கேள்வி : ஒரு இந்து மத நண்பர் என்னிடம் "இஸ்லாத்தில் தத்து எடுத்தல் கூடாது'' என்று உள்ளதே இது பெரிய குறையாக உள்ளது. குழந்தையே இல்லாதவர்களுக்கு தங்களுக்கும் குழந்தை வேண்டும் என்று விரும்புவார்கள் என்ன செய்வது? சரி, குழந்தை தவறான வழியில் பிறந்திருக்கலாம் என்ற காரணத்தினால் இஸ்லாம் தடுக்கிறது என்றாலும் விபத்து, பெற்றோரின் நடத்தை சரியில்லாமல் பிரியும் குழந்தைகளுக்கு நாம் ஒரு வழிகாட்டியாக திகழலாம். இது கூடாது என்பதினால் இதை விட மோசமான "டெஸ்ட் டியூப் பேபி' என்ற முறையைத் தேர்ந்தெடுகிறார்கள் என்று கேட்டதற்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை. விளக்கம் தரவும்.
எம்.எஸ். முஹம்மது ஹபீபுல்லாஹ்
சீர்காழி
பதில் : குழந்தை இல்லாதவர்கள் மற்றவர்களின் குழந்தைகளை எடுத்து வளர்ப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை. இவ்வாறு எடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கான சட்ட உரிமைகளைப் பெற மாட்டார்கள் என்று தான் இஸ்லாம் கூறுகிறது.
ஒருவர் குழந்தை இல்லை என்பதற்காக ஆண் குழந்தையை எடுத்து வளர்க்கிறார். பின்னர் அவருக்கு அல்லாஹ் ஒரு பெண்குழந்தையைக் கொடுக்கிறான். அந்தப் பெண்குழந்தை பருவ மடைந்ததும் அவர் வளர்த்த ஆணுக்கு மண முடித்துக் கொடுக்கலாம். ஏனெனில் அந்த ஆண் இவரது மகனில்லை. எனவே இவரது மகளுக்கும் அவன் சகோதரனாக மாட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது.
இது போல் வளர்ந்தவர் மரணித்துவிட்டால் அவரது சொத்துக்களுக்கு பெற்ற மகன் வாரிசாவது போல் வளர்க்கப்பட்டவன் வாரிசாக முடியாது. ஏனெனில் இவன் அவரது மகன் இல்லை. உடன் பிறந்த சகோதரர்கள் சகோதரிகள் போன்ற பல உறவினர்கள் இருக்கும் போது யாரோ ஒருவனை வாரிசெனக் கூறுவது அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். உறவினர்களைப் பகைக்கும் நிலைமை ஏற்படும்.
வளர்க்கப்பட்டவனுக்கு ஏதேனும் கொடுக்க விரும்பினால் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகாமல் மரண சாசனம் எழுதலாம்.
ஒருவேளை நாம் எடுத்து வளர்க்கிறோம். நம் வீட்டில் நமது உடன் பிறந்த சகோதரிகள் உள்ளனர். இவர்களுக்கும் வளர்க்கப்பட்டவனுக்கும் எந்த விதமான உறவும் கிடையாது. எனவே அன்னிய ஆண்களுடன் நடந்துகொள்ள வேண்டிய வகையில்தான் அவனுடன் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
இரத்தம் சம்பந்தம் இல்லாததால் தந்தையின் சகோதரிகள் என்று அவர்களை அவன் கருதமாட்டான். இதனால் விபரீதங்கள் ஏற்படலாம்.
இது போல் வளர்க்கப்பட்டவனிடம் என் மகன் தான் என்று கூறி ஏமாற்றுவதையும் இஸ்லாம் தடுக்கிறது. ஒவ்வொருவரையும் அவரது தந்தையின் பெயரிலேயே அழைக்க வேண்டும்.
"நீ இன்னாரின் மகன் தான் எனக்குக் குழந்தையில்லாததால் எடுத்து வளர்க்கிறேன்'' என்று தான் அவனிடம் கூற வேண்டும். உலகத்துக் கும் கூற வேண்டும். இன்னொருவருக்கு பிறந்தவனை தனக்குப் பிறந்தவன் எனச் சொந்தம் கொண் டாடுவதை இஸ்லாம் தடுக்கிறது.
குழந்தைகளை எடுத்து வளர்ப்பதைத் தடுக்க வில்லை. திருக்குர்ஆன் 33:4,5 வசனங்களில் இதை அறிந்துகொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக