடம் நாம் கேட்பது, எந்தக் குர்ஆன் வசனத்திலிருந்து இந்தச் சட்டத்தை எடுத்தீர்கள்? எந்த ஹதீஸின் அடிப்படையில் இதை எடுத்தீர்கள்?
இந்தக் கேள்வியை நாம் இன்று கேட்கவில்லை. எட்டு வருடங்களுக்கு முன், பெண் கொடுமை என்று தலைப்பிட்டு நாம் இந்தக் கேள்வியை எழுப்பிய போது, ஷரீஅத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டு தமிழக உலமாக்கள் பதிலளித்தார்கள். ஷரீஅத் பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் நூலாகவும் வெளியிடப் பட்டது. அதிலாவது ஏதேனும் ஆதாரத்தைக் காட்டினார்களா? என்றால் அதுவும் இல்லை.
ஷரீஅத்தின் பாதுகாவலர்கள் கூறுவதைக் கேளுங்கள்.
அல்லாஹ் குர்ஆனில் வ-மை மிகுந்த ஒப்பந்தம்  4 : 25 என்று குறிப்பிட்டிருப்பதை சற்றேனும் சிந்திக்க வேண்டாமா?  திருமண உறவைத் துண்டிப்பவர்கள், காணாமல் போய் விட்டவனின் சொத்தைப் பங்கீடு செய்கின்ற விஷயத்தில், அதுபோல் பிறரிடமிருந்து அவருக்கு வரக்கூடிய அனந்தரச் சொத்துடைய விஷயத்தில் எந்தக் கால அளவைக் கருத்தில் கொள்கின்றனர் என்பதை குர்ஆன், ஹதீஸ் மூலம் எடுத்துக் காட்டட்டுமே பார்க்கலாம்.  பெண்ணின் இளமை, சுற்றுச் சூழல், மோசமான நிலை, செலவினச் சிக்கல் போன்ற காரியங்களை முன் வைத்து காணாமல் போய் விட்ட கணவனுடைய திருமண உறவி-ருந்து பிரிந்து கொள்ள வழி செய்யும் இலகுவான சட்ட திட்டங்களை உலமாக்கள் ஆதாரப்பூர்வமாகத் தொகுத்துக் கொடுத்து பெண்ணினத்தின் மீது பேருபகாரம் புரிந்தது இவர்களுக்குத் தெரியாதா என்ன?
மேற்கூறப்பட்ட சட்டம் உண்மையில் பெண்ணுக்குக் கொடுக்கப் பட்ட மகிமை.  புரிய முடியாத மூடர்கள் இதற்கு பெண் கொடுமை என்று தலைப்பு கொடுத்திருப்பது அவர்கள் இஸ்லாத்திற்குத் செய்துள்ள கொடுமையாகும்.
உண்மையில் கணவன் மனைவி மத்தியில் உள்ள திருமண ஒப்பந்தம் கணவன் இறந்தால் அல்லது அவனாக முறித்தால்தான் முடியும்.  வேறு எவராலும் சாதாரணமாக முறிக்க முடியாது.  ஆனால் கணவன் மறைந்து விட்டால், மரணித்து விட்டானா? உயிருடன் இருக்கின்றானா? என்ற சந்தேகமிருக்கும் போது வேறு யார் இந்த பந்தத்தை முறிக்க முடியும்?  முறிப்பதாக இவர்கள் தீர்ப்பு செய்த பின் மறுபடி கணவன் வந்து விட்டால் என்னவாகும்? அல்லாஹ் அவனுக்கு மட்டும் அளித்த உரிமையில் கை வைக்க அதிகாரம் பெற்றவர் யார்? எனவே தான் ஹழ்ரத் அலீ (ர-) அவர்கள் கீழ்க்கண்டவாறு தீர்ப்புச் செய்தார்கள்.
தாரகுத்னீ அடிக்குறிப்பு 3/313
மறைந்தவன் உயிரோடு இருக்கிறானா? அல்லது மரணித்து விட்டானா? என்று உறுதியாக அறியப்படுகின்ற வரை அப்பெண் எதிர்பார்ப்பாள்.
மேலும் இதே கருத்துடைய ஒரு ஹதீஸ் தாரகுத்னீயில் (3/313) உள்ளது.  அது லயீபாக (பலவீனமான ஹதீஸாக) இருப்பினும் வேறு முறையில் அதன் கருத்து ஸஹீஹாக உள்ளது.  அதுவும் தாரகுத்னீ உடைய அடிக்குறிப்பில் காணப்படுகின்றது.
ஒரு பெண் தன் கணவன் காணாமல் போய்விட்டால் அவன் வருகின்ற வரை அல்லது அவன் மரணிக்கின்ற வரை திருமணம் செய்யக் கூடாது.  இது தான் அடிப்படை.  இந்த ஹதீஸை வைத்துத் தான் மார்க்க அறிஞர்கள் அந்தக் கணவன் மரணித்த செய்தி வர வேண்டும்.  அல்லது அவனோடு வாழ்ந்தவர்கள் மரணித்து விடுவதைக் கொண்டு இவனுடைய மரணம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். இவ்வாறு மரணித்து விட்டான் என்று நம்புகின்ற கால அளவை அன்று சிலர் 100 வயது என்றும் சிலர் 90 வயது என்றும் நிர்ணயம் செய்தார்கள்.  காலத்திற்கேற்ப இது மாறுபடும்.
இந்த நிலை லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படலாம்.  அப்படி ஏற்பட்டால் அல்லாஹ்வின் சோதனை என்று எண்ணி அவள் பொறுமை கொள்ள வேண்டும்.  கணவன் காணாமல் போன மனைவி விஷயத்தில், "அவள் அல்லாஹ்வினால் சோதிக்கப்பட்ட பெண்'' என அலீ (ர-) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (தாரகுத்னீ 3/313)
ஆனால் இன்று பொறுமையற்ற காலச் சூழ்நிலையாக இருப்பதால் அவன் மனைவியைப் பராமரிக்கவில்லை, செலவுக்குக் கொடுக்கவில்லை என்ற காரணங்களை முன் வைத்து, ஊர் ஜமாஅத்தினரும் சட்டம் தெரிந்த ஆ-ம்களும் கலந்தாலோசித்து, காஜியிடம் பிரச்சனையைக் கொண்டு சென்று, வேறு ஹதீஸ்களின் அடிப்படையை வைத்து ஷாஃபியீ, மா-கீ மத்ஹபுகளில் கூறப்பட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில் கணவன், மனைவி பந்தத்தைப் பிரித்து வைப்பதற்குரிய வழிவகைகளைச் செய்ய வேண்டும்.
சட்டங்கள் விளங்காவிட்டால் விளங்கியவர்களிடத்தில் கேட்டு விளங்கிக் கொள்ள வேண்டும்.  ஒருவன் தன்னை விடப் பெரிய அறிவாளி இல்லை என்று நினைத்தால் அவன்,
ஒவ்வொரு அறிவாளிக்கும் மேல் ஓர் அறிஞர் உண்டு (12 : 76) என்ற அல்லாஹ்வின் சொல்லைப் புறக்கணித்தவனாவான்.
இது தான் ஷரீஅத் பேரவை அளித்த விளக்கம்.
90 வருடம் கழித்து மறுமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட மகிமையாம். அதைப் புரியாமல் நாம் பெண் கொடுமை என்று கூறி விட்டோமாம். சுய நினைவோடு தான் இதை எழுதியுள்ளார்களா என்று எண்ணத் தோன்றுகின்றது.
நாம் கேட்ட கேள்வி என்ன? இவர்கள் அந்தக் கேள்விக்கு உரிய பதில் தந்துள்ளார்களா? என்பதை மீண்டும் ஆராய்வோம்.
கணவன் காணாமல் போய் விட்டால் 90 ஆண்டுகளுக்குப் பிறகு அவன் மரணித்து விட்டதாக முடிவு செய்ய வேண்டும்.  அதற்கு முன் திருமண உறவைப் பிரிக்கக் கூடாது என்று ஹனபி மத்ஹபில் கூறப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
குர்ஆனின் எந்த வசனத்தின் அடிப்படையில் இவ்வாறு முடிவு செய்தனர்? எந்த ஹதீஸின் அடிப்படையில் முடிவு செய்தனர்? என்பது தான் நமது அடிப்படையான கேள்வி!
காணாமல் போனவனின் மனைவி 90 வருடம் வரை திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ் கூறவில்லை.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை.
திருமண ஒப்பந்தத்தை கணவன் தான் முறிக்க வேண்டும் அல்லது இறந்தால் தான் முறிக்க முடியும், வேறு எவராலும் சாதாரணமாக முறிக்க முடியாது என்பது தான் இவர்களின் பதிலாக உள்ளது.
90 ஆண்டுகள் வரை அப்பெண் காத்திருக்க வேண்டும் என்று கூறும் இவர்கள், அலீ (ர-) அவர்களின் கூற்றைத் தான் ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.  அந்தக் கூற்றைக் கூட மூல நூ--ருந்து எடுத்துக் காட்ட இவர்களால் இயலவில்லை.  தாரகுத்னீயின் அடிக்குறிப்பி-ருந்து எடுத்துக் காட்டுகின்றனர்.
நபித்தோழர்கள் இதுகுறித்து ஏராளமான முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்ததாக பல அறிவிப்புக்கள் உள்ளன.  உமர்     (ர-) அவர்கள், நான்கு ஆண்டுகள் கழித்து அப்பெண் மறுமணம் செய்யலாம் எனக் கூறியதாகவும் அறிவிப்புக்கள் உள்ளன.  எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு நபித்தோழரின் கூற்றின் அடிப்படையில் சட்டம் வகுத்தால் தேவையற்ற குழப்பமும் முரண்பாடுகளும் தான் ஏற்படும்.
எனவே நபித்தோழர்களின் கூற்றைத் தவிர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றை ஆதாரமாகக் காட்ட வேண்டும் என்பதே நமது கேள்வி!
இவர்கள் எடுத்துக் காட்டிய அலீ (ர-) அவர்களின் கூற்றிலும் 90 வருடங்கள் கழித்து மறுமணம் செய்யுமாறு கூறப்படவில்லை.  மாறாக, அவன் வரும் வரை அல்லது சாகும் வரை காத்திருப்பாள் என்றே கூறப்பட்டுள்ளது.  அவள் மறுமணம் செய்ய உரிமை இல்லை என்ற கருத்தில் தான் அலீ (ர-) அவர்களின் கூற்று அமைந்துள்ளது.
ஆயினும் ஷரீஅத் பேரவையினரை ஒரு வகையில் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
 திருமணம் வ-மையான ஒப்பந்தம்.
 கணவன் தான் முறிக்க முடியும்.
 அல்லது கணவனின் மரணம் தான் முறிக்கும்.
 வேறு யாருக்கும் முறிக்கும் அதிகாரம் இல்லை.
என்றெல்லாம் வாதிட்டு வந்து விட்டு இறுதியில் ஹனபி மத்ஹபின் இந்தச் சட்டம் கிறுக்குத்தனமானது.  நடைமுறைப் படுத்த முடியாதது.  இதை அமுல்படுத்தக் கூடாது என்று தங்கள் பதிலை நிறைவு செய்துள்ளனர்.
"ஆனால் இன்று பொறுமையற்ற காலச் சூழ்நிலையாக இருப்பதால் அவன் மனைவியைப் பராமரிக்கவில்லை, செலவுக்குக் கொடுக்கவில்லை என்ற காரணங்களை முன் வைத்து, ஊர் ஜமாஅத்தினரும் சட்டம் தெரிந்த ஆ-ம்களும் கலந்தாலோசித்து, காஜியிடம் பிரச்சனையைக் கொண்டு சென்று, வேறு ஹதீஸ்களின் அடிப்படையை வைத்து ஷாஃபியீ, மா-கீ மத்ஹபுகளில் கூறப்பட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில் கணவன், மனைவி பந்தத்தைப் பிரித்து வைப்பதற்குரிய வழிவகைகளைச் செய்ய வேண்டும்.''
என்று முடித்துள்ளதைக் காண்க!  இதன் மூலம் காணாமல் போனவனின் மனைவி 100 வருடம், 90 வருடம் காத்திருக்க வேண்டும் என்று ஹனபி மத்ஹபில் கூறப்பட்டுள்ளதை எடுத்து நடக்க இயலாது என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
மேலும் திருமண பந்தத்தைப் பிரிக்கும் அதிகாரம் கணவனுக்கு மட்டுமின்றி மனைவிக்கும், காஜிக்கும், உலமாக்களுக்கும் உண்டு என்பதை ஒப்புக் கொண்டு, "கணவனுக்கு மட்டுமே பிரிக்கும் அதிகாரம் உண்டு'' என்ற ஹனபி மத்ஹபின் அடிப்படையைத் தவறு எனவும் ஏற்றுக் கொண்டு விட்டனர்.
இமாம்கள் காலத்துக்குப் பிறகும் உலமாக்கள் கூடி ஆய்வு செய்யும் வாசல் அடைக்கப்படவில்லை.  தங்களுக்கு அந்த அதிகாரம் உண்டு என்பதையும் ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
மத்ஹபு என்பது மக்களை ஏமாற்றுவதற்கான கேடயம் தான்.  காலச் சூழ்நிலைக்கேற்ப நாங்களும் சட்டங்களை உருவாக்குவோம் என்பதைச் சொல்லாமல் சொல்-யுள்ளனர்.
மத்ஹபுகளை விட குர்ஆன் ஹதீஸ் வழி தான் சிறந்தது.  குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தான் அடிப்படை என்பதை இவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் இத்தகைய உளறல்களை நியாயப்படுத்தி, பின்னர் மறுக்கும் இழிவு அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.
மனைவியை விட்டு விட்டுக் கணவன் காணாமல் போய்விட்டால் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் என்ன தான் தீர்வு?
மனைவியை விட்டு கணவன் காணாமல் போய் விட்டால் அந்த மனைவி எவ்வளவு நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்பது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை.
இந்த விஷயத்தில் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.  உமர் (ர-) அவர்கள் உள்ளிட்ட சில நபித்தோழர்கள் நான்கு ஆண்டுகள் மனைவி காத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள்.  ஆனால் அவர்கள் தங்களது சொந்தக் கருத்தாகவே தெரிவிக்கின்றார்கள்.  இதற்காக ஆதாரம் எதையும் சமர்ப்பிக்கவில்லை.
இது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை என்பதற்காக இடிந்து போகத் தேவையில்லை. ஏனெனில் கணவன் காணாமல் போகாது இருக்கும் போதே திருமண பந்தத்தில் இருந்து விடுபட முடியும். அதே உரிமையைப் பயன் படுத்தி கணவன் காணாமல்  போகும் போதும் திருமண பந்தத்தில் இருந்து விடுபடலாம்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ்(ரலி)யின் மனைவி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்'' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் "அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி "சரி'' என்றார். உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் "தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு'' என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி),
நூல்கள்: புகாரி 5273, நஸயீ 3409
மற்றொரு அறிவிப்பில் பின்வருமாறு காணப் படுகின்றது.
ஸாபித் பின் கைஸ்(ரலி) அவர்கள் ஜமீலா எனும் தம் மனைவியை அடித்தார். அவரது கை ஒடிந்து விட்டது. இதைக் கண்ட அப்பெண்மணியின் சகோதரர் அன்றைய சமுதாயத் தலைவரான நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸை அழைத்து வரச் செய்து, "அவள் உமக்குத் தர வேண்டியதை(மஹரை)ப் பெற்றுக் கொண்டு அவளை அவள் வழியில் விட்டு விடுவீராக!'' என்றார்கள். அவர் "சரி'' என்றார். அப்பெண்மணியிடம் "ஒரு மாதவிடாய்க் காலம் வரை (திருமணம் செய்யாமல்) பொறுத்திருக்குமாறும் தாய் வீட்டில் சேர்ந்து கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ருபய்யிஃ(ரலி)
நூல்: நஸயீ 3440
மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.
ஒரு பெண்ணுக்கு, கணவனைப் பிடிக்கா விட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையை அவள் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
பெண் என்பவள் உணர்ச்சிகள் இல்லாத கட்டை அல்ல.  கணவன் இருக்கும் போதே அவளது உணர்வுகள் கணவனின் உணர்வுகளுடன் ஒத்துப் போகாவிட்டால் திருமணத்தை ரத்து செய்ய சமுதாயத் தலைவருக்கு அனுமதி உண்டு எனும் போது கணவன் காணாமல் போய் விடும் போது தாராளமாக ரத்து செய்யலாம்.
மத்ஹபு நூற்களில் 120 வருடங்கள் அவள் காத்திருக்க வேண்டும் என்று கூறுகெட்டு, ஆதாரம் ஏதுமின்றி எழுதியிருப்பதை நம்பி சில ஜமாஅத் நிர்வாகிகள் பெண்களின் இந்த உரிமையை மறுக்கின்றனர்.
திருமணம் செய்வதற்கான நோக்கம் என்ன?
அல்லாஹ் யாருக்கேனும் அநியாயம் செய்பவனா?
ஒரு பெண் தவறான வழியில் செல்வதற்கான வாசலை இஸ்லாம் அடைக்காமல் இருக்குமா?
என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்தால் கணவனுக்காக காலமெல்லாம் காத்திருக்க வேண்டும் என்று கூற மாட்டார்கள்.
இவ்வாறு கூறும் ஊர் ஜமாஅத்தினர் தங்கள் மகளுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டால் நபிவழியைப் பின்பற்ற முன்வருகின்றனர்.
எத்தனையோ மவ்லவிமார்கள் தங்கள் மகளுக்கோ, சகோதரிக்கோ இதுபோன்ற நிலை ஏற்படும் போது மத்ஹபைத் தூக்கி எறிந்து விட்டு நபிவழியைத் தேடுகின்றனர்.  மக்களுக்கு மட்டும் அந்த உரிமையை மறுப்பது சரிதானா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பெண்களின்விவாகரத்து உரிமை
கணவனைப் பிடிக்காத நிலையில் ஒரு மனைவி அவனிடமிருந்து பிரிந்து மறு வாழ்வு அமைத்துக் கொள்ள இஸ்லாம் பல உரிமைகளை வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்று தான் குல்உ எனப்படுவதாகும்.
இந்தச் சட்டம் மத்ஹபுகளில் இருந்தாலும் கூட மத்ஹபுகளைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்வோர் இதை நடைமுறைப் படுத்துவதில்லை.
ஒரு பெண் தன் கணவரோடு வாழப் பிடிக்காமல் தன்னைப் பிரித்து வைக்குமாறு அந்தப் பகுதியின் ஜமாஅத்தாரிடம் முறையிட்ட போது, அவர்கள் ஹனபி மத்ஹபின் படி கணவன் தலாக் விட்டால் தான் பிரிய முடியும் என்று கூறி மறுத்து விட்டனர்.  அந்தப் பெண் தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகி மார்க்கத் தீர்ப்பு பெற்று கணவனைப் பிரிந்தார். ஆயினும் கணவன், நான் தலாக் விடவில்லை என்பதால் என் மனைவி என்னோடு தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது கணவன், மனைவி இருவரும் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர்.
இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விவாக ரத்து உரிமை சமுதாயத்தில் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாமல் இருப்பதால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிட்டுள்ளோம். எனவே இந்த குல்உ எனப்படும் பெண்களின் விவாக ரத்து உரிமையைப் பற்றி இங்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
குல்உ என்றால் என்ன?
1. ஒரு பெண்ணுக்குத் தனது கணவனைப் பிடிக்கவில்லை என்றால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடமோ அல்லது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்தால் ஆட்சித் தலைவரிடமோ முறையிட வேண்டும்.
2. அவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராகப் பெற்ற பொருட்கள் அனைத்தையும் கணவனிடம் திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்குக் கட்டளையிட வேண்டும்.
3. அந்த மஹரைப் பெற்றுக் கொண்டு உடனே அவளைப் பிரிந்து விடுமாறு அந்தக் கணவருக்கு தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்படா விட்டாலும் தலைவர் அந்தத் திருமணத்தை ரத்து செய்வார்.
4. மஹராகக் கொடுத்ததை விட எதையும் அதிகப்படியாக கணவன் கேட்க முடியாது.
5. கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை.
6. கணவனே தலாக் கூறும் போது மூன்று மாதவிடாய் காலத்துக்குள் அவளைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை இருப்பதைப் போல் குல்உ செய்து பிரியும் போது திரும்ப அழைக்க முடியாது.
7. தலாக் விடப்படும் போது மூன்று மாதவிடாய் வரை அவள் மறு மணம் செய்யக் கூடாது. ஆனால் குல்உ அடிப்படையில் பிரியும் போது ஒரே ஒரு மாதவிடாய் வரும் வரை அவள் மறுமணம் செய்யக் கூடாது. அதன் பிறகு அவள் மறுமணம் செய்யலாம்.
8. இவ்வாறு பிரிந்த பின் இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
இவை தான் குல்உ என்பதன் விதிமுறைகளாகும். முஸ்லிம் பெண்களில் பெரும்பாலோருக்கும், சமுதாயத் தலைவர்களுக்கும் இந்தச் சட்டங்கள் தெரியாததாலும், கல்லானலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற போலித்தனத்தில் அவர்கள் ஊறிப் போய் விட்டதாலும் பெண்கள் இன்று கொடுமைப் படுத்தப் படுகின்றனர்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ்(ரலி)யின் மனைவி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்'' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் "அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி "சரி'' என்றார். உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் "தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு'' என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி),
நூல்கள்: புகாரி 5273, நஸயீ 3409
ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஜமீலா எனும் தம் மனைவியை அடித்தார். அவரது கை ஒடிந்து விட்டது. இதைக் கண்ட அப்பெண்மணியின் சகோதரர் அன்றைய சமுதாயத் தலைவரான நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸை அழைத்து வரச் செய்து, "அவள் உமக்குத் தர வேண்டியதை(மஹரை)ப் பெற்றுக் கொண்டு அவளை அவள் வழியில் விட்டு விடுவீராக!'' என்றார்கள். அவர் "சரி'' என்றார். அப்பெண்மணியிடம் "ஒரு மாதவிடாய்க் காலம் வரை (திருமணம் செய்யாமல்) பொறுத்திருக்குமாறும் தாய் வீட்டில் சேர்ந்து கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ருபய்யிஃ(ரலி)
நூல்: நஸயீ 3440
இந்த ஹதீஸ்களில் அந்தப் பெண்மணி தன் கணவரைப் பற்றி எந்தக் குறையையும் கூறவில்லை. மாறாக அவரது நடத்தையையும், நற்பண்புகளையும் புகழ்ந்தே கூறுகின்றார். தான் கணவரை விட்டுப் பிரிய விரும்புவதற்கு எந்தக் காரணத்தையும் கூறவில்லை. இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறைவனுக்கு மாறு செய்து விடுவேனோ என்று அச்சமாக உள்ளதையே காரணம் காட்டுகின்றார்.
கணவனைப் பிடிக்காது பிரிந்து செல்ல விரும்பும் மனைவி தெளிவான காரணம் எதையும் கூற வேண்டியதில்லை என்பதையும், தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினாலே போதுமானது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
கணவன் தலாக் கூறினால் தான் குல்உ நிறைவேறும் என்று சிலர் கூறுகின்றர். ஆனால் இது ஏற்கத்தக்கதல்ல.
கணவனால் கொடுமை படுத்தப்படும் பெண் அவனிடமிருந்து பிரிய விரும்புகின்றாள். இந்த நிலையில் அவன் மறுக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் தலாக் விட்டால் தான் அவள் பிரிய வேண்டும் என்றால் காலமெல்லாம் அவள் கொடுமைப் படுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
கொடுமைகள் நிகழும் போது அதைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ள தலைவரும் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து பெண்களுக்கு அக்கிரமம் செய்யப்படுவதை இஸ்லாம் அனுமதிக்குமா? அநியாயத்தையும் அக்கிரமத்தையும் எதிர்த்துப் போராடுமாறும் முடியுமானால் கையால் தடுக்க வேண்டும் எனவும் கூறும் இஸ்லாம் இந்த அக்கிரமத்தை அனுமதிக்குமா? இந்தக் கோணத்தில் பார்த்தாலும் குல்உ என்பதற்கு அந்தக் கணவனின் சம்மதமோ, அவனது தலாக்கோ தேவையில்லை என்பது தெளிவாகின்றது.
இஸ்லாம் திருமணத்தை ஒரு ஒப்பந்தம் என்று கூறுகின்றது.
"உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?''
(அல்குர்ஆன் 4:21)
"பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன''
(அல்குர்ஆன் 2:228)
திருமணத்தை முறித்துக் கொள்ள கணவனுக்கு இருப்பது போன்று மனைவிக்கும் உரிமை இருப்பதை இந்த வசனங்கள் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றன. கணவன் தலாக் விட்டால் தான் அவள் பிரிய முடியும் என்றால் பெண்ணுக்கு இந்த உரிமை வழங்கப் பட்டதில் என்ன அர்த்தமிருக்க முடியும்?
இது போன்ற காரணங்களால் கணவன் தலாக் கூறினால் தான் அவளால் பிரிய முடியும் என்பதை ஏற்க முடியவில்லை. எவ்வளவு பெரிய இமாம்கள் அந்தக் கருத்தைக் கூறியிருந்தாலும் அதைத் தூக்கி எறிய வேண்டியது தான்.
பெரும் மார்க்க அறிஞர்கள் எனப்படும் பலரும் இந்த விஷயத்தில் சறுக்கியுள்ளனர். பெண்களின் நிலையிலிருந்து சிந்தித்தால் இதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
குல்உ தொடர்பான மற்ற ஆதாரங்களைக் காண்போம்.
இப்னு மாஜாவில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் 2332வது ஹதீஸில், "அவரது தோட்டத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அதை விட அதிகமாகப் பெற்றுக் கொள்ளக் கூடாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
கொடுத்த மஹரை விட வேறெதனையும் அந்தக் கணவன் கேட்க முடியாது. தலைவரும் வற்புறுத்த முடியாது என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.
"ஒரேயடியாக அவளைப் பிரிந்து விடு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து திரும்ப அழைக்கும் உரிமை கணவனுக்கு கிடையாது என்பதும் தெளிவாகின்றது.
ஆக பெண்கள் தங்கள் கணவனிடமிருந்து பிரிவதாக இருந்தால் ஜமாஅத்தில் முறையிட வேண்டும்.  ஜமாஅத் தலைவர் அந்தத் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆண் சார்பு நிலையிலிருந்து ஜமாஅத்தினர் விடுபட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைச் செயல்படுத்த வேண்டும்.
கணவனைப் பிடிக்காமல், பிரியவும் வழி தெரியாமல் வாழ வெட்டிகளாகப் பிறந்த வீட்டில் கண்ணீர் வடிக்கும் அபலைப் பெண்களின் உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும். இஸ்லாம் வழங்கியுள்ள இந்த உரிமையை மறுப்பதன் மூலம் அவர்கள் விபச்சாரம் போன்ற தகாத உறவுகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு நியாயத்தை மறுத்த மொத்த சமுதாயமும் அந்தக் குற்றத்தில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்படும்.
கணவன் தலாக் விடாத வரை அந்த உறவை ரத்துச் செய்ய முடியாது என்று அஞ்சும் ஜமாஅத் தலைவர்களுக்காக ஒரு முக்கியமான ஹதீஸைச் சமர்ப்பிக்கிறோம்.
அப்துல்லாஹ்வுடைய மகள், ஸாபித் என்பாருக்கு மனைவியாக இருந்தார். அவர் அப்பெண்ணுக்கு ஒரு தோட்டத்தை மஹராக வழங்கியிருந்தார். (அந்த வழக்கு வந்த போது) "உனக்கு அவர் தந்துள்ள தோட்டத்தைத் திருப்பிக் கொடுக்கிறாயா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "ஆம். அதை விட அதிகமாகவும் கொடுக்கிறேன்'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அதிகமாக வேண்டாம். அவரது தோட்டத்தை மட்டும் கொடு'' என்றார்கள். அப்பெண் சரி என்றதும், ஸாபிதின் சார்பாக நபி (ஸல்) அவர்களே தோட்டத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பு ஸாபிதுக்குத் தெரிய வந்த போது, "அல்லாஹ்வின் தூதருடைய தீர்ப்பை நான் ஏற்கிறேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஸ்ஸுபைர்
நூல்: தாரகுத்னீ 39
கணவனின் தலாக்கைப் பெறாமல் நபியவர்களே மஹரைப் பெற்றுக் கொண்டு ரத்து செய்கின்றார்கள். இந்தச் செய்தி சம்பந்தப்பட்டவருக்கே பிறகு தான் தெரிகின்றது என்றால் ஜமாஅத் தலைவருக்கு உள்ள உரிமையையும் கடமையையும் தெளிவாக அறிய முடிகின்றது.
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையினால் மாற்றார்கள் இஸ்லாத்தை விமர்சிப்பது ஒரு புறமிருக்க, நமது சமுதாயத்துப் பெண்களில் விபரமறிந்தவர்களும் இஸ்லாத்தை விமர்சிக்க இடமளித்து விடக் கூடாது.
பெண்களுக்கு உள்ள இந்த உரிமையைப் பெண்கள் அறிவதற்கு ஏற்பாடு செய்வதும் ஜமாஅத் தலைவர்களுக்கு இந்தச் சட்டம் பற்றி விளக்குவதும் தவ்ஹீத் சகோதரர்களின் கடமைகளில் ஒன்றாகும்.
பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை வழங்கப்படா விட்டால் அதனாலும் பல தீய விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன.
கணவனைப் பிடிக்காத பெண்கள் விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருப்பதால் கணவரையே கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன.
பெண்கள் ஸ்டவ் வெடித்துச்  செத்தால், விஷம் கொடுக்கப்பட்டு கணவர்கள் கொல்லப்படுகிறார்கள். நன்றாகத் தான் படுத்தார். காலையில் பிணமாகி விட்டார் என்று கூறப்படுவதில் கனிசமானவை மனைவியரால் செய்யப்படும் கொலைகளாகும். சமையல் அவர்கள் கையில் இருப்பதால் எளிதாகக் கதையை முடிக்கிறார்கள்.
அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்கின்றனர். கணவனிடமிருந்து எளிதாக விவாகரத்துப் பெற்று, தனக்கு விருப்பமானவனைச் சட்டப்படி மணந்து கொள்ள வழியிருந்தால் இது போன்ற கொடூரம் நடைபெறாது.
எனவே தான் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் விவாகரத்துச் சட்டத்தை இஸ்லாம் மிக மிக எளிமையாக்கியுள்ளது.
ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஒரு தலாக் விட்ட பெண் மறுபடியும் கணவனுடன் இணைந்துகொள்ளுலாமா
? ஒரு சகோதரரின் மனைவிக்கும், கணவரின் வீட்டில் உள்வர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு தலாக் விட எண்ணினார்கள். அப்போது ஜமாஅத்தார்கள் ஈடுபட்டு மூன்று மாதம் சேர்ந்து வாழுங்கள்; மீண்டும் பிணக்கு ஏற்பட்டால் பிரிந்து விடுங்கள் என்று கூறினார்கள். ஆனால் மூன்று மாதம் கூட சேர்ந்து வாழவில்லை. வயிற்றில் குழந்தையுடன் சென்ற அப்பெண்மணி குழந்தை பிறந்ததைக் கூட கணவன் வீட்டாருக்குச் சொல்லவில்லை. பின்னர் வந்து சேர்ந்து வாழ வந்தவரை கணவன் ஏற்றுக் கொண்டார். இவ்வாறு தலாக் விடப்பட்டவரை மீண்டும் சேர்ந்து வாழ்வது கூடுமா?
! இஸ்லாத்தில் விவாவகரத்து பற்றி என்ன கூறுகிறது என்பதை முதலில் காண்போம்.
கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சனைகள் ஏற்படும் போது முதலில் மனைவிக்குச் சிறந்த முறையில் அறிவுரை கூறித் திருத்த முற்பட வேண்டும். அது பயன் தரவில்லை என்றால் தற்காலிகமாகப் படுக்கையி-லிருந்து அவர்களை விலக்க வேண்டும். அதுவும் பயன் தராத போது லேசாக அடித்துத் திருத்த வேண்டும் என்று பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது.
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்ப தாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறை வானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சி னால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப் பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:34)
இதன் பிறகு மற்றவர்களின் துணையை நாடி சமரசம் காண வேண்டும்.
இதன் பிறகும் இருவருக்கிடையே நல்-லிணக்கம் ஏற்படவில்லையானால் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த நடுவர்கள் மூலம் பேசித் தீர்க்குமாறு திருக்குர்ஆன் வழிகாட்டுகிறது.
அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:35)
இந்த நான்கு நடவடிக்கைகளாலும் கூட இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமே இல்லை! இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.
"உன்னை விவாகரத்துச் செய்கிறேன்'' என்று மனைவியிடம் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டு விடும். இதற்கென எவ்விதச் சடங்குகளும் இல்லை. ஆனால் இவ்வாறு விவாகரத்துச் செய்திட மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன் அடியோடு திருமண உறவு முடிந்து விடும் என்று கருதிவிடக் கூடாது. மாறாக முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம். (பார்க்க: திருக்குர்ஆன் 65:4)
இந்தக் காலக் கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கி விடும். ஆயினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.
இதன் பிறகு அவர்களுக்கிடையே மீண்டும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால் முன்பு கூறிய எல்லா வழிமுறைகளையும் கையாண்ட பின் இறுதியாக மீண்டும் விவாகரத்துச் செய்யலாம்.
முன்பு கூறியது போல குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் மீண்டும் சேர்ந்து கொள்ளவும் செய்யலாம். அந்தக் காலக் கெடு முடிந்து, இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து கொள்ளலாம்.
இவ்வாறு மூன்றாம் முறை சேர்ந்து வாழும் போது மீண்டும் அவர்களுக்கிடையே நல்-லிணக்கம் ஏற்படாது போனால் மூன்றாம் தடவையாக விவாகரத்துச் செய்யலாம். இது தான் இறுதி வாய்ப்பாகும்.
மூன்றாவது தடவை விவாகரத்துச் செய்து விட்டால் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாசல் அடைக்கப்பட்டு விடுகிறது.
ஆயினும் விவாகரத்துச் செய்யப்பட்டவள் இன்னொருவனை மணந்து அவனும் அவளை விவாகரத்துச் செய்து விட்டால் இந்த நேரத்தில் மட்டும் முதல் கணவன் மறுபடியும் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
"(திரும்பவும் அழைத்துக் கொள்ளத்தக்க) இத்தகைய தலாக் இரண்டு தடவை தான்'' (திருக்குர்ஆன் 2:229) என்ற இறை வசனத்திலி-ருந்து இதை அறியலாம்.
மேற்கூறிய விளக்கத்தின் அடிப்படையில் அந்த சகோதரர் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் தலாக் விட்டிருந்தால் அவர் மூன்று மாதங்களுக்குள் (அதாவது மூன்று மாதவிடாய் ஏற்படுதவற்குள்) அப்பெண்ணை மீட்டிக் கொள்ள வேண்டும். கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து வாழ வேண்டும். இந்தத் தவணைக்குள் சேர்ந்து வாழவில்லையானால் இன்னொரு அப்பெண்ணையே புதிதாக திருமணம் செய்து சேர்ந்து வாழலாம்.
அவர் தலாக் சொல்ல நாடி அவர் தலாக் விடவில்லையானால் அவர் சேர்ந்து வாழ்வதில் எந்தத் தவறும் இல்லை
கணவனை இழந்த பெண்கள் வெளிச்சம் படாதவாறு இருட்டறைகளில் அடைந்து கிடக்க வேண்டுமா?
பதில்: கணவனை இழந்த பெண்கள் இத்தா காலமான நான்கு மாதம்  பத்து நாட்கள் வரை மறுமணம் செய்யாமல் தங்களுடைய அலங்காரங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
கணவன் இறந்த பின் அவனது மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாட்களில் நாங்கள் சுர்மா இடவோ, நறுமணப் பொருட்களை பூசவோ, சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) 
நூல்: புகாரி (313)
ஆனால் இன்றைய கால கட்டத்தில் நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் இத்தா என்ற பெயரில் பெண்களுக்கு எண்ணற்ற கொடுமைகள் இழைக்கப் படுகின்றன. பெண்களை சூரிய ஒளி கூட படாத வகையில்  இருட்டறையில் அடைத்து வைத்து விடுகின்றனர். சில ஊர்களில் பாய்களால் அறை அமைக்கின்றனர்.
அதில் சிறிய ஓட்டைகள் இருக்கும். அவர்கள் வானம் பார்க்கக் கூடாது, வெளிச்சம்  அவர்கள் மேல் பட்டுவிடக் கூடாது, யாரையும் இவர்கள் பார்த்து விடக் கூடாது என்பதற்காக அந்த ஓட்டைகளைக் கூட சாணி சிமிண்ட் போன்ற பொருட்களைப் பூசி அடைத்து விடுகின்றனர். இதற்கு வயதான பெண்களும் விதிவிலக்கல்ல.
சில ஊர்களில் ஆண் குழந்தைகள் கூட அந்த அறைக்குள் செல்வது கூடாதாம். இதை விட மிகக் கொடுமை என்னவென்றால் கர்ப்பிணிப் பெண்கள் கூட அந்த அறைக்குள் செல்லக் கூடாதாம். ஏனென்றால் அப்பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை இருக்கலாமாம். அது அப்பெண்ணைப் பார்த்து விடக் கூடாதாம். சில ஊர்களில் பெற்றெடுத்த மகன் கூட இந்த அறைக்குள் தன்னுடைய தாயைப் பார்ப்பதற்குத் தடை உள்ளது. 
கணவன் இறந்த வருடம் முழுவதும் துக்கமாகக் கொண்டாடுபவர்கள் இருக்கிறார்கள். இரு பெருநாட் களுக்கும் புதுத் துணிகள் எடுத்து அணிய மாட்டார்கள். மாற்று மத சமுதாயங்களில் கணவனை இழந்த பெண்கள் மதிக்கப்படும் முறையை விட இன்றைக்கு இத்தா என்ற பெயரில் இஸ்லாமிய பெண்கள் இஸ்லாத்தை சரியாகத் தெரியாதவர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள்.
இத்தா காலகட்டத்தில் உள்ள பெண்களை இருட்டறையில் அடைத்து வைப்பதும் அவர்கள் எந்த ஆணையும் பார்க்க முடியாதவாறு செய்வதும் திருமறைக் குர்ஆனின் வழி காட்டுதலுக்கும் நபி வழிக்கும் மாற்றமானதாகும்.
பின்வரும் வசனத்தை கவனித்துப் படியுங்கள். ஆண்கள் இத்தா இருக்கக் கூடிய பெண்களை பார்த்துப் பேசலாம், அதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
(இத்தா இருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:235)
நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! என்ற வாசகத்திலிருந்து நல்ல சொற்களை இத்தா இருக்கக்கூடிய பெண்களிடம் கூறுவது தடையில்லை என்பது தெளிவாகிறது. பின்வரக் கூடிய ஹதீஸைப் படித்துப் பாருங்கள். இதனை நாம் மேலும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
என் தாயின் சகோதரி மணவிலக்கு செய்யப்பட்டார். அவர் (இத்தா காலகட்டத்தில் இருந்த போது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே என் தாயின் சகோதரி நபி (ஸல்) அவர்களிடம் வந்(து தெரிவித்)த போது, நபி (ஸல்) அவர்கள், "ஆம். நீ (சென்று) உனது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக் கொள். ஏனெனில் (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும் அல்லது ஏதேனும் நல்லறம் செய்யக் கூடும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (2972)
இத்தா இருந்த பெண்ணை ஒருவர் வெளியே செல்லக் கூடாதென கண்டிக்கின்றார். அவரும் ஒரு ஆண் தான். மேலும் அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்கின்றார்கள். நபியவர்களும் ஆண் தான்.
இத்தா இருக்கக் கூடிய பெண்கள் இருட்டறையில் தான் கிடக்க வேண்டும்  என்பது முழுக்க முழுக்க மார்க்கத்திற்கு மாற்றமானதாகும். ஏனென்றால் மேற்கண்ட ஹதீஸில் ஒரு பெண் தன்னுடைய வீட்டை விட்டு சென்று, நபியவர்களிடம் வெளியே செல்வதற்கு அனுமதி கேட்கிறார். நபியவர்களும் அனுமதி வழங்கி விடுகின்றார்கள்.
மேலும் இத்தா என்ற பெயரில் அமைக்கப்படும் அந்த இருட்டு ஜெயிலிலிருந்து வெளிவரும் போதும் அறியாமைக் காலத்தைப் போன்று எண்ணற்ற மூட நம்பிக்கைகள் நிறைந்து காணப்படுகின்றன்.
சில ஊர்களில் இத்தாவிலிருந்து வெளியே வரக்கூடிய நாளில் காலை நேரத்தில் யாரும் பார்க்காத படி அதிகாலை நேரத்திலேயே ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள நீர் நிலைகள் வயல் வெளிகள் தோப்புகள் போன்ற இடங்களுக்குச் சென்று விடுவார்கள். அங்கு நன்றாக சமைத்துச் சாப்பிட்ட பின்பு இரவு நேரத்தில் யாரும் பார்க்காதவாறு வீட்டிற்கு வந்து இருட்டறை ஜெயில் வாழ்க்கையை முடித்துக் கொள்வார்கள்.
 இன்னும் சில  ஊர்களில் அந்த இருட்டறையிலிருந்து வெளியே வரும் போது வேறு யாரையும் பார்ப்பதற்கு முன்னால் முதலில் குர்ஆனைப் பார்த்து விட்டு வெளியே வருவாôகள். இன்னும் ஊருக்கு ஊர் வித்தியாசமாக பல்வேறு முறைகள் நிலவி வருகின்றன. குர்ஆன் ஹதீஸில் இல்லாத இது போன்ற கட்டளைகளை யார் பிறப்பித்தாலும் அதைத் தூக்கி வீசி விட      வேண்டும் என்று பின்வரும் ஹதீஸ் எடுத்துரைக்கின்றது.
"அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கின்றார்களோ அவர்களுடைய அந்த நிபந்தனை வீணானது, (செல்லாது) அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனை தான் நிறைவேற்றத் தக்கதும் உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ 2155
இத்தா இருப்பதன் அவசியம் என்ன
 மாதவிடாய் நின்று போன பெண்களும் இத்தா இருக்க வேண்டுமா? எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்?
கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லாவிட்டால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் கழியும் வரையிலும் மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் கால கட்டம் "இத்தா' எனப்படுகின்றது.
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 2:234)
இந்த வசனத்தின் அடிப்படையில் கணவன் இறந்து விட்டால் பெண்கள் நான்கு மாதமும், பத்து நாட்களும் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும்.
கணவனுடன் வாழ்ந்தவள் அவனது கருவைச் சுமந்திருக்கலாம்; அந்த நிலையிலேயே அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்படையும். இரண்டாம் கணவன் அக்குழந்தை தனது குழந்தை இல்லை எனக் கூறுவான்.
முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தமது குடும்பத்துக் குழந்தை இல்லை எனக் கூறி விடுவர். இதனால் தந்தை யார் என்பதே தெரியாததால் மன ரீதியான பாதிப்பு அக்குழந்தைக்கு ஏற்படும். தகப்பனிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துரிமை கிடைக்காமல் போய் விடும்.
இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள் என்று இரண்டாம் கணவன் நினைத்தால் அப்பெண்ணின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்.
கருவில் குழந்தை இருப்பதை அறிய ஒரு மாதம் போதுமே! அந்த மாதத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் குழந்தை இல்லை என்பது தெரிந்து விடுமே! நான்கு மாதம் பத்து நாட்கள் அதிகமல்லவா? என்று சிலர் நினைக்கலாம்.
இது நியாயமான கேள்வி தான். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்களைத் தவிர்க்கவே இஸ்லாம் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் காத்திருக்கச் சொல்கிறது.
ஒரு பெண் தான் முதல் மாதமே கருவுற்றிருப்பதை அறிந்து கொண்டாலும் அதை அவள் மறைக்க முயற்சிக்கலாம். தான் கருவுறவில்லை என்று கூறி இன்னொருவனைத் திருமணம் செய்யலாம். நான்கு மாதம் பத்து நாட்களுக்கு இவ்வாறு கூற முடியாது. வயிறு காட்டிக் கொடுத்து விடும்.
குறைப் பிரசவமாக ஒரு குழந்தையை அவள் பெற்றெடுத்தால் அது முந்தைய கணவனுடையதாக இருக்குமோ என்று இரண்டாம் கணவன் சந்தேகப்படுவான். நான்கு மாதம் பத்து நாட்கள் கடந்த பின்பு அவன் இப்படிக் கூற முடியாது. குழந்தை இருந்தால் தான் நான்கு மாதத்தில் வெளிப்படையாகத் தெரியுமே என்று அவன் உண்மையை விளங்கிக் கொள்வான்.
இத்தகைய காரணங்களால் பெண்களுக்கு நன்மை செய்வதற்காக, அவர்களது எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவளது குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான்.
சில முஸ்-லிம்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் பெண்களை இருட்டறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துகின்றனர். இது குற்றமாகும். மறுமணம் செய்யாமல் இருப்பதும் திருமணத்தைத் தூண்டும் அலங்காரங்களைத் தவிர்ப்பதும் தான் இத்தா என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட வசனத்தில் கணவனை இழந்து விட்ட பெண்கள் என்று பொதுவாகக் கூறப்படுவதால் மாதவிடாய் நின்று விட்ட பெண்களாக இருந்தாலும் கணவன் இறந்து விட்டால் அவர்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும்.
மாதவிடாய் நின்று விட்டால் குழந்தை பெறுவது சாத்தியமில்லையே என்ற சந்தேகம் ஏற்படலாம். ஆனால் பெண்களுக்கு எந்த வயதில் மாதவிடாய் நிற்கும் என்பது குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ஒரு விஷயமாகும். உஷ்ண மாறுபாட்டினால் மாதவிடாய் ஏற்படுவதன் கால அளவில் வித்தியாசங்கள் ஏற்படுவதும், கால தாமதம் ஏற்படுவதும் உண்டு. இதுபோன்ற கட்டங்களை மாதவிடாய் நின்று விட்டதாகக் கருதி விட வாய்ப்புள்ளது. சராசரி வயதைக் கடந்து விட்ட பெண்கள் கூட சில சமயங்களில் கர்ப்பமாகி விடும் செய்திகளைக் கேள்விப் படுகின்றோம். கரு உருவாவது இறைவனின் கையில் உள்ள விஷயம். இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவியார் காலம் கடந்து குழந்தை பாக்கியம் அடைந்ததாக திருக்குர்ஆன் கூறுகின்றது.
எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இத்தா என்பது எல்லாப் பெண்களுக்கும் பொதுவான சட்டமாக இருப்பது தான் பாதுகாப்பானது என்பதை அறிய முடியும்.
நான்கு மாதம் பத்து நாட்கள் என்ற இத்தாவின் காலக் கெடுவிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள்.
கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். (அல்குர்ஆன் 65:4)
இந்த வசனம் தலாக் விடப்பட்ட பெண்களின் இத்தாவைப் பற்றி கூறப்படுவது என்ற கருத்து இருந்தாலும் கர்ப்பிணிப் பெண்களின் கணவன் இறந்து விட்டால் அவர்களின் இத்தா பிரசவிக்கும் காலம் வரை தான் என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள் என்பதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் என்ற பெண்மணி பனூ ஆமிர் பின் லுஅய் என்ற குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப் பட்டிருந்தார். - சஅத் பின் கவ்லா (ரலி) பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார் - விடை பெறும் ஹஜ்ஜின் போது சஅத் (ரலி) இறந்து விட்டார். அப்போது சுபைஆ (ரலி) கர்ப்பமுற்றிருந்தார். சஅத் (ரலி) இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை. (அதற்குள்) சுபைஆ பிரசவித்து விட்டார்.
உதிரப்போக்கிலிருந்து சுபைஆ (ரலி) சுத்தமான போது, பெண் பேச வருபவர்களுக்காக தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போது பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான அபுஸ்ஸனாபில் பின் பஅக்கக் (ரலி) சுபைஆவிடம் வந்து, "மணம் முடிக்கும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக, நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் மணம் புரிந்து கொள்ள முடியாது'' என்று கூறினார்.
சுபைஆ (ரலி) கூறுகின்றார்:
இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றிக் கேட்டேன். அதற்கு, "நீ பிரசவித்து விட்ட போதே (மணம் முடித்துக் கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகி விட்டாய். நீ விரும்பினால் திருமணம் செய்து கொள்'' என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ், நூல்: புகாரி 3991
எனவே இதன் அடிப்படையில் கணவன் மரணிக்கும் போது மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும் கிடையாது.
கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம்.


தலாக் சொன்ன பெண்களுக்கு வாழ பொருள் கொடுக்க வேண்டுமா?
நீங்கள் மணம் முடிக்கும் பெண்களுக்கு மஹர் தொகையைக் கொடுத்து விடுங்கள் என்று இறைவன் கூறுகின்றான். ஆனால் 2:236 வசனத்தில், "அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையில் விவாகரத்து செய்வது குற்றமில்லை'' என்று கூறுகின்றான். மேலும் விவாகரத்துச் செய்த பெண்களுக்கு பொருளும் கொடுக்கச் சொல்கிறது திருக்குர்ஆன். மஹர் தொகை முடிவு செய்யாமல் எப்படி திருமணம் செய்ய முடியும்? மேலும் தலாக் சொன்ன பெண்களுக்கு வாழ பொருள் கொடுக்க வேண்டுமா? விளக்கவும்.
ஒரு பெண்ணை மணம் முடிக்கும் ஒருவர் அவள் கேட்கும் மஹர் தொகையைக் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. அதே சமயம் மஹரைப் பொறுத்த வரை மார்க்கம் அந்த உரிமையை முழுக்க முழுக்க பெண்களிடம் விட்டுள்ளது.
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளைக் கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன் 4:4)
அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாக ரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும், ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை. (அல்குர்ஆன் 2:236)
அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாக ரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன் 2:237)
ஒரு பெண் எவ்வளவு மஹர் வாங்க வேண்டும்? அந்த மஹரை எப்போது வாங்க வேண்டும்? அதிலிருந்து கணவனுக்கு ஏதேனும் கொடுக்கலாமா?
திருமணத்திற்கு முன்பே வாங்கலாமா? அல்லது மஹர் தொகையைத் தீர்மானித்து விட்டு அதைத் திருமணத்திற்குப் பின் வாங்கிக் கொள்ளலாமா? அல்லது மஹர் தொகை இவ்வளவு எனத் தீர்மானிக்காமல் இருக்கலாமா?
இதில் எந்த ஒன்றை வேண்டுமானாலும் ஒரு பெண் தீர்மானித்துக் கொள்ளலாம். அந்த உரிமையைப் பெண்களிடம் மார்க்கம் வழங்கியுள்ளது என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து விளங்கலாம்.
பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கும் அந்த உரிமைகளில் ஒன்று தான், மஹர் தொகையைத் தீர்மானிக்காமல் திருமணம் முடித்த பின் முடிவு செய்து மஹரை வாங்கிக் கொள்வதாகும். இதைத் தான் அந்த வசனம் குறிப்பிடுகின்றது.
இந்த வசனத்தின் அடிப்படையில் தலாக் சொல்லப்பட்ட பெண்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்க வேண்டுமா? என்று கேட்டுள்ளீர்கள்.
பெண்களுக்கு இரண்டு வகையான பாதுகாப்பை இஸ்லாம் ஏற்படுத்துகின்றது. ஒன்று திருமணத்தின் போது கணிசமான தொகையை மஹராகப் பெற்று அவள் தனது பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக விவாகரத்துச் செய்தவுடன் கணவனின் பொருளாதார வசதியைக் கவனித்து ஒரு பெருந்தொகையை, சொத்தை ஜமாஅத்தினர், அல்லது இஸ்லாமிய அரசு அவளுக்குப் பெற்றுத் தர வேண்டும்.
விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (அல்குர்ஆன் 2:241)
இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லும் ஆழமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
ஆயினும் முஸ்-ம்களில் பலர் இத்தா காலத்துக்கு, அதாவது, மூன்று மாத காலத்துக்கு அவளுக்கு ஜீவனாம்சம் வழங்குவதையே இந்த வசனம் குறிக்கிறது என்று நினைக்கின்றனர்.
இதை "இத்தா காலத்தில்'' என்று எளிதாகச் சொல்-யிருக்கலாம். இறைவன் அவ்வாறு கூறாமல் "அழகிய முறையில் - நியாயமான முறையில்'' என்று கூறுகிறான்.
ஒரு பெண்ணுடன் வாழ்ந்து, அவளது இளமையை அனுபவித்து விட்டு மூன்று மாதம் செலவுக்குப் பணம் கொடுப்பது அழகிய முறையாகவோ, நியாயமான முறையாகவோ இருக்காது.
தனது மகளுக்கு இப்படி நேர்ந்தால் எது நியாயமானதாகப்படுகிறதோ அது தான் நியாயமானது.
வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும், ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை. (அல்குர்ஆன் 2:236)
இந்த வசனம் கூறுவதை இதற்கு அளவு கோலாக எடுத்துக் கொள்ள வேண்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்பவும், ஏழை தனது வசதிக்கேற்பவும் தொகை கொடுக்க வேண்டும் என்பதே இவ்வசனத்தின் கருத்தாக இருக்க முடியும்.
விவாகரத்துச் செய்பவன் வசதியுள்ளவன் என்றால் அவனது வசதிக்கேற்ப, பெரும் தொகையைப் பெற்றுத் தரும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கு உண்டு. சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தர வேண்டும். இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும்.
விவாகரத்துக்குப் பின் பெண் வீட்டாரிடமிருந்து கணவன் வீட்டார் வாங்கிய வரதட்சணையை மட்டும் தான் ஜமாஅத்தினர் பெற்றுத் தருகிறார்கள். அது உண்மையில் அவளுக்குச் சேர வேண்டியது. விவாகரத்துக்காக எதையும் வாங்கிக் கொடுப்பதில்லை.
முஸ்-ம் சமுதாயம் இந்த இறைக் கட்டளையை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் தான் பலவிதமான விமர்சனங்களைச் சந்திக்கின்றனர், இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரத்துக்கு இது பயன்படுத்தப்படுகிறது. போ- ஜீவனாம்சத்தை முஸ்-ம்கள் மீதும் திணிக்க முயற்சிக்கப்படுகிறது.
எனவே ஜமாஅத்தினர் இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லையும் கவனித்து அல்லாஹ்வுக்கு அஞ்சி பெண்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.
அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! (அல்குர்ஆன் 65:6)
இந்த வசனத்தில், கர்ப்பிணிகளாக இருந்தால் பிரசவிக்கும் வரை செலவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தா காலம் வரை தான் ஏதும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது.
அவனது கருவை அவள் சுமந்திருப்பதால் அதற்காக மேலதிகமாக அவன் செய்ய வேண்டிய செலவைத் தான் அவ்வசனம் கூறுகிறது. அதைக் காரணம் காட்டி  2:241 வசனத்தில் கூறப்படும் கட்டளையைப் புறக்கணிக்க முடியாது.
பெண் குல்உ விட்டால் காரணம் கூறவேண்டுமா
? மே 2006 இதழில் குல்உ சம்பந்தமான கேள்விக்குப் பதில் அளிக்கும் போது, கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டிய தில்லை என்று கூறியிருக்கின்றீர்கள். ஆனால் தஃப்ஸீர் இப்னு கஸீரில், தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்று திர்மிதி, அஹ்மத், அபூதாவூதில் இடம் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குல்உ பெற்று கணவனைப் பிரிந்த பெண்கள் நயவஞ்சகர்கள் ஆவர் என்று ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களின் படி குல்உ பெறும் பெண்கள் தகுந்த காரணத்தோடு தான் குல்உ பெற வேண்டும் என்று தெரிகின்றதே, இதற்கு மாற்றமாகப் பதிலளித்தது ஏன்?
தாங்கள் குறிப்பிடும் ஹதீஸ் திர்மிதீ 1108 மற்றும் அஹ்மத் 21345 ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஸவ்பானிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர் யாரென்று அறியப்படாதவர். எனவே இது ஆதாரப்பூர்வமானதல்ல.
இதே கருத்தில் இடம் பெற்றுள்ள திர்மிதீ 1107, நஸயீ 3407, அஹ்மத் 8990 ஆகிய ஹதீஸ்களும் பலவீனமானவையாகும். இந்த ஹதீஸை அபூஹுரைராவிடமிருந்து அறிவிக்கும் ஹஸன் என்பார் அபூஹுரைராவிடம் இருந்து எதையும் செவியுற்றதில்லை. இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே இந்த ஹதீஸ் சரியானது அல்ல என்று குறிப்பிடுகின்றார்.
இந்தக் கருத்தில் பல்வேறு பலவீனமான ஹதீஸ்கள் இடம் பெற்றிருந்தாலும் அஹ்மதில் 21404வது ஹதீஸ் மட்டும் சரியான அறிவிப்பாளர் தொடருடன் இடம் பெற்றுள்ளது.
தகுந்த காரணமின்றி விவாகரத்துக் கோரிய பெண்ணுக்கு சொர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
குல்உ சம்பந்தமாக நாம் எழுதும் போது, காரணமே இல்லாமல் பெண் விவாகரத்து கோரலாம் என்று எழுதவில்லை. கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்று தான் எழுதியிருந்தோம். காரணம் சொல்ல வேண்டியதில்லை என்பதற்கும், காரணம் இல்லாமல் என்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.
தகுந்த காரணமின்றி ஒரு பெண் விவாரத்து கோரினால் அல்லாஹ்வின் பார்வையில் அவள் பாவியாகி விடுகின்றாள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது.
ஆனால் கணவனைப் பிடிக்காததற்கான காரணத்தை ஜமாஅத் தலைவரிடம் சொல்லித் தான் விவாகரத்து கோர வேண்டும் என்று கூறுவதற்கு இந்த ஹதீஸில் ஆதாரம் இல்லை.
காரணத்தைச் சொல்லத் தேவை இல்லை என்று நாம் குறிப்பிட்டதற்கு இந்த ஹதீஸ் முரணாக இல்லை.
ஒரு பெண் தன் கணவரை விட்டுப் பிரிவதற்காக விவாகரத்து கோருகிறாள் என்றால் அதற்குக் காரணம் இருக்கவும் செய்யலாம், இல்லாமலும் இருக்கலாம். தகுந்த காரணத்துடன் விவாகரத்து கோரியிருந்தால் அவள் மீது குற்றமில்லை. காரணம் இல்லாமல் விவாகரத்து கோரியிருந்தால் அவள் அல்லாஹ்விடத்தில் குற்றவாளியாகி விடுகின்றாள்.
அந்தக் காரணத்தை அவள் சொல்லித் தான் விவாகரத்து கோர வேண்டும் என்ற நிபந்தனை இந்த ஹதீஸிலோ அல்லது வேறு ஹதீஸ்களிலோ காணப்படவில்லை.
"தகுந்த காரணமின்றி விவாகரத்து கோரினால் அந்தப் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கக் கூடாது'' என்று சொல்லாமல் "சொர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்தே, அவள் அந்தக் காரணத்தை வெளியில் சொல்லத் தேவையில்லை என்பதை விளங்கலாம்.
இத்தா
கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லா விட்டால் நான்கு மாதம், பத்து நாட்கள் கழியும் வரையிலும் மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் கால கட்டம் "இத்தா' எனப்படுகிறது.
கணவனுடன் வாழ்ந்தவள் அவனது கருவைச் சுமந்திருக்கலாம்; அந்த நிலையிலேயே அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்படையும். இரண்டாம் கணவன் அக்குழந்தை தனது குழந்தை இல்லை எனக் கூறுவான்.
முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தமது குடும்பத்துக் குழந்தை இல்லை எனக் கூறி விடுவர். இதனால் தந்தை யார் என்பதே தெரியாததால் மன ரீதியான பாதிப்பு அக்குழந்தைக்கு ஏற்படும். தகப்பனிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துரிமை கிடைக்காமல் போய் விடும்.
இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள் என்று இரண்டாம் கணவன் நினைத்தால் அப்பெண்ணின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்.
கருவில் குழந்தை இருப்பதை அறிய ஒரு மாதம் போதுமே! அந்த மாதத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் குழந்தை இல்லை என்பது தெரிந்து விடுமே! நான்கு மாதம் பத்து நாட்கள் அதிகமல்லவா? என்று சிலர் நினைக்கலாம்.
இது நியாயமான கேள்வி தான். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்களைத் தவிர்க்கவே இஸ்லாம் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் காத்திருக்கச் சொல்கிறது.
ஒரு பெண் தான் முதல் மாதமே கருவுற்றிருப்பதை அறிந்து கொண்டாலும் அதை அவள் மறைக்க முயற்சிக்கலாம். (அதனால் தான் இறைவனும் கூட இவ்வாறு குர்ஆனில் கூறுகிறான்  2:228)  தான் கருவுறவில்லை என்று கூறி இன்னொருவனைத் திருமணம் செய்யலாம். நான்கு மாதம் பத்து நாட்களுக்கு இவ்வாறு கூறமுடியாது. வயிறு காட்டிக் கொடுத்து விடும்.
குறைப் பிரசவமாக ஒரு குழந்தையை அவள் பெற்றெடுத்தால் அது முந்தைய கணவனுடையதாக இருக்குமோ என்று இரண்டாம் கணவன் சந்தேகப்படுவான். நான்கு மாதம் பத்து நாட்கள் கடந்த பின்பு அவன் இப்படிக் கூற முடியாது. குழந்தை இருந்தால் தான் நான்கு மாதத்தில் வெளிப்படையாகத் தெரியுமே என்று அவன் உண்மையை விளங்கிக் கொள்வான்.
இத்தகைய காரணங்களால் தான் பெண்களுக்கு நன்மை செய்வதற்காக, அவர்களது எதிர் காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவளது குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான்.
மாதவிடாய் அற்றுப் போன பெண்களின் இத்தாக் காலம்
உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள்.
(அல் குர்ஆன் 65:4)
கர்ப்பிணிப் பெண்களின் இத்தாக் காலம்
கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தக் காலக் கெடுவி-ருந்து கர்ப்பிணிப் பெண்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள்.
கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான் (அல் குர்ஆன் 65:4)
கணவன் மரணிக்கும் போது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும் கிடையாது.
கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம்.
இவ்வசனத்தி-ருந்து இந்தச் சட்டத்தை அறியலாம்.
இத்தாக் காலம் என்பது மேற்கூறப்பட்ட நிலையிலுள்ள பெண்கள் மறுமணம் செய்வதற்காக உள்ள கால கட்டமாகும். அதாவது மேற்கூறப்பட்ட கால கட்டங்கள் நிறைவு பெற்றவுடன் தான் அவர்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்.
இக்கால கட்டங்களில் அவர்கள் தங்களுடைய அலங்காரங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தக் கால கட்டத்தில் பகிரங்கமான முறையில் மணம் பேசுதல் போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது. மறைமுகமாக திருமணம் குறித்து பேசிக் கொள்வதில் தவறில்லை.
(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 2:235
கணவன் இறந்த பின் அவனது மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாட்களில் சுர்மா இடவோ மணப் பொருட்களை பூசவோ சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டுத் தயாரிக்கப்பட்ட (அஸ்ப் எனும்)  ஆடைகளைத் தவிர!
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 313
இதைத் தவிர ஏனைய காரியங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. மேலே கூறப்பட்டுள்ள காரியங்கள் தவிர மற்றவற்றுக்கு சாதாரண நாட்களில் பெண்களுக்கு என்ன சட்டமோ அது தான் இந்த இத்தா காலத்திலும் உள்ளது.
ஆனால் இன்று நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில், இத்தா என்ற பெயரில் பெண்களுக்கு எண்ணற்ற கொடுமைகள் இழைக்கப்படுகின்றன.
வீட்டில் வெள்ளைத் திரை போட்டு மறைத்து வைக்கின்றனர். பெண்களைச் சூரிய ஒளி கூட படாத வகையில்  இருட்டறையில் அடைத்து வைத்து விடுகின்றனர். சில ஊர்களில் பாய்களால் அறை அமைக்கின்றனர். அவர்கள் வானம் பார்க்கக் கூடாது; வெளிச்சம் பட்டுவிடக் கூடாது; யாரையும் பார்க்கக் கூடாது என்பதற்காகப் பாயிலுள்ள ஓட்டைகளைக் கூட சாணியைப் பூசியும், சிமிண்ட் போன்ற பொருட்களை பூசியும் அடைத்து விடுகின்றனர். இதற்கு வயதான பெண்களும் விதிவிலக்கல்ல.
அவர்கள் எந்த ஆண்களையும் பார்க்கக் கூடாதாம், அதற்காகத் தான் இவ்வாறெல்லாம் செய்கின்றனர்.
சில ஊர்களில் ஆண் குழந்தைகள் கூட அந்த அறைக்குள் செல்வது கூடாதாம். இதை விட மிகக் கொடுமை என்னவென்றால் கர்ப்பிணிப் பெண்கள் கூட அந்த அறைக்குள் செல்லக் கூடாதாம். ஏனென்றால் அப்பெண்களின் வயிற்றில் ஆண் குழந்தை இருக்கலாமாம். அது அப்பெண்ணைப் பார்த்து விடக் கூடாதாம். சில ஊர்களில் பெற்றெடுத்த மகன் கூட இந்த அறைக்குள் தன்னுடைய தாயைப் பார்ப்பதற்குத் தடை உள்ளது.
இது போன்று மார்க்கத்தில் இல்லாத கற்பனைக் கட்டுப்பாடுகளைப் போட்டு வைத்திருக்கிறார்கள். இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத இந்த நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் இந்த எளிய மார்க்கத்தை கடின மார்க்கமாக ஆக்கி விட்டவர்கள், அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.
வீட்டில் வெள்ளைத் திரை போட்டு மறைக்கும் பழக்கம் பிற மதத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றாகும். கணவனை இழந்தவர்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் திருமணம் முடிக்காமல் இருக்க வேண்டும்; அலங்காரங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தக் கட்டுப்பாட்டையும் அல்லாஹ் விதிக்கவில்லை. காரணம், இது அல்லாஹ்விடமிருந்து வந்த     கரை படாத கலப்படமில்லாத மார்க்கமாகும். மக்கள் மீது எந்தச் சிரமத்தையும் விதிக்காத எளிய மார்க்கமாகும்.
இத்தாவிலும் சலுகைகள்
கணவனை இழந்த பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய இத்தா குறித்து பார்த்தோம். விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களும் இத்தா இருக்க வேண்டும் என்றாலும், அதே கால அளவு இருக்கத் தேவையில்லை.
விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 2:228
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கான இத்தா காலம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகும். மேலும், பைபிள் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டதைப் போன்று, விவாகரத்துச் செய்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ ஒரேயடியாகத் தடை விதிக்கவில்லை. இந்த மூன்று மாதவிடாய் காலத்திற்குள் கணவன், மனைவியுடன் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை வழங்குகிறது.
ஒருவர் ஒரு பெண்ணை மணமுடித்து, அவளைத் தொடாமலேயே விவாகரத்துச் செய்து விட்டால் அந்தப் பெண் இத்தா அனுஷ்டிக்க வேண்டுமா? என்றால் தேவையில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை. அவர்களுக்கு வாழ்க்கை வசதி அளியுங்கள். அழகிய முறையில் அவர்களை விட்டு விடுங்கள்!
அல்குர்ஆன் 33:49
இது போன்ற இல்லறவியலின் ஒவ்வொரு விஷயத்திலும் பல்வேறு சலுகைகளை வழங்கி, தான் ஓர் எளிய மார்க்கம் என்பதை உலகுக்குப் பறை சாற்றி நிற்கின்றது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites